படம் | Colombotelegraph

இலங்கையின் நன்கு அறியப்பட்ட மனித உரிமைப் பாதுகாவலர்களில் ஒருவரான பட்டாணி ராஸிக் கடத்தப்பட்டு 2015 பெப்ரவரி 11ஆம் திகதி ஐந்து வருடங்கள் நிறைவடைகின்றன. அவருடைய உடல் 2011 ஜூலை 28ஆம் திகதி அன்று தோண்டியெடுக்கப்பட்டது. கடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் சமூக நம்பிக்கை நிதியம் (CTF) (www.ctfsrilanka.org) நிதியம் என்ற அமைப்பின் முகாமைத்துவ அறங்காவளராகவும், மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்தி என்பவற்றுக்கான ஆசிய மன்றத்தின் (FORUM – ASIA) நிறைவேற்றுக் குழு உறுப்பினராகவும் இருந்து வந்தார்.

இந்தக் கொலைச் சம்பவம் குறித்து இதுவரையில் துப்புத் துலக்கப்படவில்லை. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட ஒரு முக்கியமான சந்தேக நபர் விடுவிக்கப்பட்டதுடன், பின்னர் ஒரு சாட்சியமாக மாறினார். இதில் சம்பந்தப்பட்டிருந்ததாகக் கருதப்படும் இன்னொரு நபர், ஒரு சந்தேக நபராக பெயர் குறிக்கப்படவோ அல்லது கைது செய்யப்படவோ இல்லை. சந்தேக நபராக இனங்காணப்பட்ட மூன்றாவது நபர் கைது செய்யப்பட்டாரா, இல்லையா என்பது தெரியாது. இது தொடர்பான முக்கியமான பல சான்றுகள் ஆழமாக பரிசீலனைக்கு உட்படுத்தப்படவில்லை போல் தெரிகிறது. பொலிஸார் புலன் விசாரணையையும், நீதிமன்றத்தில் சாட்சியங்களை நெறிப்படுத்துவதனையும் மிக மோசமான விதத்தில் கையாண்டு வருகின்றனர். உடலை மீண்டும் தோண்டி எடுப்பதில் இடம்பெற்ற தாமதம், மரணத்துக்கான உண்மையான காரணத்தை நிர்ணயித்துக் கொள்வதனை சாத்தியமற்றதாக்கி இருக்கின்றது என பிரேத பரிசோதனை அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

நீதிமன்ற வழக்குகள்

தொடக்கத்தில் ராஸிக் அவர்களின் தலைமறைவு தொடர்பாக புத்தளம் மற்றும் பொலன்னறுவை ஆகிய நீதிமன்றங்களில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. ஒரு சில வழக்குகள் முடிக்கப்பட்டதுடன், ஏனையவை இப்பொழுது தனியொரு வழக்காக ஒன்று சேர்க்கப்பட்டுள்ளன – பொலன்னறுவை மாஜிஸ்ரேட் நீதிமன்ற வழக்கு இல. 92264. வழக்கின் அடுத்த விசாரணைத் திகதி 2015 பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி ஆகும்.

புத்தளம் மாஜிஸ்ரேட் நீதிமன்றத்தின் BR177/10/P இலக்கம் கொண்ட பொலிஸ் வழக்கு, பொலன்னறுவை மாஜிஸ்ரேட் நீதிமன்றத்தின் BR177/10/P வழக்கு மற்றும் பொலன்னறுவை மாஜிஸ்ரேட் நீதிமன்றத்தின் BR177/10/P வழக்கு என்பன மேலே குறிப்பிடப்பட்ட ஒரு வழக்காக ஒன்றுதிரட்டப்பட்டன. ராஸிக் அவர்களின் சசோதரருக்கும் நிஹ்மத் (இக்கடத்தல் மற்றும் கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதாக ராஸிக் அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தோழர்கள் சந்தேகிக்கும்) என்பரின் உறவினர்களுக்கும் இடையில் காணித் தகறாறு இடம்பெற்று வந்துள்ளது. முந்தல் பிரதேசத்தில் ராஸிக் அவர்களின் வீட்டுக்கு அருகில் வசித்து வந்த உறவினருக்குமிடையிலான காணித் தகராறு தொடர்பான வழக்கு (இல. 57913) புத்தளம் நீதி மன்றத்தில் முடிவாக்கப்பட்டுள்ளது.

DNA, பிரேத பரிசோதனை அறிக்கைகள் மற்றும் மரணச் சான்றிதழ்

ஒரு நீதிமன்ற ஆணையை அடுத்து 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராஸிக் அவர்களின் உடலிலிருந்து பெறப்பட்ட நான்கு பற்கள், தசை மாதிரிகள் மற்றும் ஒரு எலும்பு என்பனவும், ராஸிக்கின் மகன் ரிக்‌ஷானிடமிருந்து பெறப்பட்ட இரத்த மாதிரியும் DNA பரிசோதனைக்கென கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினால் (CCD) Jene Tech Computer Lab ஆய்வுகூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. DNA அறிக்கை தாமதமடைந்த பொழுது, ரிக்‌ஷான் 2012 பெப்ரவரி மாதம் 02ஆம் திகதி இது குறித்து Jene Tech நிறுவனத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்பொழுது DNA அறிக்கை இரு வாரங்களில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென அவரிடம் தெரிவிக்கப்பட்டது. எவ்வாறிருப்பினும், நீதிமன்றக் கட்டளையின் 9 மாதங்களின் பின்னர், 2012 மே மாதம் 29ஆம் திகதியன்று DNA பரிசோதனை வெற்றியளிக்கவில்லை என நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்பட்டது. உயர் ஈரப்பதன் அல்லது உயர் வெப்பநிலை போன்ற சூழல் காரணிகளை நீண்ட நேரம் எதிர்கொண்டு வந்தமை மற்றும் உயிரியல் பொருட்களின் குறைபாடு போன்ற காரணங்களினால் எலும்பு, தசைகள் மற்றும் பற்கள் என்பவற்றில் அடங்கியிருந்த DNA கூறுகள் சீரழிவுக்குள்ளாகியிருக்க முடியுமென கூறப்பட்டிருந்தது.

2011 ஜூலை மாதம் பிரேத பரிசோதனை நடத்தப்பட்ட பின்னர், பிரேத பரிசோதனை அறிக்கை 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் திகதி வெளியிடப்பட்டது. உடல் உயர் அளவுக்கு அழுகிய நிலையில் இருந்து வந்த காரணத்தினால் மரணத்துக்கான சரியான காரணத்தை நிர்ணயித்துக் கொள்வது கடினமானது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது போல் தெரிகின்றது. எவ்வாறிருப்பினும், வாயில் துணி அடைக்கப்பட்டமை, மூச்சுத் திணற வைக்கப்பட்டமை, கயிற்றினால் குரல்வளை நெரிக்கப்பட்டமை, கையினால் குரல்வளை நெரிக்கப்பட்டமை என்பன மரணத்துக்கான காரணங்களாக இருந்து வர முடியும் என்றும் கூறப்பட்டிருந்தது.

அக்டோபர் 28ஆம் திகதியே இதற்கான மரணச் சான்றிதழ் வழங்கப்பட்டது. அந்த மரணச் சான்றிதழிலும் மரணத்துக்கான காரணத்தை நிர்ணயித்துக் கூற முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலாவது சந்தேக நபரை விடுவித்தமையும், அவரை ஒரு சாட்சியாக ஆக்கியமையும்:

முதலாவது சந்தேக நபரான சஹாப்தீன் நெஷாத் என்ற நபர் கைது செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டதுடன், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் ஒரு சாட்சியாக பெயர் குறிக்கப்பட்டார். அத்திணைக்களம் 2012 ஏப்ரல் 4ஆம் திகதியிட்ட கடிதம் ஒன்றின் மூலம் முதலாவது சந்தேக நபருக்கு எதிராக தாம் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு இனிமேல் எதிர்பார்க்கவில்லை என்பதனையும், அதன் காரணமாக அவரை விடுவிக்க முடியும் என்பதனையும் பொலன்னறுவை மாஜிஸ்ரேட் நீதவானுக்கு தெரிவிக்குமாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தது. 2012 ஏப்ரல் 24ஆம் திகதியிடப்பட்ட மற்றொரு கடிதத்தின் மூலம் சஹாப்தீன் நௌஷாத் என்ற நபரை விடுவிப்பதற்கு தீர்மானித்திருப்பதாகவும், அவரை வழக்கின் ஒரு சாட்சியாக பெயர் குறித்திருப்பதாகவும் சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அறிவித்திருந்தது.

நௌஷாத் என்பவர் ஒரு சந்தேக நபர் என்ற நிலையிலிருந்து சாட்சியாக மாற்றப்பட்டமை, அமைச்சர் பதியுதீனுடன் அவர் கொண்டிருந்த தொடர்புகள் காரணமாக இடம்பெற்றதா என்பது குறித்த சந்தேகங்கள் நிலவி வருகின்றன. புத்தளம் உயர்நீதி மன்றத்தில் முடிவாக்கப்பட்ட (திருத்தல் மனு, வழக்கு இல. (HCR/08/10) முன்ஜாமீன் மனுவில், தான் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் ஒரு நெருங்கிய கூட்டாளியாக இருந்து வரும் விடயத்தை நௌஷாத் ஏற்றுக் கொண்டிருந்ததுடன், 2010 பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி ராஸிக்கை சந்தித்திருந்தமையையும், திரு. ராஸிக் காணாமல்போன நேரத்தில் அவர் அதே பிரதேசத்தில் (பொலன்னறுவையில்) இருந்தமையையும் ஏற்றுக் கொண்டிருந்தார்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் நௌஷாத் 2011ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் திகதி கைது செய்யப்பட்டதுடன், 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார். கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி 2012ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி பொலன்னறுவை மாஜிஸ்ரேட் நீதவானிடம் சமர்ப்பித்த அறிக்கையின் பிரகாரம் (நீதிமன்ற வழக்கு இல. B/651/2011), ரூ. 20 மில்லியன் கப்பம் கோரியமை, விடுதலைப் புலிகள் இயக்கத்தினரைப் போல ஆள்மாறாட்டம் செய்தமை, பட்டாணி ராஸிக் காணாமல் போனமை, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நிதி சேகரித்தமை, அப்பணத் தொகைகளை கொண்டு ஆயுதங்களைக் கொள்வனவு செய்தமை மற்றும் அரசப் படைகளுக்கு எதிராக யுத்தம் செய்வதற்கு சூழ்ச்சி செய்தமை என்பன நௌஷாதுக்கு எதிரான குற்றச்சாட்டுகளாக இருந்து வந்தன. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான நௌஷாத்தின் தொடர்புகள், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நிதி சேகரித்தமை மற்றும் அரசப் படைகளுக்கு எதிராக யுத்தம் செய்வதற்கு சூழ்ச்சி செய்தமை ஆகிய நௌஷாத் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் போலியாக சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் போல் தோன்றுகின்றன. ஏனெனில், இக்காலப் பிரிவின் போது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட நபர்களுக்கு எதிராக வழமையாக இம்மாதிரியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்த சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள், ராஸிக்கின் தலைமறைவுடன் அவர் கொண்டிருந்த தொடர்பை குறைத்து மதிப்பிடுவதற்கு பங்களிப்புச் செய்திருக்க முடியும்.

கப்பத் தொகைகளைக் கோருவதற்காக அழைப்புக்களை எடுப்பதற்கு பயன்படுத்தப்பட்ட தொலைபேசி நௌஷாத்துக்குச் சொந்தமானது என்ற விடயத்தை வழக்கு விசாரணைகளின் போது அவரது சட்டத்தரணி ஏற்றுக் கொண்டிருந்தார். மேலும், நௌஷாத்துக்குச் சொந்தமான சிம் கார்டிலிருந்து எத்தகைய தொலைபேசி அழைப்புக்களும் எடுக்கப்படவில்லை என்றும் அவருடைய சட்டத்தரணி வாதிட்டார். ஆனால், பொலிஸ் புலனாய்வின் பொழுது கப்பத் தொகைகளைக் கோருவதற்கென பயன்படுத்தப்பட்ட சிம் அட்டைகள் ராஸிக்கிற்குச் சொந்தமான அட்டைகள் என்ற விடயமும், நௌஷாத்துக்குச் சொந்தமான தொலைபேசியைப் பயன்படுத்தி கப்பத் தொகைகளைக் கோருவதற்கான தொலைபேசி அழைப்புக்கள் எடுக்கப்பட்டன என்ற விடயமும் தெரிய வந்தது (புத்தளம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொலிஸ் வழக்கு PR/177/10P – புத்தளம் நிலைய பொறுப்பதிகாரியினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை). ராஸிக் கடத்தப்படுவதற்கு முன்னர் அவருக்கு வந்த பல தொலைபேசி அழைப்புக்கள் நான்கு இலக்கங்களிலிருந்து வந்தன என்பதனையும், அது தொடர்பான சிம் அட்டைகள் CTF அமைப்பின் அறங்காவளர் ஒருவரின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டிருந்தன என்ற விடயத்தையும் ராஸிக்கின் மகன் விசாரணைகளின் போது தெரிவித்தார். CTF இன் முன்முயற்சியொன்றான பிரஜைகள் கமிட்டியின் தலைவராக நௌஷாத் இருந்து வந்தார்.

நௌஷாதுக்கு எதிராக பல்வேறு சாட்சியங்கள் இருந்து வந்த போதிலும், அவர் விடுவிக்கப்பட்டமை குறித்து ராஸிக்கின் மகன் தனது எமாற்றத்தை தெரிவித்திருந்தார். தனது முன்ஜாமீன் விண்ணப்பப்பத்திரத்தில் ராஸிக் கடத்தப்பட்ட தினத்தன்று தான் அவரைச் சந்தித்ததாகவும், அவர் காணாமல் போன அதே பிரதேசத்தில் (பொலன்னறுவையில்) தான் இருந்ததாகவும் நௌஷாத் ஏற்றுக் கொண்டிருந்த விடயத்தையும் இது உள்ளடக்குகின்றது.

ஏனைய சந்தேக நபர்கள்

அச்சந்தர்ப்பத்தில் ஒரே ஒரு நபர் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டவராக பெயர் குறிக்கப்பட்டதுடன், அவருடைய பெயர் முஷ்தீன் என்பதாகும். அவர் ராஸிக்கை கடத்தியது தொடர்பாக ஒப்புதல் வாக்கு மூலம் அளித்திருந்தார். அவரும் 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார். அது ராஸிக்கின் சடலம் தோண்டி எடுக்கப்பட்ட பொழுது அவர் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், ராஸிக்கை கொலை செய்வதற்கான அவருடைய நோக்கம் தெளிவற்றதாக இருந்து வருவது போல் தெரிகின்றது. எனவே, இது தொடர்பாக முஷ்தீன் தனித்துச் செயற்படவில்லை என்றும், ராஸிக்கை தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கும் நபர்களின் ஆதரவு அவருக்குக் கிடைத்து வருகின்றது என்றும் ராஸிக்கின் உறவினர்கள் சந்தேகிக்கின்றனர். கடத்திச் சென்றவர்களின் கோரிக்கைகளுக்கூடாக இந்த விடயத்தை நிரூபிப்பதற்கு துணை சேர்க்க முடியும். ராஸிக் அவர்களின் மகன் பொலிஸாருக்கு வழங்கிய ஒரு வாக்குமூலத்தின் பிரகாரம், கடத்திச் சென்றவர்களின் கோரிக்கைகள் பின்வருவனவாகும்: கடத்திச் சென்றவர்களுக்கான செலவுத் தொகையாக ரூ. 20 மில்லியன் செலுத்தப்படுதல் வேண்டும்; குடும்பத்தினர் CTF சொத்துக்கள் தொடர்பான விபரங்களை வழங்குதல் வேண்டும்; அறங்காவளர்கள் தமது பெயர்களிலிருக்கும் அனைத்துச் சொத்துக்களையும், முன்னைய அறங்காவளர்களில் ஒருவரான திரு. நிஹ்மத் என்பவரினால் அமைக்கப்பட்ட ‘நுஜூம் டிரஸ்ட்’ என்ற பெயருக்கு மாற்றுதல் வேண்டும். இக்கோரிக்கைகள், கடத்தல்காரர் (கள்) ராஸிக்கின் நடவடிக்கைகளை, முஷ்தீன் என்ற நபரிலும் பார்க்க அறிந்திருப்பார்கள் என்பதனை எடுத்துக் காட்டுகின்றன. ராஸிக்கிற்கும் CTF அமைப்பிற்கும் இடையில் நிலவி வந்த தொடர்பு குறித்து முஷ்தீன் அறிந்திருக்கவில்லை.

முதலாவது சந்தேக நபரான நௌஷாத் வழக்கின் ஒரு சாட்சியாக பெயர் குறிக்கப்பட்டிருப்பதும், நிஹ்மத் ஒருபோதும் ஒரு சந்தேக நபராக பெயர் குறிப்பிடப்படாததும் வியப்பூட்டுவதாகும். எனவே, முஷ்தீன் இந்த வழக்கின் பிரதான சந்தேக நபராக ஆக்கப்பட்டிருக்கின்றார். ராஸிக்கைப் பொறுத்தவரையில் முற்றிலும் ஒரு புதிய நபரான முஷ்தீன் வேலை இடத்தில் ராஸிக்கின் எதிரிகளின் அழுத்தம் இல்லாமல், ராஸிக்கை கொலை செய்திருப்பார் என்றும், மேலும் CTF தொடர்பாக தவல்களைச் சேகரிப்பதற்கும், CTF நிதியங்களை மற்றொரு அமைப்பிற்கு மாற்றுவதற்கும் அவர் செயற்பட்டிருப்பார் என்றும் நம்புவது கடினமாகும்.

CTF அமைப்புடன் சம்பந்தப்பட்டிருந்த நௌஷாத் மற்றும் நிஹ்மத் என்பவர்களால் முஷ்தீன் வாடகைக்கு அமர்த்தப்பட்டிருக்க முடியும் என ராஸிக்கின் உறவினர்கள் கருதுகின்றனர். நௌஷாத் மற்றும் நிஹ்மத் ஆகியோர் ராஸிக்குடன் பல்வேறு தகராறுகளையும் கொண்டிருந்தனர். கடத்தல்காரர்களின் கோரிக்கைகளில் ஒன்று CTF நிறுவனத்தின் சொத்துக்கள் தொடர்பான விபரங்களை வழங்க வேண்டும் என்பதும், அறங்காவளார் தமது பெயரில் இருக்கும் சொத்துக்களை ‘நுஜூம் டிரஸ்ட்’ என்ற பெயரில் 2009ஆம் ஆண்டில் (CTF இன் முன்னைய பிரதம அறங்காவளராக) நிஹ்மத் என்பவரால் உருவாக்கப்பட்டிருக்கும் நம்பிக்கை நிதியத்துக்கு மாற்ற வேண்டும் என்பதுமாகும். எவ்வாறிருப்பினும், முந்தளம பொலிஸார் மற்றும் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் ஆகியோர் நிஹ்மத்திடமிருந்து பெறப்பட்ட இரண்டு வாய்மூலமான வாக்குமூலங்கள் தவிர, ராஸிக் காணாமல்போனமை தொடர்பாக நிஹ்மத்தின் தொடர்புகள் குறித்து எவ்வித புலனாய்வுகளும் நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை.​

மேலும், CTF நிதியங்களை நிஹ்மத்தினால் அமைக்கப்பட்டிருந்த ‘நுஜூம் டிரஸ்ட்’ என்ற அமைப்புக்கு மாற்ற வேண்டும் என்ற கடத்தல்காரர்களின் கோரிக்கை தொடர்பாக பொலிஸார் மாஜிஸ்ரேட் நீதவானுக்கு அறிக்கையிட்டிருக்கவில்லை எனத் தெரிகின்றது. பொலிஸாருக்கு வழங்கிய வாய்மூலமான வாக்குமூலங்களில் ராஸிக்கின் குடும்ப உறுப்பினர்கள் இந்த விடயத்தைக் குறிப்பிட்டிருந்த போதிலும், அவர்கள் இதனை அறிக்கையிடவில்லை.

ராஸிக் அவர்களின் காணாமல் போதலுக்கென பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வேனின் சாரதியான முஹம்மத் ஷம்மி என்ற மற்றொரு சந்தேக நபரையும் பொலிஸார் இனங்கண்டிருந்தனர். ராஸிக் காணாமல் போனமை தொடர்பாக பொருத்தமான புலனாய்வுகளை நடாத்துவதற்கு போதியளவிலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவா என்பது தெளிவற்றதாகவே இருந்து வருகின்றது. வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பும் பொழுது அவரை கைது செய்வதற்கு ஒரு கட்டளையை வழங்குமாறு பொலிஸார் நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்த போதிலும், இது தொடர்பாக மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாகத் தெரியவில்லை.

நாம் அறிந்த வரையில், ராஸிக் அவர்களின் கடத்தல் மற்றும் கொலை தொடர்பாக தகவல்களை தெரிந்து வைத்திருந்தாகக் கருதப்படும் பின்வரும் நபர்களிடம் பொலிஸார் விசாரணைகளை நடத்தியிருந்ததாகவோ அல்லது அவர்களை நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தியதாகவோ தெரியவில்லை:

– இர்ஷாத், அமைச்சர் ரிசாத் பதியுத்தீனின் அப்போதைய நாடாளுமன்றச் செயலாளர். இவர் 2010ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ராஸிக் பாதுகாப்பு அமைச்சினால் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக பகிரங்கமாகக் கூறியிருந்தார்.

– ராஸிக் கடத்தப்பட்ட வாகனத்தில் சந்தேக நபரான முஸ்தீன் உடன் பயணித்த நபர்கள்.

– ராஸிக் காணாமல் போன தினத்தன்று அவரை பொலன்னறுவையில் சந்தித்திருந்தமையை ஏற்றுக்கொண்ட சந்தேக நபரான நௌசாத்துடன் பிரயாணம் செய்த ஆட்கள். நௌசாத்தின் கூற்றின் பிரகாரம், அப்பொழுது அமைச்சர் பதியுத்தீன் தலைமையில் இருந்து வந்த மீள்குடியேற்ற அமைச்சுக்குச் சொந்தமான ஒரு வாகனத்தில் அவரும் இன்னும் பலரும் பயணித்துக் கொண்டிருந்தனர்.

பொலிஸ் புலனாய்வுகளிலும், வழக்கை முன்னெடுத்துச் செல்வதிலும் பொலிசாரின் தரப்புப் பலவீனங்கள்

ஒரு சில சந்தர்ப்பங்களில் பொலிஸாரின் பலவீனங்கள் காரணமாக இந்த வழங்கு தாமதமடைந்திருந்ததாகத் தெரிகின்றது. உதாரணமாக, சாட்சியங்கள் பொருத்தமான விதத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை என்றும், குற்றவியல் நடைமுறைக் கோவையின் பிரகாரம் தொகுக்கப்பட்டிருக்கவில்லை என்றும் (வழக்கு இல. B/651/2011 – ஆகஸ்ட் 6, 2012) நீதவான் குறிப்பிட்டிருந்தார். அதன் விளைவாக ராஸிக் அவர்களின் மகன், மனைவி மற்றும் CTF அமைப்பின் ஊழியர்கள் ஆகியோரின் வாக்குமூலங்கள் நீதவானின் அறிவுறுத்தல்களையடுத்து கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பதிவு செய்யப்பட்டன. இதனால், வழக்கு நீடித்துச் செல்லும் ஒரு நிலைமை ஏற்பட்டது.

நீதி எப்பொழுது நிலைநாட்டப்படும்?

மூன்று வருடங்களுக்கு முன்னர் 2011 நவம்பர் மாதத்தில் வெளியிடப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் LLRC அறிக்கை பட்டாணி ராஸிக் அவர்களின் வழக்கு தொடர்பாக கருத்துத் தெரிவிப்பதற்கு பல பந்திகளை ஒதுக்கியிருந்தது. பக்கம் 162 இல் அது முன்வைத்திருக்கும் குறிப்புக்களை இங்கு மீண்டும் குறிப்பிடுவது பயனுள்ளதாக இருக்கும்: (பந்தி 5.31), “குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு ஆணைக்குழு விஜயம் செய்த சந்தர்ப்பங்களில், காணாமல்போன நபர்கள் தொடர்பாக பொதுமக்களினால் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட பல கவலைக்குரிய குற்றச்சாட்டுக்களில் புத்தளத்தைச் சேர்ந்த ராஸிக் பட்டாணி என்பவரின் சம்பவம், அந்த வழக்கு தொடர்பாக ஆணைக்குழுவுக்குக் கிடைத்த ஏமாற்றத்துடன் கூடிய அனுபவத்தை கருத்தில் கொண்டு இங்கு குறிப்பிடப்படுகின்றது.

இந்த விடயத்தை ஆணைக்குழுவும் கூட பிரதேசத்தைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்து வந்திருந்த நிலையிலும், சட்டத்தை அமுல் செய்யும் தரப்பின் சார்பில் காட்டப்பட்ட மிகவும் கண்டிக்கத்தக்க விதத்திலான அலட்சிய உணர்வை அது சுட்டிக் காட்ட விரும்புகின்றது. ஆணைக்குழு இந்த அறிக்கையை எழுதும் வேளையில், ராஸிக் அவர்களின் உடல் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. உரிய நேரத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் ஒருவேளை அவருடைய உயிரைப் பாதுகாத்துக் கொண்டிருக்க முடியும்.”

(பந்தி 5.32, “புத்தளம் பிரதேசத்தில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவி வழங்குவதில் ஈடுபட்டிருந்த அரசு சாரா அமைப்பொன்றின் உத்தியோகத்தரான ராஸிக், சம்பந்தப்பட்ட அரசு சாரா அமைப்பு செய்திருந்த ஒரு சில செலவுகள் தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்த காரணத்தினாலும், அந்த அமைப்பின் பணிப்பாளர்களின் பெயர்களில் கொள்வனவு செய்யப்பட்டிருந்த ஒரு சில சொத்துக்கள் தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்த காரணத்தினாலும் அவர் கடத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட கடத்தல் நபரை கைது செய்வதில் ஒரு தாமதம் ஏற்பட்டிருந்தது ஏன் என பிரதேசத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் வினவப்பட்ட பொழுது, சந்தேக நபர் எங்கிருக்கிறார் என்று பொலிஸாருக்குத் தெரியவில்லை என்றும், அவர் எங்கிருக்கிறார் என்று பொதுமக்கள் அறிந்திருந்தால் அவர்கள் அதனை பொலிஸாருக்குத் தெரிவிக்கலாம் என்றும், அந்த நிலையில், சந்தேக நபரைக் கைதுசெய்ய முடியும் என்றும் பதிலளிக்கப்பட்டது. இது தொடர்பாக சந்தேக நபர் அவருக்கிருந்த ‘அரசியல் தொடர்புகள்’ காரணமாக கைது செய்யப்படுவதிலிந்து தப்பித்துக் கொண்டார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது நிரூபிக்கப்படுமிடத்து, அத்தகையதொரு மனப்பாங்கு, குறிப்பாக பொலிஸார் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் இருக்கும் நம்பிக்கையை முழுமையாக இல்லாமல் செய்து விடும் என்பதனையும், சட்டத்தையும் ஒழுங்கையும் பராமரிக்கும் விடயத்தை மேலும் கடினமானதாக்கி விடும் என்பதனையும் இங்கு குறிப்பிடுதல் வேண்டும். மேலும், பொலிஸாரின் தரப்பில் குறைபாடுகள் இடம்பெறுவதற்கு மோசமான அரசியல் தலையீடும் பங்களிப்புச் செய்துள்ளது என்ற விடயம் குறித்து ஆணைக்குழு அதே விதத்தில் கவலை கொண்டுள்ளது.”

இந்த விடயம் தொடர்பாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் கருத்துக்கள் தொடர்பாக எவ்வித கவனமும் செலுத்தப்பட்டிருக்கவில்லை என்பது கவலையளிக்கத்தக்க ஒரு விடயமாகும். இந்த அறிக்கை வெளியிடப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் கூட, நாங்கள் இன்னமும் நீதிக்கு அருகில் செல்ல முடியாதவர்களாக இருந்து வருகிறோம்.

‘நல்லாட்சியை’ வழங்குவதாக வாக்குறுதியளித்திருக்கும் புதிய அரசின் கீழ் பட்டாணி ராஸிக் அவர்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் நீதி கிடைக்குமா என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ருக்கி பெர்னான்டோ மற்றும் தமித் சந்திமால்

Groundviews தளத்தில் Pattani Razeek: No justice 5 years after abduction and killing என்ற தலைப்பில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.