படம் | VIRAKESARI

பெருந்தோட்ட தொழிலாளர்கள் நாட்டின் பொருளாதார மற்றும் அபிவிருத்திக்கு பெரும் சக்தியாக தொடர்ந்திருப்பதோடு, வாக்குப் பலத்தின் மூலம் அரசியலிலும் பலமான சக்தியாக விளங்குகின்றனர். பெருந்தோட்ட கம்பனிகள் இவர்களை வருமானம் ஈட்டிக்கொடுக்கும் சக்தியாகவும், அரசியல்வாதிகள் தங்களை பதவியில் அமர்த்தும் உழைப்பாளர் சக்தியாகவும் மட்டுமே பார்ப்பதோடு இம்மக்கள் கௌரவத்தோடு வாழவும் பிறந்தவர்கள் என்பதை மறந்து இலாபநட்ட கணக்கிலேயே இவர்களை கண்ணோக்குவது வருந்தத்தக்கது.

முதலாளிமார் சம்மேளனத்துக்கும் தொழிற்சங்கங்களுக்குமான கூட்டு ஒப்பந்தம் (2013-2015) முடிவடைந்து பல மாதங்களாகியும் பலசுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னரும் சம்பள ஒப்பந்தம் என்பது தொடர்ந்து இழுபறியாகவே உள்ளது.

கடந்த கால ஆட்சியாளர் சார்பு (மஹிந்த) இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலை இலக்குவைத்து ரூபா 1,000 சம்பளப் போராட்டத்தை ஆரம்பித்தது. தொழிலாளர்களை மெதுவாக வேலை செய்யும் போராட்டத்திலும் ஈடுபடுத்தியது. அத்தோடு, ஹட்டன் மல்லியப்பு சந்தியிலே நள்ளிரவு 12 மணிக்கு சத்தியாகிரகப் போராட்டத்தை ஆரம்பித்து ஏனைய தொழிற்சங்கங்களுக்கும் கட்சிகளுக்கும் சவால் விடுத்தது.

ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து பிரதமராகத் தெரிவான ரணில் விக்கிரமசிங்க தேர்தல் முடிந்ததும் சம்பளப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகக் கூறினார். வடக்குக் கிழக்குக்கு வெளியிலான தமிழ் மக்களின் ஏகோபித் குரலாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணியும் தாம் பதவிக்கு வந்தால் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு கிட்டும் என்று கூறியது.

ஆனால், ஒப்பந்த கால எல்லை முடிந்து எட்டு மாதங்களைக் கடந்தும் தேர்தல் முடிந்து 3 மாதங்களுக்குப் பின்னரும் சம்பளம் தொடர்பாக தொழிலாளர்களுக்குத் தீர்வு கிட்டவில்லை. இறுதியாக நடந்த பேச்சுவார்த்தையில் தொழில், தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யு.டி.ஜெ. செனவிரத்னவும் கலந்துகொண்ட போது முதலாளிமார் சம்மேளனப் பிரதிநிதிகள், சம்பள அதிகரிப்பை வழங்க முடியாது எனவும், அதுவும் ரூபா 1,000 சம்பளக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அடித்துக் கூறிவிட்டனர்.

அமைச்சர் நாட் சம்பளமாக ரூபா 770 என ஆலோசனை முன்வைத்திருக்கின்றார். அதாவது, நாட் சம்பளம் ரூபா 500 அல்லது 510, வருகைக் கொடுப்பனவு ரூபா 200, விலைக் கொடுப்பனவு ரூபா 60 என்பதாகும்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இதனை தனது மானப் பிரச்சினையாகப் பார்க்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ரூபா 1,000 பெற்றுக்கொடுப்போம் எனத் தொழிலாளர்களுக்கு வாக்குறுதி அளித்து தேர்தல் களத்தில் இறங்கியது. தேர்தலில் பின்னடைவை சந்தித்த இந்தக் கட்சி அடுத்து வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்கு காய்களை நகர்த்தும் முகமாக ஒப்பந்தம் இப்போது கைச்சாத்திடப்படக்கூடாது என உள்ளூர விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கான தடைகளையும் போடுவதற்கு ஆயத்தமாக இருப்பதாகவும் தெரிகிறது.

தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் அரச சார்புடையோர் தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி போராட்டம் நடத்தவோ ரூபா 1,000 அதிகரிப்பைக் கோரி அரசுக்கு அழுத்தம் கொடுக்கவோ முடியாதுள்ளது. நாட் சம்பளம் ரூபா 770 என்பதை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டால் ரூபா 1,000 அதிகரிப்புக் கோரிக்கையை காட்டிக்கொடுத்ததாக அவப்பெயரை சந்திக்க நேரிடும். அல்லது 1,000 கேட்டால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸோடு கூட்டு சேர்ந்ததாகவோ அல்லது அவர்களின் கோரிக்கைக்கு அடங்கிப் போய்விட்டதாகவோ தோற்றம் கொடுக்கலாம் என செயலறியா நிற்கின்றது.

மீரியாபெத்தையில் மண்சரிந்து மக்கள் மான்றிட அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுடைய தேவையும் வீட்டுத் தேவையும் அரசியல் மயப்படுத்தப்பட்டு இருவேறு இடங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடுகளைக் கட்ட அடிக்கல் நடப்பட்டன. ஆனால், ஒருவருடமாகியும் பிரச்சினைகள் தீரவில்லை.

மீரியாபெத்தை இயற்கை அனர்த்தத்தைத் தொடர்ந்து மலையகம் எங்கும் மக்கள் சொந்த வீடு, சொந்த விவசாயக் காணி என எழுச்சிகொண்டெழுந்தபோது அதுவும் அரசியல்மயப்படுத்தப்பட்டு பசுமைபூமி (7 பர்ச்சர்ஸ்) திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், மலையகத்துக்கு என பொதுவான வீடு, விவசாயக் காணி பெற்றுக்கொடுப்பதற்கு பொதுக்கொள்கை வகுக்கப்படவில்லை.

அதேபோன்று, கடந்த காலத்தில் பாடசாலை கட்டட திறப்பு விழாக்கள் அரசியல்மயப்படுத்தப்பட்டு ஒரே கட்டடம் மலையக அரசியல்வாதிகளால் இரண்டு தடவைகள் திறக்கப்பட்டதும் உண்டு.

தற்போது மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வாழ்வின் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காக நாளாந்தம் போராடுகின்ற போது சம்பள விடயத்தை குறுகிய இலாப நட்ட நோக்கில் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளதால் தொழிலாளர்களை அவர்களுடைய வாழ்வை பாதாளத்துக்கு இட்டுச் செல்கின்றது.

இக்கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும் போது தமிழ் அரசியல் கைதிகளின் நிபந்தனையற்ற விடுதலைக்காக வடக்கு – கிழக்கு முழுவதும் பூரண ஹர்த்தாலுக்காக அறைகூவல் விடுக்கப்பட்டிருப்பதோடு, அவர்களின் விடுதலைக்காக தொடர்ச்சியான போராட்டங்களை மக்கள் சுயமாகவும் அமைப்பு ரீதியாகவும் நடத்துகின்றனர்.

மலையக மக்களும் பெருந்தோட்டத் தொழிலாளர்களும் மலைய அரசியல் தலைவர்களிலும், தொழிற்சங்கங்களிலும் வைத்திருந்த நம்பிக்கை நாளாந்தம் பலவீனமடைந்து வருகின்றது. தங்களுடைய சம்பள, வீடு, காணிப் பிரச்சினை தொடர்பாக தீர்வின்மையால் தொழிற்சங்கங்களுக்கான சம்பளப் பணத்தை நிறுத்திவிடுவதாகவும் பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், மலையக அரசியல்வாதிகளும் தொழிற்சங்கங்களும் தங்களுடைய பொறுப்புக்களையும் கடமைகளையும் நிறைவேற்றாவிடின் வேறு சக்திகள் உள்நுழைந்து மலையக மக்களின் இருப்பையும் மலையகத் தேசியத்தையும் அழித்துவிடலாம்.

ஆதலால், மலையக நலன்சார் அமைப்புக்களும் நபர்களும் ஒன்றான சக்தியாக தொழிற்சங்கங்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் அழுத்தம் கொடுப்பதன் மூலமே தொழிலாளர்களின் உழைப்புக்கான ஊதியத்தை பெற்றுக்கொடுக்க முடியும். வியர்வைக்கான கௌரவத்தையும் உரித்தாக்க முடியும்.

அருட்தந்தை மா. சத்திவேல்