படம் | AFP Photo, ISHARA KODIKARA, FCAS

அரசியல் யாப்பை மாற்றப்போவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தெரிவித்திருக்கின்றது. அதே கருத்தை ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய தேசிய முன்னணியும் கூறி வருகின்றது. அரசியல் யாப்பை மாற்ற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இனப்பிரச்சினைத் தீர்வுக்கு ஏற்றவாறு அரசியல் யாப்பு மாற்றியமைக்கப்படுமா என்பதுதான் இங்கு பிரதான கேள்வியாகும். இனப்பிரச்சினைக்கான தீர்வு என்று கூறுகின்றபோது, இரண்டு விடயங்களை நோக்க வேண்டும். ஒன்று அதிகாரப் பரவலாக்கலா? அல்லது அதிகாரப் பகிர்வா? இரண்டாவது தற்போது நடைமுறையில் உள்ள அரசியல் யாப்பில் ஆறாவது திருத்தச் சட்டம் தமிழ் மக்களுக்கு எதிரானது. குறிப்பாக பிரிவினை வாதத்திற்கு எதிரானது என்பது தமிழர்களுடைய அரசியல் அபிலாசைகளை இல்லாமல் செய்யக்கூடியது என்ற கருத்தும் உண்டு.

புதிய யாப்பின் நோக்கம்

ஆகவே, இவற்றைக் கருத்தில் கொண்டு புதிய யாப்பு வரையப்படுமா? என்பது முக்கியமான கேள்வியாகும். அதாவது, 6ஆவது திருத்தச் சட்டத்தை தொடர்ச்சியாக வைத்துக்கொண்டு தமிழ், சிங்கள மக்கள் ஒற்றுமையாக வாழவேண்டும் என்று கேட்பது அல்லது இராணுவ அடக்குமுறைகளை வைத்துக்கொண்டு நடைமுறைச் சாத்தியமான அரசியல் தீர்வு பற்றிப் பேசுவது எந்தளவிற்கு ஏற்புடையது? புதிய அரசியல் யாப்பு என்று வருகின்ற போது, பழைய யாப்பில் உள்ள அதிகமான சட்டங்களை புதிய யாப்பிலும் சேர்க்கின்ற பண்பு இலங்கையில் உண்டு.

குறிப்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசினால் 1972ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட முதலாம் குடியரசு அரசியல் யாப்பில் காணப்பட்ட சில விதப்புரைகள், அரச கொள்கைத் தத்துவங்கள் 78ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசினால் உருவாக்கப்பட்ட 2ஆம் குடியரசு அரசியல் யாப்பிலும் காணப்பட்டது. ஆகவே, 36 ஆண்டுகளின் பின்னர் மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் புதிய அரசியல் யாப்பிலும் முன்னைய யாப்பிலிருந்த விதிமுறைகள் தொடர்வதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன.

ஆறாவது திருத்தச் சட்டம்

குறிப்பாக தமிழர்களுடைய அரசியல் அபிலாசைகளைப் புறக்கணிக்கக் கூடிய அல்லது தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் ஒற்றையாட்சி முறைமையின் கீழ் நிர்வாகங்களை பகிரக்கூடிய ஏற்பாடுகள்தான் புதிய யாப்பிலும் உருவாகலாம் என்பதற்கு 6ஆவது திருத்தச்சட்டம் உதாரணமாக இருக்கும். தற்போது நடைமுறையில் உள்ள இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பில் செய்யப்பட்ட 6ஆவது திருத்தச் சட்டம் தனிநாட்டுக் கோரிக்கையை மாத்திரமே தடுக்கின்றது.

ஆனால், ஒற்றையாட்சிக்கு எதிராக பேசக்கூடிய நிலைமைகள் அல்லது ஒற்றையாட்சியைத் தவிர்த்து சமஷ்டி முறையிலான ஆட்சிமுறையை கொண்டு வரக்கூடிய யோசனைகளுக்குக் கூட 6ஆவது திருத்தச்சட்டத்தைப் பயன்படுத்தி அமைச்சர்கள், அரசியல்வாதிகள் தடை விதிக்கின்றனர். சமஷ்டி முறை ஆட்சி அல்லது அதிகாரப் பகிர்வு என்பதற்கு எதிராக 6ஆவது திருத்தச் சட்டம் இல்லை. ஆனால், அமைச்சர்கள் மற்றும் சிங்களக் கடும்போக்கு அரசியல்வாதிகள் அதற்கு கொடுக்கும் வியாக்கியானம் தமிழர்களுடைய அரசியல் உரிமைகள் பற்றி பேசக்கூடாது என்ற அர்த்தத்தில் அமைகின்றது.

புலிகளும் இணங்கினர்

சமாதானம், ஒற்றுமை என்று வாய் கிழியப் பேசுகின்ற மிதவாதத் தலைவர்கள் என்று சொல்லப்படுகின்ற சிங்கள அரசியல்வாதிகள் பலரும், இந்த 6ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கவேண்டும் என்று ஒருபோதும் கூறியது கிடையாது. இந்தச் சட்ட மூலத்தை வைத்துக் கொண்டுதான் தமிழ் தலைமைகளையும் தமிழ் மக்களையும் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அச்சுறுத்தி வருகின்றனர். ஆகவே, இனப்பிரச்சினை தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கான எந்தவொரு சிறிய விட்டுக்கொடுப்பையும் செய்யாத நிலையில், பிரதான சிங்கள அரசியல் கட்சிகள் சமாதானம், ஒற்றுமை மற்றும் புதிய யாப்புப் பற்றி எவ்வாறு பேசமுடியும்.

தமிழ் ஈழம் என்பது விடுதலைப் புலிகள் விட்ட கோரிக்கை அல்ல. புலிகள் தோன்றுவதற்கு முன்னரான காலகட்டத்தில், அதாவது தந்தை செல்வாவின் காலத்தில் அது தோன்றியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார். 2009 ஆண்டு மே மாதத்தின் பின்னரான அரசியல் சூழலில் தமிழ் ஈழம் என்பதை தமிழர்கள் எவரும் தீர்வாகப் பார்க்கவில்லை. விடுதலைப் புலிகள் கூட ஒரு கட்டத்தில் சமஷ்டிமுறை ஆட்சிக்கு இணங்கியிருந்தனர்.

சாதகமான சூழ்நிலை

இந்த நிலையில், பிரிவினை வாதம் என்பது தமிழர்களின் நோக்கம் அல்ல. 1920ஆம் ஆண்டு தேசிய இயக்கம் பிளவுபட்டு, 1921ஆம் ஆண்டு தமிழர் மாகாண சபை உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து தமிழர்கள் எதிர்கொண்ட பட்டறிவின் விளைவாகவே தமிழ் ஈழம் என்பது அதியுயர் கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது. ஆனால், பிளவுபடாத இலங்கைக்குள் வடக்கு, கிழக்கு தமிழர் அல்லது தமிழ் பேசும் தாயகம் என்று ஏற்கப்படும் நிலையில் சுமூகமான அரசியல் தீர்வுக்கு தமிழர்கள் வரக்கூடிய நிலை இருந்தது. இன்றுகூட அந்த நிலைமைக்கான சூழல்தான் அதிகமாக உள்ளது.

இந்த நிலையிலும், தொடர்ந்தும் 6ஆவது திருத்தச் சட்டம் நடைமுறையில் இருப்பது என்பது தமிழர்களுக்கான ஒரு கடிவாளமாக அல்லது அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணக்க அரசியல் நிலைக்குள் வந்து, பிளவுபடாத இலங்கைக்குள் தீர்வு என்று கூறுவதைக்கூட பிரிவினைவாதமாக சிங்கள அரசியல்வாதிகள் சித்தரிக்கின்றனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒரு நாடு இருதேசம் என்று கூறுவது கூட பிரிவினைவாதம் அல்ல. தமிழர்களுடைய சுயாட்சியை மையமாகக் கொண்டே தமிழ் தலைமைகள் அவ்வாறு பேசுகின்றன. டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபி, மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி என்றுதான் கூறுகின்றது. ஆகவே, தனிநாடு அங்கே இல்லை என்பது தெளிவாகின்றது.

பல்வேறு சந்தேகங்கள்

எனவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா, மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோர் தமிழ் தலைமைகளுடைய தற்போதைய நிலைமைகள் தொடர்பாக எவ்வாறான கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளார்கள் என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும். சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளைத் தடுப்பது, நேர்மையான அரசியல் தீர்வு வேண்டும் என்ற சர்வதேச ஆலோசனைகளைத் தவிர்ப்பது போன்ற வேலைத் திட்டங்களிலேதான் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறான ஒரு சூழலில் புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டம் கூட நீக்கப்படாத நிலையில், புதிய அரசியல் யாப்புப் பற்றிப் பேசுவது தமிழ் மக்கள் மீதான தொடர்ச்சியான அடக்குமுறைக்கு அது வழிகோலும் என்ற உணர்வுகளும் ஏற்படுகின்றன. எனவே, குறைந்தபட்சம் 6ஆவது திருத்தச் சட்டம் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட்ட நிலையில், இனப் பிரச்சினைக்கு தீர்வான அடிப்படையாக காணி, பொலிஸ் அதிகாரங்களை வடக்கு – கிழக்கு மாகாணத்திற்கு பிரதியேகமான முறையில் வழங்குவதற்கான ஏற்பாடுகளை அறிவிக்கப்பட வேண்டும். ஆனால், தேசிய பாதுகாப்பு என்ற எழுதப்படாத சட்டத்திற்குள் இவை உள்ளடங்குகின்றன. புதிய யாப்பும் தேசிய பாதுகாப்பு முறையை கொண்டு வரும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த நிலையில், அரசியல் தீர்வு என்பது சாத்தியப்படக்கூடியது அல்ல.

அ. நிக்‌ஸன்