படம் | SELVARAJA RAJASEGAR Photo

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் வெளியிடப்பட்டுள்ள இலங்கைத் தீவு தொடர்பான விசாரணை அறிக்கை, தமிழ் மக்களுக்கு சந்தர்ப்பங்களையும் சவால்களையும் தந்து நிற்கிறது. தமிழர் தரப்புகள் எடுக்கும் ஆக்கபூர்வமானதும் தந்திரோபாயம் உடையதுமான நகர்வுகளால் சவால்களை முறியடிக்கவும், சந்தர்ப்பங்களை சரிவரப் பயன்படுத்துவதனூடாக நீதிக்கான போராட்டத்தை முன்னகர்த்தவும் முடியும்.

சர்வதேச குற்றவியல் விசாரணைக்கான பரிந்துரையை எதிர்பார்த்த தமிழருக்கும், வெறும் உள்ளகப் பொறிமுறைக்கான ஆதரவை எதிர்பார்த்த தென்னிலங்கைக்கும் இந்த அறிக்கை ஏமாற்றம் தான். ஆயினும், போராட்டம் என்பது ஏமாற்றங்களை திருப்பு முனையாக மாற்றுவதிலும், தடைகளைத் தாண்டுவதனூடாகவுமே போராட்டத்தின் உயிர்ப்பை பேணுவதோடு அதன் இலக்கை அடைய முடியும்.

அந்த வகையில், நீதிக்கான போராட்டத்தில் புதிய அணுகுமுறைகளை கைக்கொள்ள வேண்டிய சூழல் தமிழருக்கு எழுந்துள்ளது. இலங்கையின் உள்ளகப் பொறிமுறையில் உள்ள பலவீனங்களையும் குறைபாடுகளையும் சுட்டிக்காட்டி, இலங்கையின் உள்ளகப் பொறிமுறைக்கான சந்தர்ப்பத்தை நிராகரித்துள்ள இந்த மனித உரிமைகள் விசாரணை அறிக்கை, கலப்பு சிறப்பு நீதிமன்றத்தை உருவாக்குமாறு பரிந்துரை செய்துள்ளது.

சர்வதேச குற்றங்களான போர்க்குற்றம் மற்றும் மானுட குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு தரப்பிடம், பல தசாப்தங்களாக குறைபாடுகளுடன் உள்ள உள்ளகப் பொறிமுறையில் மறுசீரமைப்புகளை மேற்கொண்டு சர்வதேச நீதிபதிகள், சட்டவாளர்கள், விசாரணையாளர்களை உள்ளடக்கி ஒரு கலப்பு சிறப்பு நீதிமன்றத்தை மேற்கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது. குறுகிய காலப்பகுதிக்குள் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன், இலங்கைத் தீவுக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுடன் தகவல்களை பெறாமல் மேற்கொள்ளப்பட்ட இந்த விசாரணை ஒரு சர்வதேச குற்றவியல் விசாரணையோ அல்ல முடிந்த முடிவோ அல்ல. மாறாக, நீதியை நோக்கிய பயணத்தில் அடுத்த கட்டத்திற்கான ஒரு அத்தியாயம். அடுத்த கட்டம் தமிழர்களுக்குச் சாதகமாகவும் இருக்கலாம், பாதகமாகவும் மாறலாம். ஆயினும், தமிழர்கள் மேற்கொள்கின்ற நகர்வுகள் இந்த சாதக, பாதகங்களில் செல்வாக்குச் செலுத்த முடியும்.

தமிழர்களின் கரிசனைகள்

போரினால் மிகப் பெரும்பான்மையாக பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்கள். தமிழர்கள் என்ற நோக்கத்திற்காக அவர்கள் மீது பல தாக்குதல்கள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு அழிக்கப்பட்டார்கள். ஒரு இனக்குழுமமோ, மதக்குழுமமோ, தேசிய இனமோ திட்டமிட்டு இலக்கு வைக்கப்பட்டு பகுதியாகவோ முழுமையாகவோ அழிக்கப்படுவது இனஅழிப்பு என்று இன அழிப்பு தொடர்பான ஐ.நா. சாசனம் கூறுகிறது. ஆயினும், போரினால் அதிகமாக பாதிக்கப்பட்டது தமிழ் மக்கள் என்றோ அல்லது தமிழ் மக்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டார்கள் என்றோ உறுதியாகவும் பரவலாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. தமிழரின் அபிலாசைகள், தமிழர்களின் பிரச்சினை, பிரபலமான தமிழ் அரசியல்வாதி என இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரை குறிப்பிட்டுள்ள இந்த அறிக்கையில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என விளித்து கூறாமை கேள்விக்குட்படுத்தப்பட வேண்டியது. அதேவேளை, போர்க்குற்றம் மற்றும் மானுட குலத்திற்கு எதிரான குற்றம் பெரும்பாலும் இழைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள அறிக்கை, இன அழிப்பு தொடர்பாக மௌனம் சாதிக்கிறது.

தமிழின அழிப்பு

இன அழிப்பு இடம்பெற்றதாகக் கூறாவிட்டாலும் இன அழிப்பு இடம்பெறவில்லையென கூறவில்லை. அத்துடன், இன அழிப்பு இடம்பெற்றதாக நீங்கள் கருதுகிறீர்களா என சனல் 4 செய்தியாளர் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரைக் கேட்ட போது, இன அழிப்பு இடம்பெறவில்லையென நிராகரிக்கவில்லை. மாறாக, அவ்வாறான ஒரு மதிப்பீட்டுக்கு நாம் இன்னும் வரவில்லை. நாம் பரீசிலித்த வடிவங்கள், போர்க்குற்றம் மற்றும் மானுடகுலத்திற்கு எதிரான குற்றம் எனக் கருதலாம் என கூறமுடியும் என நாம் நம்புகிறோம். இதன் அர்த்தம், எம்மைத் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொள்ளும் நீதிமன்றம் இன அழிப்பு இடம்பெறவில்லை என்ற முடிவுக்கு வரப்போவதில்லை என்று கூறமுடியாது. எங்களுடைய விசாரணைக்கு இலங்கை அரசுகள் பூரண ஒத்துழைப்பை வழங்கவில்லை. ஆதலால், இன அழிப்பு தொடர்பான தீர்ப்பை தொடர்ந்து வரக்கூடிய குற்றவியல் விசாரணையிடமே விட்டுவிடுவோம் என்ற தொனிப்படத் தெரிவித்தார்.

நடந்தது இன அழிப்பு என்பதை ஏற்றுக்கொள்ள வைப்பதில் பூகோள அரசியல் உட்பட்ட பல முக்கிய காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. ஆதலால், இது இலகுவான விடயமல்ல. ஆயினும், அதற்காக அதனை கைவிட்டுவிட முடியாது. உலகில் முதலாவதாக இடம்பெற்ற இன அழிப்பான ஆர்மேனிய இன அழிப்பை, இனஅழிப்பு இடம்பெற்று 100ஆவது வருடத்திலேயே ஜேர்மனி அங்கீகரித்தது. 1992 – 1995 பொஸ்னியப் போர் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, அங்கு இடம்பெறுவது போர்க்குற்றம் என அமெரிக்கா இராஜாங்க திணைக்களகத்தில் பணியாற்றிய இளநிலை அதிகாரிகள் குறிப்பிட்டார்கள். அதனை மூத்த அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதன் காரணமாக ஐந்து இளநிலைகள் அதிகாரிகள் தமது பதவிகளை விட்டு விலகினார்கள் என சி.என்.என்னின் அன்றைய நிருபராகவும் ஐ.நாவுக்கான அமெரிக்காவின் இன்றைய தூதுவராகவும் இருக்கிற சமந்தா பவர் தான் எழுதிய நூலொன்றிலே குறிப்பட்டுள்ளார். காலநீட்சியில் பொஸ்னியாவில் இன அழிப்பு இடம்பெற்றது என்பது ஏற்று அங்கீகரிக்கப்பட்டது.

ஆகவே, இன அழிப்பு இடம்பெற்றது என இந்த அறிக்கையில் கூறப்படாவிட்டாலும், தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்டது இன அழிப்பு என்பதை நிரூபிக்கும் போராட்டங்ளை தமிழர்கள் தொடர வேண்டும். நவம்பர் 2012 வெளியிடப்பட்ட ஐ.நாவின் இடைக்கால மீளாய்வு குழு அறிக்கையில் போரின் இறுதிக்காலப்பகுதியில் அண்ணளவாக 70,000 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும், இந்த எண்ணிக்கையை விடவும் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை அதிகம் என தமிழர் தரப்பால் எடுத்துக் கூறப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில், இலங்கைத் தீவுக்குச் சென்று பூரணமான விசாரணையை செய்யமுடியாததால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை உறுதியாகக் கூறமுடியவில்லை என இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 2002 – 2011 வரையான காலப்பகுதிக்குள் மட்டுப்படுத்தாமல் போர் இடம்பெற்ற முழு காலப்பகுதியையும் விசாரணையின் போது கவனத்திற்கொள்ள வேண்டும் என இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளமை முக்கியத்துவம் மிக்கது.

இலங்கைக்கு நெருக்கடியை கொடுக்கும் பரிந்துரைகள்

– இன அழிப்புடன் தொடர்புடைய சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உரோம் சாசனத்தில் இலங்கை கைச்சாத்திட வேண்டும்.

– போர்க்குற்றம், மானுட குலத்திற்கு எதிரான குற்றம், இன அழிப்பு மற்றும் பலவந்தமாக காணமல் போதல் ஆகியவை ஒரு குற்றம் என சட்டம் இயற்ற வேண்டும்.

– மனித உரிமைகள் நிலவரங்களை கண்காணிப்பதற்காக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் பூரணமான இருப்பை உருவாக்குவதற்கான அழைப்பை இலங்கை மேற்கொள்ள வேண்டும்.

– விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் இலங்கை இராணுவத்திடம் பதிவுசெய்யப்பட்டவர்கள் தற்போது எங்குள்ளார்கள், அவர்களின் நிலை என்ன என்பது தொடர்பாக வெளிப்படுத்த வேண்டும்.

– பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவது தொடர்பாக உயர்மட்ட மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.

– இராணுவம் ஆக்கிரமித்துள்ள தனியார் காணிகள் உரியவர்களிடம் மீளக் கையளிக்க வேண்டும்.

– புலனாய்வுப் பிரிவுகள் உட்பட்ட இலங்கையின் ஆயுதப் படைகளின் கட்டளைச் சங்கிலியின் வகிபாகத்தை வெளிப்படுத்த வேண்டும் போன்ற பரிந்துரைகள் இலங்கைக்கு நெருக்கடியை கொடுக்கும் முக்கியமான பரிந்துரைகள் ஆகும்.

இலங்கை அரசால் உணவும் மருந்தும் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது, மருத்துவமனைகள் இலக்கு வைத்து தாக்கப்பட்டது, சரணடைந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டமை அல்லது அவர்களுக்கு என்ன நேர்ந்தது என தெரியவில்லை போன்ற குறிப்புகள் இலங்கைக்கு விரும்பத்தகாதவையும் எதிர்காலத்தில் நெருக்கடியை கொடுக்கக் கூடியவையும் இருக்கும்.

இந்த அறிக்கை தென்னிலங்கை விரும்பியபடி அமையாவிட்டாலும், எதிர்வரும் 30ஆம் திகதி நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படும் தீர்மானம் இலங்கைக்கு தர்மசங்கடங்களை ஏற்படுத்தாமல் ஆதரவாக வருவதற்கான சாத்தியப்பாடுகள், இந்த அறிக்கை வெளிவந்த பின்னும் நீடித்திருக்கிறது. இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பல பரிந்துரைகளை இலங்கை அரசு அமுல்படுத்தப் போவதில்லை. ஆனால், வெளிவரவிருக்கிற தீர்மானம் மிக முக்கியமான பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு வலியுறுத்துவதோடு உள்ளகப் பொறிமுறையை நிராகரிக்க வேண்டும். அதுவே பாதிக்கப்பட்டவர்களின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பைத் தன்னிலும் பூர்த்தி செய்யும். ஆயினும், அதற்கான சாத்தியப்பாடுகள் அதிகமாவதற்குப் பதிலாக அருகிவருவதாகவே அறியமுடிகிறது.

இத்தகைய பின்னணயில் தமிழர்கள் கீழ்வரும் விடயங்களில் கவனம் செலுத்துவது பயனுள்ளதாக இருக்கும்.

இலங்கையின் வகிபாகம் கூடிய கலப்புப் பொறிமுறையென்பது நம்பகத் தன்மையற்றது என்பதை நிரூபித்தல்.

அ. கடந்தகால செயற்பாடுகளை கருத்திற் கொண்டு இலங்கையின் உள்ளகப் பொறிமுறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்க முடியாது என்பதை வெளிவந்துள்ள அறிக்கை சுட்டடிக்காட்டியுள்ளது. எதிர்காலத்திலும் அந்த நிலை நீடிப்பதற்கான சாத்தியப்பாடுகள் அதிகமாக உண்டு. அத்தகைய சூழலில் அதனை வெளிப்படுத்தி கலப்புப் பொறிமுறையும் நீதியை வழங்காது என்பதை நிரூபித்தல்.

ஆ. சாட்சிகளை அச்சுறுத்தும் அல்லது சாட்சிகளுக்கு அழுத்தத்தை கொடுக்கும் செயற்பாடுகளை இலங்கையின் கட்டமைப்புகள் தொடர்ந்தும் மேற்கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் நிறைய உண்டு. அத்தகைய சந்தர்ப்பங்களில் அவற்றைப் பகிரங்கப்படுத்தல்.

இ. சர்வதேச குற்றங்களைப் புரிந்த ஆயுதப்படையினரும் அரசுக்கு ஆதரவானோரும் முழுமையான தண்டனைகளிலிருந்து காப்பாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அத்தகைய தருணங்களில் அவற்றை வெளிப்படுத்தல்.

ஈ. இலங்கையின் நீதித்துறை, நிர்வாகத்துறை, பாதுகாப்புத் துறை மற்றும் காவல் துறை போன்ற தரப்புகள் நீதியான விசாரணைகளை மேற்கொள்ளாமல் இழுத்தடிப்பதையும், நீதியான விசாரணைகள் நடைபெறுவதற்கு தடையாக இருப்பதையும் பகிரங்கப்படுத்தல்.

சர்வதேச குற்றவியல் விசாரணைக்காக தொடர்ந்தும் போராடல்

அ. கலப்புப் பொறிமுறை போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை வழங்காது என்பதை அதன் பலவீனங்கள், குறைபாடுகளை வெளிப்படுத்துவதனூடாக, சர்வதேச குற்றவியல் விசாரணைக்கான கோரிக்கையை பலப்படுத்துதல்.

ஆ. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையைத் தாண்டி, ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கும், ஐ.நா. பொதுச்சபைக்கும் தமிழர்களுக்கான போராட்டத்தை விரிவாக்குதல். அதனூடாக, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பரிந்துரை செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல்.

இ. நீதிக்கும் பொறுப்புக்கூறலுக்குமான சர்வதேச பொறிமுறைக்கான தமிழர்களின் போராட்டம் மேற்குலகம், தமிழ் நாடு மற்றும் வட கிழக்கோடு மட்டுப்படுத்தப்படாமல், இந்தியாவின் ஏனைய மாநிலங்களுக்கும், உலகின் ஏனைய பகுதிகளுக்கும் விரிவாக்குதல்.

தமிழின அழிப்பை ஏற்று அங்கீகரிக்க செய்தல்

இலங்கைத் தீவில் வாழும் தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு இன அழிப்பு மேற்கொண்டது என்பதை ஏற்று அங்கீகரிக்கச் செய்வதற்கான போராட்டத்தை தொடர வேண்டும்.

தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தை உள்நாட்டுக்குள் முடக்கும் செயற்பாடுகளை முறியடிப்பதுவும் மிக முக்கிய பணி. அதில் வெற்றி பெறாவிட்டால் தமிழர்களின் நீதிக்கான போராட்டம் கால நீட்சியில் காணாமல் போய் இறுதியில் தோல்வியடையும்.

தமிழர்களின் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, விவேகம், அர்ப்பணிப்பு, ஆக்கபூர்வமான தயாரிப்புத் திட்டமும் கொண்ட நகர்வுகளே தமிழர்களுக்கான உரிமையை மட்டுமல்ல நீதியையும் பெற்றுக்கொடுக்கும். அந்த வகையில், தமிழர் அல்லாத முற்போக்கு சக்திகளை ஒன்றுதிரட்டி தமிழர்களுக்காக தமிழர்களே போராடுவதற்கான ஒரு கருவியாக வெளிவந்துள்ள அறிக்கையையும் பயன்படுத்தி தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தை முன்னகர்த்துவது காலத்தின் தேவை.

நிர்மானுசன் பாலசுந்தரம்