படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் தளம்

அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட்ட வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அரசை கோரியிருக்கின்றார். இது தொடர்பில் தமிழரசு கட்சியின் இரண்டாம் நிலை தலைவரும் கூட்டமைப்பின் சார்பில் சர்வதேச விவகாரங்களை கையாளுபவருமான எம்.ஏ.சுமந்திரன், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசு இன்னமும் உறுதியான பதில் எதனையும் வழங்காமை தொடர்பில் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கின்றார். ஆட்சி மாற்றத்தின் பின்னர் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என்னும் நம்பிக்கையை கூட்டமைப்பின் தலைவர்களால் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், நம்பிக்கையூட்டப்பட்டளவிற்கு விடயங்கள் எதுவும் விரைவாக இடம்பெறவில்லை. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் தற்போது தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்களுக்கு ஆதரவாக அவர்களது உறவினர்களும் தற்போது அடையாள உண்ணாவிரத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். ஆனால், தேசிய அரசின் நீதி அமைச்சரோ அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை, மாறாக கொலை, கொள்ளை போன்ற குற்றச்சாட்டுக்குள்ளானவர்களே இருக்கின்றனர் என்று கைவிரித்திருக்கின்றார். அவ்வாறாயின் நாட்டில் இடம்பெற்ற மோதல்களின் போது விடுதலைப் புலிகள் என்னும் பெயரிலும், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்னும் பெயரிலும் கைதுசெய்யப்பட்டு, பல ஆண்டுகளாக எந்தவொரு விசாரணையுமின்றி சிறைகளில் வாடுபவர்களின் பெயர் என்ன? விஜயதாஸ ராஜபக்‌ஷவின் கருத்துக்கு தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர்கள் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கின்றனர். ஆனால், விஜயதாஸ ராஜபக்‌ஷவின் கருத்து தொடர்பிலும் வழமைபோலவே எதிர்கட்சித் தலைவர் மௌனம் காக்கின்றார்.

இங்கு கவனிக்க வேண்டிய விடயம் ஆட்சி மாற்றத்தின் பின்னரான சூழலிலும் கூட தமிழ் மக்கள் தங்களுக்கான நீதிக்காக வீதிகளில் இறங்கிக் குரல் கொடுக்க வேண்டியிருக்கிறது என்பதுதான். அவ்வாறாயின் ஆட்சி மாற்றத்தின் பொருள் என்ன? ஆட்சி மாற்றமொன்றை வலியுறுத்தி பலரும் பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில் அதன் பங்காளியாக கூட்டமைப்பும் இணைந்து கொண்டது. கூட்டமைப்பு அவ்வாறு இணைந்து கொண்டது தவறான ஒன்றுமல்ல. ஆனால், அந்த நேரத்தில் கூட்டமைப்பு எந்தவொரு உடன்பாட்டையோ அல்லது தமிழ் மக்களின் நலன்சார்ந்த பேச்சுவார்த்தைகளிலோ ஈடுபட்டிருக்கவில்லை. அந்த வேளையில் இந்த பத்தியாளர் பேச்சுவார்த்தையற்று செல்வது தொடர்பில் சில எச்சரிக்கைகளை விடுத்திருந்தது நினைவிருக்கலாம். இது தொடர்பில் தமிழ் சிவில் சமூக பிரதிநிதிகள் சிலரும் கூட, கூட்டமைப்பு நிலைமைகளை மிகுந்த எச்சரிக்கையுடன் கையாள வேண்டுமென்று வலியுறுத்தியிருந்தது. ஆனால், இவ்வாறான எச்சரிக்கை குரல்களுக்கு செவிசாய்ப்பதற்கு எவரும் இருந்திருக்கவில்லை. அதன் விளைவுதான் பெருமெடுப்பில் நோக்கப்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னரும் கூட, தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்காக அவர்களது பெற்றோர்கள் வீதிக்கு வரவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

தேசிய அரசால் தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினையை மிகவும் இலகுவாக கையாள முடியும். இறுதி யுத்தத்தின் போது சரணடைந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு பொதுமன்னிப்பு அழிப்பதற்கு சட்டத்தில் இடமிருக்குமாயின், விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் அதிலும் கருணா போன்ற பல இராணுவ நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருந்த ஒருவர், அமைச்சராக இருப்பதற்கு சட்டத்தில் இடமிருக்குமாயின் சிறைகளில் வாடும் சாதாரண விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு ஏன் பொதுமன்னிப்பு வழங்க முடியாது?

விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட பல வெற்றிகரமான இராணுவ நடவடிக்கைளுக்கு பொறுப்பாக இருந்த கருணா போன்ற ஒருவருடன் ஒப்பிட்டால், இன்று சிறைகளில் வாடும் விடுதலைப் புலி உறுப்பினர்கள் மிகவும் சாதாரணமானவர்கள். மேலும், ஏற்கனவே பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் சாதாரண வாழ்வில் இணைந்திருக்கின்ற போது, சிறைகளில் இருப்பவர்களை விடுவிப்பதால் மட்டும் சட்டம் ஒழுங்கிற்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்று கூறுவதில் பொருளில்லை. இந்த இடத்தில் இன்னொரு கேள்விக்கும் தமிழ் தலைவர்கள் பதிலளிக்க வேண்டியிருக்கிறது. இன்று சிறைகளில் வாடும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களை விடுப்பதற்கே இந்தளவிற்கு தடுமாறும் தேசிய அரசு, எவ்வாறு இறுதி யுத்தத்தின் போது போர்க் குற்றங்கள் இழைத்த படையதிகாரிகளை விசாரணை செய்ய முயலும்? உண்மையில் தமிழர் அரசியலை தற்போது வெறுமை ஒன்றே ஆக்கிரமித்திருப்பதான தோற்றமே தெரிகிறது. கூட்டமைப்பின் தலைவர்கள் தொடர்ந்தும் மௌனம்தான் காக்கப் போகின்றனரா? சர்வதேச சமூகத்துடன் ஒத்துப் போக வேண்டும் என்பதில் இப்பத்தியாளரிடம் மாற்றும் கருத்தில்லை. ஆனால், ஒத்துப் போவதன் மூலமான நன்மைகள் அனைத்தையும் அரசு மட்டும் அனுபவித்துக் கொண்டிருக்குமாயின் எங்களுடைய அரசியலில் பெரியதொரு ஓட்டை இருக்கின்றது என்பதே பொருள். அது என்ன என்பதை கண்டுபிடித்து சரிசெய்ய வேண்டியது கூட்டமைப்பின் தலைவர்களது உடனடி பொறுப்பாகும். மற்றவர்கள் மீது பழிபோடுவதன் மூலம் இதிலிருந்து எவரும் தப்பிவிட முடியாது.

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் தடுமாறும் தேசிய அரசு எவ்வாறு தமிழ் மக்களுக்கான நீதியை நிலைநாட்டும்? உண்மையில் கூட்டமைப்பின் தலைவர்கள் ஒரு விடயத்தை உற்றுநோக்கத் தவறுகின்றனர். அதாவது, ஆட்சி மாற்றம் தொடர்பில் ஆரம்பத்தில் தமிழ் மக்கள் மத்தியில் காணப்பட்ட ஆர்வம் படிப்படியாக குறைந்து செல்கின்றது. மீண்டும் ஒரு விரக்திநிலை தோன்றுமாயின் தமிழ் மக்கள் மத்தியில் பதற்றங்கள் அதிகரிக்கும். தற்போது கிடைத்திருக்கும் சிவில் வெளியில் மக்கள் போராட்டங்களுக்கான கதவும் அகலத் திறந்திருக்கிறது. இதனை சரியாக ஒரு சக்தி பயன்படுத்துமாயின் நிலைமைகள் சடுதியாக மாற்றமடையும். நிலைமைகள் மாற்றமடைந்தால் ஏற்கனவே யுத்தவெற்றியை கொண்டாடிய இராணுவம் சீற்றமடையும். இதனை ஒரு கட்டுக்குள் கொண்டுவருவதற்காக நல்லாட்சி அரசு என்று சொல்லப்படும் அரசே கடுமையான தணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். இறுதியில் நிலைமைகளின் ஒட்டுமொத்த விளைவும் கூட்டமைப்பின் தலையில் ஒரு இடியாக இறங்கும்.

இதில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தலைவர்கள் ஒரு விடயத்தை மறக்கலாகாது. அதாவது, ​சம்பந்தன் தன்னுடைய அரசியல் பயணத்தின் இறுதிக்கட்டத்தில் இருக்கின்றார். அவர் அனுபவிப்பதற்கு இதற்கு மேல் ஒரு பதவியும் இல்லை. எனவே, அவர் தான் எதிர்பார்க்கும் ஒன்றை செய்து முடிப்பதற்கு எந்தளவு பொறுமையையும் அவரால் காண்பிக்க முடியும். அவர் எதிர்க்கட்சித் தலைவரான பின்னர் அவ்வாறானதொரு பொறுமையைத்தான் கடைப்பிடித்தும் வருகின்றார். ஆனால், ஏனைய கட்சிகளின் தலைவர்களும் சரி, அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரது அரசியலும் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படலாம். தேர்தல் காலத்தில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கிய தலைவர்களால் இன்று அரசியல் கைதிகள் விடயத்தில் கூட அரசை விரைந்து செயற்படுமாறு அழுத்த முடியவில்லை என்னும் போத மக்கள் மத்தியில் கூட்டமைப்பு தொடர்பில் அவநம்பிக்கை அதிகரிக்கும். கூட்டமைப்பின் பலமே அதற்கு ஒரு மாற்றுத் தலைமை இல்லை என்பதுதான். ஆனால், சிறைக்கைதிகள் விவகாரம் காணாமல் ஆக்கப்பட்ட மக்களின் பிரச்சினை போன்ற விடயங்களுக்கு தீர்வில்லை எனின் ஒன்றில் கூட்டமைப்பு அரசை எதிர்த்து குரல் கொடுப்பதுடன் பாதிக்கப்பட்ட மக்களோடு அணிசேர வேண்டும். இந்த விடயங்களில் கூட்டமைப்பின் தலைவர்கள் பின்வாங்குவது அவர்கள் மீதான நம்பிக்கையையே பலவீனப்படுத்தும். கூட்டமைப்பின் தலைவர்கள் முதலில் நிலைமைகளை எவ்வாறு கையாளுவது என்பது தொடர்பில் தங்களுக்குள் தெளிவானதொரு முடிவுக்கு வர வேண்டும். அதற்கு முதலில் தங்களுக்குள் கலந்துரையாட வேண்டும். வடக்கு கிழக்கிலுள்ள சிவில் சமூகமும் இது தொடர்பில் தங்களின் கவனத்தை குவிக்க வேண்டும். இல்லாவிட்டால் தலைவர்கள் என்போர் உண்மையான நிலைமை தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும். அரசுடன் ஒரு குறிப்பிட்ட காலம்வரை ஒத்துப் போவதன் மூலம்தான் கூட்டமைப்பு தன்னுடைய அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கப் போகின்றது என்பதுதான் கூட்டமைப்பின் நிலைப்பாடு எனின், அதனையாவது மக்களுக்கு நேர்மையாக கூற வேண்டும்.