படம் | ISHARA S. KODIKARA Photo, Getty Images

2009 மே மாதத்துக்குப் பின்னரான இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் வரும் இரண்டாவது பொதுத் தேர்தல் இது. 2009 இற்கு முன்பு வரை ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக புலிகள் இயக்கமே தமிழ் மக்களின் பிரதான அரசியல் போக்கைத் தீர்மானித்தது. 2009 இற்குப் பின் அப்பொறுப்பை கூட்டமைப்பு வகிக்கத் தொடங்கியது. இப்படிப் பார்த்தால் தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவம் கூட்டமைப்பிடம் கைமாறிய பின்வரும் இரண்டாவது பொதுத் தேர்தல் இது. எனவே, கடந்த ஐந்து ஆண்டுகளில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதைச் சாதித்திருக்கிறார்கள் என்பது தொடர்பில் ஒரு சரியான மதிப்பீடு இருந்தால்தான் அடுத்த நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ன செய்ய வேண்டியிருக்கும்? என்பது தொடர்பாகவும் ஒரு சரியான கணிப்பீட்டுக்கு வர முடியும்.

இம் மதிப்பீட்டை இரண்டு தளங்களில் செய்யவேண்டியிருக்கும். முதலாவது, தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கூட்டமைப்பின் அணுகுமுறை எவ்வவாறு இருந்தது என்பது. இரண்டாவது, தமிழ் மக்களின் நிரந்தரப் பிரச்சினையைத் தீர்ப்பதில் கூட்டமைப்பு எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளது என்பது. இவற்றைச் சிறிது விரிவாகப் பார்க்கலாம்.

முதலாவது உடனடிப் பிரச்சினை. தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகள் எவை?

சுமார் 38 ஆண்டு கால ஈழப் போரானது தமிழ் மக்களின் வாழ்க்கையை ஒரு விதத்தில் குலைத்திருக்கிறது. இன்னொரு விதத்தில் புதிய ஒழுங்கொன்றை ஏற்படுத்தியுமிருக்கிறது. ஆயுதப் போராட்டத்திற்கு முன்புவரை குடும்பப் பூச்சிகளாக பெற்றோர் சொல் கேட்பவர்களாக சகோதரிகளுக்காக வாயைக் கட்டி வயித்தைக் கட்டி சேமிப்பவர்களாகக் காணப்பட்ட இளம் தலைமுறையினர், எப்பொழுது யாருக்கும் சொல்லாமல் வீட்டை விட்டுப் போகத் தொடங்கினார்களோ அப்பொழுதே குடும்ப அமைப்பு குலையத் தொடங்கியது. குடும்பத்திற்கு விசுவாசமாக இருந்த பிள்ளை இயக்கத்திற்கு விசுவாசமாக மாறியது. குடும்பத்தைவிடவும் உறவுகளை விடவும் தாய் நாடும் விடுதலையும் பெரியவைகளாயின. இதுவும் குடும்ப அமைப்பை குலைத்தது. ஒரு காலம் படிப்பே தெய்வம் என்று வாழ்ந்த பிள்ளைகள் ஒரு போராட்டத்திற்காக படிப்பைத் துறந்தார்கள். மதத்தையும் கடவுள்களையும் விட தலைமைகளை விசுவாசிக்கத் தொடங்கினார்கள். அதாவது, விசுவாசம் இடம்மாறியது. நம்பிக்கைகள் இடம்மாறின. விழுமியங்கள் சிதைந்தன. புதிய விழுமியங்கள் உருவாக்கப்பட்டன. இது சமூக அமைப்பைக் குலைத்தது. போர் உக்கிரமடைய இடம்பெயர்வுகளும் புலப்பெயர்வுகளும் வந்தன. கிராமங்கள் வேரைப் பிடுங்கிக் கொண்டு ஓடத் தொடங்கின. மரணம் வாழ்க்கையைவிடவும் நிச்சயமானது போலத் தோன்றியது. மனிதர்கள் பதுங்கு குழிக்கும் வீட்டுக்கும் இடையில் இரண்டாகக் கிழிபடத் தொடங்கினார்கள். வீடு அதன் அர்த்தத்தை இழந்தது. குடும்பங்கள் குலைந்தன. கிராமங்களும் குலைந்தன.

போராட்டம் படிப்படியாக வளர்ச்சியடைந்தபோது இயக்கங்கள் சிவில் அமைப்புக்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன. கிராமங்கள் தோறும் கீழிருந்து மேல் நோக்கி தன்னியல்பாக வளர்ச்சிபெற்றிருந்த சிவில் அமைப்புக்கள் யாவும் இயக்கங்களின் அரசியல் பிரிவின் கீழ் மேலிருந்து கீழ் நோக்கி கட்டுப்படுத்தப்படும் ஒரரசியற்சூழல் தோன்றியது. தமிழ்ச் சமூகம் மிக வேகமாக இராணுவமயப்பட்டது. குறிப்பாக விடுதலைப் புலிகள் இயக்கம் 1986ஆம் ஆண்டு வசந்தகாலத்தின் பின்னிருந்து தனிப்பெரும் இயக்கமாக வளர்ச்சி பெற்றது. தனது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் அந்த இயக்கம் ஒரு நடைமுறை அரசையும் கட்டியெழுப்பியது. இந்நடைமுறை அரசானது குலைக்கப்பட்டிருந்த சமூக அமைப்பை ஒரு புதிய ஒழுங்கின் கீழ் மீளக் கட்டியெழுப்பியது. ஆனால், 2009 மேயோடு அப்புதிய ஒழுங்கும் குலைக்கப்பட்டுவிட்டது.

அதன் பின் குலைந்தவை குலைந்தவைகளாகவே காணப்படுகின்றன. ஏற்கனவே, தன்னியல்பாக இருந்த அமைப்புக்களும் குலைக்கப்பட்டுவிட்டன. அவற்றினிடத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட அமைப்புக்களும் குலைக்கப்பட்டுவிட்டன. இத்தகையதோர் பின்னணியில் குலைக்கப்பட்டவற்றை அப்படியே தொடர்ந்தும் குலைக்கப்பட்டவைகளாகவே பேணுவதன் மூலம்தான் தமிழ் மக்களைத் தொடர்ந்தும் தோல்வியுற்றவர்களாக வைத்திருக்கலாம் என்று தென்னிலங்கையில் உள்ள சிங்களக் கடும்போக்காளர்கள் நம்புவதாக வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனும் கூறுகிறார்.

அதாவது, தமிழ்ச் சமூகம் இப்பொழுதும் குலைந்துபோய்த்தான் காணப்படுகிறது. ஒருபுறம் குலைந்தவைகளை மீளக்கட்டி எழுப்பத்தடையாக உள்ள ஒரு அரசியல் மற்றும் இராணுவச் சூழல். இன்னொரு புறம் ஒரு பெரும் தோல்விக்கும் பேரிழப்பிற்கும் பின்னரான கூட்டுக் காயங்களும் கூட்டு மனவடுக்களும் அவற்றின் தொடர் விளைவுகளும். இவைதான் கடந்த ஆறு ஆண்டுகளாக தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகளாகக் காணப்படுகின்றன. இப்பிரச்சினைகளை எதிர்கொண்டு குலைந்தவற்றை மீள ஒழுங்குபடுத்தி ஒரு புதிய ஒழுங்கை கட்டி எழுப்பத் தேவையான அரசியல் தரிசனமும் திட சித்தமும் செயற்பாட்டு ஒழுக்கமும் கூட்டமைப்பிடம் இருந்ததா? குலைந்தவை குலைந்தவைகளாகவே இருப்பதைத்தான் எதிர்த்தரப்பு விரும்புகின்றது என்பதை அனைத்துலகின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்கும் அப்பால் குலைக்கப்பட்டிருப்பவற்றை மீளக் கட்டி எழுப்புவதற்கான ஒரு உள்ளூர் பொறிமுறை குறித்து கடந்த ஆறு ஆண்டுகளில் சிந்திக்கப்பட்டதா?

ஆட்சி மாற்றத்திற்கு முன்புவரை ஓரளவுக்கு எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்த ஒரு கட்சியானது மேற்சொன்ன உள்ளகப் பொறிமுறை ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கு அரசு தடையாகக் காணப்பட்டது என்ற ஒரு விளக்கத்தைக் கூறக்கூடும். ஆனால், எல்லாவற்றுக்கும் அரசுதான் காரணம் என்று கூறுவது மட்டும் எதிர்ப்பு அரசியல் ஆகாது. மாறாக சொந்தப் பாதுகாப்பு கவசங்களைக் கட்டி எழுப்புதல் என்பதை ஒரு அரசியல் இயக்கமாக அல்லது செயற்பாட்டு இயக்கமாக முன்னெடுக்க கூட்டமைப்பால் ஏன் முடியாது போயிற்று? ஒரு புறம் எதிர்ப்பு அரசியலைச் செய்துகொண்டு இன்னொரு புறம் அரசால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளையும் முன்னுரிமைகளையும் அனுபவித்தபடி குறிப்பாக மெய்ப்பாதுகாவலர்களை தம்மோடு வைத்துக்கொண்டு தமது சமூகத்திற்கான சொந்தப் பாதுகாப்பு கவசங்களைக் குறித்து அவர்களால் சிந்திக்க முடியவில்லையா?

அரசியல் கைதிகளைப் பார்வையிடுவதற்காகச் சிறைச்சாலைக்குச் சென்ற தமிழ் அரசியல்வாதிகளில் எவரும் அரசியல் கைதிகளாக சிறைச்சாலைக்குச் செல்லுமளவிற்கு ஏன் றிஸ்க் எடுக்கவில்லை?

தமிழ் அரசியல்வாதிகள் தனித்தனியாக புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து நிதி உதவிகளைப் பெற்று இங்கே உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவற்றை பொருளாகவும் பணமாகவும் வழங்கி வருகிறார்கள். இது கூட ஒரு தற்காலிகச் செய்முறைதான். புலம்பெயர்ந்த தமிழர்களைக் கொடையாளிகளாகவும் தாயகத்தில் இருப்பவர்களைப் பயனாளிகளாகவும் பேணிவரும் இப்பொறிமுறையானது உடனடிக்கு உதவலாம். ஆனால், இதைவிடப் பொருத்தமான நீண்ட எதிர்கால நோக்கிலான வேறு பொறிமுறைகள் குறித்து நம்பிக்கையூட்டும் உரையாடல்கள் எதையும் கடந்த ஆறு ஆண்டுகளில் காண முடியவில்லை.

வட மாகாண சபையை வென்றெடுத்த போது ஓர் அரை இணக்க அரசியலுக்குப் போக கூட்டமைப்பு முற்பட்டது. ஆனால், ராஜபக்‌ஷ அரசு அதற்கு இடம் கொடுக்கவில்லை. அதில் ஏற்பட்ட படிப்பினைகள், ஏமாற்றங்கள், விரக்தி என்பவற்றின் விளைவாகவே விக்னேஸ்வரன் இப்போதிருக்கும் நிலைப்பாட்டை வந்தடைந்தார் என்று கருதவும் முடிவும். அதாவது, புலிகள் இயக்கத்தின் சரிவுக்குப் பின் தமிழ் மிதவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு இணக்க அரசியல் முயற்சியும் தோற்கடிப்பட்டதன் விளைவாகவே விக்னேஸ்வரன் இப்படியெல்லாம் பேசுகிறார் என்று எடுத்துக் கொள்ளலாமா?

ஆனால், இங்கேயும் சில இடறல்கள் உண்டு. ஒரு புறம் முதலமைச்சர் அரசை அல்லது ரணில் விக்கிரமசிங்கவை சாடுகிறார். ஆனால், இன்னொருபுறம் அவருக்குக் கீழே உள்ள சில அமைச்சர்களோ தங்களுடைய அமைச்சின் செயற்பாடுகளுக்குப் பெரிய தடைகள் எதுவும் இல்லை என்று கூறுகிறார்கள். தங்களுக்கு இருக்கக் கூடிய வரையறுக்கப்பட்ட வளங்களுக்குள் தாம் அதிகம் சாதித்திருப்பதாக பட்டியலிடுகிறார்கள். ஆயின், இதில் ஏதும் உள்ளோட்டங்கள் உண்டா?

இதுதான் நிலைமை. கடந்த ஆறு ஆண்டுகளில் தமிழ் மக்களின் வாழ்வில் ஏற்பட்டிருக்கக் கூடிய பெரிய மாற்றங்கள் எவையும் தமிழ் அரசியல்வாதிகளால் போராடிப் பெறப்பட்டவை அல்ல. மாறாக, போர்ப்பயம் தணிந்துபோகும் ஒரு அரசியல் சூழலில் அனைத்துலக நிர்ப்பந்தங்களை எதிர்கொள்வதற்காக இலங்கை அரசுகள் மேற்கொண்ட தற்காப்பு நடவடிக்கைகளின் விளைவுகளே அவை. அதாவது, நடந்து முடிந்த ஒரு நாடாளுமன்றக் காலகட்டத்துள் தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகளில் முக்கியமானவற்றைத் தீர்க்க முடியவில்லை.

இனி நிரந்தரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அதாவது, இனப்பிரச்சினை தீர்வில் கூட்டமைப்பானது நடந்து முடிந்த நாடாளுமன்றக் காலகட்டத்தில் எதைச் சாதித்திருக்கிறது என்று பார்க்கலாம்.

எல்லாவற்றுக்கும் முதலில், கூட்டமைப்பிடம் ஒரு கேள்வி. இனப்பிரச்சினைக்கான உங்களுடைய இறுதித் தீர்வு என்ன?

சில ஆண்டுகளுக்கு முன் சம்பந்தர் இந்தியாவில் வைத்து வழங்கிய ஒரு பேட்டியில், வடக்கு – கிழக்கு இணைந்த சமஷ்டி பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அதேசமயம், இவ்வாண்டு மோடி இலங்கைக்கு வந்த போது கூட்டமைப்பானது அவரிடம் தாங்கள் இலங்கையைப் பிரிக்கும் ஒரு தீர்வைக் கேட்கவில்லை என்பதை அழுத்திக் கூறியதாகச் சொல்லப்படுகின்றது. ஐக்கிய இலங்கைக்குள் ஒரு தீர்வையே தாங்கள் கேட்பதாகவும், ஆனால், அத்தீர்வானது தமிழ் மக்களின் ஐக்கியத்தைச் சிதைக்காமல் இருப்பதை இந்தியா உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டதாகவும் கூறப்படுகின்றது. இங்கு தமிழ் மக்களின் ஐக்கியம் என்ற கூறப்பட்டது வடக்கு – கிழக்கு இணைப்பைத்தான். இக்கோரிக்கையை சம்பந்தர் மோடியிடம் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் திரும்பத் திரும்ப அழுத்திக் கூறியதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

ஐக்கிய இலங்கைக்குள் வடக்கு – கிழக்கு இணைந்த ஒரு சமஷ்டி அமைப்பு என்ற விதமாகவே கூட்டமைப்பினர் கூறிவருகிறார்கள். ஒற்றையாட்சிக்குள் இலங்கைக்கேயான ஒரு சமஷ்டி கட்டமைப்பை எப்படி உருவாக்கலாம் என்பது குறித்த ஆழமான உரையாடல்கள் எதையும் அவர்கள் இதுவரையிலும் பகிரங்கமாக வைத்துக்கொள்ளவில்லை. இது விடயத்தில் அதிகமதிகம் அவர்கள் அரூபமான வார்த்தைகளுக்கூடாகவே பேசிவருகிறார்கள்.

மேலும், அப்படி ஒரு தீர்வை பெறுவதற்குரிய மூலோபாயத்திலும் அவர்களிடம் துலக்கமான வழிவரைபடம் இருப்பதாகத் தெரியவில்லை. ஜனாதிபதித் தேர்தலின் போது இந்தியாவோடும் மேற்குநாடுகளோடும் பேரம் பேசக் கிடைத்த சந்தர்ப்பதை அவர்கள் பயன்படுத்தவில்லை. இப்பொழுதும் நாடாளுமன்றத் தேர்தல் வரையிலும் அவர்கள் பகிரங்கப் பேரம் எதையும் வைத்துக்கொள்ள தயாரில்லை என்றே தோன்றுகின்றது. ஆனால், தேர்தலுக்குப் பின் மஹிந்தவுக்கு எதிரான அணியானது ஆட்சியமைப்பதற்காக தங்களிடம் தங்கியிருக்க வேண்டி வரும் என்று கூட்டமைப்பு நம்புகின்றது. அவ்வாறு புதிய அரசானது கூட்டமைப்பில் தங்கியிருக்கும் போது அது கூட்டமைப்பின் பேரம் பேசும் சக்தியை உச்சத்தில் வைத்திருக்கும் என்று அவர்கள் திட்டமிடுவதாகத் தெரிகிறது. அவ்வாறான உச்சமான பேரம்பேசும் சக்தியோடு ஒரு புதிய உடன்படிக்கைக்குப் போக அவர்கள் காத்திருக்கக் கூடும். அது ஒரு மைத்திரி – சம்பந்தர் உடன்படிக்கையாகவோ அல்லது ரணில் – சம்பந்தர் உடன்படிக்கையாகவோ அமையக் கூடும்.

ஆனால், அங்கேயும் பிரச்சினைகள் வரும். முதலாவதாக, பொது எதிரணியின் பங்காளியாக இருக்கும் ஜாதிக ஹெல உறுமயவைச் சமாளிக்க வேண்டியிருக்கும். அடுத்ததாக மஹிந்த அணி ஏற்படுத்தக் கூடிய அழுத்தங்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். இவ்வாறான அழுத்தங்களைத் தாண்டி வடக்கு – கிழக்கு இணைந்த ஒரு சமஷ்டியை உருவாக்க முடியுமா? அதற்கு வெளிச்சக்திகளின் அழுத்தங்கள் தேவையில்லையா? குறிப்பாக இந்தியா 13ஆவது திருத்தத்தைத் தாண்டிப்போகும் முயற்சிகளுக்குப் பக்கபலமாக இருக்குமா? ஆட்சி மாற்றத்தைப் பாதுகாக்க விளையும் மேற்கு நாடுகள் மாற்றத்தின் ஸ்திரத் தன்மையைக் குலைக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு தருமா?

மஹிந்த இப்பொழுதும் பலமாக இருக்கிறார் என்பதே கூட்டமைப்பின் பேரம் பேசும் சக்தியைத் தீர்மானிக்கிறது. அதேசமயம் ஒரு தீர்வைப் பற்றி உரையாடும் போது மஹிந்த பலமடையக் கூடாது என்பதைக் காரணம் காட்டியே தீர்வை வீரியமிழக்கச் செய்யவோ அல்லது ஒத்தி வைக்கவோ புதிய அரசு முயற்சித்தால் கூட்டமைப்பு என்ன செய்யும்?

உண்மையில் இவையெல்லாம் எதிர்காலத்தில் கேட்கப்பட வேண்டிய கேள்விகளே. இக்கட்டுரையின் குவிமையமானது கடந்த ஐந்தாண்டுகளுக்குள் கூட்டமைப்பின் அடைவுகளைப் தொகுத்தாய்வதே. அடுத்த நாடாளுமன்றத்தில் அவர்கள் என்ன செய்யக் கூடும் என்பதை அனுமானிப்பதற்கு கடந்த நாடாளுமன்றத்தில் அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்பதே தமிழ் மக்களுக்குள்ள ஒரே அளவுகோலாகும். அந்த அளவுகோலின் அடிப்படையில் இக்கட்டுரையானது கூட்டமைப்பை நோக்கி பின்வரும் அடிப்படைக் கேள்விகளை எழுப்புகிறது.

முதலாவது – கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகளில் உங்களால் தீர்க்க முடிந்தவை எவை எவை?

இரண்டாவது – தீர்க்க முடியாதவை எவை எவை?

மூன்றாவது – ஏன் அவற்றைத் தீர்க்க முடியவில்லை?

நாலாவது – குலைக்கப்பட்டிருக்கும் சமூக அமைப்பை மீளக் கட்டி எழுப்புவதற்குரிய செயற்திட்டங்கள் எவை பற்றியும் ஏன் இதுவரையிலும் சிந்திக்கப்படவில்லை?

ஐந்தாவது – கூட்டுக் காயங்களுக்கும், கூட்டுமனவடுக்களுக்கும் உரிய கூட்டுச் சிகிச்சையாக அமையவல்ல கூட்டுபொறிமுறைகள் குறித்து ஏன் இதுவரையிலும் சிந்திக்கப்படவில்லை?

ஆறாவது – இறந்தவர்களையும் காணாமல் போனவர்களையும் ஏன் இதுவரையிலும் எண்ணிக் கணக்கெடுக்க முடியவில்லை? அதை ஏன் இதுவரையிலும் ஒரு அரசியல் செயற்பாட்டு இயக்கமாக முன்னெடுக்க முடியவில்லை?

ஏழாவது – அரசியல் கைதிகளை ஏன் இதுவரையிலும் விடுவிக்க முடியவில்லை?

எட்டாவது – இனப்பிரச்சினைக்கு உங்களுடைய இறுதித் தீர்வு என்ன?

ஒன்பதாவது – அத்தீர்வை அடைவதற்கான உங்களுடைய வழிவரைபடம் என்ன?

பத்தாவது – அத்தீர்வை அடைவதற்காக கடந்த ஐந்து ஆண்டுகளில் நீங்கள் எதிர்கொண்ட இடர்கள் (றிஸ்க்) எத்தனை? இக்கட்டுரையானது சரத்பொன்சேகா போன்றவர்களின் அரசியலை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், மஹிந்தவுக்கு எதிராக அவர் றிஸ்க் எடுத்தார். சிறையும் போனார். அவரைப் போலவே சந்திரிகாவும் மைத்திரியும் கூட றிஸ்க் எடுத்தார்கள்; மைத்திரி ஜனாதிபதித் தேர்தல் அன்று ஒரு தென்னந் தோட்டத்துக்குள் ஒளித்திருந்தார். கடந்த ஐந்தாண்டுகளுக்குள் சிங்களத் தலைவர்கள் எதிர்கொண்ட ஆகப் பெரிய ஆபத்துக்கள் அவை. அவர்கள் தங்களுடைய அரசியல் இலக்குகளுக்காக துணிந்து இடர்களை எதிர்கொண்டார்கள். இவை அனைத்தும் கடந்த ஐந்தாண்டுகளுக்குள் நடந்தவைதான். இவர்களைப் போல நீங்களும் உங்களுடைய அரசியல் இலக்குகளுக்காக உங்களுக்கு வாக்களித்த மக்களுக்காக இதுவரையிலும் எத்தகைய இடர்களை எதிர்கொண்டீர்கள்?

தினக்குரல் பத்திரிகைக்காக நிலாந்தன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.