படம் | REUTERS/Anuruddha Lokuhapuarachchi

2009 மே18 இற்குப் பின் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் மத்தியில் அதிகம் பிரபல்யமான ஒருவராக தமிழினி காணப்பட்டார். இதுவரை தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களுள் ஒப்பீட்டளவில் உயர் மட்ட பிரதானிகளில் ஒருவராகவும் அவர் காணப்பட்டார். இவை காரணமாகவே அவருடைய மறைவும் அதிகம் கவனிப்பைப் பெற்றிருக்கிறது.

அவருடைய இறுதி நிகழ்வை உற்றுக் கவனித்தவர்களும் அவரோடு நெருங்கிப் பழகியவர்களும் பின்வரும் அபிப்பிராயங்களைத் தெரிவித்திருக்கிறார்கள்.

  1. ஒப்பீட்டளவில் அதிக தொகை மக்கள் இறுதிநிகழ்வில் பங்குபற்றியிருக்கிறார்கள். இது தடுப்பில் இருந்து வந்தவர்கள் மீது தமிழ் மக்களுக்குள்ள அன்பை வெளிகாட்டுவதாயுள்ளது.
  2. அதிக தொகை அரசியல் பிரமுககர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். ஆனால், ஒரேயொரு அரசியல்வாதி – திருமதி பத்மினி சிதமம்பரநாதன் -மட்டும் இடுகாடு வரை சென்றிருக்கிறார். மற்றவர்கள் இடையிலேயே சென்றுவிட்டார்கள் என்று தமிழ் மிரர் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
  3. தமிழினியின் தாயாருடைய வீடு அதாவது, இறுதி நிகழ்வு நிகழ்ந்த வீடு கீழ்மத்தியதர வர்க்கத்துக்குரிய குறைந்த வளங்களுடனேயே காணப்பட்டது.
  4. தமிழினியின் ஒரு சகோதரி நோர்வேயில் வசிக்கிறார். எனினும், அவருடைய குடும்பத்தின் நிதி நிலை அப்படியொன்றும் பெரிய செழிப்பாகக் காணப்படவில்லை. அதாவது, தமிழனி புலிகள் இயக்கத்தில் பெற்றிருந்த முதன்மையைப் பயன்படுத்தி அவருடைய குடும்பம் தன்னை வளர்த்துக் கொள்ள முற்படவில்லை. அதுமட்டுமல்ல அவர் தடுப்பிலிருந்து வந்த பின்னரும் அவருடைய குடும்பத்திற்கு போதிளவு உதவிகள் கிடைத்திருக்கவில்லை.
  5. அவர் தடுப்பிலிருந்து வந்த பின்னர் அவரை அரசியல் பிரமுகர்கள் என்று கூறத்தக்கவர்கள் பெரும்பாலும் சந்தித்திருக்கவில்லை.
  6. அவர் நோய்வாய்ப்பட்டிருந்த நாட்களில் அரசியற் பிரமுகர்கள் எவரும் அவரை வைத்தியசாலைக்குச் சென்று பார்த்திருக்கவில்லை.
  7. இறுதிக்கட்டத்தில் அவருக்குரிய மருத்துவச் செலவுக்காக பெருந்தொகைப் பணம் தேவைப்பட்டிருக்கிறது. அதைத் திரட்டுவதற்கு அவருடன் நெருக்கமான சிலர் முயற்சித்திருக்கிறார்கள். நோர்வேயைச் சேர்ந்த ஒரு மகளிர் அமைப்பும் ஒரு இணையத்தளமும் சில தனிநபர்களும் நிறுவனங்களும் உதவியுள்ளன.
  8. நோர்வே ஒஸ்லோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு பேராசிரியரும், “எனது மகள் ஒரு பயங்கரவாதி” என்ற படத்தைத் தயாரித்த ஒரு நோர்வீஜிய பெண் திரைப்படவியலாளரும் தமிழினிக்கு தனிப்பட்டமுறையில் உதவியுள்ளார்கள்.
  9. அவருடைய சிகிச்சைக்குத் தேவையான நிதியைத் திரட்ட முற்பட்டபோது ஒரு பகுதியினர் உதவியிருக்கிறார்கள். ஒரு பகுதியினர் மறுத்திருக்கிறார்கள். அவர் சயனைட் அருந்தாமல் சரணடைந்தது ஒரு வீழ்ச்சி என்ற தொனிப்படக் குற்றம் சாட்டும் ஒரு தரப்பினர் அவருக்கு உதவிகள் எதையும் செய்ய விரும்பவில்லை.
  10. அவருடைய இறுதி நிழ்வில் புனர்வாழ்வு ஆணையாளர் அலுவலகம் மலரஞ்சலி செலுத்தியிருந்தது. இது ஜனவரி 08இற்குப் பின்னரான ஒரு புதிய தோற்றப்படாகும்.
  11. செஞ்சோலை படுகொலை மற்றும் கட்டாய ஆட்சேர்ப்பு தொடர்பில் தமிழினியின் மீதும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. ஆனால், தடுப்பில் இருந்து வந்தபின் அவர் தனது இறந்தகாலத்தை எப்படி சுயவிமர்சனம் செய்துகொண்டார் என்பது எங்கேயும் பதிவு செய்யப்படவில்லை. அவரைப் போன்ற அரசியல் விளக்கமுடைய, உயர் பிரதானியாக இருந்த ஒருவர் தனது இறந்த காலத்தைக் குறித்து மனம் திறந்து பேசும் போது அதிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருந்திருக்கும். ஆனால், தமிழினி அவ்வாறு மனம் திறந்து பேசமுன்பே இளவயதில் இறந்துபோயுள்ளார். அண்மையில் வெளியான பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையில் செஞ்சோலை வளாகத்தில் கொல்லப்பட்டது பாடசாலை மாணவிகளே என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இவை யாவும் தமிழினியின் மறைவின் பின் அவருடைய இறுதி நிகழ்வில் அவதானிக்கப்பட்ட மற்றும் அவருடன் பரிவோடு பழகியவர்கள் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பாகும்.

அவர் புலிகள் இயக்கத்தின் உயர் மட்டப் பிரதானியாக இருந்தவர். அதிக பிரபல்யத்தோடுமிருந்தவர். எனவே, அவருடைய பிரிவு, அதிகரித்த ஊடக அவதானிப்பைப் பெற்றது. ஆனால், அவரைப் போல பிரபல்யம் அடைந்திராத தடுப்பிலிருந்து வந்த முன்னாள் புலிகள் இயக்கத்தவர்களின் கதி எவ்வாறுள்ளது? அவர்களுக்கு யார் உதவுகிறார்கள்? அவர்களுக்கு யார் ஆதரவாகவும் ஆறுதலாகவும் இருக்கிறார்கள்? இலங்கை அரச   புலனாய்வுத்துறை தவிர வேறு எந்த ஒரு தமிழ் அமைப்பாவது அவர்களுடன் உறவை பேணுகிறதா? படைத்துறைப் புலனாய்வாளர்களிடம் தடுப்பால் வந்தவர்கள் பற்றிய துலக்கமான புள்ளிவிபரங்கள் இருக்க முடியும். இதுதவிர வேறு எந்த தமிழ் அமைப்பிடமாவது அல்லது கட்சியிடமாவது இது தொடர்பான புள்ளிவிபரங்கள் உண்டா? நாட்டுக்குள்ளேயும் வெளியேயும் இருந்து தனிப்பட்ட முறையில் கிடைக்கும் உதவி மற்றும் ஆறுதலைத் தவிர நிறுவனமயப்பட்ட உதவிகள் அல்லது ஆறுதல் ஏதும் அவர்களுக்குக் கிடைக்கின்றதா? இக்கேள்விகளுக்கு யார் பதில் சொல்லுவது? தமிழ்க்கட்சிகளா? மாகாணசபையா? சிவில் அமைப்புக்களா, மதநிறுவனங்களா? தொண்டுநிறுவனங்களா? புத்திஜீவிகளா, ஊடகங்களா? படைப்பாளிகளா? யார் பதில் சொல்வது?

2009 மே இற்குப் பின் நோர்வே ஒஸ்லோப் பல்கலைக்கத்தைச் சேர்ந்த கலாநிதி சர்வேந்திரா ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். கத்தோலிக்கத் திருச்சபையின் ஆன்மீகத் தலைவரான பாப்பரசர் தனது பொறுப்புக்களைத் துறந்துவிட்டு திருச்சபையைக் கலைத்துவிட்டால் குருவானவர்களின் நிலை எப்படியிருக்கும்? அப்படியொரு நிலைதான் புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு இப்பொழுது ஏற்பட்டிருக்கிறது என்று.

அது உண்மைதான். புலிகள் இயக்கம் ஒரு நடைமுறை அரசை நிர்வகித்தது. தனது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் மிகப் பெரிய தொழில் வழங்குனராக அது காணப்பட்டது. அதன் இயக்க உறுப்பினர்களின் இருப்புக்கும் பாதுகாப்பிற்கும் கௌரவத்துக்கும் வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் அந்த இயக்கம் தன்னாலியன்ற அளவுக்குச் செய்து கொடுத்திருந்தது. ஆனால், அந்த இயக்கம் தோற்கடிக்கப்பட்டதோடு அதன் உறுப்பினர்கள் அரசியல் அனாதைகள் அல்லது பாவித்த பின் கழற்றி எறியப்பட்ட உதிரிப்பாகங்களை போலாகிவிட்டனர். ஒரு காலம் அதிகாரத்தோடு ஆளணிகள், வாகன வளங்களோடு மதிக்கப்படும் ஒரு நிலையிலிருந்த பலரும் 2009 மேக்குப் பின் தடுப்பால் வநதவர்கள் என்ற ஒரு புதிய வகுப்பாக மாறினர்.

அரச புலனாய்வுத்துறை அவர்களை விடுதலை செய்த பின்னரும் தொடர் கண்காணிப்பில் வைத்திருந்தது. இதனால், இலங்கைத் தீவின் அரசியல் அரங்கில் மிகவும் பாதுகாப்பிழந்த ஒரு பிரிவாக அவர்கள் மாறினர். எந்த ஒரு சமூகம் அவர்களை ஒரு காலம் மதித்துப் போற்றியதோ அந்த சமூத்தின் ஒரு பகுதியினர் அவர்களை சந்தேகிக்கலாயினர். ஒரு பகுதியினர் அவர்களை நெருங்கி வரவே அஞ்சினர். கடந்த தேர்தலின் போது போட்டியிட முயற்சித்த தடுப்பிலிருந்து வந்தவர்களில் ஒரு பகுதியினரை எல்லாக் கட்சிகளுமே சந்தேகித்தன.

தடுப்பிலிருந்து வந்தவர்கள் முக்கியமாக மூன்று சவால்களை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. முதலாவது, அரச புலனாய்வுத்துறையினரின் கண்காணிப்பும் இடையீடுகளும். இரண்டாவது, அரசியல் மயப்படுத்தப்படாத ஒரு சமூகத்துக்குள் தடுப்பிலிருந்து வந்த இணைந்து கொள்வது. மூன்றாவது, அரசியல் விலங்குகளை எதிர்கொள்வது.

முதலாவது – அரச புலனாய்வுத்துறையினரிடமிருந்து வரக் கூடிய நெருக்கடிகள். அவர்கள் எப்பொழுதும் சந்தேகிக்கப்பட்டார்கள். அடுத்தகட்டம் எப்படியிருக்கும் என்ற நிச்சயமின்மை எல்லாருக்கும் முன் விகாரமாகத் தொங்கிக் கொண்டிருந்தது. ஜனவரி 8இற்குப் பின் இந்த நிலைமைகள் சற்று மாறி வருவதாக அவதானிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு தொடர்கிறதுதான் என்றாலும் அது அதிகபட்சம் மெருகானதாக மாறியிருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்த விதமான ஆபத்து இலங்கைத் தீவுக்குள் மட்டும்தானுண்டு என்பதல்ல. இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் கூட இந்த விதமான அச்சங்கள் வெவ்வேறு வடிவங்களில் உண்டு. முன்னாள் புலி இயக்கத்தவர்களை இந்திய புலனாய்வுக் கட்டமைப்பும் பின் தொடர்கிறது. அதேசமயம் மேற்கத்தேய புலனாய்வுக் கட்டமைப்புக்கள் அதை மிகவும் நாகரிகமான, மெருகான விதங்களில் முன்னெடுக்கின்றன. போர்க்குற்ற விசாரணைகள் என்று வரும்போது தடுப்பிலிருந்து வந்தவர்களும் விசாரிக்கப்படலாம் என்ற ஓரச்சம் எங்குமுள்ளது. தமிழ்த்தரப்பு போர்க்குற்ற விசாரணைகளை கோரும்போது அந்த விசாரணைகள் தடுப்பிலிருந்து வந்தவர்களின் மீதும் பாயும் என்ற ஒரு அச்சுறுத்தலைப் பேணுவதன் மூலம் போர்க்குற்ற விசாரணைகளுக்கான தமிழ்த்தரப்பு கோரிக்கைகளை அடக்கி வாசிக்கச் செய்யலாம் என்பது ஓர் உத்தியாகப் பயன்படுத்தப்படுகின்றது.. எனவே, தடுப்பிலிருந்து வந்தவர்களுக்கு இலங்கைத்தீவில் மட்டும்தான் பயமுண்டு என்பதல்ல. உலகுபூராகவும் அந்தப் பயம் உண்டு.

இரண்டாவது, அரசியல் மயப்படுத்தப்படாத ஒரு சமூகத்துக்குள் திரும்பி வருவது. தடுப்பில் இருந்து வந்த ஒரு பெண் சொன்னார், தனது வீட்டு மதிலுக்கு அருகே நின்ற ஒரு பப்பா மரத்தில் பழம் பிடுங்குவதற்காக கதிரையை வைத்து மதிலில் ஏறியிருக்கிறார். வீட்டிலிருந்த தயார் கத்தினாராம், “இறங்கு இறங்கு பக்கத்து வீட்டுக்காரர் பார்த்தால் என்ன சொல்லுவினம்” என்று. அந்தப் பெண் தனது நண்பர்களிடம் சொன்னாராம், “நாங்கள் தென்னைமரம் ஏறி இளனி பிடுங்கினாங்கள், இஞ்ச வந்து மதில் ஏறிப் பப்பாப்பழம் பிடுங்க சமூகம் ஒரு மாதிரிப் பார்க்கிறது” என்று.

இது ஒரு குரூரமான யதார்த்தம். தடுப்பில் இருந்து வீடு திரும்பும் பலருக்கும் வீடு புரட்சிகரமான ஒரு புகலிடமாக இல்லை. அவர்களில் பலர் இயக்கத்துக்குப் போகும் போது இருந்த அதே வீடுதான் அப்படியே மாறாமல் இப்பொழுதும் இருக்கிறது. அங்கு சாதியுண்டு, சமயம் உண்டு, மூட நம்பிக்கைகள் உண்டு. பால் அசமத்துவமுண்டு. இல்லத்து வன்முறைகள் உண்டு. ஆக, மொத்தம் போரிலிருந்து எதையும் கற்றுத் தேறாத வீடுகளே அதிகம். அதாவது, அரசியல் மயப்படுத்தப்படாத வீடுகள், அரசியல் மயப்படுத்தப்படாத கிராமங்கள். இந்த வீடுகளும் கிராமங்களும் தடுப்பிலிருந்து வருபவர்களை எப்படி எதிர்கொள்ளும்? குறிப்பாக பெண் பிள்ளைகளே இதில் கூடுதலாக நெருக்கடிகளை எதிர்கொள்கிறார்கள்.

2009 மேக்குப் இற்குப் பின் பிரபல்யமடைந்துவரும் எழுத்தாளர்களில் குறிப்பாக தடுப்பு முகாம் அனுபவங்களை அதிகம் வெளிப்படுத்திய ஓர் எழுத்தாளர் இப்பொழுது ஐரோப்பாவில் வசிக்கிறார். இவர் தடுப்பில் இருந்து வந்த பின் தனக்கு நெருக்கமானவர்களுக்கு பின்வருமாறு கூறியிருக்கிறார். “சாதாரண சனங்கள் எங்களோடு அன்பாகப் பழகுகிறார்கள். ஆனால், அரச அதிகாரிகள்தான் அவமதிக்கிறார்கள். ஒருகாலம் எங்களுடைய அதிகாரத்திற்குக் கீழ் இருந்த அதிகாரிகளிடமே இப்பொழுது எல்லாத் தேவைகளுக்கும் தங்கியிருக்க வேண்டியிருக்கிறது” என்று.

பெரும்பாலான ஆயுதமேந்திய இயக்கங்கள் மக்களை ஆட்சேர்ப்புத் தளங்களாகவே பார்த்தன. மிகக் குறைந்தளவு சனங்களே அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளார்கள். போதிய பட்டறிவு உண்டுதான். ஆனால், அரசியல்மயப்படுத்தப்படவில்லை. ஈழத்தமிழர்கள் மிகக்குறைந்தளவு அரசியல் மயப்படுத்தப்பட்ட ஆனால், அதேசமயம் ஆகக்கூடியளவு அரசியல் விலங்குகளைக் கொண்ட ஒரு சமூகமாகக் காணப்படுகிறார்கள்.

மூன்றாவது, அரசியல் விலங்குகளை எதிர்கொள்வது. இங்கு அரசியல் விலங்குகள் என்ற வார்த்தை அரிஸ்ரோட்டல் கூறியதைவிட விமர்சனபூர்வமான அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. சமூகத்தின் முன்னேறிய பிரிவினராகக் காணப்படும் படித்த நடுத்தரவர்க்கத்தில் ஒரு பகுதியினரையும் அரசியல் வேட்கை கொண்ட பிரிவினரையும் இது சுட்டுகிறது. இதற்குள் அரசியல்வாதிகள் புத்திஜீவிகள், செயற்பாட்டாளர்கள், மத குருக்கள், படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள் போன்ற எல்லாத் தரப்பினரும் அடங்குவர். அரசியலை அதிகம் விளங்கி வைத்திருப்பவர்கள் போலத் தோன்றுமிவர்கள் தமது அரசியல் இலக்குகளுக்காக எதையும் இதுவரையிலும் அர்ப்பணித்ததில்லை. மிகப்பாதுகாப்பான இறந்தகாலத்தைப் பெற்றதனால் நிகழ்காலத்தின் பேச்சாளர்களாக மாறிய பலரும் இதில் அடங்குவர். தமது பிள்ளைகளை பத்திரமாக வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு அல்லது தமது பிள்ளைகளை போதியளவு படிப்பித்து உயர்நிலைகளில் பத்திரப்படுத்திவிட்டு மிகத் தீவிரமாக அரசியல் கதைப்பவர்கள் இவர்கள். 2009 மேக்கு முன்பு வரை படுகோழைகளாக இருந்த இவர்களிற் பலர் இப்பொழுதும் வீரர்களாகக் காட்சியளிக்கிறார்கள். தமது இறந்தகாலத்தைக் குறித்த குற்றவுணர்ச்சியே இவர்களை ஆட்டுவிக்கிறது. அக்குற்றவுணர்ச்சியிலிருந்து நீதியுணர்ச்சி ஊற்றெடுத்திருந்தால் அவர்கள் அரசியல் விலங்குளாக மாறியிருந்திருக்கமாட்டார்கள். மாறாக, அவர்களுடைய குற்றவுணர்ச்சியை மறைக்க அவர்களில் பலர் நீதிபதிகளாக மாறிவிட்டார்கள். குற்றவுணர்ச்சியின் மீது கொழுவப்பட்டிருக்கிறது நியாயத்தராசு.

மிகக் குறைந்தளவு அரசியல் மயப்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தில் மிகக் கூடுதலான அளவு அரசியல் விலங்குகள் பெருகிவிட்டார்கள். கடந்த ஆறு ஆண்டுகளாக சமூக மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களுக்காக தமிழ் மக்கள் காத்துக் கொண்டிருக்க, ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை அரசியல் விலங்குகளே இட்டு நிரப்புகின்றன. தடுப்பிலிருந்து வருபவர்களைத் தமது தராசுகளில் வைத்து நிறுக்கும் பலரும் இந்த வகையினர்தான்.

தமிழினியை வைத்தியசாலைக்குச் சென்று பார்க்காதவர்களும் இவர்கள்தான். தமிழினி தடுப்பில் இருந்து வந்தபொழுது ஊகச் செய்திகளை உருப்பெருக்கிப் போட்டவர்களும் இவர்கள்தான். ஆனால், தமிழினியின் இழப்பை வைத்து பிழைப்பை பெருக்கிக் கொண்டவர்களும் இவர்கள்தான்.

தடுப்பிலிருந்து வருபவர்களை மட்டுமல்ல 2009 இற்குப் பின் நலன்புரி நிலையங்களிலிருந்து வந்தவர்களையும் மேற்படி அரசியல் விலங்குகள் தமது நியாயத்தரசுகளில் வைத்து நிறுத்தார்கள். ஆனால், கேவலம் என்னவென்றால் நலன்புரி நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த தமது உறவுகளை அல்லது நண்பர்ளை போய்ப்பார்த்தவர்கள் மத்தியில் இவர்களை அநேகமாகக் காண முடியவில்லை. யாழ்ப்பாணத்தில் இருந்த நலன்புரி நிலையங்களில் வைக்கப்பட்டிருந்தவர்களை அவர்களுடைய உறவினர்களான சாதாரண சனங்கள் வாஞ்சையோடு வந்து சந்தித்தார்கள். வகை தொகையாகச் சமைத்துக் கொண்டு வந்து கொடுத்து விருந்தோம்பினார்கள். ஆனால், இப்பொழுது தீவிர தேசியர்களாகக் காட்சியளிக்கும் பலரும் நலன்புரி நிலையங்களின் பக்கம் வரவேயில்லை. இவர்களுள் அரசியல்வாதிகளும், புத்திஜீவிகளும், பிரபல மூத்த படைப்பாளிகளும் அடங்குவர்.

போதிய அரசியல் விளக்கமற்ற அப்பாவிச் சனங்கள் நலன்புரி நிலையங்களுக்குத் தவிப்போடு ஓடி வந்தார்கள். தடுப்பிலிருந்த வருபவர்களை ஒப்பீட்டளவில் பரிவுடன் அணுகுவதும் அவர்கள்தான். அவர்களுடைய மூளைகள் அதிகம் அரசியல் சித்தாந்தங்களால் நிரப்பப்பட்டிருக்கவில்லை. ஆனால், அவர்களுடைய இதயமோ பரிசுத்தமான அன்பினால் நிரப்பப்பட்டிருக்கிறது.

இதுதான் நிலமை. தடுப்பிலிருந்து வந்தவர்களும் 2009 மே 18 இற்குப் பின் வன்னியிலிருந்து வந்தவர்களில் ஒரு தொகுதியினரும் எதிர்கொள்ளும் முப்பெரும்சவால்கள் இவை. தமிழினியும் இவற்றையெல்லாம் எதிர்கொண்டவர்தான். அவரைப்பற்றி தீர்ப்பெழுதிய பலரும் அவரைத் தடுப்பில் சென்று பார்க்கவில்லை. வைத்தியசாலைக்கும் சென்று பார்க்கவில்லை. தடுப்பில் இருந்தபோது அவருக்குச் சுவையாகச் சமைத்துக் கொண்டுபோய் கொடுப்பதற்கு யாருமற்ற நிலமைகளே அதிகமிருந்ததாக அவருடன் தடுப்பில் இருந்த ஒரு மருத்துவர் சொன்னார்.

2009 மே 18 இற்குப் பின் புலிகள் இயக்கத்தவர்கள் எதிர்கொண்டுவரும் அதேவிதமான சவால்களைத்தான் 1990களில் புலிகள் அல்லாத இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் எதிர்கொள்ள நேர்ந்தது என்று லண்டனில் வசிக்கும் ஈழம் ஹவுஸ் என்ற அமைப்பைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளரான வரதக்குமார் சில ஆண்டுகளுக்கு முன்பு சுட்டிக்காட்டினார். முன்னாள் இயக்கத்தவர்களை குறிப்பாகத் தடுப்பில் இருந்து வந்தவர்களை ஒரு சமூகம் எப்படி மதிக்கிறது என்பதை வைத்தே அந்த சமூகத்தின் அறநெறித் தளத்தை நீதி உணர்ச்சியை குறிப்பாக நன்றியுணர்ச்சியை மதிப்பிட வேண்டியிருக்கும்.

தடுப்பில் இருந்து வந்தவர்களுக்கும் முன்னால் இயக்க உறுப்பினர்களுக்கும் சம்பளம் வழங்குவதும் நிவாரணம் வழங்குவதும் இரண்டாம்பட்சமானவை. முதலில் செய்யப்பட வேண்டியது, எந்த சமூகத்திற்காக அவர்கள் தமது இளமையை, கனவுகளை, படிப்பைத் துறந்து சென்றார்களோ அந்தச் சமூகம் அதைக் குறித்து நன்றி மறவாமல் இருக்கிறது என்பதை நிரூபிப்பதுதான்.