படம் | IBTIMES

எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற தேர்தல் இலங்கையில் உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பிறகு இடம்பெறுகின்ற இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தலாகும். சமூகங்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண்பதற்கும் உருப்படியாக எந்தவொரு செயன்முறையையும் முன்னெடுக்காத தென்னிலங்கையின் பிரதான அரசியல் கட்சிகள் இப்போது அந்தப் பிரச்சினைகள் குறித்துப் பேசத் தலைப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஜூலை 28ஆம் திகதி வெளியிட்ட அதன் விஞ்ஞாபனத்தில் அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்திற்கு உட்பட்ட வகையில் அரசியல் தீர்வைக் காண்பதற்கு முன்வருவதாகவும், தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஆணைக்குழுவொன்றை நியமிக்கப்போவதாகவும் தெரிவித்திருக்கிறது. மறுபுறத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில், போரின் முடிவுக்குப் பிறகு தேசிய நல்லிணக்கம் ஏற்படுத்தப்படவில்லை என்பதை ஏற்றுக்கொண்டுள்ளதுடன், தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் பட்சத்தில் சகல சமூகங்களும் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுமென்று பொதுப்படையாகத் தெரிவித்திருக்கிறது.

சுமார் பத்து வருடங்களாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ஆட்சியதிகாரத்தில் இருந்த முன்னாள் ஜனாதிபதி ராஜபக்‌ஷ தனது ஆட்சிக்காலத்தில் 13ஆவது திருத்தம் தொடர்பில் எவ்வாறு நடந்துகொண்டார் என்பதை முழு உலகமும் அறியும். இரு வருடங்களுக்கு முன்னர் வட மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு முன்னதாக 13ஆவது திருத்தத்தில் மாகாண சபைகளுக்கு இருக்கும் பொலிஸ் அதிகாரத்தையும் காணி அதிகாரத்தையும் இல்லாமற் செய்வதற்கு அரசியலமைப்புத் திருத்தமொன்றைக் கொண்டுவருவதற்குக் கூட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த முயற்சிகளில் இன்று ராஜபக்‌ஷ முகாமில் முன்னரங்கத்தில் இருக்கும் பல அரசியல்வாதிகள் தீவிர அக்கறை காட்டினார்கள். அன்று அவர்களுக்கு ஆதரவாக நின்ற ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகள் இன்று ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான முன்னணியில் இணைந்து தேர்தல் களத்தில் நிற்கின்றன.

ராஜபக்‌ஷ ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட பேரினவாதக் கொள்கைகள் காரணமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தமிழ் மக்களிடமிருந்தும் மேலும் குறிப்பாக முஸ்லிம் மக்களிடமிருந்தும் தனிமைப்பட்டுப் போனதாலேயே ஜனவரி ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்‌ஷ தோல்வியைத் தழுவினார். அதை உணர்ந்து கொண்ட நிலையில் சிறுபான்மைச் சமூகங்களை அரவணைப்பதைப் போன்ற தோற்றப்பாடொன்றைக் காண்பிப்பதற்காகவே சுதந்திர முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரசியல் தீர்வு குறித்து குறிப்பிட்டிருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல்சக்திகள் இனப்பிரச்சினைக்கான தீர்வாக 13ஆவது திருத்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது ஒருபுறமிருக்க அந்தத் திருத்தத்தில் இருக்கக்கூடிய அதிகாரங்களைக் கூட மாகாண சபைகளுக்கு மத்திய அரசுகள் இதுவரையில் முழுமையாக வழங்கவில்லை. இத்தகையதொரு பின்புலத்திலேயே தாங்கள் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் 13ஆவது திருத்தத்திற்குள் தீர்வுகாணத் தயாராயிருப்பதாகக் கூறுகின்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் மாகாண சபைகளுக்குச் சட்டரீதியாக உரித்தாக இருந்தும் அரசுகளினால் அவற்றுக்கு வழங்கப்படாமல் இருக்கும் பொலிஸ், காணி அதிகாரங்கள் குறித்துத் தங்களது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துவார்களா? அவர்களிடமிருந்து அதை எதிர்பார்க்க முடியாது.

இதனிடையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டது தான் தாமதம் தென்னிலங்கையில் அதற்கெதிராக குரல்கள் பலமாக ஒலிக்கத் தொடங்கியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

இலங்கையில் வாழ்கின்ற சகல சமூகங்களுக்கும் இறைமையும் சுயாதிபத்தியமும் பொதுவானவை என்ற அடிப்படையில் அதிகாரங்கள் பரவலாக்கம் செய்யப்படக்கூடியதாக தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும், அத்தகைய தீர்வு தமிழ்பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடங்களான வடக்கு மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் இணைத்து ஒரு சமஷ்டிக் கட்டமைப்புக்குள் அமைவதாக இருக்க வேண்டுமென்றும் கூட்டமைப்பு அந்த விஞ்ஞாபனத்தில் வலியுறுத்தியிருக்கிறது. அத்துடன், இலங்கையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகள் சாசனங்களின் ஏற்பாடுகளின் பிரகாரம் தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்றும் தெரிவித்திருக்கும் கூட்டமைப்பு, நிரந்தரமான தீர்வொன்றைக் காண்பதற்கான முயற்சிகளில் சர்வதேச சமூகத்தின் பங்கேற்பு தவிர்க்கமுடியாதது என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

சமஷ்டிக் கட்டமைப்பின் அடிப்படையிலான தீர்வு தொடர்பில் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டிருக்கும் கோரிக்கையை நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணிக்கு எதிராகத் தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாட்டத்தைக் காட்டுகிறது. வடக்கு – கிழக்கு இணைப்புப் பற்றியும் சமஷ்டித் தீர்வு பற்றியும் கோரிக்கை விடுத்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஐக்கிய தேசிய முன்னணி எவ்வாறு உறவைக் கொண்டிருக்கப்போகிறது என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை கொழும்பில் வெளியிட்ட வைபவத்தில் மகிந்த ராஜபக்‌ஷ கேள்வியெழுப்பினார். வரும் நாட்களில் சுதந்திர முன்னணியினரின் பிரசாரங்கள் எத்தகைய திசைமார்க்கத்தில் செல்லப் போகின்றன என்பதற்கு ராஜபக்‌ஷவின் உரை கட்டியம் கூறி நிற்கின்றது.

கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் தொடர்பிலான தங்கள் நிலைப்பாட்டை தெரியப்படுத்துவதில் ஐக்கிய தேசியக் கட்சி அரசியல்வாதிகளும் தாமதம் காட்டவில்லை. கூட்டமைப்பு எத்தகைய கோரிக்கையை முன்வைத்தாலும் தங்கள் நிலைப்பாட்டை ஒருபோதும் மாற்றப்போவதில்லை என்றும், ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரப்பரவலாக்கலே தங்கள் உறுதியான கொள்கை என்றும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்திருக்கிறது. ஆக மொத்தத்தில் தென்னிலங்கையின் இரு பிரதான அரசியல் முகாம்களும் இனப்பிரச்சினை தொடர்பில் அவற்றின் அணுகுமுறைகளில் எந்த மாற்றத்தையும் செய்யப்போவதில்லை என்பதைத் தெளிவாக பிரகடனம் செய்திருக்கின்றன. தமிழ்பேசும் மக்களே இதை கவனத்தில் கொள்ளுங்கள்.

வீ. தனபாலசிங்கம்