படம் | AFP Photo, NEWS.ASIAONE

இலங்கை ஒரு ஜனநாயக நாடு. இதனால், கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்கும் உண்டு. இதற்கு மதிப்பளித்தாக வேண்டும். பல்வேறு விதமான கருத்துக்கள் மக்கள் முன் வைக்கப்படும்போதே அதுதொடர்பான கருத்தாடல்கள் உருப்பெற்று அறிவளர்ச்சி அடைவதோடு சமூக வளர்ச்சியும் ஏற்படும். இது ஆக்கபூர்வமான கருத்தாகவும் கருத்தாடலாகவும் இருத்தல் வேண்டும். அதுவே வரவேற்கத்தக்கது.

ஜனநாயகம் எனும் போர்வையில் சமூகங்களை பிளவுபடுத்தும் கருத்துக்களை முன்வைப்பதும், இனத்துவ உணர்வுகளைத் தூண்டி அழிவுகளை சமூக மயப்படுத்துவதும் ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும். 1983ஆம் ஆண்டு கருப்பு ஜூலை நிகழ்வுகள் நீண்டகால ஆயுத யுத்தத்திற்கு இட்டுச் சென்றதோடு நாகரீக உலகம் ஏற்றுக்கொள்ளாத அழிவுகளை நாடும், தமிழ் சமூகமும் அனுபவித்தபோதும் பிரச்சினைக்கு முடிவில்லாத யுத்தம் வேறு வடிவில் தொடர்ந்த வண்ணமுள்ளது.

இத்தகைய பின்புலத்தில் ஞானசார தேரர் தலைமையிலான பொதுபல சேனாவின் எழுச்சியோடு முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான அநாகரீக செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டதோடு, பள்ளிவாசல்களும், கிறிஸ்தவ தேவாலயங்களும் தாக்கப்பட்டன. அதன் உச்சகட்டமாக அந்த அமைப்பு கடந்த வருடம் ஜூன் மாதம் களுத்துறை தர்கா நகரில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக திட்டமிட்ட செயலை கட்டவிழ்த்து விட்டது.

கடந்த கால ஆட்சியாளர்கள் பொதுபல சேனாவிற்கு மறைமுகமாக முழுமையான ஆதரவை கொடுத்ததோடு, களுத்துறை தர்கா நகர் அழிவுகளுக்கு பொலிஸ், இராணுவ ஆதரவும் பாதுகாப்பும் வழங்கினர். இன அடக்குமுறையை ஜனநாயகத்தின் போர்வையில் மிகவும் கச்சிதமாக செய்து முடித்தனர்.

முஸ்லிம், கிறிஸ்தவ, தமிழ் சமூகத்திற்கு எதிரான வன்முறை வார்த்தைகளை கக்கும் பொதுபல சேனா களுத்துறை சம்பவத்தின் ஓராண்டில் அரசியல் சக்தியாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டது மட்டுமல்லாமல், அரசியல் கட்சியாக தம்மை பதிவுசெய்து இம்முறை தேர்தலிலும் களமிறங்கியுள்ளது.

இனவாதம், சமயவாதம் மட்டுமே தனது அடித்தளமாகக் கொண்ட ஒரு அமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்தமை அவ்வமைப்பின் கடந்த கால முஸ்லிம், இந்து, கிறிஸ்தவ மக்களுக்கு எதிரான அடாவடித்தன செயற்பாடுகளுக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே கருதவேண்டும். ஜனநாயகம் என்று ஜனநாயகத்திற்கு எதிரான வன்முறையாளர்களை அங்கீகரிப்பதும், அவர்களுக்கு நாடாளுமன்ற ஆசனங்களை ஆக்கிரமிக்க இடமளிப்பதும் ஜனநாயக செயலாகாது.

அது மட்டுமல்ல பன்மை இன, சமய மக்கள் வாழும் நாட்டில் சிங்களம், பௌத்தம் அல்லாத மக்களின் அடையாளங்களை அழித்தொழிக்க முழு மூச்சோடு மதம் கொண்ட மிருகமாக ஆயுதங்களோடு செயற்படும் – மக்களை செயற்படத் தூண்டும் பல குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட பௌத்த பிக்குவை தலைவராகக் கொண்ட அமைப்பொன்றை பதிவு செய்தமை சிங்களம் அல்லாத மக்களின் எதிர்கால இருப்பிற்கும் வாழ்விற்கும் விழுந்த பாரிய அடியாகும்.

தேர்தல் களத்தில் இறங்கியுள்ள இரண்டு பெரிய கட்சிகளும் கடந்தகால இனவாத, சமயவாத அடக்குமுறைகளை கட்டவிழ்த்த கட்சிகளே. அதற்கு தூபமிட்டவர்களின் முகம்கள் தேர்தல் மேடைகளில் காணக்கூடியதாய் உள்ளன. இதற்கும் அப்பால் இனவாத, சமயவாத ஒடுக்குதலை மட்டுமே கருத்தியலாகக் கொண்ட அமைப்பும் களமிறங்கியுள்ள நிலையில் நீதி, நியாயம், இனங்களின் இனத்துவ அடையாளங்களுடனான அரசியல் பாதுகாப்பு தொடர்பில் அக்கறையுள்ள சிவில் சமூகம் எதிர்காலத்தில் ஒன்றிணையாவிடில் நாடு பாரிய அழிவுகளை சந்திக்கும் என்பது 83 கருப்பு ஜூலையை நினைவுகூறும் இம்மாதத்தில் நினைவில் நிறுத்துவது நலமாகும்.

அருட்தந்தை மா. சத்திவேல்