படம் | lankanewspapers

இலங்கையின் அரசியலமைப்பில் இருக்கக்கூடிய ஜனநாயகத்துக்கு முரணான, இயற்கை உரிமைகளுக்கு மாறான சில சரத்துக்களைப் பற்றி பேசினால் தற்போது ஆட்சியில் இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மாத்திரமல்ல ஐக்கிய தேசிய கட்சியும் அதற்கு பொறுப்பு சொல்ல வேண்டிய நிலை ஏற்படும். இலங்கை விவகாரத்தில் தலையிடும் சர்வதேச நாடுகள் இந்த விடயம் தொடர்பாக பேசாமல் தனியே இறுதிக்கட்ட போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் என்று மட்டும் பேசுகின்றன. தற்போது ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில் இலங்கை தொடர்பான பிரேரணைக்கு வேண்டிய மேலும் ஆதராங்களை அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட சர்வதேச சமூகம் சேகரித்து வருகின்றது. இலங்கையில் இதற்கு ஆதரவும் எதிர்ப்புகளும் இருந்தாலும் சர்வதேச நாடுகளின் இந்த செயற்பாடுகள் எவ்வளவு தூரத்துக்கு இலங்கையில் மாற்றத்தை கொண்டு வரும் என்பது கேள்விதான்.

ஐக்கிய தேசிய கட்சியும் ஆதரவு

பிரேரணையை சமர்ப்பித்து ஜெனீவாவில் தீர்மானம் நிறைவேற்றி சர்வதேச நாடுகளிடம் இருந்து மஹிந்த ராஜபக்ஷ அரசை தனிமைப்படுத்த அமெரிக்கா முற்படுகின்றது. அவ்வாறான நிலை ஏற்பட்டால் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என சர்வதேச நாடுகள் கருதுகின்றன. இலங்கையில் ஆட்சி மாற்றம் என்பது ஐக்கிய தேசிய கட்சி பதவிக்கு வருவதையே குறிக்கும். சிலவேளைகளில் ஜனநாயக மக்கள் முன்னணி போன்ற சிறிய கட்சிகளையும் கூட்டுச் சேர்த்து ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி அமைக்கலாம். விக்கிரமபாகு கருணாரட்ன, சிறிதுங்க ஜயசூரிய போன்ற இடதுசாரிகளும் தற்போது அரசில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் போன்ற கட்சிகளும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து புதிய ஆட்சியை ஒன்றை அமைக்கும் நிலை ஏற்படலாம்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையில் அல்லது ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது மேற்படி குறிப்பிட்ட இந்த சிறிய கட்சிகள் மாறி மாறி இந்த இரு கட்சிகளுடனும் சேர்ந்து அரசில் அங்கம் வகிப்பதுதான் வரலாறு. தற்போதைய அரசில் வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண போன்ற இடதுசாரிகள் அங்கம் வகிப்பது போன்று ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி அமைத்தால் இம்முறை கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன, சிறிதுங்க ஜயசூரிய போன்ற இடதுசாரிகளும் மனோ கணேசனுடன் சேர்ந்து அரசில் அங்கம் வகிக்கும் வாய்பும் உள்ளது.

இரு கட்சிகளின் பதவி

ஆனால், இந்த சிறிய கட்சிகள் நடைமுறையில் இரண்டாம் குடியரசு உள்ள அரசியல் யாப்பில் உள்ள ஜனநாயகத்துக்கு முரணான சட்ட ஏற்பாடுகள் மற்றும் ஒற்றை ஆட்சி தன்மை பற்றி கவலைப்படுவதில்லை. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் அமைச்சு பதவிகள். குறிப்பாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் தங்கள் கட்சிகளுக்குரிய அமைச்சுப் பதவியை தவிர வேறு எதைப்பற்றியும் சிந்திப்பதில்லை. ஆனால், ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி அமைத்தால் மனோ கணேசன், விக்கிரமபாகு கருணாரட்ன, சிறிதுங்க ஜயசூரிய ஆகியோரின் கட்சிகள் மேற்படி இரண்டு கட்சிகளின் செயற்பாடுகளை போலன்றி அரசியலமைப்பில் இருக்கக்கூடிய ஜனநாயகத்துக்கு முரணான சட்ட ஏற்பாடுகள் பற்றி குரல் எழுப்புவார்கள் என்ற ஒரு நம்பிக்கை உண்டு. ஆனால், ஐக்கிய தேசிய கட்சி அரசில் இணையக்கூடிய ஏனைய சிறிய கட்சிகளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து மீண்டும் ஐக்கிய தேசிய கட்சிக்கு மாறிச் சென்று அமைச்சுப் பதவிகளை எடுக்கும் சில தனி நபர்களும் அதற்கு ஆதரவு கொடுப்பார்களா என்பதும் கேள்விதான்.

தவறான கட்சி அரசியல் முறை

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது பதவி வகிக்கும் அரசில் மாறி மாறி அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகள், தனி நபர்கள் தொடர்பிலும் மனச்சாட்சிக்கு மாறான கட்சி அரசியல் செயற்பாடுகள் குறித்தும் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கவனம் செலுத்த வேண்டும். இறுதிக்கட்ட போரில் அழிவுகள் இடம்பெற்றது, மனித உரிமைகளை இந்த அரசு மீறியுள்ளது என்ற குற்றச்சாட்டு தனியே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு மாத்திரம் உரியது அல்ல. 1920ஆம் ஆண்டு இலங்கைத் தேசியம் பிளவுபட்டது முதல் ஆரம்பித்த இனவேறுபாடுதான் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்கால் வரை இடம்பெற்ற அழிவுகளுக்கு காரணம்.

சிறிமா பண்டாரநாயக்க தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி அரசு 1972இல் இலங்கை இறைமை அடைந்தபோது உருவாக்கிய முதலாம் குடியரசு அரசியல் யாப்பில் ஜனநாயக உரிமைகளை மதிக்கக்கூடிய சட்ட ஏற்பாடுகளை செய்யவில்லை. 1947இல் யாப்பை உருவாக்கியபோது சோல்பரி யாப்பில் இருந்த ஏனைய சமூகங்களுக்கான பாதுகாப்புக்காக இருந்த 29ஆம் சரம் நீக்கப்பட்டது. 1978ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசு பதவிக்கு வந்தபோது உருவாக்கிய இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பிலும் சமவாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

இரு கட்சிகளின் அணுகுமுறை

தேசிய கட்சிகள் என கூறப்படுகின்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசிய கட்சி ஆகியவற்றின் சிங்களம் அல்லாத ஏனைய சமூகங்களுடனான அணுகு முறைகள் வேறுபட்டவை அல்ல. தமிழ் முஸ்லிம் கட்சிகளை தங்கள் அரசில் அங்கம் பெறவைத்து அவர்களுக்குத் தேவையான அமைச்சுப் பதவிகள், மற்றும் அரச உயர் பதவிகளை வழங்கிவிட்டு அந்த சமூகங்களின் அடிப்படை உரிமைகளை கூட மறுக்கும் செயற்பாடுகளையே மேற்கொண்டு வருகின்றனர். இதனால்தான் அரசிற்கு வெளியே நிற்கின்ற தமிழத் தேசிய கூட்டமைப்பை இனாவதிகளாக அரசு காட்ட முற்படுகின்றது. ஆகவே, ஜெனீவாவில் இலங்கை தொடர்பான பிரேரணை சமர்ப்பிக்கவுள்ள அமெரிக்கா இலங்கையில் கடந்த 60 ஆண்டுகாலம் ஏற்பட்டிருக்கக்கூடிய இந்த அரசியல் பிரச்சினைகளையும் உள்வாங்க வேண்டும்.

முள்ளிவாய்காலில் மனித உரிமைகள் மீறப்பட்டிருக்கின்றது, போர்க்குற்றங்கள் நடந்துள்ளன என்று கூறுவதுபோல யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட 1983ஆம் ஆண்டில் இருந்து மனித உரிமைகள் மீறப்பட்டும் போர்க்குற்றங்களும் புரியப்பட்டுள்ளன. தனியே மஹிந்த ராஜபக்ஷ அரசுக்கு எதிராக மாத்திரம் ஜெனீவாவில் தீர்மானத்தை நிறைவேற்றி அரசை சங்கடத்துக்கு உட்படுத்தினால் மட்டும் இலங்கையில் அமைதி ஏற்பட்டவிடாது. அல்லது இனப்பிரச்சினைக்கு தீர்வு வந்துவிடாது. போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் விடயத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்கும் பங்கு உண்டு. இந்திய அரசுக்கும் பங்கு உண்டு. ஆகவே, அந்த அடிப்படையில் ஜெனீவா தீர்மானம் அமைதல் வேண்டும். மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்கா தலைமையிலான அரசில் இடம்பெற்றதாகவே சந்தேகிக்கப்படுகின்றது. அவருடைய ஆட்சிக் காலத்தில்தான் யாழ். செம்மணி புதைக்குழி விவகாரமும் நிகழந்தது. இவை சிறிய உதாரணங்கள். ஆனால், இன்னும் பல புதைகுழிகள் வடக்கு கிழக்கில் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

ஐ.நா அறிக்கை

2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்ட போர் தொடர்பாக ஆராய்வது தொடர்பான ஆலோசனையை வழங்குவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழு அறிக்கையில் இனப்பிரச்சினையின் வரலாறு 1948ஆம் ஆண்டில் இருந்து கூறப்பட்டிருந்தது.

(ஆனால் 1987-88ஆம் அண்டுகளில் இந்திய அமைதிப்படையினரால் நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா அறிக்கையில் எதுவும் கூறப்படவில்லை.)

ஆகவே, அந்த நிபுணர்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அமெரிக்கா பிரேரணையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அதனடிப்படையில் ஜெனீவா தீர்மானம் அமைதல் வேண்டும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு அல்லாத ஜெனீவா தீர்மானத்தின் மூலம் அரசு பதவி கவிழ்ந்தால் மனித உரிமை பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்றும் போர்க்குற்ற விசாரணைகள் இடம்பெற்று சம்மந்தப்பட்ட படையினர் தன்டிக்கப்படுவர் எனவும் கருதமுடியாது.

இனஅழிப்பு என தமிழ் தரப்பில் அனேகமானோர் கூறுகின்றனர். ஆனால், வெறுமனே மனித உரிமைப் பிரச்சினையாக மட்டும் பார்க்கப்படுகின்றது. இனப்பிரச்சினை தீர்வுக்கு அப்பால் அல்லது அரசியலமைப்பில் இருக்கக்கூடிய ஜனநாயகத்துக்கு முரணான சில சரத்துக்களை பற்றி கருத்தில் எடுக்காமல் தங்களின் பொருளாதார நலன்களுக்கு ஏற்ற முறையில் இலங்கையில் அமைதி ஏற்பட்டால் போதும் என சர்வதே நாடுகள் செயற்படுமானால் இன்னுமொரு 60 ஆண்டுகளுக்கு சிங்களம் அல்லாத ஏனைய சமூகங்கள் காத்திருக்க வேண்டிய நிலைதான்.

ஞாயிறு தினக்குரல் பத்திரிகைக்காக அ.நிக்ஸன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.

Nix P0001