படம் | Reuters

இடம்பெயர்ந்து இந்தியாவுக்கு படகு மூலம் தப்பியோடுவதற்காக சென்ற மக்களை ஒரேயடியாக கொன்று அங்கு புதைத்திருக்கலாம் என நாங்கள் எண்ணுகிறோம். ஆனால், எந்த காலப்பகுதியில் நடந்தது என்பதை நாங்கள் அறியவில்லை.

விடுதலைப்புலிகளுடனான மோதலில் வென்று அவர்களை அங்கிருந்து கலைத்துவிட்டு நெடுங்காலமாக இராணுவத்தினரே தள்ளாடி பகுதியில் இருக்கிறார்கள். அங்கிருந்து அவர்கள் போகவில்லை. ஆகவே, அவர்கள் அறியாமல் இந்தச் சம்பவம் நடந்திருக்க முடியாது.

கடந்த மாதம்20041012113102mannar_bishop 20ஆம் திகதி கேதீஸ்வரம் பகுதியில் இருந்து மாந்தைக்கு குழாய்கள் மூலம் நீரை கொண்டுசெல்வதற்காக திருக்கேதீஸ்வரத்தின் பாதையோரம் தோண்டப்பட்டது. இதன்போது மாந்தை சந்திக்கு அருகில், திருக்கேதீஸ்வரம் கோயிலுக்கு செல்லும் வழியில் எலும்புகள் வௌிவரத் தொடங்கி இதுவரை மொத்தம் 40 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இது குறித்து மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் அவர்களிடம் ‘மாற்றம்’ இணையதளம் மேற்கொண்ட நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவருடன் மேற்கொண்ட நேர்காணல் முழுவதுமாக கீழ் தரப்பட்டுள்ளது.

யுத்தத்தால் காணாமல்போனோர் பற்றி ஆராய்ந்தறிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள விசேட ஆணைக்குழு தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

யுத்தத்தால் காணாமல்போனோர் பற்றி ஆராய்ந்தறிய கௌரவ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள விசேட ஆணைக்குழுவை நான் வரவேற்கிறேன். இதுவொரு கண்துடைப்பு நடவடிக்கை என மக்கள் கருதுகின்றனர். எடுத்த எடுப்பில் உடனடியாக அவ்வாறு கூறமுடியாது.

ஆணைக்குழுவைச் சேர்ந்தவர்கள் நம்பகத்தன்மை கொண்டவர்களாகவும் எல்லா இன மக்கள் மத்தியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கவேண்டும். அவ்வாறு இடம்பெற்றிருந்தால் நீதியானதாக இருந்திருக்கும். துன்பங்களை அனுபவிக்கின்ற தமிழர்கள் மத்தியில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் உண்மையைக் கண்டறிவதில் அவர் அதிக அக்கறை கொள்பவராக இருந்திருப்பார். அவ்வாறு நடந்திருந்தால் வரவேற்கக்கூடியதாக இருந்திருக்கும். மக்களின் நிலைப்பாடும் இதுவே.

கிளிநொச்சியில் இராணுவமுகாமொன்றின் அருகே ஆணைக்குழு விசாரணை நடத்தியிருப்பதாக இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதுதொடர்பில் உங்கள் கருத்து என்ன?

ஆணைக்குழு விசாரணையின்போது பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் நடமாட்டம் காணப்பட்டால் நிச்சயமாக மக்கள் அச்சம் கொள்வார்கள். யார் யார் ஆணைக்குழுவிடம் சாட்சி சொல்லவருகிறார்கள் என இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் இன்னும் சிலர் அவதானித்துக்கொண்டிருப்பார்கள். பின்னர் சாட்சியாளர்கள் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். ஆகவே, மக்கள் உண்மையை முழுமையாக சொல்ல முடியாத ஒரு நிலை காணப்படுகிறது. ஆணைக்குழு இராணுவ முகாமுக்கு அருகில் அல்லது வேறு எங்காவது விசாரணை நடத்தினாலும் இதே நிலைமைதான். ஆணைக்குழு விசாரணை அரைகுறை வேலையாகத்தான் இருக்கமுடியும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பூகோள குற்றவியல் விவகாரங்களுக்கான தூதுவர் ஸ்டீபன் ரப்பின் இலங்கை வருகை குறித்து உங்கள் கருத்து என்ன?

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பூகோள குற்றவியல் விவகாரங்களுக்கான தூதுவர் ஸ்டீபன் ரப்பின் இலங்கை வருகை வரவேற்கத்தக்கது. இவர் இதற்கு முன்னமும் இலங்கை வந்திருக்கிறார். இது அவரது இரண்டாவது விஜயமாகும். சென்றமுறை விஜயத்திற்கும் இப்போதைய விஜயத்திற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பல்வேறு விடயங்களை அவர்கள் ஆராய்ந்திருக்கிறார்கள். அதனடிப்படையில் அவற்றை உறுதிப்படுத்தும் முகமாக ஸ்டீபன் ரப் இலங்கை வந்திருக்கலாம் என நான் நினைக்கிறேன்.

உண்மையை அறிந்தால்தான் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். நடந்துமுடிந்த சம்பவங்களுக்கு முகம்கொடுக்க விரும்பாமல் பின்வாங்குவதனால் நல்லிணக்கம் எட்டாக்கனியாகவே இருக்கும். அவர் நமக்கு உதவிசெய்வதற்காகவே வந்திருக்கிறார். மாறாக இலங்கையில் பிழைகளை கண்டுபிடித்து தண்டிப்பதற்காக வந்திருக்கிறார் என நான் எதிர்பார்க்கவில்லை. இந்த நாட்டில் உண்மையானதொரு நல்லிணக்கம் ஏற்பட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையோடு நாட்டின் பிரஜைகள் என்ற பெருமிதத்தோடு நாட்டின் வளர்ச்சிக்காக பணிசெய்ய வழிகாட்டவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடனேயே அவர் இலங்கை வந்திருக்கிறார் என நான் நினைக்கிறேன். அவருடைய நோக்கத்தை அடைவதற்கு உதவிசெய்வது பற்றி நாங்கள் எந்தவிதமான கூச்சத்தையும் அடையவில்லை.

மன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதபுதைக்குழியில் இருந்து மீட்கப்படும் எலும்புக்கூடு யாருடையதாக இருக்கும் என நீங்கள் எண்ணுகிறீர்கள்?

நிச்சயமாக அவை பொதுமக்களினுடையதே. ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் எச்சங்களும் மீட்கப்பட்டிருக்கின்றன.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து மன்னார் வரும் பொதுமக்கள் படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச்செல்வார்கள். அவ்வாறு செல்ல முற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டு அங்கு புதைக்கப்பட்டிருப்பார்கள் என நான் நினைக்கிறேன். தலைமன்னார் போன்ற பல இடங்களில் படகு மூலம் இந்தியாவுக்கு அப்பாவி மக்களை கொண்டு செல்பவர்களை இரவிரவாக வந்து கொண்டுசென்றார்கள். பின்னர் அவர்கள் வீடு திரும்பவே இல்லை. காணாமல்போனவர்களாகத்தான் அவர்கள் கருதப்படுகிறார்கள். அவர்களுடைய சடலங்களாகவும் இருக்கலாம். ஆனால், அவர்கள் அனைவரும் ஆண்கள்.

இடம்பெயர்ந்து தப்பியோடுவதற்காக சென்ற மக்களை ஒரேயடியாக கொன்று அங்கு புதைத்திருக்கலாம் என நாங்கள் எண்ணுகிறோம். ஆனால், எந்த காலப்பகுதியில் நடந்தது என்பதை நாங்கள் அறியவில்லை.

விடுதலைப்புலிகளுடனான மோதலில் வென்று அவர்களை அங்கிருந்து கலைத்துவிட்டு நெடுங்காலமாக இராணுவத்தினரே தள்ளாடி பகுதியில் இருக்கிறார்கள். அங்கிருந்து அவர்கள் போகவில்லை. ஆகவே, அவர்கள் அறியாமல் இந்தச் சம்பவம் நடந்திருக்க முடியாது.

நீங்கள் புலிகளின் பேச்சாளர் எனவும் அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளாரே?

அது அடிப்படையற்ற கருத்து. மடுமாதா திருச்சொருவத்துக்கு இராணுவ பாதுகாப்பு தருவதாகக் கூறியும் அதை மீறி 40 மைல்களுக்கு அப்பால் உள்ள விடுதலைப்புலிகளிடம் கொண்டுசேர்த்து அவர்களிடம் பாதுகாத்துத் தருமாறு நான் கோரியிருந்தேன் என அவர் கூறுகிறார். இது அப்பட்டமான பொய். அடிப்படையற்ற பொய்.

மோதல் நடந்த காலப்பகுதியில் மடுமாதா தேவாலயத்துக்கு பொறுப்பாகவிருந்த திருத்தந்தை என்னை தொடர்புகொண்டு சம்பவத்தை விளக்கினார். விடுதலைப் புலிகளினதும் இராணுவத்தினதும் குண்டுகள் மடு பகுதி மீது வந்து வீழ்ந்ததன. குண்டு வீழ்வது ஓய்ந்ததும் திருச்சொருவத்தை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டுசெல்லுங்கள் என நான் அவர்களிடம் கோரியிருந்தேன். குண்டுத்தாக்குதல்களுக்கு மத்தியில் மெதுமெதுவாக நகர்ந்து ஒருமாதிரியாக தேவன்பிட்டி பகுதியை அவர்கள் பாதுகாப்பாக சென்றடைந்தார்கள். அங்கும் குண்டுகள் விழத்தொடங்க உடனடியாக ஓமந்தைக்கு வருமாறு கூறியிருந்தேன். அங்குவைத்து அதை நான் பெற்றுக்கொண்டு மன்னார் ஆயர் இல்லத்தில் வைத்து, பின்னர் மடு தேவாலயத்திற்கு கொண்டுபோய் சேர்த்தேன். இதுதான் நடந்த சம்பவம். விடுதலைப்புலிகளோ அல்லது இராணுவத்தினரோ இந்த நடவடிக்கையில் கொஞ்சமேனும் தொடர்புபட்டிருக்கவில்லை.

வடக்கு மாகாணசபையின் செயற்பாடு திருப்தி அளிக்கிறதா?

வட மாகாணசபைக்கு அதிகாரங்கள் இல்லை. நிதியும் குறைவாகத்தான் இருக்கிறது. கௌவர ஜனாதிபதியுடன் பேசியிருக்கிறார்கள். பார்ப்போம் என்ன நடக்குமென்று…

ஒவ்வொரு கிராமமாக சென்று நிலைமைகளை ஆராய்ந்து அடிப்படைத் தேவைகளைக் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்யவேண்டுமென்பதே எமது இலக்காக இருந்தது. ஆனால், தற்போது இந்த செயல்முறையை நடைமுறைப்படுத்துவதில் பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். ஆளணி, நிதி பற்றாக்குறை காணப்படுவதாகக் கூறுகிறார்கள். வட மாகாண சபையினர் ஏதோவொரு வகையில் அவற்றை நிவர்த்தி செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.

இலங்கையில் நல்லிணக்கம் எந்தவகையில் சாத்தியமாகும்?

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அடிப்படை முக்கிய காரணிகள் காணப்படுகின்றன. முதலில் உண்மையைக் கண்டறியவேண்டும். உண்மையை ஏற்றுக்கொள்ளவேண்டும். அதற்கான பரிகாரத்தை செய்யவேண்டும். அதற்குப் பின்னர் தாங்கள் குற்றத்தை ஏற்றுக்கொண்டார்கள் என மக்களிடம் தெரிவிக்கவேண்டும். அதன்பிறகுதான் மன்னிப்பு வழங்குவதற்கான ஒரு சூழல் உருவாகும். இதனடிப்படையில்தான் நாட்டில் நல்லிணக்கம் ஏற்படும்.