படம் | FLICKR

“இலங்கையில் காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் மட்டுமல்ல. வடக்கு கிழக்கில் அதிக எண்ணிக்கையிலான தமிழ் ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டு, காணாமலாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டும் உள்ளனர். அவர்கள் தொடர்பாகவும் இந்த அரசு விசாரணைகளை ஆரம்பிக்கவேண்டும். அவர்களது உறவுகளுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்” – என்கிறார் காணாமல்போன லங்கா ஈ நிவ்ஸ் இணையதளத்தின் கேலிச்சித்திரக்காரர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட.

மக்களுக்கு உண்மையை தெரிவித்ததற்காக சர்வாதிகார இலங்கை அரசுகளால், ஆயுதக்குழுக்களால் தமிழ், சிங்களம் என்று பாராமல் ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டும், கொல்லப்பட்டும் உள்ளனர். கடந்த மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சியின் போது ஊடக சுதந்திரம் ஊடகவியலாளர்களிடம் இருந்து பறிக்கப்பட்டிருந்தது. பலர் கடத்தப்பட்டிருந்தனர், இன்னும் சிலர் பட்டப்பகலில் நடுவீதிகளில் வைத்து சுடப்பட்டு, வெட்டிக் கொல்லப்பட்டுமிருந்தனர். ஒரு சில ஊடக நிறுவனங்களுக்குள் அத்துமீறி நுழைந்த ஆயுததாரிகள் ஊடகப் பணியாளர்களை, பத்திரிகையாளர்களை மிலேச்சத்தனமாக சுட்டுக் கொண்டிருந்தனர்.

ஆகவே, “ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படும், கொல்லப்பட்ட – காணாமல்போன ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்படும்” என்ற வாக்குறுதியும் வழங்கியே மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும், ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் பதவியேற்றிருக்கின்றனர். ஆனால், இதுவரை பிரகீத் எக்னலிகொடவின் விசாரணையை மட்டுமே முன்னெடுத்துச் செல்ல முடிகிறது. அதுவும் பல நெருக்கடிகளுக்கு மத்தியில். தமிழ் ஊடகவியலாளர், ஊடகப் பணியாளர்கள் இன்னும் புலிகளின் பட்டியலில்தான் உள்ளனர். விசாரணைகள் ஆரம்பிக்கப்படாததற்கு இதுதான் காரணம் போல் தெரிகிறது.

இந்த நிலையில், நவம்பர் 2ஆம் திகதி ஊடகவியலாளர்களுக்கு எதிராக குற்றங்கள் புரிந்தவர்களுக்கான தண்டனை விலக்கலை முடிவுக்குக் கொண்டுவரும் சர்வதேச தினமாக (International Day to End Impunity for Crimes against Journalists) ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா, தனது கணவர் காணாமல்போனமை தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதைப் போன்று கொல்லப்பட்ட, காணாமல்போன தமிழ் ஊடகவியாளர்கள் தொடர்பான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில்,

“நான் அறிந்துள்ள வரை 2012ஆம் ஆண்டு வரை என்று நினைக்கிறேன், 33 ஊடகவியலாளர்கள் காணாமலாக்கப்பட்டு அல்லது கடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். எனக்குத் தெரிந்தவரை இவர்கள் எவருக்கும் நீதி நிலைநாட்டப்படவில்லை.

எனது கணவர் பிரகீத் காணாமல் போனமை தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சிங்கள சமூகத்தைச் சேர்ந்த லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் விசாரணை நடைபெறுவதாகக் கூறினாலும் இன்னும் முடிவை எட்டவில்லை. இந்த விசாரணைகள் பல அழுத்தங்கள், நெருக்கடிகள் மத்தியில் இழுபறியுடன் நடந்து வருகின்றன என்பதுதான் உண்மை.

20180000838_8534588e4a_k

அதேவேளை, தமிழ் ஊடகவியலாளர்கள் நிலைமை இதனையும் விட மோசமான நிலையில் உள்ளது. இன்னும் ஒருவர் தொடர்பாகவேனும் விசாரணை ஆரம்பிக்கப்படாத சூழ்நிலை காணப்படுகிறது.

உங்களுக்குத் தெரியும், பிரகீத் காணாமல்போனமை தொடர்பான விசாரணையுடன்தான், லசந்த விக்ரமதுங்கவினதும், வசீம் தாஜுதீனினதும் விசாரணை பொறுப்பை குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவு எடுத்துக் கொண்டது. ஆனால், சிவராம் மற்றும் ஏனைய தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பாக அரசு கவனத்தில் எடுக்கவில்லை.

ஆயுதம் ஏந்தவில்லை

பேனையை கையில் எடுத்ததால்தான் இவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், ஆயுதங்கள் ஏந்தியதற்காக அல்ல. உண்மையை வெளிப்படுத்தியதால், நிலைப்பாட்டை தெரிவித்ததால்தான் இவர்கள் கடத்தப்பட்டிருக்கிறார்கள், கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்தச் சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்படவேண்டும். இவர்களது குடும்பத்தினருக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.

தந்தை இல்லாமல் எனது பிள்ளைகள் அனுபவிக்கும் வேதனையை அறிவேன். இதுபோன்றுதான் லசந்த விக்ரமதுங்கவின், சிவராமின் பிள்ளைகளும். ஊடகவியலாளர்களின் தாயார்கள், பிள்ளைகள் வரும்வரை அழுதுகொண்டு காத்திருக்கின்றார்கள். முதலில் அவர்களுக்கு என்ன நடந்தது எனக் கூறவேண்டும்.

சரியான தருணம்

உண்மைக்காக, நீதிக்காக ஊடகவியலாளர்கள் செயற்பட்டதால் அரசுக்கு பொறுப்புள்ளது, அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது தொடர்பான தகவல் தெரிவிப்பதற்கு.

அரசு இவர்கள் தொடர்பாக விசாரணைகளை தொடங்குவதற்கு இது சரியான தருணமாகும். இப்போது ஜெனீவா பிரச்சினை முடிந்துவிட்டது. இன்னும் அதனை தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்காமல் கொல்லப்பட்ட காணாமல்போன ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும்.

ஒரு சிலர் கூறலாம், கொல்லப்பட்ட, காணாமல்போன ஊடகவியலாளர்களின் உறவுகள் விசாரணையைக் கோராததால் அரசு எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது என்று. என்னைப் போன்று எல்லோராலும் எந்நேரமும் வீதியில் இறங்கிப் போராட முடியாது. அரசுக்கு பொறுப்பிருக்கிறது, கடமை இருக்கிறது, இவர்கள் தொடர்பாக விசாரணையை முன்னெடுத்து நீதியை நிலைநாட்டுவதற்கு.

இவர்கள் புலிகள் அல்ல

பிரகீத்தையும் புலிகள் எனக் கூறி, தொடர்ந்து கொண்டிருக்கும் விசாரணையை நிறுத்தவே மஹிந்த ராஜபக்‌ஷக்கள் முயன்று வருகின்றனர். தமிழ் ஊடகவியலாளர்களை புலிகளாகவே பார்க்கின்றனர். கொல்லப்பட்ட, காணாமல்போன ஒவ்வொரு ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணையின் முடிவில் ராஜபக்‌ஷக்கள்தான் இருக்கின்றனர். இது எல்லோரும் தெரிந்தவிடயம். ஆக, விசாரணை முடிவுகள் வெளிவருவதை அவர்கள் விரும்பமாட்டார்கள்.

தமிழ், சிங்களம் என்றில்லாமல் – ராஜபக்‌ஷக்கள் செய்தவற்றை மட்டும்தான் விசாரிப்போம் என்று பழிவாங்கல் அரசியல் செய்யாமல் கொல்லப்பட்ட, கடத்தப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குவது இந்த அரசின் கடமை. அதனை செய்தே ஆகவேண்டும்” – என்றார்.

சந்தியா எக்னலிகொடவுடனான நேர்காணலை முழுமையாக கீழே பார்க்கலாம்.