படம் |VIVALANKA

இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்தே அதை ஒழித்துக் கட்டவேண்டுமென்று குரலெழுப்பிவந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அதைச் சாதிப்பதற்கு தனது நாடாளுமன்ற பலத்தைப் பயன்படுத்தக்கூடிய தகுதியான நிலையில் இன்று இருக்கின்றது. ஆனால், ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு அல்லது குறைந்தபட்சம் ஜனாதிபதிக்கு இருக்கின்ற மட்டுமீறிய அதிகாரங்களைக் குறைப்பதற்கு முன்னெடுக்கப்படுகின்ற அரசியலமைப்புச் சீர்திருத்த முயற்சிகளுக்கு பெரும் முட்டுக்கட்டையாக அக்கட்சி இருக்கும் ஒரு அரசியல் நிலைவரத்தை இன்று காணக்கூடியதாக இருக்கிறது.

ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு என்ற சுலோகத்தை சுதந்திரக் கட்சியே முதன்முதலாக ஒரு தேர்தல் வாக்குறுதியாக நாட்டு மக்கள் முன்வைத்தது. 1994 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் அக்கட்சியின் தலைமையான பொதுஜன ஐக்கிய முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிட்ட திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஒரு வருட காலத்திற்குள் அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதாகக் கூறிக்கொண்டே தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியதிகாரத்துக்கு வந்தார். 11 வருடங்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவியில் இருந்த அவர் மேலும் ஒரு வருடகாலத்துக்கு அதிகாரத்தில் தொடர்ந்து இருக்க முடியவில்லையே என்ற பெருங்கவலையுடன் தான் வீட்டுக்குப் போனார்.

அவருக்குப் பிறகு 2005 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திரக்கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்‌ஷ தனது முதலாவது பதவிக்காலத்தின் முடிவில் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதாக ஜனதா விமுக்தி பெரமுனவுடன் (ஜே.வி.பி.) செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உறுதியளித்திருந்தார் என்பதை இன்று எத்தனை பேர் ஞாபகத்தில் வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை.

ஜனாதிபதி ஆட்சி முறை இலங்கையின் ஆட்சி நிறுவனக் கட்டமைப்பில் எதேச்சாதிகாரப் போக்கை படிப்படியாக அதிகரித்து வந்திருக்கிறது. எனினும், அது ராஜபக்‌ஷவின் ஒரு தசாப்தகால ஆட்சியிலேயே ஒரு உச்சநிலைக்கு வந்தது. ஜனாதிபதிக்கு இருக்கின்ற மட்டுமீறிய அதிகாரங்கள் நாட்டு மக்களின் குடியியல் உரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்கும் பொதுவில் ஜனநாயகத்துக்கும் எத்தகைய பாரதூரமான அச்சுறுத்தலை தோற்றுவிக்கக் கூடியவை என்பதை ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்திலேயே முழுமையாகப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றதற்கு அவருக்கு இருந்த ஆதரவல்ல, மஹிந்த ராஜபக்‌ஷவை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமென்று நாட்டு மக்கள் மத்தியில் பரவலாகக் காணப்பட்ட ஓர்மமே காரணம் என்பதில் சந்தேகமில்லை.

ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதாக ஆரம்பத்தில் கூறிய மைத்திரிபால சிறிசேனவும் பிறகு தனது நிலைப்பாட்டைத் தளர்த்தி ஜனாதிபதிக்கு இருக்கின்ற மட்டு மீறிய அதிகாரங்களில் குறைப்புச் செய்யப் போவதாகவே தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதியளித்தார். தேர்தலில் வெற்றிபெற்ற மறுநாளே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்த மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் ‘நல்லாட்சி’ இல் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்புச் செய்வதற்கான   அரசியலமைப்புச் சீர்திருத்த முயற்சிகள் எந்த இலட்சணத்தில் கையாளப்பட்டு வந்திருக்கின்றன என்பதை முழுநாடுமே அறியும்.

மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான சுதந்திரக் கட்சியே அரசியலமைப்புச் சீர்திருத்த முயற்சிகளுக்கு பெரிய முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது. நாடாளுமன்றத்தில் 126 உறுப்பினர்களைக் கொண்ட சுதந்திரக் கட்சியின் ஒத்துழைப்பு இல்லாமல் எந்தவொரு அரசியலமைப்புத் திருத்தத்தையும் நிறைவேற்றுவதற்கான மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை அரசினால் பெற முடியாது.

ஜனாதிபதியின் அதிகாரங்களில் பெரிதாக எந்தக் குறைப்பையும் செய்யாத அரசியலமைப்புக்கான 19ஆவது திருத்தச் சட்டமூலத்தைக் கூட நிறைவேறாமல் தடுக்கும் கைங்கரியங்களிலேயே சுதந்திரக்கட்சி தொடர்ந்தும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. 19ஆவது திருத்தத்தையும் தேர்தல் முறையில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான திருத்தத்தையும் ஏககாலத்தில் நிறைவேற்றுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி இணங்கினால் மாத்திரமே தங்களது ஒத்துழைப்புக் கிடைக்கும் என்று சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்கள் இடையறாது கூறிக்கொண்டிருக்கிறார்கள். தேர்தல் முறைமாற்றத்துக்கான 20ஆவது அரசியலமைப்புத் திருத்த யோசனைகள் வரைவையும் சுதந்திரக் கட்சி முன்வைத்திருக்கிறது.

தேர்தல் முறை மாற்றம் தொடர்பாக ஆராய்வதற்காக 13 வருடங்களுக்கு முன்னர் அதுவும் ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராகக் கொண்ட அரச காலத்தில் (2001 – 2004) முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. அந்தக் குழு இடைக்கால அறிக்கையையும் வெளியிட்டது. கடந்த 10 வருடங்களாக தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் எந்தவிதமான அக்கறையும் காட்டாமல் இருந்துவந்த சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் இப்போது மாத்திரம் எதற்காக அதில் அதீத ஆர்வம் காட்டுகிறார்கள்? ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்புச் செய்வதற்கான அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவு அளிப்பதற்கு நிபந்தனையாக தேர்தல் முறைமாற்றத்துக்கான திருத்தத்தையும் ஏககாலத்தில் நிறைவேற்ற வேண்டுமென்று ஏன் அடம்பிடிக்கிறார்கள்? இவர்களை கட்டுப்படுத்த முடியாதவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருக்கிறாரா? அல்லது தனது அதிகாரங்கள் குறைப்புச் செய்யப்படுவதை விரும்பாத இவர் தனது கட்சியினரைக் கொண்டு இத்தகைய உடனடி நடைமுறைச் சாத்தியமற்ற கோரிக்கைகளை நிபந்தனையாக முன்வைக்கச் செய்கிறாரா?

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு அல்லது ஜனாதிபதியின் அதிகாரங்களில் குறைப்புச் செய்வதற்கு எதிராக இன்று பெரும் முட்டுக்கட்டையாக இருப்பது அந்த ஆட்சிமுறையை அறிமுகப்படுத்திய ஐக்கிய தேசியக் கட்சியல்ல, மாறாக அதை ஆரம்பம் முதலிருந்து எதிர்த்து வந்த சுதந்திரக் கட்சியேயாகும். உண்மையில் இது ஒரு விசித்திரமான அரசியல் கோலமே!

வீ.தனபாலசிங்கம்