படம் | Selvaraja Rajasegar Photo

தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் புனர்வாழ்வு முகாம்களில் இருந்தோர் தமது அடிப்படைத் தேவைகளுக்காகவும் விடுதலையை வலியுறுத்தியும் பலப் போராட்டங்களை கடந்த காலங்களில் நடத்தினர். இப்போராட்டங்கள் அகிம்சை வழியிலான உணவு மறுப்பு பேராட்டமாகவும் கவனயீர்ப்புப் போராட்டமாகவுமே நிகழ்ந்தன.

பலப் பேராட்டங்கள் அரசியல்வாதிகள் கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளால் கைவிடப்பட்டன. பண்டாரவளை, பிந்துனுவெவ புனர்வாழ்வு முகாமில் இருந்தவர்களை

முகாம் காவலாளிகளும் காடையர்களும் திட்டமிட்டு தாக்குதல் நடத்தவே 28 பேர் வரையிலானோர் கொல்லப்பட்டனர். அதேபோன்று 2012இல் வவுனியா சிறையின் அரசியல் கைதிகள் போராட்டம் தொடர போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அநுராதபுர சிறைச்சாலைக்கு மாற்றியதோடு கொழும்பில் இருந்து சென்ற விசேட படைப்பிரிவினர் நடத்திய தாக்குதலால் பலர் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர். இத்தாக்குதலால் அரசியல் சிறைக்கைதிகளான நிமலரூபன் மற்றும் தில்ருக்சன் போன்ற இருவரும் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவங்கள் நிகழ்ந்த காலகட்டங்களில் தமிழ்ப் பகுதியிலும் கொழும்பிலும் அரசியல் சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டுமென கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. தற்போதைய தமிழ் அமைச்சர் ஒருவரும் அப்போராட்டங்களில் கலந்துகொண்டு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி துண்டுப்பிரசுரங்கள் வழங்கினார். ஊடகங்களில் அவர் துண்டு பிரசுரம் கொடுக்கும் காட்சி பதிவாகி வெளிவந்தது. அந்த எழுச்சிகளெல்லாம் பல்வேறு காரணங்களால் அடங்கி போய்விட்டன, அரசியல் கைதிகளும் மறக்கப்பட்டவர்களாயினர்.

ஆனால், வட மாகாண சபைத் தேர்தலின்போதும் ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் காலங்களில் தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் மீண்டும் சந்தைக்கு வந்தது. நல்லாட்சியென ஏமாந்தோர் வாக்குகளை அள்ளி வழங்கினர். தேர்தலில் தொடர்ந்து இணக்க அரசியலோடு ஒட்டிப்போனவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைமை பதவியும் நாடாளுமன்ற குழுக்களின் தலைமைப் பதவியும் தாம்பலத்தில் வைத்து கொடுக்கப்பட்டது (தாம்பலத்திற்கு அடியில் அரசியல் கைவிளங்கு இருந்ததை தமிழ் மக்கள் உணர்ந்திருந்தனர்). அதனை வீழ்ந்து வணங்கிப் பெற்றுக்கொண்டதோடு தமிழ் அரசியல் விவகாரம் உத்தியோகபூர்வமாக வீழச்சியை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. தமிழ் அரசியல் கைதிகள் விடயம் தேவையான சந்தர்ப்பத்தில் மீண்டும் எடுக்க அரசியல் பெட்டகத்தின் அடியில் வைக்கப்பட்டது.

தமிழ் அரசியல்வாதிகளும் தமிழ் சிவில் சமூகமும் தங்களை கைவிட்டுவிட்டார்கள், அவர்களால் எங்களுக்கு விடுதலை இல்லை என விரக்தி நிலைக்கு தளளப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள், தங்கள் தலைவிதியை தாங்களே தீர்மானிக்கும் முகமாக கடந்த ஒக்டோபர் 12ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். கொழும்பு, கண்டி, அநுராதபுரமென இது விரிவடைந்தது.

உண்ணாவிரதப் போராட்டம் தாக்கு பிடிக்காது கோரிக்கைகளோடு நிறுத்தி விடுவார்கள் என ஆட்சியாளர்களும் தமிழ் அரசியல்வாதிகளும் சிந்தித்தனர். தமிழ் சமூகம் விழிப்பு நிலையை அடைவதற்காக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக முழுநாள் சத்தியாகிரகப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. தமிழ் சமூகத்திற்கு முகம்கொடுக்க வேண்டும் என்பதற்காக அரசியல்வாதிகள் சிறைச்சாலைக்குப் படையெடுத்தனர்.

அரசியல் சிறைக்கைதிகளோ, ஜனாதிபதி எங்களுக்கு நேரடியாக பதில் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். தமிழ் சமூகத்தினதும் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியான மைத்திரி தமது கபட நாடகத்திற்கு இணக்க அரசியல் தலைவர் ஒருவரை கைதிகளைப் பார்க்க தூதுவிட்டார்.

தமது பரிவாரங்களோடு கைதிகளிடம் சென்றவர், “எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதியிடம் இருந்து நல்ல செய்தி கிடைக்கும், நீங்கள் விடுதலையாவீர்கள்’’ என்றார். நம்பிக்கை இழந்த கைதிகள் நல்ல செய்தி கிடைக்காவிட்டால் நாங்கள் விடுதலைக்காக சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிப்போம் என சூளுரைத்தனர். உங்களுக்கு விடுதலை கிடைக்காவிட்டால் மக்களை திரட்டிக்கொண்டு நாங்களும் உங்களோடு சேர்ந்து போராட்டத்தில் இறங்குவோம் எனக் கூறி வெளியில் வந்தார் அவர்.

பிணை, புனர்வாழ்வு என்ற விடயம் வெளியில் வந்ததே தவிர ஜனாதிபதி மௌனியாய் இருந்தார். அவருக்குத் தெரியும், இணக்க அரசியலுக்குள் இருப்பவர்கள் சலுகைகளை அனுபவிப்பவர்கள், பேராட்டத்தில் இறங்கமாட்டார்கள் என்பதை அவர் அறிந்திருந்தார். நல்ல செய்தி கிடைக்காமையால் 7ஆம் திகதி நள்ளிரவோடு சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர் தமிழ் அரசியல் கைதிகள்.

கைதிகள் உணவைத் தவிர்த்தனர், ஒரு சிலருக்கு சேலைன் ஏற்றப்பட்டாலும் பெரும்பாலானோர் அதனையும் மருத்துவ உதவிகளையும் மறுத்ததோடு, தண்ணீர் அருந்துவதையும் அறுவர் முற்றாகத் தவிர்த்தனர். உடல் பலவீனமடைந்தாலும் அவர்களது போராட்டம் தொடர்ந்தது. அவர்களை பார்க்கச் சென்ற இன்னுமொரு தமிழ் அரசியல்வாதி, அரசியல் கைதிகள் உடல் பலத்தோடு இருக்கின்றார்கள் எனக் கூறி போராட்டத்தைக் கொச்சைப்படுத்தினார். இந்நிலையில், புனர்வாழ்வுதான் அவர்களுக்கு விடுதலை என்பதை உணர்த்துவதற்கு பிரதமர் இன்னுமொரு தமிழ் அமைச்சர் ஒருவரை அவர்களிடத்தில் அனுப்பினார். இதனைத் தொடர்ந்து அரசியல் கைதிகளும் புனர்வாழ்விற்கு விருப்பின்றி விருப்பை தெரிவித்தனர்.

வட கிழக்கிலும் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கொழும்பிலும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. இப்போராட்டங்கள் எல்லாம் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டதே தவிர அரசியல் ரீதியான அடுத்த கட்ட முன்நகர்விற்கு திட்டமிடப்படவில்லை. இது விடுதலை தொடர்பிலும் தமிழ் அரசியல் தொடர்பிலும் தமிழ் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவிற்கு அடையாளம் எனலாம்.

அரசு கைவிட்டுவிட்டது, தமிழ் அரசியல்வாதிகளும் சிவில் சமூகமும் கைவிட்டன. ஒழுங்கமைக்கப்படாத, தலைமைத்துவம் இல்லாத போராட்டம் என்பதால் விரக்கியுற்ற அரசியல் கைதிகள் புனர்வாழ்விற்கு முழுமையாக உடன்பட்டனர்.

அரசியல் கைதிகளின் பேராட்டத்தைத் தொடர்ந்து அதனை சிதைப்பதற்காக அரசு திட்டமிட்டு காய்களை நகர்த்தியதோடு, புனர்வாழ்வு, பிணை என தமிழ் அரசியல்வாதிகள் மூலமே செய்திகளை வெளியிலே உலாவச் செய்ததோடு, அதனையே அரசு இறுதியாக உறுதியும் செய்தது. தொடர்ந்து சாகும் வரையிலான போராட்டம் செத்தது. அதனோடு தமிழர் அரசியலும் கேள்விக்குறியானது.

இனவாதிகளுக்கு இடமில்லை எனக் கூறிய ஜனாதிபதி தனது பதவியை, அரசை தக்கவைப்பதற்கும் இனவாத விஷம் கக்கும் முன்னாள் ஜனாதிபதிக்கு பதில்கொடுக்கும் முகமாகவும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாது பிணை, புனர்வாழ்வு வழங்க முன்வந்தமை இனவாதத்தின் அடிப்படையிலாகும். அதனால்தான் இவ்வரசின் அமைச்சர்கள், “நாட்டில் பயங்கரவாதிகள் உள்ளனர், அரசியல் சிறைக்கைதிகள் எவரும் இங்கு இல்லை, அவர்களுக்கு நாங்கள் முழுமையான விடுதலையும் கொடுக்கவில்லை” என்ற கருத்துக்களை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தினர். இக்கூற்றுகளும் இனவாதத்தின் இன்னுமொரு வடிவமே.

அரசியல் கைதிகளோ தற்போது கையருந்த நிலையில் நிற்கின்றனர். அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென தெரியாது உள்ளனர். ஆனால், “நம்பிக்கையற்ற நிலையிலே எங்களது விடுதலைக்கான போராட்டத்தை நாங்கள் ஆரம்பித்தோம். உங்கள் பேராட்டக் களத்தில் வாயிலை திறந்து கொடுத்துள்ளோம். களத்திலே நிற்கப்போகின்றீர்களா களத்தைவிட்டு நீங்கப்போகிறீர்களா அல்லது இரண்டாம் முள்ளிவாய்க்கால் அழிவை அதாவது, அரசியல் ரீதியான அழிவை சந்திக்கப்போகின்றீர்களா?” எனும் கேள்வியை தொடுக்கின்றனர்.

அரசு பிணை, புனர்வாழ்வு என அரசியல் சிறைக்கைதிகளை திறந்தவெளிச் சிறைக்குள் தள்ளி புலனாய்வு முள்வேலிக்குள் அவர்களை அடைக்கத் திட்டமிட்டுள்ளது. (பிணை, புனர்வாழ்வு தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையிலும் பல்வேறு குளறுபடிகள் உள்ளதோடு, அரசியல் சிறைக்கைதிகள் வெளியில் வருவதற்கான சந்தர்ப்பமும் அரிதாகவே காணப்படுகின்றது).

பிணை வழங்கி அவர்களைக் குற்றவாளிகளாக வைத்திருப்பது எந்த சந்தர்ப்பத்திலும் கைதுசெய்யப்படலாம் என்ற அச்சத்தைத் தருவதாகும். புனர்வாழ்வு என்பதும் பிழை செய்தவர்களுக்கானது, அப்பிழைகளிலிருந்து திருந்துவதற்கானது. இதன் மூலம் அரசியல்கைதிகள் இல்லையென அரசு உறுதிப்படுத்துவதோடு, அவர்கள் பயங்கரவாதிகள், பாரிய குற்றமிழைத்தவர்கள், தண்டிக்கப்பட வேண்டியவர்கள், புனர்வாழ்விற்கு உட்பட வேண்டியவர்கள் என்பதைத் தெளிவாக முன்வைத்துவிட்டது. வேறு வகையில் கூறினால், சுதந்திரத்திற்குப் பின்னரான அரசுகள் தமிழருக்கு எதிராக நிகழ்த்திய திட்டமிட்ட இனவாத அழிப்புகளையும் அரச பயங்கரவாதத்தையும் மூடிமறைக்கப் பார்க்கிறது என்பது தெளிவு.​ இந்நிலையில், தமிழ் அரசியல்வாதிகள் புனர்வாழ்வை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். அதாவது, அரசியல் கைதிகள் தாங்கள் குற்றவாளிகள் என ஒப்புக்கொள்கின்றார்கள். தமிழ் சமூகமாக தமிழர் அரசியலில் அக்கறையுள்ள சிவில் சமூகமாக அரசின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்கின்றோமா? இல்லையெனில் அதற்கான மாற்று கருத்தியல் செயற்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளனவா?

அரசு தீர்மானித்துள்ள பிணை, புனர்வாழ்வை அமைதியான முறையில் நாமும் ஏற்றுக்கொள்வதாயின் அரசியல் சிறைக்கைதிகளை மாத்திரம் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவில்லை, கடந்த கால எமது அரசியல் பயணத்தையும் குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தியுள்ளோம். அதாவது, இன்னுமொரு அரசியல் ரீதியான முள்ளிவாய்க்கால் அழிவிற்கு எம்மை உட்படுத்தப்போகின்றோம் என்பதே பொருள்படுகின்றது. அரசியல் கைதிகளின் முழுமையான விடுதலைக்கான எமது செயற்பாடு எமது அரசியலைத் தக்கவைக்கும். 2009 பொருட்சேதங்களை உயிர் அழிவை தமிழ் சமூகம் சந்தித்தது. ஆனால், கொள்கை ரீதியிலான அரசியல் சித்தாந்தத்தை அழிவிற்கு நாம் உட்படுத்தவில்லை. தற்போதைய அரசு சர்வதேச மற்றும் உள்ளக சக்திகளோடு இணைந்தும் இலங்கைக்கு வெளியிலென தமிழ் சமூகத்தை இணைத்துக் கொண்டும் அரசியல் அழிவைத் திட்டமிட்ட முன்நகர்த்துகின்றது. இது அரசியல் கைதிகள் விடயத்தில் தெளிவாகியுள்ளது.

அருட்தந்தை மா. சத்திவேல்