படம் | Groundviews

அப்போதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சி லஞ்சம் மற்றும் ஊழல் என்பவற்றினால் களங்கப்படுத்தப்பட்டிருப்பதாகவும், அது மறுபுறத்தில் ஜனாதிபதி ராஜபக்‌ஷ மீது கறைபடியச் செய்துள்ளது என்றும், பொது எதிர்க்கட்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது குற்றம் சாட்டியிருந்தது. ஜனவரி 8ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள், ஜனாதிபதி ராகஜபக்‌ஷவுக்கு மூன்றாவது பதவிக் காலம் நிராகரிக்கப்பட்டதன் மூலம் இக்குற்றச்சாட்டு போதியளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன என்பதனை காட்டுகின்றன. தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், ஊழலை ஒழித்து நாட்டில் நல்லாட்சியை ஸ்தாபிப்பதாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இலங்கை வாக்காளர்களுக்கு வாக்குறுதியளித்திருந்தார். அண்மைய வருடங்களின் போது ஊழலும், சட்டத்தின் ஆட்சிக்கு மரியாதைக் குறைவும் ஆழமாக வேடூன்றியிருக்கும் சமூகமொன்றில் இதனைச் சொல்வது எளிதாக இருந்து வந்தாலும் கூட, செய்து காட்டுவது என்பது மிகக் கடினமானதாகும்.

டிரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் (TI) நிறுவனம் தயாரிக்கும் ஊழலைக் காட்டும் சுட்டெண்ணைப் பொறுத்தவரையில், அச்சுட்டெண்ணின் மதிப்பெண் எவ்வளவு உயர்வாக இருந்து வருகின்றதோ அந்த அளவுக்கு சம்பந்தப்பட்ட நாட்டில் ஊழல் குறைந்து காணப்படுவதாகக் கருதப்படுகிறது. 2014 ஊழல் சுட்டெண்ணில் இலங்கை உச்ச மட்ட 100 புள்ளிகளில் 38 புள்ளிகளைப் பெற்றிருந்தது. உலகின் மிகக் குறைந்த அளவிலான ஊழலைக் கொண்டிருக்கும் நாடு என்ற முறையில் டென்மார்க் 92 புள்ளிகளைப் பெற்றிருந்ததுடன், சோமாலியா ஆகக் குறைந்த அளவில் 8 புள்ளிகளைப் பெற்றிருந்தது. இந்தியாவையும் உள்ளிட்ட 9 நாடுகள் தலா 38 புள்ளிகளைக் கொண்டிருந்ததுடன், ஏனைய அனைத்து நாடுகளும் சுட்டெண் 85 இல் வரிசைப்படுத்தப்பட்டிருந்தன. ஏனைய தென்னாசிய நாடுகள் அனைத்தும் இலங்கை மற்றும் இந்தியா என்பவற்றிலும் பார்க்க குறைந்த மட்டங்களில் இருந்து வந்தன. டிரான்ஸ்பேரன்சி நிறுவனத்தின் வரிசைப்படுத்தலின் பிரகாரம், ஆய்வுக்குட்படுத்தப்பட்ட நாடுகளில் சுமார் அரைவாசி நாடுகள் இலங்கை அல்லது இந்தியா ஆகிய நாடுகளிலும் பார்க்க ஊழல் மிக்கவை எனக் கருதப்பட்டதுடன், மிகுதி அரைவாசி நாடுகள் குறைந்த மட்டத்தில் ஊழல் நிலவி வரும் நாடுகள் எனக் கருதப்பட்டன.

டிரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் நிறுவனம் ஊழல் தொடர்பான அதன் வருடாந்த ஆய்வில் 2002ஆம் ஆண்டில் இலங்கையையும் சேர்த்துக் கொண்டது. அந்த வருடத்தின்போது 102 நாடுகளில் இலங்கை 52ஆவது ஸ்தானத்தில் வைக்கப்பட்டிருந்தது. 2007ஆம் ஆண்டில் எமது நாடு 179 நாடுகளில் 94ஆவது இடத்தில் இருந்து வந்ததுடன், 2010 இல் 178 நாடுகளில் 91 இல் இருந்து வந்தது. 2013ஆம் ஆண்டில் 177 நாடுகளில் ஊழல் சுட்டெண்களில் இலங்கை 91 என்ற புள்ளியைப் பெற்றிருந்தது. டிரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் நிறுவனத்தின் அளவீட்டு முறை, சந்திரிகா குமாரதுங்க மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் ஆட்சிப் பொறுப்பில் இருந்து வந்த 2002 – 2005 காலப் பிரிவுடன் ஒப்பிட்டு நோக்கும் பொழுது ராஜபக்‌ஷ ஆட்சிக் காலத்தின் போது (2006 – 2014) ஊழல் மிக மோசமாக நிலவி வந்ததனை எடுத்துக் காட்டுகின்றது. எவ்வாறிருப்பினும், ஜனவரி 8ஆம் திகதிக்குப் பின்னர் ராஜபக்‌ஷ ஆட்சிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்களில் ஒரு சில குற்றச்சாட்டுகள் மட்டுமாவது உண்மை என நிரூபிக்கப்பட்டால், 2009ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட டிரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் நிறுவனத்தின் மதிப்பீடு உண்மையான நிலைமையை கணிசமான அளவில் குறைத்து மதிப்பிட்ட ஒரு நிலைமை என கருதப்பட வேண்டியிருக்கும். ராஜபக்‌ஷ பதவியேற்பதற்கு முன்னரே நாட்டில் ஆழமாக வேரூன்றியிருந்த ஊழலைக் களைந்தெறிவதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு பாரிய சவாலை எதிர்நோக்கியுள்ளார்.

தகவல்களை பெற்றுக் கொள்ளும் சுதந்திரம்

புதிய அரசின் 100 நாள் நிகழ்ச்சித்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் ஊழலுக்கு எதிராகப் போராடுவதற்கான மிக முக்கியமான கருவிகளில் ஒன்று, பெப்ரவரி 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தகவல் அறியும் சட்ட மூலம் அறிமுகம் செய்து வைக்கப்படும் என்ற வாக்குறுதியாகும்.

தகவல் அறியும் சட்ட மூலம் அரச துறைக்கு மட்டுமன்றி நாட்டின் தனியார் துறைக்கும், அரசு சாரா அமைப்புக்கள் (NGO) துறைக்கும் பொருந்தும் என நாங்கள் கருதுகின்றோம். கம்பனித் துறையில் நல்லாட்சியும் NGO துறையின் நல்லாட்சியும் அரச துறையின் நல்லாட்சியைப் போலவே முக்கியமானவையாக இருந்து வருகின்றன.

உத்தேச தகவல் அறியும் சட்ட மூலம், பொதுவாக ஒரு தனிநபர் அல்லது நிறுவனம் ஓர் அரச முகவரகத்திடமிருந்து – அல்லது சட்டம் அனுமதிக்குமிடத்து, ஒரு தனியார் துறை நிறுவனத்திடமிருந்து கூட – தகவல்களை கோரிப் பெறுவதற்கு இச்சட்டத்தைப் பயன்படுத்த முடியும். அவ்விதம் பெற்றுக் கொள்ளப்படும் தகவல்களை பயன்படுத்தும் விதம் அத்தகவலை பெறுவதற்கு வேண்டுகோள் விடுத்த தனிநபரின் அல்லது நிறுவனத்தின் பொறுப்பாக இருந்து வருகின்றது. அவ்விதம் பெறப்பட்ட தகவல் ஒரு தனிநபருக்கு இழைக்கப்பட்ட அநீதியை அல்லது மனக்குறையை நிவர்த்தி செய்வதற்கானதாக இருந்து வந்தால், அந்த விடயம் அத்துடன் முடிந்து விடும். எவ்வாறிருப்பினும், பொதுமக்களின் நலன்களை கருத்தில் கொண்டு, தவறுகள் மற்றும் முறைகேடுகள் என்பன குறித்த முன்னெச்சரிக்கை சமிக்ஞைகளை விடுப்பதற்கென ஒரு தனி நபர் அல்லது தனி நபர்கள் அல்லது ஒரு நிறுவனம் தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும். இரண்டாவது வகையைச் சேர்ந்த தகவல்களைப் பெறும் நடைமுறை தொடர்பாகவே முன்னெச்சரிக்கை சமிக்ஞைகளை விடுக்கும் நபர்களைப் (தகவல்களைப் பெறுபவர்கள்) பாதுகாக்கும் சட்டமொன்றுக்கான தேவை தோன்றுகின்றது. அத்தகைய ஒரு சட்டம் இல்லாத நிலையில், ஊழலுக்கு எதிராக போராடுவதற்கான தாக்கமான ஒரு கருவி என்ற முறையில் தகவல் அறியும் சட்டம் வீரியமற்றதாக இருந்து வர முடியும்.

முன்னெச்சரிக்கை விடுக்கும் நபர்களுக்கு பாதுகாப்பு வழங்குதல்

முன்னெச்சரிக்கை விடுக்கும் நபர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் சட்டம், தகவல் அறியும் சட்டத்துக்கு பயனுள்ள ஒரு குறைநிரப்பியாக இருந்து வருவது மட்டுமன்றி, அது தகவல் அறியும் சட்டத்தை மேலும் வலுவானதாகவும் ஆக்க முடியும். மேலும், அது ஊழலுக்கு எதிராகப் போராடுவதில் மிகவும் வலுவான ஒரு கருவியாகவும் இருந்து வர முடியும். ஏனெனில், ஊழல் மற்றும் லஞ்சம் தொடர்பான விடயங்கள் சட்டத்தின் ஆட்சி தொடர்பான மீறல்கள், மோசடி, பொதுமக்களின் நலனைப் பாதுகாப்பதற்கான ஒழுங்குவிதிகளை வலுவாக்கிவிடுவதனை வேண்டுமென்றே அலட்சியம் செய்தல் போன்ற விடயங்களை தெரிந்திருக்கும் நபர்கள், அத்தகைய விடயங்களை முன்னெச்சரிக்கை விடுக்கும் நபர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் சட்டத்துக்கு ஊடாக பொதுமக்களின் அல்லது உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்து வர முடியும்.

சிறிசேனவின் நிகழ்ச்சித்திட்டம்

ஜனாதிபதி சிறிசேனவின் 100 நாள் நிகழ்ச்சித்திட்டம், முன்னெச்சரிக்கு விடுக்கும் நபர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் இத்தகைய சட்டமொன்று குறித்து குறிப்பிடவில்லை. எவ்வாறிருப்பினும், அவருடைய தேர்தல் விஞ்ஞாபனம், தகவல் அறியும் சட்ட மூலம் தவிர “பிரமாண்டமான அளவிலான ஊழலை” நிறுத்துவற்கும் (பக். 20), “பொருளாதார, சமூக மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டில் பிரஜைகளின் பங்கேற்பினை ஊக்குவிப்பதன் மூலம் பிரஜைகள் அமைப்புக்கள் எதிர்கொண்டு வரும் இடையூறுகளைக் களைவதற்கும்” (பக். 17) வாக்குறுதிகளை வழங்குகின்றது. “அரசியல் யாப்பில் ஏற்கனவே உள்ளடக்கப்பட்டிருக்கும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் அதேவேளையில், பிரஜைகளின் உரிமைகளை மேலும் வலியுறுத்துவதற்கென நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” (பக். 17) என்றும் அவர் குறிப்பிடுகின்றார். அதற்கும் அப்பால் சென்று, சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனம் ‘வெகுஜன ஊடகங்கள்’ மற்றும் தகவல் அறிவதற்கான உரிமை என்பவற்றின் முழுமையான சுதந்திரத்தை பலப்படுத்தும் அதே வேளையில், அரச சேவை தொடர்பாடல் சேவைகளை ஊக்குவிக்கும் அடிப்படையில் செயல்திறன்மிக்க ஒழுங்குமுறைப்படுத்தும் பொறிமுறையொன்று உருவாக்கப்படும்” (பக். 54) தெரிவிக்கின்றது. எனவே, தேர்தல் விஞ்ஞாபனத்தை முழுமையாக கருத்தில் கொண்டு, அதில் உள்ளடக்கப்பட்டிருக்கும் பெருந்தொகையான வாக்குறுதிகளை நாங்கள் பரிசீலனை செய்து, ஆக்கபூர்வமான விதத்தில் அவற்றுக்கு பொருள் விளக்கமளிக்கும் பொழுது, முன்னெச்சரிக்கை விடுக்கும் நபர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான ஒரு சட்டத்தை எடுத்து வருவதற்கு புதிய அரசு வெளிப்படுத்தப்படாத ஓர் அர்ப்பணிப்புணர்வை இந்த வாக்குறுதிகளில் உள்ளடக்கியிருப்பதனை அவதானிக்க முடிகின்றது. அத்தகைய ஒரு சட்டம் பெருந்தொகையான “சுயாதீன ஆணைக் குழுக்களுக்கு” (பக். 16) நிச்சயமாக ஒரு ஊக்குவிப்பாக இருந்து வரும்.

சர்வதேச அனுபவம்

உலகெங்கிலும் ஆகக் குறைந்தது 50 நாடுகள் – பெரிய நாடுகள் மற்றும் சிறிய நாடுகள், செல்வந்த நாடுகள் மற்றும் வறிய நாடுகள் – தமது சட்டப் புத்தகங்களில் ஏதோ ஒரு வடிவத்திலான முன்னெச்சரிக்கை விடுக்கும் நபர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் சட்டங்களை கொண்டுள்ளன. ஐக்கிய அமெரிக்கா அத்தகைய சட்டங்கள் குறித்த மிக நீண்ட ஒரு வரலாற்றைக் கொண்டிருப்பதுடன், அந்த வரலாறு 1860கள் வரையில் பின்னோக்கிச் செல்கின்றது. அதன் அரசியல் யாப்புக்கு மேற்கொள்ளப்பட்ட முதலாவது திருத்தத்தின் கீழ், முன்னெச்சரிக்கை விடுக்கும் நபர்களின் உரிமைகள் பேச்சுச் சுதந்திரத்தின் ஒரு பாகமாக இருந்து வருகின்றது என ஐக்கிய அமெரிக்கா கருதுகின்றது. ஏனைய பெரும்பாலான நாடுகளில் இச்சட்டங்கள் சார்பு ரீதியில் அண்மைக் காலத்தில் உருவாக்கப்பட்டவையாக இருந்து வருகின்றன. ஐக்கிய இராச்சியம், கனடா, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, கானா, உகண்டா மற்றும் ஜமைக்கா ஆகியவற்றையும் உள்ளடக்கிய பல பொதுநலவாய நாடுகள் முன்னெச்சரிக்கை விடுக்கும் நபர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் சட்டங்களைக் கொண்டுள்ளன. 2011ஆம் ஆண்டின் முன்னெச்சரிக்கை விடுக்கும் நபர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் சட்டத்துக்கு இந்திய ஜனாதிபதி கையொப்பமிட்ட போது, 2014 மே மாதத்தில் இந்தியா இந்த அணியில் இணைந்து கொண்டது. இலங்கை நல்லாட்சி தொடர்பான அதன் செயற்பாடுகளை மனப்பூர்வமாக முன்னெடுப்பதில் தீவிரமாக இருந்து வந்தால் இந்தக் குழுவில் சேர்ந்து கொள்வது அவசியமாகும். உபாய ரீதியான கண்ணோட்டத்தில் நோக்கும் பொழுது, நாட்டின் இன்றைய தருணம் முன்னெச்சரிக்கை விடுக்கும் நபர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் சட்டமொன்றை அறிமுகம் செய்து வைப்பதற்கான மிகச் சிறந்த தருணமாக இருந்து வருகின்றது. ஏனெனில், நாட்டு மக்கள் அனைவருமே இப்பொழுது நல்லாட்சியை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஒரு மனநிலையில் இருந்து வருகின்றார்கள்.

இச்சட்டத்தின் அத்தியாவசிய அம்சங்கள்

தகவல் அறிவதற்கான உரிமை சட்டம் மற்றும் முன்னெச்சரிக்கை விடும் நபர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் சட்டம் என்பவற்றின் சர்வதேச அனுபவம், அத்தகைய சட்டங்கள் வினைத்திறனுள்ளவையாக இருந்து வர வேண்டுமானால், பின்வரும் படிப்பினைகளை நாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதனை எடுத்துக் காட்டுகின்றது:

  • முன்னெச்சரிக்கை விடுக்கும் நபர்களை அனைத்து வடிவங்களிலுமான பழிவாங்கல் செயல்பாடுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு அனைத்துமடங்கிய தெளிவான சட்டங்கள் இயற்றப்படுதல் வேண்டும்.
  • முன்னெச்சரிக்கை விடுக்கும் நபர்கள், தாம் வேலை செய்து வரும் நிறுவனத்தில் நிலவி வரும் ஒரு முறைகேடு குறித்து தமது மேலதிகாரிகளுக்கு அறிக்கையிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்வது பொதுவாக புத்திசாலித்தனமான ஒரு காரியமாக இருந்து வரவில்லை.
  • முன்னெச்சரிக்கை விடுக்கும் நபரின் அடையாளத்தைப் பாதுகாக்கும், சுயாதீன நிறுவன ரீதியான ஒரு பொறிமுறை, தவறுகள் மற்றும் ஊழல் என்பன தொடர்பாக அறிவிப்பதற்கான மிகவும் தாக்கமான ஒரு முறையாக இருந்து வருகின்றது. எவ்வாறிருப்பினும், முன்னெச்சரிக்கை விடுக்கும் நபர், தான் விரும்பும் சந்தர்ப்பத்தில் பகிரங்கமாக அந்த விடயங்களைக் கூறும் உரிமையைக் கொண்டிருத்தல் வேண்டும்.
  • சாத்தியமான அனைத்துப் பழிவாங்கல் செயல்களும் சட்டத்தில் தெளிவான விதத்தில் வரையறை செய்யப்பட வேண்டியிருப்பதுடன், முன்னெச்சரிக்கை விடும் நபர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் அளவுக்கு அவை வலுவானவையாக இருந்து வருதல் வேண்டும்.
  • பழிவாங்கல் செயல்களுக்கான நிவாரணங்கள் மற்றும் அபராதங்கள் என்பன சட்டத்தில் தெளிவாக வரையறுக்கப்படுதல் வேண்டும்.
  • தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் விழிப்புணர்வைத் தூண்டும் நிகழ்ச்சித் திட்டங்கள் ஊடாக ஊழல் மற்றும் முறைகேடுகள் என்பன தொடர்பாக அறிக்கையிடுவதற்கு பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுதல் வேண்டும்.
  • முன்னெச்சரிக்கை விடுப்பது தொடர்பான சட்டம் தொடர்ச்சியான அடிப்படையில் மீளாய்வு உட்படுத்தப்படுவதும், மாறி வரும் நிலைமைகளுக்கேற்ப, தேவைப்படும் சந்தர்ப்பங்களில் அச்சட்டத்தைத் திருத்துவதும் இச்செயன்முறையின் வலுவையும், செயல்திறனையும் விருத்தி செய்கின்றது.

பாதுகாப்பு

தகவல் அறிவதற்கான உரிமை சட்டம் மற்றும் முன்னெச்சரிக்கை விடுக்கும் நபர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் சட்டம் என்பவற்றை நிறைவேற்றியிருக்கும் பல நாடுகளில், முன்னெச்சரிக்கை விடுக்கும் நபர்களை பழிவாங்கல் நடவடிக்கைகளிலிருந்து பாதுகாப்பது என்பது தொடர்ந்தும் கரிசனைக்குரிய ஒரு விடயமாகவே இருந்து வருகின்றது. ஜனாதிபதி சிறிசேன ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டமையை அடுத்து இப்பொழுது அம்பலப்படுத்தப்பட்டு வரும் விடயங்கள், மக்களின் வரிப்பணம் பல கோடிகளில் அபகரிக்கப்பட்டு மிகவும் பாரதூரமான விதத்தில் பொதுத் துறையில் முறைகேடுகள் இடம்பெற்றிருக்க முடியும் என்பதனை எடுத்துக் காட்டுகின்றன. அத்தகைய நிலைமைகளில், முன்னெச்சரிக்கை விடுக்கும் நபர்கள் உண்மைகளை அம்பலப்படுத்தும் போது உயர் மட்ட ஆபத்துக்களை எதிர்கொள்ள முடியும். இந்தியாவில் 2010 ஜனவரி மாத்திற்கும் 2011 அக்டோபர் மாதத்திற்கும் இடையில் மோசடிகளை அல்லது தண்டிக்கத்தக்க இயல்பிலான பொதுத் துறை துர்நடத்தைகள் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்தியமை காரணமாக 12 இற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள் என செய்திகள் தெரிவித்திருந்தன (அக்டோபர் 19, 2012). 2002ஆம் ஆண்டு தொடக்கம் இவ்விதம் முன்னெச்சரிக்கை வழங்கிய நபர்கள் ‘ஆயிரக்கணக்கானோர்’ தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதோடு, 40 இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக டைம்ஸ் ஒப் இந்தியா (செப்டம்பர் 16, 2014) செய்தி வெளியிட்டிருந்தது. எனவே, இச்சட்டம் முன்னெச்சரிக்கை விடுக்கும் நபர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கென விசேட ஏற்பாட்டினைக் கொண்டிருப்பது அவசியமாகும்.

இவ்விதம் முன்னெச்சரிக்கை வழங்கும் நபர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கென பல நாடுகளில் நிறுவனங்களும், நிகழ்ச்சித்திட்டங்களும் இருந்து வருகின்றன. உதாரணமாக, ஐக்கிய அமெரிக்காவில் சமஷ்டி அரச ஊழியர்கள் அமெரிக்க காங்கிரஸ் சபைக்கு (நாடாளுமன்றத்திற்கு) தகவல்களை வழங்கும் பொழுது அவர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு கிடைக்கின்றது. இதற்கான மற்றொரு மாற்று வழி, குற்றமிழைக்கும் நிறுவனத்திற்கும் அல்லது தனி நபர்களுக்கும், முன்னெச்சரிக்கை விடுக்கும் நபர்களுக்கும் இடையில் நடுவராகச் செயற்படுவதற்கென சுயாதீனமான மூன்றாம் தரப்பு நிறுவனமொன்றை கொண்டிருப்பதாகும். முறைப்பாடு மூன்றாம் தரப்பு அமைப்பொன்றிடம் முன்வைக்கப்படுவதுடன், அந்த அமைப்பு முன்னெச்சரிக்கை விடுத்த நபர் குறித்த இரகசியத் தன்மையை முழுமையாக உத்தரவாதப்படுத்துகின்றது. இது மேலும் இந்த நடுவர் நிறுவனத்துக்கு முறைப்பாட்டின் உண்மைத் தன்மையை பரீட்சித்துக் கொள்வதற்கான கால அவகாசத்தையும் வழங்குகின்றது. அது மறுபுறத்தில், குற்றம் செய்யாத அப்பாவி ஆட்கள் சங்கடத்துக்கு உள்ளாக்கப்படுவதனைத் தடுப்பதற்கு உதவு முடியும். கனடா அரச துறை நம்பிக்கை நாணய ஆணையாளரின் கீழ் அத்தகைய உத்தியோகபூர்வ அமைப்பொன்றை கொண்டுள்ளது. முன்னெச்சரிக்கை விடுக்கும் நபர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கென நெதர்லாந்து அலுவலகம் ஒன்றினைக் கொண்டுள்ளது. இந்தியாவில் முன்னெச்சரிக்கை விடுப்பது தொடர்பான சட்டமொன்று கடந்த ஆண்டு மே மாதம் உருவாக்கப்பட்ட போதிலும், முன்னெச்சரிக்கை விடுக்கும் நபர்களைப் பாதுகாக்கும் துணை விதிகள் காலத்திற்குப் பொருத்தமான விதத்தில் வரையப்பட்டிருக்கவில்லை.

முன்னெச்சரிக்கை விடுக்கும் நபர்களினால் முன்வைக்கப்படும் போலி முறைப்பாடுகளினால் பாதிக்கப்படுபவர்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்கும் தேவை ஏற்பட்டால், நட்ட ஈட்டை வழங்குவதற்கும் இச்சட்டம் ஏற்பாடுகளைக் கொண்டிருத்தல் வேண்டும்.

நாடாளுமன்றத்தை மேலும் பலப்படுத்தும் விடயத்தில் ஜனாதிபதி சிறிசேனவின் கொள்கை உறுதியாக இருந்து வருகின்றது. ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உருமய போன்ற கட்சிகளும் அதே விடயத்துக்கென தம்மையும் அர்ப்பணித்துக் கொண்டுள்ளன.

பாதுகாப்புக்கள்

முன்னெச்ச்சரிக்கை விடும் நபர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் சட்டங்கள் “தேசிய பாதுகாப்பு” தொடர்பான தகவல்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான தேவையை கவனத்தில் எடுப்பது அவசியமாகும். தேசிய பாதுகாப்பு தொடர்பான ஒரு சில திட்டவட்டமான துறைகள் நன்கு வரையப்பட்ட ஒரு சட்டத்தின் கீழ் தெளிவான முறையில் வரையறை செய்யப்பட்டு, அவற்றுக்கு இச்சட்டங்களிலிருந்து விதிவிலக்கு வழங்க முடியும். அதே வேளையில், தேசிய பாதுகாப்புடன் எத்தகைய தொடர்பையும் கொண்டிராத அரச நடவடிக்கைகள் பெரும் எண்ணிக்கையில் இருந்து வருகின்றன. அவற்றை முன்னெச்சரிக்கை விடுக்கும் நபர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் சட்டத்தின் கீழ் எடுத்து வர முடியும். எவ்வாறிருப்பினும், இத்தகையதொரு சட்டத்தை உருவாக்கும் பொழுது மிகவும் கவனமான விதத்தில் பரிசீலனை செய்யப்பட வேண்டிய தெளிவற்ற ஒரு சில துறைகளும் இருந்து வருகின்றன. ஐக்கிய அமெரிக்காவிலிருந்து அண்மையில் கிடைத்த ஒரு மிகச் சிறந்த உதாரணம், அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு முகவரகத்துக்குச் (NSA) சொந்தமான தகவல்களை வெளிப்படுத்திய எட்வேட் சினோடன் என்பவர் சம்பந்தப்பட்டதாகும். துன்புறுத்தலிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கென சினோடன் ரஷ்யாவில் தஞ்சம் புகவேண்டி நேரிட்டது. இங்கு தவிர்த்துக் கொள்ளப்பட வேண்டிய விடயம், செயல்படும் ஜனநாயகம் ஒன்றில் பொதுமக்கள் பெற்றுக் கொள்வதற்கு உரித்தினைக் கொண்டிருக்கும் தகவல்களை அவர்கள் பெறுவதனைத் தடுப்பதற்கென அரசு “தேசிய பாதுகாப்பு” என்ற சொற் பிரயோகத்தை ஒரு சாக்காகப் பயன்படுத்துவதாகும்.

முடிவுக் குறிப்புக்கள்

தகவல் அறிவதற்கான உரிமை சட்டம் மற்றும் முன்னெச்சரிக்கை விடுக்கும் நபர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் சட்டம் ஆகிய இரண்டையும் அரசு ஒன்றாக இணைத்து, ஒரு பிரேரணையாக முன்வைக்க முடியும். புதிய நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ மனித உரிமைகள் தொடர்பாக செயற்படடு வந்திருக்கும் பொருத்தமான தகைமை வாய்ந்த, மதிப்புக்குரிய ஒரு சட்டத்தரணியாக இருந்து வருகின்றார். இந்த விடயம் தொடர்பாக அவர் ஒரு தீர்மானத்தை மேற்கொள்ள முடியும்.

இந்த இடைக் காலத்தில் முன்னைய அரசு குறித்தோ அல்லது புதிய அரசு குறித்தோ ஏதேனும் தகவல்களை வெளியிட விரும்பும் நபர்கள் நியுஸிலாந்திலிருந்து செயற்பட்டு வரும் சர்வதேச முன்னெச்சரிக்கை விடுப்பவர்கள் என்ற அமைப்பின் (இன்டர்நெஷனல்) உதவியைப் பெற்றுக் கொள்ள முடியும். அந்த அமைப்பு தன்னிடம் ஊழல் நடைமுறைகள் தொடர்பாக தவல்களை வழங்கும் உலகில் எந்தவொரு நாட்டைச் சேர்ந்த எந்தவொரு நபரினதும் முழுமையான இரகசியத் தன்மையை உறுதிப்படுத்துகின்றது. நீங்கள் அந்த அமைப்பை www.internationalwhistleblowers.com என்ற இணையதளத்துக்கூடாக தொடர்பு கொள்ள முடியும். சிறிசேன – விக்ரமசிங்க நிருவாகம் நீண்ட காலமாக பேசப்பட்டு வந்திருக்கும் இந்தத் தேவையை இழுத்தடிப்பதாக இருந்தால் இதற்கான ஒரு தீர்வாக இத்தகைய முன்னெச்சரிக்கை விடுக்கும் அமைப்புக்களின் உதவியை பெற்றுக் கொள்வது அதற்கான ஒரு தீர்வாக இருந்து வர முடியும்.

A Whistleblower Protection Act needs to Accompany the proposed Freedom of Information Act என்ற தலைப்பில் எஸ்.டப்.ஆர்.டி.ஏ. சமரசிங்க மற்றும் திஸ்ஸ ஜயதிலக ஆகியோரால் எடுதப்பட்டு Groundviews தளத்தில் வௌிவந்த கட்டுரையின் தமிழாக்கம் தரப்பட்டுள்ளது.