படம் | AP Photo/Eranga Jayawardena, DAILYMAIL

அரசியல் கைதிகளுக்கு என்று ஓர் அமைப்பு எதுவும் கிடையாது. கைதிகள் தாமாகப் போராடத் தொடங்கும் போது அதை அரசியல்வாதிகள் தத்தெடுப்பதே வழமை. இம்முறை வடமாகாண முதலமைச்சர் இது விடயத்தில் கூடுதலான அக்கறையைக் காட்டுவதாகத் தெரிகிறது. கைதிகளும் அவரை ஒப்பீட்டளவில் அதிகளவில் நம்புவது போலத் தெரிகிறது. கைதிகளுக்கென்று ஓர் அமைப்பு எதுவும் கிடையாது என்று அவரும் கூறியிருக்கிறார். அரசியல்கைதிகளுக்கென்று ஏன் ஓர் அமைப்பு உருவாக்கப்படவில்லை?

முன்பு அரசியல் கைதியாக இருந்து விடுவிக்கப்பட்ட ஓர் அரசியல் செயற்பாட்டாளர் சொன்னார், “இப்போதுள்ள அரசியல் கைதிகளில் அநேகமானவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்ட்டவர்களே. தேசத்துரோகம் அல்லது தேசிய பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டவர்களே. குறிப்பாக புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது அந்த இயக்கத்துக்கு ஏதோ ஒரு விதத்தில் உதவியவர்களே. எனவே, 2009 மேக்கு முன் கைதிகளுக்கு என்று அமைப்பு எதையும் உருவாக்கினால் அந்த அமைப்பையும் புலிகளோடு சம்மந்தப்படுத்தி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அதன் மீது நடவடிக்கை எடுக்கக்கூடிய ஓர் அரசியல் இராணுவச் சூழலே நிலவியது. இது காரணமாக யுத்த காலங்களில் அரசியல்கைதிகளுக்கு என்று ஓர் அமைப்பை உருவாக்க அச்சப்படும் ஒரு சூழலே நிலவியது” என்று.

ஆனால், ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரும் இது விடயத்தில் ஏன் அமைப்பு ரீதியாகச் சிந்திக்க முடியவில்லை? ஆனால், அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பை வழங்கத் தயாரற்றிருக்கும் அரசோ எல்லாவற்றையும் அமைப்பு ரீதியாகவே சிந்திக்கின்றது; செயற்படுத்துகின்றது. அரசு அவர்களை அரசியல் கைதிகள் இல்லை என்று கூறுகிறது. அவர்கள் சட்டப்படி குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்லது குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் என்ற வகைக்குள்தான் அடங்குவர் என்றும் கூறுகிறது. அதாவது, அரசு அரசியல் கைதிகளின் அரசியலை நீக்கப்பார்க்கிறது. அவர்களுடைய அரசியலை அது குற்றம் என்று கூறுகிறது. எந்த அரசியலுக்காக அவர்கள் கைது செய்யப்பட்டார்களோ அந்த அரசியலை அது குற்றம் என்று கூறுகிறது. ஏனெனில்,, பயங்கரவாதத் தடைச்சட்டம் அந்த அரசியலை பயங்கரவாதம் என்று அழைக்கின்றது. அதாவது, தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை பயங்கரவாதத் தடைச்சட்டம் பயங்கரவாதமாக, ஒரு குற்றமாகப் பார்க்கிறது. எனவே, பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கூடாக இப்பிரச்சினையை நோக்கின் அது ஒரு குற்றமாகவே பார்க்கப்படும். இதை மறுவளமாகச் சொன்னால் அரசியல் கைதிகளின் பிரச்சினையை ஒரு சட்ட விவகாரமாக அணுகுவது என்பது பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கூடாக அணுகுவதுதான்.

சிரேஸ்ட சட்டத்தரணியான வி. புவிதரன் இது பற்றிக் கருத்துக் கூறும்போது “பயங்கரவாத தடைச்சட்டமானது, தமிழ் மக்களில் ஒரு பகுதியினரை குற்றவாளிகளாகக் காண்கின்றது” என்று சொன்னார். எனவே, கைதிகளை விடுவிப்பதற்கான போராட்டம் என்பது அவர்கள் கைதுசெய்யப்படக் காரணமாக இருந்த ஓர் அரசியல் போராட்டத்தின் தவிர்க்கப்படவியலாத ஒரு பகுதிதான். இதை நடைமுறை வார்த்தைகளில் கூறின் கைதிகளை விடுவிப்பதற்கான போராட்டம் எனப்படுவது பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான ஒரு போராட்டம்தான்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் இது ஒரு அரசியல் விவகாரம் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார். கைதிகளும் அவர் மூலமாக தமக்கு நல்லது நடக்கும் என்று நம்புவதாகத் தெரிகிறது. அவர் ஒரு ஓய்வு பெற்ற நீதிபதியாக இருப்பதும், வாக்களித்த மக்களுக்கு விசுவாசமாகவும் வெளிப்படையாகவும் அபிப்பிராயங்களைத் தெரிவித்து வருவதும் கைதிகளுக்கு அவர் மீதான நம்பிக்கைகளை அதிகப்படுத்தியிருக்கலாம்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இச்சிறிய தீவில் நீதிபரிபாலன கட்டமைப்பில் பொறுப்பான பதவிகளை வகித்திருக்கிறார். குறிப்பாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தைத் தன்னுள் கொண்டிருக்கும் நீதி பரிபாலன கட்டமைப்புக்குள் ஒரு நீதியரசராகவும் இருந்திருக்க்கிறார். ஒரு நீதிபதியாக இருந்த காலகட்டத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் அவர் தீர்ப்புகளும் வழங்கியிருக்கிறார். இப்பொழுது தான் வழங்கிய தீர்ப்புகளும் உட்பட இலங்கைத்தீவின் நீதிபரிபாலன கட்டமைப்புத் தொடர்பாக மறுவாசிப்புச் செய்யவேண்டிய ஓர் அரசியல் தலைமைப் பொறுப்பை அவர் வகித்து வருகின்றார். ஒரு நீதியரசராக இருந்த காலகட்டத்தில் எந்த ஒரு அரசியல் விவகாரத்தை சட்டவிவகாரமாக அவர் பார்க்கவேண்டியிருந்ததோ அதையே இப்பொழுது அதன் ஆமான பொருளில் ஓர் அரசியல் விவகாரமாக அணுக வேண்டியிருக்கிறது.

முன்பு நீதியரசராக இருந்தவரையிலும் அவர் அந்த நீதிபரிபாலன கட்டமைப்புக்கு உட்பட்டவராகக் காணப்பட்டார். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக தனக்கு வாக்களித்த மக்களின் பயம், காயம், துக்கம் என்பவற்றுக்கூடாக எல்லாவற்றையும் பார்க்கவேண்டியிருக்கிறது. தனிய சட்டக் கண்கொண்டு எதையும் பார்க்க முடியாத ஒரு நிலை. எனவே, கடந்த இரண்டாண்டுகால பட்டறிவின் பிரகாரமும் கற்றுக் கொண்டவைகளின் பிரகாரமும் அவர் பயங்கரவாதத் தடைச்சட்டம் குறித்தும் இலங்கைத்தீவின் நீதி பரிபாலன கட்டமைப்புக் குறித்தும் மறுவாசிப்புச் செய்யவேண்டியுள்ளது. அவ்வாறு கோட்பாட்டுத் தளத்தில் மறுவாசிப்புச் செய்யப்படும்போதே இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானம், கைதிகளின் விவகாரம், மாகாண சபைக்குரிய அதிகாரங்கள் உள்ளடங்கலாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் வெளிப்படையாகப் பேசிவரும் அரசியலும் அதன் கோட்பாட்டு முழுமையைப் பெறும். அண்மையில் வியட்னாமியத் தூதுவரைச் சந்தித்த போது தான் ஒரு நீதியரசர்தான், அரசியல்வாதி அல்ல என்று அவர் கூறியிருப்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு நிகரான சட்டங்கள் ஏற்கனவே லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்ததுண்டு. இவற்றில் பெரும்பாலானவை கெடுபிடிப்போர் காலகட்டத்திற்கு உரியவை. மேலும், இந்தியாவிலும், இவை போன்ற சட்டங்கள் உண்டு. ஐரோப்பிய நாடுகளிலும் உண்டு. எது பயங்கரவாதம் என்பதைக் குறித்த முடிவுறாத விவாதத்தின் பின்னணியில் அனைத்துலக அரங்கில் இதுபோன்ற சட்டங்கள் பல உண்டு. ஆனால், ஒரு கண்டிப்பான நீதிபதியாக இருந்த விக்கினேஸ்வரன் அரசியலுக்கு வந்த பின் தனது மக்களுக்குரிய நீதியை விட்டுக்கொடுக்காத கண்டிப்பான தலைவராகவும் பார்க்கப்படுகிறார். எனவே, அவர் முன்பு நீதியரசராக இருந்த ஒரு நீதி பரிபாலன கட்டமைப்பை குறிப்பாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தை மறுவாசிப்புச் செய்யும் போதும் தனது மக்களின் நோக்கு நிலையில் இருந்து விமர்சிக்கும் போதும் உலகம் அதை உற்றுக்கேட்கும். அதற்கு ஒரு முக்கியத்துவமும், கவனிப்பும் இருக்கும். இலங்கைத்தீவின் நவீன நீதிபரிபாலன வரலாற்றில் அவருடைய மறுவாசிப்பு தவிர்க்கப்படவியலாத ஓர் அத்தியாயமாகத் திகழும். பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் போன்ற சட்டங்களைக் கொண்டிருக்கும் உலகின் ஏனைய நாடுகளும் அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். இது விடயத்தில் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும், சட்டப்புலமையாளர்களும், சட்ட நிபுணர்களும், சட்டச் செயற்பாட்டாளர்களும், சட்டவாளர்களும், விக்னேஸ்வரனை பலப்படுத்த வேண்டிய ஒரு கால கட்டம் இது.

அரசுத் தலைவர் மைத்திரிபாலவை வட மாகாண சபையினர் சந்தித்தபோது கைதிகளின் விவகாரமும் பேசப்பட்டுள்ளது. இது விடயத்தில் விக்னேஸ்வரன் பலமடைவதை அரசு அனுமதிக்குமா? அவருடைய கோரிக்கைகளை ஏற்று கைதிகளுக்கு பொது மன்னிப்பை வழங்கினால் அது விக்னேஸ்வரனை பலப்படுத்திவிடும். எனவே, இது விடயத்தில் பாராட்டுக்கள் விக்னேஸ்வரனுக்குப் போய்ச் சேர்வதை அரசு விரும்புமா? ஏன் அதிகம் போவான்? அவருடைய கட்சிக்குள்ளேயே ஒரு தொகுதியினர் அதை விரும்புவார்களா?

அச்சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த அரசுத் தலைவர், சட்டமா அதிபர் திணைக்களத்திடம் உரிய ஆவணங்களை வழங்குமாறு கோரியிருப்பதாக செய்திகள் வெளிவந்தன. கைதிகளின் பிரச்சினை இப்பொழுதுதான் மேலெழுந்திருக்கிறது என்பதல்ல. அது விக்னேஸ்வரன் அரசியலுக்குள் வரமுன்னமே இருந்தது. அவர் நீதிபதியாக இருக்கும் பொழுதே இருந்தது. எனவே, அது ஒரு புதிய பிரச்சினை அல்ல. அதைப்பற்றி இனிமேல்தான் அரசுத்தலைவர் கற்கவேண்யிருக்கிறது என்பது எதைக் காட்டுகிறது?

மேற்படி சந்திப்பு நடந்த அதே நாளில் கைதிகளில் ஒரு தொகுதியினர் புனர்வாழ்வுக்குச் சம்மத்தித்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியல் கைதிகளை புனர்வாழ்வுக்கு அனுப்புவது என்பது ஒரு தற்காலிக ஏற்பாடுதான். அது அவர்களைக் குற்றச் செயல்களில் இருந்து விடுதலை செய்ததாக அர்த்தமாகாது என்று சிரேஸ்ட சட்டத்தரனி வி.புவிதரன் கூறுகிறார். புனர்வாழ்வு என்ற நடைமுறையை அவர் கேள்விக்குள்ளாக்குகிறார். குடிப்பழக்கம், போதைப்பெருள் பழக்கம் போன்றவற்றால் இயல்பு வாழ்வு பிறழ்ந்த நபர்களுக்கே புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும். தமது அரசியல் நம்பிக்கைகளுக்காகப் போராடியவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படுவதை எப்படி விளங்கிக் கொள்வது? சரணடையும் வரை அல்லது கைதுசெய்யப்படும்வரை அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையும் அவர்களுடைய நம்பிக்கைகளும் பிறழ்வானவை என்ற ஓர் எடுகோளின் அடிப்படையில்தான் புனர்வாழ்வு வழங்கப்படுகின்றது. ஆயின், புனர்வாழ்வு மூலம் அவர்களுடைய அரசியல் நம்பிக்கைகளை மாற்ற முடியுமா? என்று புவிதரன் கேட்கிறார். அப்படிப் பார்த்தால் எதிரான அரசியல் நம்பிக்கைகளைக் கொண்டிருப்பவர்கள் எல்லோரையும் புனர்வாழ்வுக்கு உட்படுத்தலாமா? என்றும் அவர் கேட்டார்.

புனர்வாழ்வு என்ற கருதுகோளை விமர்சித்த அவர் யாரால் யாருக்குப் புனர்வாழ்வு? என்று கேள்வி எழுப்பினார். மேலும், புனர்வாழ்வு அளிக்கப்பட்ட ஒருவர் மறுபடியும் கைது செய்யப்படமாட்டார் என்ற உத்தரவாதம் எதுவும் இல்லை என்பதை சட்டத்துறை வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. ஆனால், பல ஆண்டுகளாக குடும்பத்தைப் பிரிந்து தனிமையில் தவிக்கும் கைதிகளைப் பொறுத்தவரை புனர்வாழ்வோ பிணையோ அல்லது வேறு எதுவுமோ எதுவாயினும் சிறையை விட்டு வெளியே வந்தால் சரி என்ற தவிப்பே மேலோங்கிக் காணப்படுகின்றது. இதை ஒரு சட்ட விவகாரமாகப் பார்க்க வேண்டுமா அல்லது அரசியல் விவகாரமாகப் பார்க்கவேண்டுமா? என்ற கோட்பாட்டு விவாதங்கள் எல்லாவற்றுக்கும் அப்பால் கைதிகள் தமது குடும்பங்களோடு இணைவது என்பது அதிகம் கவனிப்புக்குரிய ஒரு மனிதாபினமான பிரச்சினையாகவும் காணப்படுகின்றது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் விளைவுகளில் இதுவும் ஒன்று என்று சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். நீதிக்கான நீண்ட காத்திருப்பும் இழுபடும் விசாணைகளும் கைதிகளின் உளவுரணைப் பாதிக்கின்றன. எல்லாவற்றையும் விட முக்கியமாக எந்த ஓர் அரசியலுக்காக அவர்கள் கைது செய்யப்பட்டார்களோ அந்த அரசியலானது அதாவது, ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. எனவே, எந்த ஒரு நம்பிக்கையின் பிரகாரம் அவர்கள் காத்திருப்பார்கள்? இதுவும் அவர்களைத் தளரச் செய்வதாக இது விடயத்தில் சம்பந்தப்பட்ட சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர்.

இத்தகையதோர் பின்னணியில் அரசியல் கைதிகளின் விவகாரத்தில் விக்னேஸ்வரனின் நகர்வுகள் வெற்றிபெறுமாக இருந்தால் அது கூட்டமைப்புக்குள்ளும் தமிழ் மக்கள் மத்தியிலும் அவரைப் பற்றிய படிமத்தை மேலும் மிளிரச்செய்யும். ஏற்கனவே, கூட்டமைப்புக்குள் மேலெழுந்த இரண்டு முக்கிய அதிருப்தியாளர்களான வட மாகாண சபையைச் சேர்ந்த ஒரு பெண் உறுப்பினரையும் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணித் தலைவரையும் கட்சித் தலைமையானது ஏதோ ஒரு விதத்தில் வேகம் தணியச் செய்துவிட்டது. ஆனால், விக்னேஸ்வரனை அப்படிச் செய்ய முடியுமா? அவருடைய மூப்பும் அவருக்கு இருக்கும் அங்கீகாரமும் ஒப்பீட்டளவில் அவரைப் பாதுகாக்கக் கூடியன. ஆனால், கூட்டமைப்புக்குள் காணப்படும் அதிருப்தியாளர்களுக்குத் தலைமைதாங்க அவர் இன்றுவரையில் தயாராகக் காணப்படவில்லை.

லண்டனில் புலம்பெயர்ந்த தமிழர்களை ஒரு மண்டபத்தில் சந்தித்து அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஆற அமரப் பதில் சொன்னது போல தனக்கு வாக்களித்த மக்களையும் ஒரு வீரசிங்கம் மண்டபத்திலோ அல்லது வேறெந்த பொது இடத்திலோ அவர் சந்திக்க வேண்டும். தமிழ் மக்கள் மத்தியில் கருத்துருவாக்கிகளாகக் காணப்படும் புலமையாளர்களையும் செயற்பாட்டாளர்களையும், ஊடகவியலாளர்களையும், படைப்பாளிகளையும் அவர் அடிக்கடி சந்திக்க வேண்டும். எல்லாவற்றையும் விட முக்கியமாக அவர் எந்த ஒரு நீதிபரிபாலன கட்டமைப்பின் கீழ் உயர் பொறுப்பில் இருந்தாரோ அந்த நீதிபரிபாலன கட்டமைப்பின் சர்ச்சைக்குரிய சட்டங்களும் நடைமுறைகளும் தனக்கு வாக்களித்த மக்களின் கூட்டு உரிமைகளுக்கு எதிராகவே காணப்படுகின்றன என்பதை வெளிப்படையாகப் பேச வேண்டும். அப்படிப் பேசுவதிலிருந்தே அரசியல் கைதிகளுக்கான முழுமையான விடுதலைக்குரிய போராட்டம் தொடங்குகிறது. அதுமட்டுமல்ல எதிர்காலத்தில் உருவாக்கப்படக்கூடிய எந்தவொரு விசாரணைப் பொறிமுறையிலும் உள்நாட்டு நீதிக்கட்டமைப்பின் பங்களிப்பு எந்தளவிற்கு இருக்க வேண்டும் என்ற கேள்விக்குரிய விடையும் அங்கிருந்துதான் தொடங்குகிறது.