யுத்தம் முடிவடைந்து 6 வருடங்களுக்குள் தமிழ் மக்கள் செயல்திறனை, கற்பனைத்திறனை இழந்திருக்கிறார்கள் என்று கூறுகிறார் யாழ். பல்கலைக்கழகத்தின் நாடகமும் அரங்கியலும் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சிதம்பரநாதன்.

“புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு வெளி இருக்கிறதென்பது உண்மைதான். அரங்கை (Theatre) இப்போது பயன்படுத்தலாம்தான். ஆனால், அவற்றை முன்னெடுக்க செயல்திறன் கொண்ட மக்கள் எம்வசம் இல்லை. இந்த 5, 6 வருடங்களுக்குள் எமது மக்கள் செயல்திறனை, கற்பனைத் திறனை இழந்து, தற்போது சடத்துவ நிலையில் நடமாடுகிறார்கள்” என்கிறார் கலாநிதி சிதம்பரநாதன்.

யுத்தம் நிறைவடைந்து 6 வருடங்கள் கடந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ‘அரங்கம்’ (Theatre) எந்த வகையில் பங்களிப்புச் செய்தது என்பது குறித்து யாழ். பல்கலையின் சிரேஷ்ட விரிவுரையாளரும் அரங்கவியலாளருமான கலாநிதி சிதம்பரநாதனிடம் ‘மாற்றம்’ இணையதளம் கேட்டபோதே மேற்கண்டவாறு அவர் கூறினார்.

“யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களது வாழ்வை மீளக் கட்டியெழுப்புவதற்கு அரங்கை பயன்படுத்த முடியாத ஒரு சூழ்நிலை கடந்த ஆறு வருடங்களாக காணப்படுகிறது. மக்கள் கூடுவதற்குரிய அரங்குகளை உருவாக்கி, அந்த அரங்களுக்கூடாக தங்களிடையே கருத்துப் பகிர்வை மேற்கொண்டு, எதிர்காலத்தை நோக்கி நகர்வதற்குரிய ஒரு வாய்ப்பை உருவாக்குவதே எமது இலக்காக இருந்தது. ஆனால், அதற்கான ஒரு வெளி கடந்த ஆறு வருடங்களாக இருக்கவில்லை. அந்த சந்தர்ப்பத்தை சமூகத்தின் பிற்போக்கு சக்திகள் தங்களுக்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொண்டன. நிர்வாகத்துறையில், அரசியல் துறையில் அந்த சக்திகள் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டன. அவர்கள் மக்களை மந்தைகளாக மாற்றத் தொடங்கினார்கள். இதன் காரணமாக மக்கள், இலட்சியம் மறந்து, எதிர்காலம் குறித்து சிந்திக்காமல் ஏனோ தானோ என்ற வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டார்கள்” என்கிறார் சிதம்பரநாதன்.

“நோயுற்ற சமூகமாக மாறிக்கொண்டிருந்த இந்த சமூகம் கலாச்சார சீரழிவுக்குள் சிக்குண்டது. போதைவஸ்து பாவனை, பெண்கள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தல், குழந்தைகள் பற்றைகளுக்குள் வீசப்படுதல் அல்லது பெற்ற குழந்தைகளை கைவிடல் போன்ற சீரழிவுகளை எமது சமூகம் எதிர்நோக்கத் தொடங்கியது. இன்றைய இந்த நிலைமை பண்பாட்டுச் சீரழிவாகும்” என்று கூறும் சிதம்பரநாதன், “இலங்கை அரசாங்கமும் இராணுவமும் தமிழ் மக்களின் முதுகெலும்பை முறித்ததோடு விட்டுவிட்டது. முதுகெலும்பு முறிந்தாலும் முறியாத ஆன்மாவை இயங்கவிடாமல் தடுப்பது இங்கு உள்ளூரில் அதிகாரத்தில் இருக்கும் பிற்போக்கு சக்திகளாகும் என்றும் அவர் கூறுகிறார்.

அவருடனான காணொளி நேர்க்காணலை கீழ் காணலாம்.