இந்தியா, ஊடகம், ஊழல் - முறைகேடுகள், கட்டுரை, கருத்துச் சுதந்திரம், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

தகவல் பெறுவதற்கான உரிமை; ஜனநாயகத்தின் உயிர்நாடி

இந்தியாவில் தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டம் 2005ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அரசியல்வாதிகளின் அராஜகங்களினாலும் உச்சி முதல் அடி வரை ஊழலினாலும் பாதிக்கப்பட்டவை அந்நாட்டினது சமூகங்கள். இச்சட்டம் செயற்படுத்தப்பட்டதன் பின்னர் அங்கு ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்களைப் பற்றி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு செயல்வாதி விளக்கிக் கொண்டிருந்தார். அவர் வீட்டுக்கு அருகாமையில் போட்டிகள் ஏற்பாடு செய்யக்கூடிய ஒரு விளையாட்டுத் திடல் இருந்தது. இவர் வேலை விட்டு வீடு திரும்பும் வேளைகளில் அந்த விளையாட்டுத் திடலில் உள்ள பெரிய விளக்குகள் (floodlights) எல்லாம் போட்டிருக்க ஒரு சிலர் மட்டுமே விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்த்தார். அங்கு பெரிய போட்டி ஏதாவது நடைபெறுவது போன்ற ஒரு அடையாளமும் தெரியவில்லை. எனவே, தனது உள்ளூராட்சி மன்றத்துக்கு அவர் இந்த விளையாட்டுத் திடலில் ஒவ்வொரு மாலை வேளையிலும் ஏன் பெரிய விளக்குகள் போடப்பட்டிருக்கின்றன என வினவி ஒரு கடிதம் போட்டார். கடிதம் போய் ஓரிரண்டு நாட்களில் அவருடைய வீட்டுக்கு அந்தப் பிரதேச ஆளுங்கட்சித் தலைவரும் அவரது மகனும் வந்தார்கள். “என்னப்பா உனக்குப் பிரச்சினை” என்றார் வந்தவர். “எனக்கொன்றும் பிரச்சினை இல்லை. இந்த விளக்கு எங்கள் வரிப்பணத்தில் உபயோகிக்கப்படுகின்றது. எதற்காக ஒவ்வொரு நாளும் உபயோகிக்கின்றார்கள் என்று அறிய விரும்பினேன், அவ்வளவுதான்” என்றார் நம் செயல்வாதி. “ஏதும் சம்திங் வேண்டுமென்றால் ஏற்பாடு செய்யலாம்” என்றார் அரசியல்வாதி தனது பாணியில். “இதுக்கெல்லாம் எதுக்கு சம்திங்… யார் உபயோகிக்கிறாங்க? யார் அந்தத் தீர்மானத்தை அங்கீகரித்தது என்று மட்டும் எனக்குத் தெரிந்தால் போதும்… என்று இவர் பதில் சொல்லவும் வந்தவர்கள் போய்விட்டார்கள். அதற்குப் பின்னர் அந்த விளக்குகள் போட்டிகள் இல்லாத நேரம் போடப்படவேயில்லை. அந்த அரசியல்வாதியின் மகனினதும் அவன் நண்பர்களினதும் பாவனைக்கு விளையாட்டுத் திடல் விடப்பட்டதாக உள்ளூராட்சியிலிருந்து விளக்கம் வந்தது.

தகவலின் சக்தி இங்கு நிரூபணமானதைக் கண்டோம். அந்த செயல்வாதி என்ன நடக்கின்றது என்று மட்டும் கேட்டார். குறிப்பிட்ட அரசியல்வாதிக்கெதிராக நடவடிக்கை ஒன்றும் அவர் எடுக்கத் தேவையிருக்கவில்லை. மக்கள் கேட்கிறார்கள் என்றவுடனேயே ஊழல் நடவடிக்கைகள் நிறுத்தப்படுகின்றன. ஏனெனில், எப்பொழுதும் தவறுகள் அவை வெளிவராதவரைதான் செய்யப்படும். தவிரவும், ஒரு விடயத்தினைத் தெரிந்தால்தானே அது குறித்த தீர்மானங்களை எவரும் மேற்கொள்ள முடியும்? ஒரு நாட்டின் ஜனநாயகம் உண்மையாக சரிவர செயல்பட வேண்டுமென்றால் அங்கு தகவல் பெறுவதற்கான உரிமை இருப்பது மிக அவசியமாகும். இச்சட்டம் அமுலுக்கு வந்த பின்னரும்கூட அதனை முறையாக அரசு செயல்படுத்துகின்றதா என்பதையும் கண்காணிக்கும் தேவை இருக்கின்றது.

நான் ஒரு முறை சென்னையில் இருக்கும்பொழுது இது தொடர்பான ஒரு சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்தது. அக்காலத்தில், தமிழ் நாட்டின் தகவல் பெறுவதற்கான ஆணைக்குழுவின் தலைமை அதிகாரி நியமனம் செய்யப்பட வேண்டியிருந்தது. அதற்கு அப்போதைய திமுக அரசு வழக்கம்போல தனது அடியாள் ஒருவரை நியமிக்க ஆயத்தம் செய்து கொண்டிருந்தது. இதனை மோப்பம் பிடித்த சிவில் சமூகப் பிரதிநிதிகள் உடனேயே தமக்குத் தெரிந்தவர்களுக்கெல்லாம் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க கோரிக்கை விடுத்தனர். தாமும் விண்ணப்பித்தனர். விளைவு, ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் ஆணைக்குழுவுக்கு வந்து குவிந்தவண்ணம் இருந்தன. கடைசியில் ஒன்றும் செய்ய முடியாமல் தமிழ்நாட்டு அரசு இப்பதவிக்குரிய தகைமைகளைத் தெளிவாக அறிவித்து அதன்படி விண்ணப்பங்களை தரப்படுத்த வேண்டியதாயிற்று. தம்முடைய விண்ணப்பத்துக்கு என்ன நடந்தது என நூற்றுக்கணக்கான விண்ணப்பதாரிகளின் கேள்விகளுக்கும் முகம்கொடுக்க வேண்டியதாயிற்று. கடைசியில் அரசியல் நியமனம் தள்ளப்பட்டு தகுந்த ஒருவரைத் தெரிவு செய்தார்கள். இந்த இடத்தில் இந்தியாவின் சமூக செயலாளிகளின் அர்ப்பணிப்பு கண்டு நான் வியந்துதான் போனேன்.

பொது மக்களுக்குத் தமது நடவடிக்கைகளைப் பற்றித் தகவல் தராமலிருப்பதே அரசுகளுக்கு விருப்பமாகும். இதனால்தான் அவை ஸ்தாபிக்கப்படும்பொழுது தேசிய இரகசியங்கள் பாதுகாப்புச் சட்டம் எனப் பலவகையான சட்டங்களைத் தகவல் தராமல் இருப்பதற்காகப் போடுவர். இலங்கையில் இம்மாதிரியான சட்டங்களுடன் கூட அரசு அதிகாரிகளுக்கான ஒழுக்கக் கோவையிலும் சம்பந்தப்பட்ட அமைச்சரின் அனுமதியின்றி ஒரு தகவலும் வெளியிடக்கூடாதெனவும் வரையறுக்கப்பட்டிருக்கின்றது. எங்கள் நாட்டில் ஒரு பணியினை மேற்கொள்ளும் அரச அலுவலரை அப்பணியினைப் பற்றி ஊடகங்களில் பேசுவதற்கு அழைக்க முடியாது. மாவட்ட செயலரின் அலுவலகங்களுக்குப் போய் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான சிறுவர்களின் புள்ளிவிபரங்கள் தரமுடியுமா என்று கேட்டால் அனுமதி எடுத்துக்கொண்டு வா எனப் பணிக்கப்படுகின்றனர். போரினால் விதவைகளானவர்களின் புள்ளிவிபரங்கள்கூட “தேசியப் பாதுகாப்பு” காரணங்களினால் மக்களுக்கு நிராகரிக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு. இச்சட்டம் அமுலுக்கு வந்தால், மக்களுக்குத் தகவலைக் கொடுக்காமலிருக்கவே பழக்கப்பட்ட எமது அரச அதிகாரிகளுக்கு அவர்களின் மனப்பாங்குகளில் மாற்றங்ளை ஏற்படுத்த மட்டுமே பட்டறைகள் நிகழ்த்த வேண்டிய அளவுக்கு இந்த ‘இரகசிய’ கலாசாரம் அவர்களிடம் ஊறிவிட்டது.

முதலில் ஸ்வீடன், நோர்வே போன்ற நாடுகள்தாம் சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் தகவல் அறிவதற்கான உரிமையை ஒரு சட்டமாக அமுலுக்குக் கொண்டு வந்தன. அதனைத் தொடர்ந்து ஏராளமான நாடுகளில் இன்று இது சட்டமாக்கப்பட்டிருக்கின்றது. இப்பொழுது இலங்கையிலும் தற்போதைய அரசினால் இச்சட்டம் அதன் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. கடந்த வாரம், பொதுநிர்வாக சேவைகள் அமைச்சர் கரு ஜயசூரிய தலைமையின் கீழ் இச்சட்ட மசோதா பற்றிய கலந்துரையாடல் சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கும் ஊடக நிறுவனப் பிரதிநிதிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. மண்டபம் கொள்ளாத கூட்டம் நிரம்பி வழிந்தது. முக்கியமான சட்ட வரைபு அல்லவா? நிகழ்ச்சி நிரலில் சட்டத்தைப் பற்றிய அறிமுகமே முதலாவது அங்கமாக இடம்பெற்றது. மக்களின் சார்பில் திட்டங்களை நிறைவேற்றும் மற்றும் நிர்வாகத்தினை நடைமுறைப்படுத்தும் சகல பொது நிறுவனங்களும் தமது நடவடிக்கைகள் பற்றிய தகவலைப் பொது மக்களுக்கு வழங்கக் கடமைப்பட்டிருக்கின்றன என்பதே இதன் சாராம்சமாகும். இச்சட்டம் ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டள்ளது எனக் கருதலாம். என்ன அடிப்படைகளில் ஒரு தகவல் நிராகரிக்கப்படலாம் என்பது முதலாவது பிரிவாகும். மக்களுக்கு தகவலைக் கொடுக்கும் பொருட்டு எவ்வகையாக வசதிகளைப் பொது நிறுவனங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது இரண்டாவது பிரிவாகும். இவ்வழிமுறையினை நெறிப்படுத்தவென நியமிக்கப்படும் விசேட ஆணைக்குழுவின் கடமைகள், பொறுப்புக்கள் பற்றியவை மூன்றாம் பிரிவாகும். அரச நிறுவனங்கள் கேட்டால் மட்டும் தகவல் வழங்குவது என்றில்லாமல், தாமே கிரமமான முறையில் அறிக்கைகளைத் தயாரித்து பொது மக்கள் பார்வைக்கு விட வேண்;டிய நிபந்தனை பற்றியது நான்காவது பிரிவாகும். கடைசிப் பிரிவானது தகவல் கொடுக்காமலிருக்கும் குற்றச் செயல்களுக்கு அரச அலுவலருக்கு தண்டனை விதிப்பது பற்றி விளக்குகின்றது.

கலந்துரையாடலில் பங்குபற்றியவர்கள் இம்மசோதா பற்றிய தமது அபிப்பிராயங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். சட்டத்தரணிகள் சங்கம், தொழில்புரிவோர் சங்கங்களின் நிறுவனம் மற்றும் ஊடகவியலாளர்களின் நிறுவனம் போன்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளும் உள்ளடங்கும் வகையில் தகவல் அறிவதற்கான உரிமையின் ஆணைக்குழுவினை நியமித்தல் இச்சட்டத்தின் குறிப்பிடத்தக்க விசேட அம்சம் என்பதைப் பலரும் ஒத்துக்கொண்டார்கள். அத்துடன், தானே ஒரு தகவலை வெளியிடும் எந்த அதிகாரியும் தண்டிக்கப்பட மாட்டார் என்னும் உறுதிமொழியையும் இது வழங்குகின்றது. ஆயினும், விவாதமானது தகவல் தரப்படமாட்டாத நிபந்தனைகளைக் குறித்தே அதிகமாகச் சுழன்றது. தேசியப் பாதுகாப்புக்கு குந்தகமாக விளையும் எந்தத் தகவலும் தரப்பட மாட்டாது எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. ஒரு குறிப்பிட்ட தகவல் தேசியப் பாதுகாப்புக்கு குந்தகமாக இருக்கலாம் என யார் தீர்மானிப்பது? அத்துடன், அந்நியச் செலாவணி பற்றியும், அரசின் முதலீடுகள் பற்றியும் தகல்கள் வழங்கப்பட மாட்டாது எனக் கூறப்படுகின்றது. அவ்வாறாயின் சென்ற அரசு சர்வதேச வங்கிகளுடனான hedging கொடுப்பனவுகளில் எமது நாட்டின் மில்லியன் கணக்கான டொலர் நிதிகளை வீணடித்தது பற்றி யார் கேள்வி கேட்க முடியும் என வந்திருந்தவர்கள் வாதிட்டனர். இவை பற்றிய தகவல்கள் நிராகரிக்கப்படக் கூடாதென வலியுறுத்தினர். அடுத்து, தகவலைக் கொடுப்பது என்பது அதனைப் பிரசுரிப்பதற்கான அதிகாரம் அல்ல என சட்ட வரைபில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இதனைப் பற்றி ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆணைக்குழுவானது முறைப்பாடுகளை விசாரித்து தீர்க்கக்கூடிய பொறிமுறையைக் கொண்டதினாலே அதுவும் ஒரு தீர்வாகலாம் என்றனர். சகலருடைய கருத்துக்களும் பதிவு செய்யப்பட்டு அவற்றில் உள்ளடக்கக்கூடிய விடயங்களைச் சேர்த்து இன்னொரு வரைவு வெளியிடப்படும் என அமைச்சர் உறுதிமொழி தந்தார்.

இச்சட்டமானது முன்னைய ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவரப்பட இருந்த நிலையில் அந்த ஆட்சி சந்திரிகாவினால் கலைக்கப்பட கிடப்புக்குள் போடப்பட்டது. தற்போதைய அரசின் தயவிலேதான் இது மீண்டும் தூசி தட்டப்பட்டு கொண்டு வரப்பட்டிருக்கின்றது. நாடாளுமன்றம் கலைக்கப்படும் முன்னர் இதனை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்பதில் அமைச்சர் குறியாக இருக்கின்றார். வேறு என்ன நன்மைகள் வராவிட்டாலும்கூட இந்த ஆட்சி வந்ததனால் ஏற்பட்டிருக்கும் இம்மாதிரியான முக்கிய மாற்றங்களுக்கு நாம் நன்றி சொல்லியேயாக வேண்டும். அது சரி, ஒரு முக்கிய சட்ட வரைபைப் பற்றிப் பேசப்பட்ட இந்தக் கூட்டத்தில் ஒரு தமிழரும் கலந்து கொண்டதாகத் தெரியவில்லையே. இந்த நாட்டின் பிரதான அரசியல் நீரோட்டத்திலிருந்து தம்மை எவ்வளவு தூரம் தமிழ் மக்கள் விலக்கிக்கொண்டிருக்கின்றனர் என்பதைப் பார்க்க மிகுந்த கவலையாக இருந்தது. நாம் இந்த நாட்டில் பொதுவாக மக்களைப் பாதிக்கும் விடயங்களில் அக்கறையாக ஈடுபட்டால் மட்டுமே எம்மைப் பிரத்தியேகமாகப் பாதிக்கும் உரிமைப் பிரச்சினைகள் பற்றிக் குரல் கொடுக்கும்பொழுது அதற்கு ஏனையோர் மத்தியில் கூடிய ஏற்புடைமை இருக்கும். எளிமையான அரசியல் யுக்தி. இதைச் செயற்படுத்தத் தவறி விட்டோமே.

தினக்குரல் பத்திரிகைக்காக சாந்தி சச்சிதானந்தம் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.