இலங்கைத் தீவின் அரசியல் அமைப்பு 19ஆவது தடவையாகத் திருத்தப்பட்டுள்ளது. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்தபின் செய்யப்பட்ட இரண்டாவது திருத்தம் இது. ஆட்சி மாற்றத்தை உருவாக்கிய அதைப் பின்னிருந்து பலப்படுத்துகின்ற மேற்கு நாடுகளும் இந்தியாவும் இத்திருத்தத்தை வரவேற்றிருக்கின்றன. கூட்டமைப்பும் இத்திருத்தத்தை வரவேற்றிருக்கின்றது. ஜனநாயக அடிப்படைகளை பலப்படுத்த இத்திருத்தம் உதவும் என்று அதை ஆதரிப்பவர்கள் கூறுகிறார்கள். அரசு தனது வாக்குறுதிகளில் ஒன்றை ஓரளவுக்கேனும் நிறைவேற்றியிருப்பதாகப் பெருமைப்பட்டுக்கொள்கின்றது.

மெய்யாகவே 19ஆவது திருத்தம் இலங்கைத் தீவின் ஜனநாயக வெளியை பலப்படுத்தியிருக்கிறதா? குறிப்பாக இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பொறுத்தவரை அது தமிழ் மக்களுக்குச் சாகமானதா?

தமிழ் மக்களின் நோக்கு நிலையில் இருந்து பார்த்தால் இத்திருத்தத்தை அண்மையில் அரசு தேசிய கீதம் தொடர்பாக வெளியிட்ட அறிவிப்போடு ஒப்பிடலாம். தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்பது இலங்கைத் தீவில் ஏற்கனவே சட்டபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. ஆனால், அதை அரசத் தரப்புக்களே சட்டவிரோதமான முறையில் மீறி தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு எதிராகச் செயற்பட்டு வந்திருக்கிறார்கள். இப்பொழுது அவ்வாறு சட்டவிரோதமாகத் தமிழ் மக்களை சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்று நிர்ப்பந்திப்பதில்லை என்று முடிவெடுக்கப்பட்டது. அதாவது, அவர்கள் உருவாக்கிய சட்டத்தை அவர்களே மீறிவிட்டு இப்பொழுது அதை அமுல்படுத்தப்போவதாகக் கூறுகிறார்கள்.

அப்படித்தான் 19ஆவது திருத்தமும். 18ஆவது திருத்தத்தின் மூலம் அதிகரிக்கப்பட்ட அரசுத் தலைவரின் அதிகாரங்கள் 19ஆம் திருத்தத்தின் மூலம் குறைக்கப்பட்டிருக்கின்றன. இதனால், ஜெயவர்த்தன கொண்டு வந்த அரசியலமைப்பின் இதயமான பகுதிகள் எதுவும் அடிப்படை மாற்றத்திற்கு உள்ளாகவில்லை. அரசியல் அமைப்பில் மஹிந்த ராஜபக்‌ஷ கொண்டுவந்த திருத்தங்கள் பலவீனமாக்கப்பட்டு மறுபடியும் ஜெயவர்த்தன கொண்டுவந்த அடிப்படைகள் ஓரளவுக்கு பேணப்பட்டு இருக்கின்றன என்பதே நடைமுறை உண்மையாகும். அதாவது, வாக்களிக்கப்பட்ட நூறு நாட்களுக்குள் யாப்பின் இதயமான பகுதிகளில் அடிப்படையான மாற்றங்களைச் செய்ய முடியவில்லை என்பதே மெய்நிலையாகும்.

இத்திருத்தத்தை ஆதரிக்கும் மேற்கு நாடுகளும் கூட்டமைப்பும் இதன் மூலம் ஜனநாயகத்திற்கும் நல்லாட்சிக்குமான அடிப்படைகள் பலப்படுத்தப்படும் என்ற தொனிப்பட கருத்துத் தெரிவித்துள்ளன. ஆனால், 1978இல் இப்போதிருக்கும் யாப்பை ஜெயவர்த்தன கொண்டுவந்த போது மேற்கு நாடுகள் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. மேற்கின் தீவிர விசுவாசியாகிய ஜெயவர்த்தன இந்த யாப்பைக் கொண்டுவந்தபோது இது ஒரு மூடுண்ட யாப்பு என்றும், நெகிழ்ச்சியற்றது என்றும், பிரெஞ்சு அரசுத் தலைவராகிய டிகோல் உருவாக்கிய யாப்பைப் போன்றது என்றும் அந்நாட்களில் விமர்சிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தை இது பலவீனப்படுத்துகிறது என்றும் அரசுத் தலைவரை பண்டைய மன்னர்களைப் போல கேள்விக்கிடமற்ற அதிகாரங்களைக் கொண்டவராக மாற்றுகின்றது என்றும் விமர்சிக்கப்பட்டது. ஜெயவர்த்தன ஒருமுறை கூறியது போல ஆணைப் பெண்ணாக்கவும், பெண்ணை ஆணாக்கவும் வேண்டிய அதிகாரங்களைத் தவிர மற்ற எல்லா அதிகாரங்களையும் பெற்ற ஓர் அரசுத் தலைவரை இந்த யாப்பு உருவாக்கியது. அது கெடுபிடிப் போர் காலகட்டம். எனவே, மேற்கு நாடுகள் ஜெயவர்த்தனவை விமர்சனத்தோடு பார்க்கவில்லை. அவர் யாப்பில் ஒவ்வொரு திருத்தமாக மேற்கொண்டு தன்னைப் பலப்படுத்திக் கொண்டபோதும் தன்னுடைய எதிரிகளை மேலெழ முடியாதபடி தோற்கடிக்கும் விதத்தில் திருத்தங்களை மேற்கொண்ட போதும் மேற்குநாடுகள் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை.

ஜெயவர்த்தன செய்ததைத்தான் அதன் அடுத்தகட்டத்திற்கு ராஜபக்‌ஷவும் செய்தார். யுத்தத்தின் வெற்றிக்குப் பின் வெற்றிவாதத்திற்குத் தலைமை தாங்கிய அவர் தன்னுடைய அதிகாரங்களை மேலும் பெருக்கிக் கொண்டார். ராஜபக்‌ஷ செய்த திருத்தங்களை இப்பொழுது மைத்திரிபால சிறிசேன ஓரளவுக்குப் பலவீனப்படுத்தியிருக்கிறார். இதிலுள்ள சுவாரசியமான ஒரு முரண் என்னவெனில், 37 ஆண்டுகளுக்கு முன் ஒரு மேற்கின் விசுவாசியால் கொண்டுவரப்பட்ட யாப்பானது, அதன் தர்க்கபூர்வவிளைவாக விகார வளர்ச்சி கண்டபோது அதே மேற்கின் விசுவாசியான மற்றொரு அரசுத் தலைவரை வைத்து அதைப் பலவீனப்படுத்தவேண்டியிருக்கிறது என்பது. ஆனால், இங்கு தமிழர்கள் உற்றுக் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒரு விடயம் உண்டு. இதற்கு முன்பு யாப்பில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் எந்த நோக்கத்தோடு செய்யப்பட்டனவோ ஏறக்குறைய அதேவிதமான நோக்கத்தோடுதான் இப்பொழுதும் திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்பதுதான் அது. அதாவது, கடந்த சுமார் நான்கு தசாப்தகால இலங்கைத்தீவின் இரத்தம் சிந்தும் அரசியலில் யாப்புத் திருத்தங்கள் எத்தகைய உள்நோக்கங்களோடு செய்யப்பட்டனவோ அதே பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகத்தான் இம்முறையும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது என்பதே.

1978இல் இந்த யாப்பு உருவாக்கப்பட்டதிலிருந்து அதன் பிதாவாகிய ஜெயவர்த்தன தனது அதிகாரங்களைப் பலப்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்குமான கவசங்களாகவே யாப்பில் திருத்தங்களை மேற்கொண்டார். அவர் கொண்டுவந்த திருத்தங்களில் முக்கியமானவை யாவும் அவருடைய ஆட்சிக்காலத்தை நீடிப்பதற்கும் அவருடைய அரசியல் எதிரிகளை பலமிழக்கச் செய்வது அல்லது அரங்கில் இருந்து அகற்றுவது அல்லது இரண்டு எதிர்த்தரப்புக்களை தங்களுக்கிடையில் மோதவிடுவது போன்ற நோக்கங்ளோடு மேற்கொள்ளப்பட்டவைதான். உதாரணமாக, ஆறாவது திருத்தச் சட்டம் தமிழ் மிதவாதிகளை அரங்கில் இருந்து அகற்றியது. 13ஆவது திருத்தச் சட்டம் இந்தியாவையும் தமிழர்களையும் மோதவிட்டது.

ஒரு ஜனாதிபதிக்குரிய வயதெல்லையைத் தீர்மானித்த போது ஜெயவர்த்தன தனது மருமகனான ரணில் விக்கிரமசிங்கவை மனதில் வைத்தே அந்த வயதெல்லையை தீர்மானித்ததாக இப்பொழுது ராஜபக்‌ஷ ஆதரவாளர்கள் கூறிவருகின்றார்கள். அதைப் போலவே மைத்திரி கொண்டுவந்த திருத்தத்திலும் நாமல் ராஜபக்‌ஷ போட்டியிடுவதைத் தடுக்கும் நோக்கத்தோடு வயதெல்லை உயர்த்தப்பட்டிப்பதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அதைப் போலவே ஜெயவர்த்தன தன்னுடைய ஆட்சிக்காலத்தை நீடிப்பதற்கு மேற்கொண்ட சூழ்ச்சிகளின் தொடர்ச்சியாகவே ராஜபக்‌ஷவும் தனது ஆட்சிக்காலத்தை நீடிப்பதற்காக திருத்தங்களையும் மேற்கொண்டார்.

எனவே, ஜனாதிபதி வேட்பாளருக்குரிய வயதெல்லையில் தொடங்கி ஆட்சிக்காலத்தை நீடிப்பது வரையிலுமான எல்லா விடயங்களிலும் பதவியில் இருப்பவரைப் பாதுகாத்துக் கொண்டு அவருடைய எதிரிகளை அரசியலில் செயலற்ற நிலைக்குத் தள்ளுவதை நோக்கமாகக் கொண்டே இதுவரையிலுமான பெரும்பாலான முக்கிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இம்முறையும் ராஜபக்‌ஷ வம்சம் மறுபடியும் தலையெடுப்பதைத் தடுப்பதே பத்தொன்பதாவது திருத்தத்தின் பிரதான இலக்காகும். அதாவது, மேற்கு நாடுகள் மற்றும் இந்தியாவின் நோக்கு நிலையில் இருந்து பார்த்தால் மாற்றத்தைப் பலப்படுத்துவதே அதன் நோக்கம். ஆனால், ஏனைய திருத்தங்களோடு ஒப்பிடுகையில் இதில் ஒரு பிரதான வித்தியாசம் உண்டு. இதற்கு முன்பிருந்த அரசுத் தலைவர்கள் எல்லாருமே தங்களுடைய அதிகாரத்தை எப்படி அதிகரிக்கலாம்? எப்படி பாதுகாக்கலாம்? ஆட்சிக்காலத்தை மேலும் எப்படி நீடிக்கலாம் என்பது பற்றியே சிந்தித்து வந்துள்ளார்கள். ஆனால், மைத்திரிபால சிறிசேன இந்த மரபில் புறநடைபோலத் தோன்றுகின்றார். அவர் தன்னுடைய அதிகாரத்தைக் குறைக்கவும், ஆட்சிக்காலத்தை மட்டுப்படுத்தவும் தயாராகக் காணப்படுகின்றார். இது ஒரு முக்கியமான வித்தியாசம். ஆனால், அதற்கொரு அரசியல் பின்னணியும் உண்டு. மிகச்சரியான வார்த்தைகளில் கூறின் அவர் ஓர் இடைமாறு காலகட்டத்திற்குரிய தலைவரே. அவர் ஒரு கருவி மட்டுமே. வெற்றிவாதத்தை வெற்றிகொள்வதற்கு அதன் பங்காளிகளில் ஒருவரைத்தான் அதற்குரிய கருவியாகப் பயன்படுத்தப்படவேண்டியிருந்தது. எனவே, மைத்திரிபால சிறிசேன அதிகாரப் போட்டிக்குள் ஒரு கருவியாக கையாளப்படுபவர்தான் என்பதினால்தான் அவர் தனக்கு முன்பிருந்த அரசுத் தலைவர்களோடு ஒப்பிடுகையில் வித்தியாசமானவராகக் காணப்படுகிறார். எனவே, 19ஆவது திருத்தத்தை ஆழமாகப் பார்க்கும் எவரும் அதன் உள்ளோட்டங்களை விளங்கிக் கொள்ளும் அதேசமயம் மைத்திரி ஒரு கருவி என்பதையும் விளங்கிக்கொள்ள வேண்டும்.

எனவே, மேற்சொன்னவை அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால் ஒன்று மிகத் தெளிவாகத் தெரியும். கடந்த சுமார் நான்கு தசாப்தகால அரசியலில் மேற்கொள்ளப்பட்ட யாப்பு திருத்தங்களைப் போல 19ஆவது திருத்தமும் பதவியில் இருப்பவர்களை பாதுகாக்கும் உள்நோக்கங்களைக் கொண்டதுதான். இதற்கு முந்திய எல்லா யாப்புத் திருத்தங்களைப் போலவே இதுவும் மேற்பரப்பு மாற்றமே. வேர்நிலை மாற்றம் அல்ல. அதாவது, பண்பு மாற்றம் அல்ல. இலங்கைத் தீவின் யாப்பு வரலாற்றைப் பொறுத்தவரை பண்பு மாற்றம் எனப்படுவது அந்த யாப்பிற்கு பின்னால் இருக்கும் சிங்கள பௌத்த மேலாண்மைவாத மனோநிலையில் ஏற்படக் கூடிய தலைகீழ் மாற்றம் மட்டுமே. அப்பொழுதுதான் யாப்பானது ஓர் ஒடுக்கும் கருவி என்ற பண்பில் மாற்றம் ஏற்படும். அப்பொழுதுதான் அது பல்லினத்தன்மை மிக்க ஓர் இலங்கைத் தீவை கட்டியெழுப்பத் தேவையான அடிப்படைகளைக் கொண்டிருக்கும்.

எனவே, இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிச் சிந்திக்கும் போது இலங்கைத் தீவிற்குத் தேவைப்படுவது யாப்புத் திருத்தங்கள் அல்ல. மாறாக, யாப்பை மறு வரைபு செய்வதுதான். யாப்பை மறுவரைபு செய்யத் துணியாமல் முன்பின் முரணான திருத்தங்களில் தொங்கிக் கொண்டிருப்பது என்பது பண்பு மாற்றத்திற்குத் தயாரற்ற ஒரு போக்குத்தான். இதை இன்னும் கூராகச் சொன்னால், பண்பு மாற்றத்திற்குத் தயாரற்ற ஓர் அரசியல் சூழலைப் பாதுகாப்பவைதான் மேற்படி திருத்தங்கள் எனலாம்.

எனவே, ஆட்சிமாற்றத்தின் பின் நாட்டில் நடப்பவற்றை வைத்து தமிழர்கள் அதிகம் கற்பனை செய்யத் தேவையில்லை. மாற்றத்தைப் பலப்படுத்துவதே இப்பொழுது எல்லாருடைய குறிக்கோளும். யாப்புத் திருத்தமும் கைதுகளும் அந்த நோக்கத்தைக் கொண்டவைதான். அதாவது, ஆட்சி மாற்றமானது எப்படி தமிழ் நோக்கு நிலையில் இருந்து செய்யப்படவில்லையோ அப்படித்தான் மாற்றத்தின் பின்னர் நாட்டில் நடப்பவைகளும் தமிழ் மக்களின் நோக்கு நிலையில் இருந்து மேற்கொள்ளப்படுபவை அல்ல. தமிழ் மக்களின் நோக்கு நிலையில் இருந்து மேற்கொள்ளப்பட்டிருக்கக் கூடிய சிறுசிறு மாற்றங்கள் யாவும் மேலோட்டமானவை. அவை வேர் நிலை மாற்றங்களோ பண்புநிலை மாற்றங்களோ அல்ல. இத்தகையதோர் அரசியல் சூழலில் தமிழ் மக்கள் என்ன செய்யலாம்?

மாற்றமும் சரி மாற்றத்தின் பின்னர் நடப்பவைகளும் சரி, தமிழ் மக்களின் நோக்கு நிலையில் இருந்து மேற்கொள்ளப்படவில்லை என்றாலும் கூட அவற்றின் விளைவுகளும் விளைவின் விளைவுகளும் தமிழ் மக்களுக்கு சில புதிய வெளிகளைத் திறக்கக் கூடும். மாற்றத்தின் பின் தமிழ் சிவில் வெளி ஒப்பீட்டளவில் அதிகரித்திருக்கிறது. அதைப் போலவே யாப்புத் திருத்தங்களும் தமிழ் மக்களுக்கு அதிகரித்த அளவிலான ஜனநாயக வெளிகளை உருவாக்கக் கூடும். இவ்வாறு கடந்த சில மாதங்களாக அதிகரித்து வரும் சிவில் ஜனநாயக வெளியை தமிழ் மக்கள் எப்படி கையாளப் போகிறார்கள் என்பதிலும், அப்படி வெற்றிகரமாக கையாள்வதன் மூலம் தமது பேரம் பேசும் சக்தியை எப்படி அதிகப்படுத்தப் போகிறார்கள் என்பதிலும் தான் தமிழ்மக்களின் அடுத்தகட்ட அரசியல் தங்கியிருக்கின்றது.

மாற்றத்தின் பின் அனைத்துலக அரங்கில் தமிழ் மக்களுடைய பேரம்பேசும் சக்தியானது ஒப்பீட்டளவில் வீழ்ச்சி கண்டுள்ளது. சில மாதங்களின் பின் வரக்கூடிய ஐ.நா. மனித உரிமைகள் பணியகத்தின் அறிக்கை கூட மாற்றத்தைப் பலவீனப்படுத்தும் ஒன்றாக அமையுமா என்பது சந்தேகத்திற்குரியதே. இத்தகையதோர் பின்னணியில் மாற்றத்தின் பின் கடந்த சில மாதங்களாக நடந்தவற்றில் இருந்து தமிழ் மக்கள் மறுபடியும் சில பாடங்களை கற்கவேண்டியிருக்கிறது. சக்திமிக்க நாடுகளும் சரி தென்னிலங்கை அரசியல் தலைவர்களும் சரி அவரவர் தங்களுடைய நிகழ்ச்சி நிரல்களின்படியே காய்களை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள். யாருமே மற்றவர்களுடைய நிகழ்ச்சி நிரலுக்காக தங்களுடைய நிகழ்ச்சி நிரலைக் கைவிட்டதாகவோ ஒத்தி வைத்ததாகவோ தெரியவில்லை. ஆனால் தமிழர்கள் தரப்பின் நிலைமை எவ்வாறு உள்ளது?

ஜனாதிபதித் தேர்தலின் போது ஓர் அருமையான சந்தர்ப்பம் கிடைத்தது. மேற்கு நாடுகள் – இந்தியா – தென்னிலங்கை ஆகிய மூன்று தரப்புக்களோடும் ஓர் அருமையான பேரத்தைச் செய்திருக்கலாம். ஆனால், செய்யப்படவில்லை. இப்பொழுதும் கூட வரவிருக்கும் பொதுத் தேர்தலில் ஒரு பேரத்தைச் செய்ய முடியும். ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் இருந்ததைப் போல ஒரு பலமான பேரமாக இது இருக்காதுதான். ஆனாலும், பொதுத் தேர்தலில் ராஜபக்‌ஷக்களைத் தோற்கடிப்பது என்றால் தமிழர்களுடைய ஆதரவு கட்டாயமாகத் தேவை. எனவே, இங்கேயும் ஒரு பேரம் இருக்கிறது. ஆனால், அப்படி ஒரு பேரத்தை பகிரங்கமாக வைத்துக் கொண்டால் அது ராஜபக்‌ஷக்களைப் பலப்படுத்திவிடும் என்று பயந்தால் அதற்கான வாய்ப்புக்களும் இல்லை. இப்படியே சிங்களக் கடும்போக்காளர்கள் பலமடையக் கூடாது என்பதற்காக தோற்கடிக்கப்பட்டிருக்கும் பலவீனமான ஒரு மக்கள் கூட்டம் தனது பேரங்களை இன்னும் எவ்வளவு காலத்திற்கு ஒத்திவைக்கப் போகிறது? பொதுத் தேர்தல் முடிந்தபின் இப்போதிருக்கும் அளவிற்கு பேரம் பேசும் சக்தி இருக்குமா என்பதும் சந்தேகமே. அதாவது, ஜனாதிபதித் தேர்தலின் போது இருந்ததைவிடவும் இப்பொழுது பேரம் பேசும் சக்தி குறைந்துவிட்டது. இப்பொழுது இருப்பதை விடவும் பொதுத் தேர்தலின் பின் பேரம் பேசும் சக்தி மேலும் குறையக் கூடும்.

அரசியலில் நன்றிக்கடன் என்பதெல்லாம் கிடையாது. நிலையான நலன்கள் மட்டுமே உண்டு. எனவே, ஒரு புத்திசாலித்தனமான மக்கள் கூட்டம் தனது பேரம் சக்தி உயர்வாக இருக்கும் போது பேரத்தை வைத்துக் கொள்ள வேண்டுமா? அல்லது தாழ்வாக இருக்கும் போது பேரத்தை வைத்துக் கொள்ள வேண்டுமா?

தினக்குரல் பத்திரிகைக்காக நிலாந்தன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.