படம் | WITHYOUWITHOUTYOU

சிங்களத் திரைப்படம் என்றாலே சிலரின் மனதில் கசப்பானதோர் உணர்வே ஏற்படுவதுண்டு. இதற்குக் காரணம் இந்திய சினிமாவின் ஆக்கிரமிப்பு என்றால் அது பொய்யாகாது. எமது நாட்டைப் பொருத்தமட்டில் தமிழ், சிங்கள சினிமா என இரண்டு பிரிவுகளாகப் படைப்புகளை காண முடிகிறது. தமிழ் சினிமா ஆரம்பத்தில் சில வெற்றிகளைக் கண்டாலும் பின்னய காலங்களில் மிகவும் பின் தங்கிய நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்திய சினிமாவுடன் போட்டியிட முடியாததும் ஓர் காரணம் எனலாம். சிங்கள சினிமா என்னவோ ஆமை வேகத்தில் உலக அரங்கில் தனக்கான ஓர் அடையாளத்தை தக்கவைத்துள்ளது. இவ்விரு சினிமா ரசிகர்களுள் அதிகமானோர் கற்பனைப் பாத்திரங்களையே அதிகமாக விரும்புகின்றனர். அதேசமயம் யாதார்த்தமும், இயற்கையானதுமான காட்சிகளையும் பாத்திரங்களையும் ஜீரணிக்க முடியாதவர்களாகவே உள்ளனர். அந்த வகையில், கற்பனையைத் தாண்டி குற்றம் இழைத்துள்ள ஒரு சமூகம் இன்னுமோர் சமூகத்தை எவ்வாறு ஏற்க வேண்டும்? குற்றங்களை மறுக்கும் பெரும்பான்மை மக்களுக்கு இருமுறை சிந்தித்து செயற்பட இடமளிக்கப்பட்டுள்ள சிங்கள திரைப்படமொன்றை காண நேர்ந்தது.

சமீபத்தில் வெளியாகி வெற்றி நடைபோடும் “ஒப நெத்துவ ஒப எக்க’’ (With You, Without You) எனும் சிங்களத்திரைப்படம் அமைதியாக உண்மையை பேசுகின்றது. இத்திரைப்படம் கடந்த காலத்தில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. போர் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட மனிதாபிமானமற்ற செயற்பாடுகளை உணர்ச்சி மிக்க நடிப்பாலும், வார்தைகளாலும் கதையின் கருப்பொருள் அற்புதமாக வெளிக்காட்டப்பட்டுள்ளது.

மலைகளால் சூழப்பட்ட தேயிலை தோட்டத்துடன் ஒரு நகரம். மனசாட்சிக்கு புறம்பாக செயற்பட முடியாது இடைவிலகிய பௌத்த மதத்தை தழுவும் இராணுவ சிப்பாய் காமினி. அடகுக் கடை உரிமையாளராக காமினி அதிகமாக மௌனத்துடனே வாழ்பவன். காமினி “ரெஸ்லீன்” எனும் மல்யுத்த தொலைக் காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் வழக்கமுடையவன்.

உள்நாட்டுப் போர் காரணமாக உடைமைகள், உறவுகளையும் இழந்த கிறிஸ்தவ இளம் பெண் செல்வி, ஆதரவற்றதால் தூரத்து உறவினரின் தேயிலை தோட்ட வீடொன்றில் தஞ்சம் புகுந்து வீட்டுக்குச் சுமையாக வாழ்கிறாள். தனது எஞ்சியுள்ள நகைகளை அடகுவைத்து வாழ்கைச் செலவை ஈட்ட வேண்டியிருந்தது செல்விக்கு.

நகை அடகு நிலையத்திற்கு வரும் இளம் பெண்ணான செல்வி மீது காதல்கொண்டு தனது வீட்டு வேலைக்காரியிடம் தனது விருப்பத்தை தெரிவித்தான் காமினி. அதேசமயம், செல்வி வீட்டுக்கு சுமையென எண்ணி வயதான ஒருவருக்குத் திருமணம் நிச்சயிக்கப்படுகின்றது. இதை அறிந்த காமினி செல்வியின் விருப்பத்துடன் அவளை திருமணம் செய்துகொள்கிறான்.

முதல் நாள் இரவு, “ஒரு நாளைக்கு 300 ரூபா மட்டுமே செலவு செய்ய வேண்டும். அதோ தெரிகிறதே அந்த தேயிலை தோட்டத்தை நாம் வாங்க வேண்டும்” – என்கிறான். இவ்வாறான நீண்ட கனவுகளுடன் சிக்கனமாக வாழ்ந்து வருபவன் காமினி. மனைவி மீதான அன்பு இதற்கு வேலியாக அமைந்து விடுமோ என்ற அச்சம் அவனுள் எழத் தொடங்கியது. சிந்திக்கத் தொடங்கினான். மனைவி மீது வைத்துள்ள அளவுகடந்த அன்பை வெளிக்காட்டுவதற்கு வேண்டுமென்றே தடை ஏற்படுத்திக்கொள்கிறான்.

ஒருநாள் காமினி பழைய நண்பன் ஒருவனை சந்திக்கிறான். இருவரும் தங்களது கடந்தகால வாழ்கையை மதுபான நிலையத்தில் நினைவூட்டிக்கொண்டு இரவு வீடு திரும்புகிறார்கள். மறுநாள் காலை செல்வியைச் சந்தித்த நண்பன் “நாங்கள் இருவரும் இராணுவத்தில் இருந்தே நண்பர்கள். யுத்தத்தின்போது என் உயிரையே காப்பாற்றியவன் அவன். நீங்கள் அதிர்ஷ்டசாலி என்று வாழ்த்தினான் (அதிர்ச்சியால் வீட்டிலிருந்து வெளியேறினாள் செல்வி! செல்வியைத் தேடியழைந்த காமினி பேருந்து நிலையத்திலிருந்து கண்டு அழைத்து வந்தான்).

செல்வி: ஏன் நீங்கள் இராணுவ சிப்பாய் என்பதை என்னிடம் மறைத்தீர்கள்?

காமினி: அது அவசியமற்றது என்பதால்.

செல்வி: எனது தம்பிகளை கொன்றவர்கள் நீங்கள்.

காமினி: அவர்கள் புலிகளாக இருந்திருக்கலாம்.

செல்வி: அவர்கள் பாடசாலை மாணவர்கள் என்று கூறி உறக்க சத்தமிட்டு தனது தாய் தந்தையரை இழந்தமையையும் தனது மக்களுக்கு நடந்த அட்டூழியங்களையும் சுட்டிக்காட்டி கதறினாள்.

காமினி: அவை அனைத்தையும் மறந்து வாழவே நான் ஆசைப்படுகிறேன் என்றான்.

செல்வி: இராணுவத்திலிருந்து விலகியது ஏன்?

காமினி: அது தேவை அற்றது. (இராணுவத்திலிருந்து விலகியதை தெளிவாகக் கூறாது மறைத்துவிடுகிறான்.)

வாக்குவாதம் தொடர இருவருக்கிடையில் விரிசல் ஏற்படுகிறது. மறுநாள் அலுமாரியில் துப்பாக்கியொன்றை காண்கிறாள். துப்பாக்கியை கொண்டு காமினியை பகைதீர்க்க முயல்கின்றாள். காதல் தடையாகின்றது. இருவரும் தனித்தனியே வாடுகின்றனர். செல்வி கடந்த கால நினைவுகளை எண்ணி எண்ணி உண்ணாது உறங்காது படிப்படியாக உடல் நிலை மோசமடைகின்றாள்.

செல்வியை இழக்க விரும்பாத காமினி உண்மையைச் சொல்ல முடிவெடுக்கிறான். தான் “இராணுவத்தில் இருந்த போது புலிகளின் பெண் போராளி ஒருவரை எனது நண்பர்கள் துஷ்பிரயோகம் செய்து கொன்றனர். நடந்ததை மறைத்து நீதிமன்றத்தில் பொய் வாக்கு மூலம் அளித்தேன். என் மனசாட்சி என்னை வாட்டியது, அதனால்தான் இராணுவத்தில் இடைவிலகினேன்” என்றான். இதைக் கேட்ட செல்வி ஆத்திரத்தால் கதறியழுதாள்.

செல்வியின் மனதைப் புரிந்துகொண்ட காமினி, செல்வியின் ஆசைகளுக்காக வாழ்வதாக தீர்மானித்தான். தனது அடகு கடையை விற்று செல்வியை இந்தியா அழைத்துச் செல்லத் தீர்மானித்தான். செல்வியும் காமினியின் அன்பில் அடிமையாகி உண்மையாக வாழ தீர்மானிக்கிறாள். இந்தியா செல்வதற்கான அனைத்தும் ஏற்பாடு செய்யப்படுகிறது. நான் பயனச் சீட்டை பெற்று வருகிறேன் என்று காமினி கனவுகளுடன் புறப்படுகிறான். செல்வி தன் உறவுகளை நினைத்து வாடுவதுடன், காமினிக்கு முழுமையான அன்பை தன்னாள் வெளிப்படுத்த முடியாதென எண்ணி மரணத்தை நாடுகிறாள்.

காமினி செல்வியுடன் கனவுலகில் வாழ்கிறான்.

யுத்த காலத்தில் இடம் பெற்ற பாதிப்புகளையும், இழப்புகளையும் வெளிப்படையாக ஏற்க மறுக்கும் சிங்கள பெரும்பான்மையினருக்கு இது ஓர் எடுத்துக்காட்டு. கற்பனைக்கு மட்டும் மட்டுப்படாது இவை உண்மையில் நடந்தவை எனச் சிந்திக்க சந்தர்ப்பம் அளித்துள்ளார் இயக்குனர் பிரசன்ன விதானகே. ஒரு சமூகத்தின் இழப்புகளையும் அழிவுகளையும் மற்றய சமூகம் ஏற்குமாயின் அது நல்லிணக்கத்தின் முதற்படியாகும்.

யுத்த வெற்றி என்பது ஆயுதபோராட்டத்தின் வெற்றிமட்டுமல்ல, அதன் பின்னர் வாழும் சமூகத்தின் உணர்ச்சிகளையும், உயிர்களையும் வெற்றி கொண்டுள்ளோமா? என்பதே.

எம் நாட்டில் பெரும்பான்மை சமூகத்தினர் சிலர் சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு நீண்டகாலமாகக் குரல் கொடுத்து வருகின்றனர். எம்மில் அதிகமானோருக்கு அவர்கள் பற்றிய விளக்கமோ தெளிவோ இருப்பதில்லை. மொத்த பெரும்பான்மைச் சமூகத்தினருமே சிறுபான்மையினரின் எதிரிகள் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ள இத்திரைப்படம் உதவும் எனலாம்.

கதைக்கு உயிரூட்டிய கதாநாயகன், நாயகி இருவரும் சியாம் பிரனாந்து மற்றும் அஞ்சலி பட்டேல் போன்ற இருவரும் (Shyam Fernando/ Anjali Patil) அற்புதமான நடிப்பால் தனது பாத்திரங்களுக்கு உயிரூட்டியுள்ளனர். சிறு பாத்திரங்களும் யதார்த்தமான நடிப்பை சிறப்பாக வெளிக்காட்டியுள்ளனர். தமிழ், சிங்கள மொழிப்பாவனை, மலையக மக்களது வாழ்கை, திரை அலங்காரம், ஆடை, வசனநடை, இசை போன்றவை அளவாக பயன்படுத்தி பல்வேறு கோணங்களில் உயிரூட்டியுள்ளார் இயக்குனர்.

கதையின் முடிவு முற்றுப் புள்ளியாக இருந்தாலும் பார்வையாளர்கள் அனைவருக்கும் தமது சமூகத்தினர் சிந்திக்க வேண்டிய தொடக்கப் புள்ளியாகவே அமைந்துள்ளது.

ஜெ. சுரேஸ்குமார்