படம் | Buddhika Weerasinghe Photo, GETTY IMAGES

இம்மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்கும் போது தேர்தல் காலத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்கள், வாதங்கள், பரப்புரைகளைக் கடந்து தேர்தலின் பின் நடைபெறக்கூடிய விடயங்களையும் கவனத்திற் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். அவ்வாறு பின்னர் நடைபெறக்கூடியவற்றையும் முன்னுணர்ந்து வாக்களிக்க எமது மக்கள் தவறுவார்களாயின் அதற்கான விலையினை ஈழத் தமிழ் மக்கள் ஒரு சமூகமாக அடுத்த ஐந்து வருடங்களில் செலுத்த வேண்டி வரும் என்பதனையும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.

நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் தாயகமான வடகிழக்கில் தமிழ் மக்களின் தெரிவுக்குரிய கட்சிகளாக இருக்கக் கூடிய முக்கிய கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுமே. இவ் இரு கட்சிகளில் எக்கட்சிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்? இக்கேள்வி குறித்து விவாதிக்க முன்னர் எனது அரசியல் நிலைப்பாடு தொடர்பாக சில விடயங்களைத் தெளிவுபடுத்த வேண்டும். நான் எந்த அரசியற் கட்சியையும் சார்ந்தவன் அல்ல. தமிழ் மக்கள் இலங்கைத் தீவில் சமத்துவமாக, பாதுகாப்பாக, இனஅழிப்புக்கு உட்படாது, தமது அரசியல் தலைவிதியைத் தாமே தீர்மானித்தவாறு வாழ வேண்டும் என்பதுதான் எனது அரசியற்கனவு. இதுவேதான் பெரும்பான்மையான தமிழ் மக்களின் அரசியற்கனவு என்பது எனது நம்பிக்கை. இங்கு கனவு என்பதனை கற்பனை என்ற அர்த்தத்தில் நான் பயன் படுத்தவில்லை. பெருவிருப்பு என்ற அர்த்தத்திலேயே பயன்படுத்துகிறேன். தமிழ் மக்கள் மத்தியில் உள்ள அரசியற்கட்சிகள், அரசியல் அமைப்புக்கள் ஊடாக இக்கனவை நனவாக்க என்னால் முடிந்தவற்றைச் செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பு. இக்கட்டுரையும் இவ் விருப்பின்பாற்பட்டுத்தான் எழுதப்படுகிறது. நான் இங்கு எழுதும் விடயம் எந்தக் கட்சியினதும் அரசியல் நலன் சார்ந்துமல்ல. தமிழ் மக்களின் தேசிய உரிமைப்போராட்டத்தின் நலன் சார்ந்தேதான் என்பதனையும் தெளிவு படுத்திக் கொள்கிறேன்.

எக்கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதனை மக்கள் தீர்மானிக்கும்போது தேர்தலின் பின் நடைபெறக்கூடியவற்றை இப்போது மனக்கண்ணில் கொண்டு வருதல் பயன் தரும். இப்போது கிடைக்கும் தரவுகளின்படி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அணிக்கோ அல்லது மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அணிக்கோ சாதாரண பெரும்பான்மைக்கான 113 ஆசனங்கள் கிடைக்கப் போவதில்லை. ரணில் அணிக்கு கிடைக்கக்கூடிய 100 வரையிலான ஆசனங்களுடன் மஹிந்த தலைமையிலான அணியில் போட்டியிட்டு வெற்றியீட்டும் மைத்திரி விசுவாசிகள் 15 பேர் வரையானோர் ரணிலுடன் இணைய ஜே.வி.பியிலோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலோ தங்கி நிற்காது அடுத்த அரசை அமைக்கவே மைத்ரி – ரணில் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இத்திட்டத்துக்குப் போதிய ஆசனங்கள் கிடைக்காவிடின் அவர்கள் ஜே.வி.பி அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (சில சமயம் இரண்டினதும்) ஆதரவைக் கோரும் நிலை வரும். மஹிந்த தலைமையிலான அணி பெரும்பான்மையினைப் பெறப்போவதில்லை என்பதே பொதுவான கணிப்பாக உள்ளது. இதனால், மஹிந்த பிரதமராக வந்து விடுவார், அதனைத் தடுக்க வேண்டும் என்பதனைத் தமிழ் மக்கள் வாக்களிக்கும்போது இத்தேர்தலில் கவனத்திற் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

தேர்தலின் பின்பு ஜே.வி.பியிலோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலோ தங்கி நிற்காத வகையில் தமது அரசை அமைத்துக் கொள்ள முற்படும் மைத்திரி – ரணில் அணியினர், இவ் இரு கட்சிகளையும் சமாந்திரமாகக் கையாளவே செய்வர். எந்தவொரு கட்சியிலும் முழுமையாகத் தங்கி நிற்பதனைத் தவிர்க்க முனைவர். இதனால், ​தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அமையப்போகும் அரசு தங்கி நிற்கும், இதன் ஊடாகப் பேரம் பேசித் தமிழ் மக்கள் தமது உரிமைகளை வென்று விடலாம் என்ற எதிர்பார்ப்போடு தமிழ் மக்கள் வாக்களிப்பதில் அர்த்தம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. சிங்கள பௌத்த பேரினவாதம் இதற்கு இடம் அளிக்கப் போவதுமில்லை.

இத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு வெளிப்படுத்தாத இரு முக்கிய விடயங்களை மக்கள் வாக்களிப்பின்போது கவனத்திற் கொள்ள வேண்டும். தமிழ் மக்களின் தேசிய உரிமைகள் சார்ந்த இந்த இரு முக்கிய விடயங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உண்மையான நிலைப்பாடு மூடுண்டதாகத் தெரிகிறது. சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளிகள் கொண்டதாகப்படுகிறது:

முதலாவது – ஈழத் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு தொடர்பான விடயம். தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமஸ்டி பற்றிக் கூறினாலும் அது எத்தகைய சமஸ்டி என்பது பற்றிக் கூறவில்லை. சமஸ்டி அடிப்பிடையிலான தமது தீர்வுத் திட்டம் எது என்பது பற்றியும் பேசவில்லை. முன்வைக்கவும் இல்லை. இதனால், கூட்டமைப்பினர் கருதும் சமஸ்டி எது என்பது கூட்டமைப்பின் தேர்தல் வேட்பாளர்கள் உட்பட (சம்பந்தன் ஐயா, சுமந்திரன் தவிர்ந்த) எவருக்கும் தெரியாது.

கிடைக்கப்பெறும் நம்பகமான தகவல்களின் அடிப்படையில் 2013, 2015ஆம் ஆண்டுகளில் சிங்கப்பூரில் நடைபெற்ற சந்திப்புகளின் பெறுபேறாக எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் “சமஸ்டி போலத் தோன்றும்” ஒற்றையாட்சி முறைக்குட்பட்ட தீர்வுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை குறிப்பாகச் சம்பந்தர் ஐயா, சுமந்திரன் போன்றோர் பச்சைக் கொடி காட்டிவிட்டனர் என்றே தெரிகிறது. தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக சமஸ்டி போலத் தோன்றும் ஒற்றையாட்சிக்குட்பட்ட தீர்வை நோக்கியே கூட்டமைப்பின் தலைமை தேர்தலின் பின்னர் நகரும். தேர்தலின் போது சமஸ்டி பற்றிப் பேசுவோர் தேர்தலின் பின்னர் பெயர்களில் (labels) என்ன இருக்கிறது? உள்ளடக்கம்தான் முக்கியம் எனக் கூறுவார்கள். இதுவும் சமஸ்டிதான் என்பார்கள். இந்தியாவைப் பாருங்கள். இந்திய அரசியலமைப்பு ஒரு முழுமையான சமஸ்டியாக அமையவில்லையே. இந்தியாவில் உள்ளது சமஸ்டி இல்லையா என்பார்கள். இந்திய அரசியற்சூழலும் இலங்கை அரசியற்சூழலும் முற்றிலும் வேறுபட்டது. இந்திய மாதிரி இலங்கைக்குப் பொருந்தாது என்பது பற்றி தெரிந்திருந்தாலும் அது பற்றிப் பேசமாட்டார்கள்.

இதனால், இத்தேர்தலில் வாக்காளர்கள் கவனத்திற் கொள்ள வேண்டியதொரு முக்கியமான விடயம் ஈழத் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சி முறைக்குட்பட்டு அரசியற்தீர்வு காண முற்படும் முயற்சிகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது.

இரண்டாவது – முக்கியமான விடயம், தமிழின அழிப்புத் தொடர்பாக அனைத்துலக விசாரணைகளை உள்நாட்டு விசாரணையாகச் சுருக்கும் முயற்சி தொடர்பானது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழின அழிப்புத் தொடர்பான அனைத்துலக விசாரணையை தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வலியுறுத்தவில்லை. மேலும், அனைத்துலக விசாரணை குறித்து சுமந்திரன் தெரிவித்து வரும் கருத்துக்களை நன்கு உற்று நோக்கும்போது இலங்கைப் படையினர் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பு ஆகிய இரு தரப்பினர் மீதான யுத்த மீறல்கள் குறித்து அனைத்துலக நிபுணர்களை உள்ளடக்கிய உள்நாட்டு விசாரணைப்பொறிமுறைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமை சம்மதம் வழங்கி விட்டதாகவே தெரிகிறது. இதுவே ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையிலும் பரிந்துரை செய்யப்படும். அனைத்துலக நிபுணர்களை இந்த விசாரணைப்பொறிமுறை உள்ளடக்கி இருப்பதானால் அது நம்பத்தகுந்ததாக இருக்கும் என்ற காரணத்தையும் தேர்தலின்பின் கூறுவார்கள். இலங்கையின் சட்டவரம்புக்குள் தமிழ் மக்களுக்கு நீதி வழங்கக்கூடிய நிலைமையோ அல்லது அதற்குரிய அரசியல் விருப்போ இலங்கை அரசிடம் உண்டா என்பது பற்றி அதிகம் பேச மாட்டார்கள்.

இதனால், தேர்தலின் போது தமிழ் மக்கள் கவனத்திற் கொள்ள வேண்டிய இரண்டாவது விடயம் தமிழின அழிப்புக்கு எதிராக நீதி கோரும் போராட்டம் தமிழ்த் தலைமைகளின் செயற்பாடுகளால் நீர்த்துப்போகாமல் எவ்வாறு பாதுகாக்கலாம் என்பது.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய தலைவர்கள் சமஸ்டியிலும் அனைத்துலக விசாரணையிலும் உறுதியான கருத்தை வெளிப்படுத்துகிறார்களே. அவர்கள் இந்த இரு விடயத்திலும் உறுதியான நிலைப்பாட்டை எடுத்து கூட்டமைப்பை சரியான திசையில் நகர்த்த மாட்டார்களா? என்ற கேள்விக்கும் இங்கு இடமுண்டு. கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் ஐயா இதுவரை பல முடிவுகளை முன்னரே எடுத்து விட்டு அதனை கூட்டமைப்பின் முடிவாக ஆக்குவதில் வெற்றி கண்டிருக்கிறார். கூட்டமைப்பின் ஏனைய கட்சித் தவைர்களின் பலவீனத்தை அவர் நன்கு அறிவார். ஆரம்பத்தில் சிறிது முரண்டு பிடித்தாலும் பின்னர் ஏனைய கட்சித் தலைவர்கள் தன்வழிக்கு வருவார்கள் என்பதே அவரது கணிப்பு. தேவையேற்படின் வெளிநாட்டுத் தூதரங்களில் இருந்து ஏனைய கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, “சம்பந்தர் ஐயா எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்குங்கள்” என்று கோரப்படுவார்கள். அவர்களும் மெதுவாக ‘யதார்த்தத்துக்கு’ கட்டுப்பட்டு விடுவார்கள்.

இத்தகைய விடயங்களைக் கவனத்திற் கொண்டே தமிழர் தாயகப்பகுதியில் உள்ள ஒரு தமிழ் வாக்காளர் எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். ஆனால், தமிழ் மக்களிடம் ஒரு பிரதான கட்சியை அல்லது அமைப்பை ஆதரிக்கும் அரசியற் பண்பாடு நீண்டகாலமாக இருந்து வருகிறது. இலங்கை அரசை எதிர்கொள்ள பலமான அரசியல் அமைப்புத் தேவை என்ற தமிழ் மக்களின் அரசியற்புரிதலில் இருந்துதான் இந்தப் பண்பாடு வளர்ச்சியடைந்திருக்க வேண்டும். இந்த அரசியற்பண்பாடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே இத​தேர்தலிலும் சாதகமாக இருக்கிறது. மேலும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் குறையாது பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறையும் தமிழ் மக்களுக்கு உள்ளது. இதுவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே சாதகமாக உள்ளது. இதனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே இத்தேர்தலில் தமிழர் தாயகப் பகுதியில் கூடுதல் ஆசனங்களைப் பெறும்.

இத்தகையதொரு சூழலில் தமிழ் மக்களின் தேசிய உரிமைக்கான போராட்டம் நீர்த்துப் போகாமல் எவ்வாறு பாதுகாப்பது என்ற கேள்வி எழுகிறது. வாக்களித்து பிரதிநிதிகளைத் தெரிவு செய்தவுடன் மக்கள் அதிகாரம் அற்றவர்களாகப் போய் விடுகிறார்கள். இது பிரதிநிதித்துவ ஜனநாயக முறையின் குறைபாடுகளில் ஒன்றாக உள்ளது. மீண்டும் 5 வருடம் கழித்து அடுத்த தேர்தலின்போதுதான் அதிகாரம் மக்கள் கைக்கு வரும். இதற்கிடையில் இவ் இடைப்பட்ட காலத்தில் தெரிவு செய்யப்பட்டவர்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த, அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய வலுவான சமூக இயக்கங்கள் இல்லாத நிலைமையும் தமிழ் மக்களிடையே இருக்கிறது. இதனால், தேர்தலின் பின் எழக்கூடிய நிலையை எதிர்கொள்ள வருமுன் காப்போனோக தமிழ் மக்களில் விழிப்புணர்வு உள்ள வாக்காளர்கள் செயற்பட வேண்டும். அவர்கள் எவ்வாறு இப்பிரச்சினையைக் கையாள முடியும்?

இப்பிரச்சினையை இத்தேர்தலில் எதிர்கொள்ள விழிப்புணர்வுள்ள தமிழ் மக்களுக்கு ஒரு வழியுண்டு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை விடக் கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ள ஒரு சிலரை நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்வதுதான் அந்த வழி. கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மட்டுமே தற்போதய நிலையில் இதற்குத் தகுதியாக உள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து இத்தேர்தலில் பிரதிநிதிகள் தெரிவாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடம் மாறிப் போகமால் இருப்பதற்கான அழுத்த சக்தியாக இருக்கும். தமிழர் உரிமை அரசியலையும் இது வலுப்படுத்தும். இங்கு நமது அக்கறையெல்லாம் தமிழர் உரிமை அரசியல் வலுப்பட வேண்டும் என்பதுதான். கூட்டமைப்பில் இரண்டு அல்லது மூன்று பிரதிநிதிகள் குறைவதனால் தமிழர் உரிமை அரசியல் வலுவிழந்து போகாது. மாறாக தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு இரண்டு அல்லது மூன்று பிரதிநிதிகள் கிடைப்பது தமிழ் மக்களின் உரிமை அரசியலை வலுப்படுத்த உதவும்.

(லண்டனில் இருந்து வெளியாகும் ‘ஒரு பேப்பர்’ பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை. சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன)

கலாநிதி சர்வேந்திரா