படம் | Pushpa Kumara / EPA, YLE

கிழக்கு மாகாண சபை விவகாரம், ஆட்சி மாற்றம் தமிழ் மக்களின் வாழ்வில் உண்மையிலேயே ஒரு மாற்றத்தை ஏற்படுத்துமா என்னும் கேள்வியை எழுப்பியிருக்கிறது. இலங்கையின் இன முரண்பாடு என்பது பொதுவாக சிங்கள – தமிழ் முரண்பாடாகவே விவாதிக்கப்பட்டும், பேசப்பட்டும் வருவது அனைவரும் அறிந்த ஒன்றே! ஆனால், கிழக்கு மாகாண சபை விவகாரத்தில் அது வேறுவிதமானதொரு சித்திரத்தை காண்பிக்கிறது. ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் புதிய அரசியல் சூழலில் கிழக்கு மாகாண தமிழ் மக்களின் பிரதான எதிரி முஸ்லிம்களா என்னும் கேள்வி எழுந்திருக்கிறது. கிழக்கு மாகாணதிலுள்ள மாவட்டங்களான மட்டக்களப்பு, அம்பாறை பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் தங்களின் பிரதான பிரச்சினை சிங்களவர்களல்ல, மாறாக முஸ்லிம்கள் என்று வாதிடுமளவிற்கு நிலைமைகள் மோசமடைந்துள்ளன. மேற்படி மாவட்டங்களில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் வேரோடியிருந்த மேற்படி முஸ்லிம் வெறுப்பு தற்போது ஒட்டுமொத்த கிழக்கு மாகாண தமிழ் மக்களதும் அபிப்பிராயமாக விரிவுபெற்றிருக்கிறது. இது தொடர்பில் வடக்கிலுள்ளோரின் அபிப்பிராயங்கள் அவசியமற்றவை என்னும் கருத்துக்களும் வலுவடைந்து வருகின்றன.

ராஜபக்‌ஷவின் தோல்வியைத் தொடர்ந்து கிழக்கு மாகாண சபையின் ஆட்சியதிகாரம் கேள்விக்குள்ளாகியது. அதுவரை ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைமையில் நீடித்துவந்த ஆட்சியை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாத நிலைமை தோன்றியது. இந்தப் பின்னணியில் தமிழ் மக்களின் அரசியல் தலைமையான தமிழ் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றிருக்கும் முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து ஆட்சியமைப்பதற்கான ஒரு புறச் சூழல் உருவாகியது. உண்மையில் இப்படியொரு வாய்ப்பு 2012இலும் வெளித்தெரிந்தது. அன்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கான விருப்பத்தை தெரிவித்தார். சம்பந்தன் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்ததை நான் தனிப்பட்ட ரீதியிலும் அறிவேன். முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்கு இணங்கும் பட்சத்தில் கிழக்கு மாகாணத்திற்கான முதலமைச்சர் ஆசனத்தை முஸ்லிம்களுக்கு வழங்குவதற்கும் சம்பந்தன் விரும்பம் தெரிவித்திருந்தார். அந்த நேரத்தில் சம்பந்தனோ அல்லது கூட்டமைப்பின் தலைவர்களோ வெறும் பதவிநிலைகள் குறித்து சிந்தித்திருக்கவில்லை. மாறாக, கிழக்கு மாகாணத்தின் தமிழ் பேசும் மக்கள் என்னும் ஒரு நேர்கோட்டில் தமிழ் – முஸ்லிம் சமூகங்கள் ஒன்றிணைய வேண்டும் என்னும் உயர்ந்த நோக்கத்தையே அவர்கள் வெளிப்படுத்தியிருந்தனர். ஆனால், ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் சம்பந்தன் நீட்டிய நேசக் கரத்தை உதாசீனம் செய்து ராஜபக்‌ஷவுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டது. இத்தனைக்கும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் தனித்து போட்டியிட்டிருந்த முஸ்லிம் காங்கிரஸ், தேர்தல் பிரச்சாரங்களின் போது ராஜபக்‌ஷவின் அரசை மிகவும் மோசமாக விமர்சித்திருந்தது. ஆனால், தேர்தல் முடிவடைந்ததும் எந்தவிதமான சுரணையும் இன்றி ராஜபக்‌ஷவுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டது. இந்த அடிப்படையில் கடந்த இரண்டரை வருடங்களாக கிழக்கு மாகாண சபை சிறிலங்கா சுதத்திரக் கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரது நிர்வாகத்தின் கீழ் இயங்கியிருந்தது. இந்தக் காலத்தில் கிழக்கு தமிழ் மக்களின் நலன் தொடர்பில் எந்தவொரு ஆக்கபூர்வமான திட்டத்திற்கும் கிழக்கு மாகாண சபை நிர்வாகம் உறுதுணையாக இருந்ததில்லை. பதவி நியமனங்களில் முன்னாள் ஆளுனர் பல அனியாயங்களை மேற்கொண்ட போது கூட்டமைப்புடன் இணைந்து கிழக்குவாழ் தமிழ் மக்களுக்கு எதிரான பாரபட்சங்கள் தொடர்பில் குரல் கொடுத்ததில்லை. உண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பழிதீர்க்கும் வகையிலேயே ராஜபக்‌ஷவின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன. அது ஏன்? இந்த இடத்தில் சிலருக்கு மட்டுமே தெரிந்த ஒரு விடயத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது. 2012இல் கிழக்கு மாகாண சபை தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, கிழக்கு மாகாண சபையின் ஆட்சியதிகாரம் தொடர்பில் விவாதங்கள் எழுந்தபோது, ராஜபக்‌ஷவின் முதலாவது அழைப்பு கூட்டமைப்பை நோக்கியதாகவே இருந்தது. அதாவது, “கூட்டமைப்பு இணங்கும் பட்ச்சத்;தில் ஒரு தேசிய அரசை அமைப்பதற்கு நான் தயாராக இருக்கின்றேன். முதலமைச்சர் பதவியையும் கூட்டமைப்பு எடுக்கலாம்”. இதுதான் ராஜக்‌ஷ அனுப்பியிருந்த செய்தி. ராஜபக்‌ஷவிற்கு நெருக்கமான ஒரு ஆங்கில இணையத்தள ஆசிரியரின் ஊடாகவே மேற்படி செய்தி சம்பந்தனுக்கு தெரியப்படுத்தப்பட்டது. இதனை தற்போது கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்ற தண்டாயுதபாணியும் நன்கறிவார். ஆனால், சம்பந்தன் ராஜபக்‌ஷவின் அழைப்பை நிராகரித்துவிட்டு, முஸ்லிம் காங்கிரஸின் வருகைக்காக நம்பிக்கையுடன் காத்திருந்தார். சம்பந்தன் முஸ்லிம் காங்கிரசஸுக்காக காத்திருந்த நாட்களை ஹக்கீமோ ராஜபக்‌ஷவுடன் பேரம் பேசுவதற்கான நாட்களாகப் பயன்படுத்திக் கொண்டார். இதுதான் முஸ்லிம் காங்கிரஸின் நேர்மை.

ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து மீண்டும் ஒரு வாய்ப்பு கதைவை தட்டியது. தமிழ் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து ஆட்சியமைப்பதற்கான ஒரு சாதகமான புறச் சூழல் உருவாகியது. ஆனால், இப்போதும் அதே கதை, அதே அனுபவம். ஆனால், சற்றும் மனம்தளராத விக்கிரமாதித்யன் வேதாளத்திற்கு கதை சொல்ல முற்பட்டது போன்று, சம்பந்தன் முஸ்லிம் காங்கிரஸுடன் பேசிப்பார்த்தார். நியாயங்களை எடுத்துக் கூறினார். ஆனால், முஸ்லிம் காங்கிரஸோ முருங்கை மரத்திலிருந்து இறங்குவதாய் இல்லை. இதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாண சபை விவகாரம் இழுபறி நிலையில் தொடர்கிறது. கிழக்கு தமிழ் மக்களின் கோரிக்கையின் பின்னாலுள்ள நியாயத்தையும் இந்த இடத்தில் பதிவு செய்கிறேன். கடந்த இரண்டரை வருடம் சிறிலங்கா சுதத்திரக் கட்சியை சேர்ந்த ஒரு முஸ்லிமான நஜீத் என்பவர் முதலமைச்சராக இருந்தார். தற்போது புதியதொரு அரசியல் சூழல் ஏற்பட்டிருக்கின்ற பின்புலத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்பதே கூட்டமைப்பின் கோரிக்கையாக இருந்தது. இதனடிப்படையில் கூட்டமைப்பு – முஸ்லிம் காங்கிரஸ் இணைவின் மூலமான ஆட்சியின் பதவி நிலைகள் பின்வருமாறு அமைந்திருக்கும். கூட்டமைப்பின் சார்பிலான ஒருவர் முதலமைச்சராக இருப்பார். மேலும், ஒரு அமைச்சர் மற்றும் சபைத் தலைவர் ஆகிய பொறுப்புக்கள் கூட்டமைப்பின் வசமிருக்கும். இரண்டு அமைச்சர்கள் முஸ்லிம் காங்கிரஸிடம் இருக்கும். ஒரு அமைச்சர் சிங்களவராக இருப்பார். இந்த ஆலோசனை தண்டாயுபாணி தலைமையிலான கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டது. இதடிப்படையில் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் தலைவர்களுக்கும், ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்களுக்கும் இடையில் மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தன. ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சர் பொறுப்பை கூட்டமைப்பின் சார்பிலான தமிழர் ஒருவருக்கு விட்டுக்கொடுக்க மறுத்ததைத் தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் பயனற்றுப் போயின.

உண்மையில் கிழக்கு தமிழ் மக்களின் கோரிக்கை மிகவும் நியாயமான ஒன்று. 2008இல் இடம்பெற்ற கிழக்கு மாகாண சபை தேர்தலில் கூட்டமைப்பு போட்டியிட்டிருக்கவில்லை. 2012இல் கூட்டமைப்பு விடுத்த நல்லெண்ண அழைப்பை முஸ்லிம் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில், கூட்டமைப்பின் சார்பிலான ஒரு தமிழர் கிழக்கு மாகாண சபையில் முதல்வராக வருவதற்கான ஒரு வாய்ப்பை தருமாறு தற்போது கூட்டமைப்பு கோருவதில் என்ன தவறிருக்கமுடியும்? கிடைக்கும் இந்த சந்தர்ப்பமும் கூட இரண்டரை வருடங்களுக்கு மட்டுமே உரியது. அடுத்த தேர்தலில் எத்தகை நிலைமைகள் ஏற்படும் என்பதையும் எவரும் அறியார். ஒருவேளை இந்த ஒரு சந்தர்ப்பம்தான் கூட்டமைப்பிற்கு கிடைக்கும் ஒரேயொரு சந்தர்ப்பமாகவும் அமையலாம். எனவே, இரண்டரை வருடங்களுக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு சேவை செய்வதற்கான ஒரு சந்தர்ப்பத்தை கூட்டமைப்பு கோரி நிற்கிறது. கூட்டமைப்பு மத்தியில் எந்தவொரு அதிகாரநிலைப் பதிவிகளையும் கொண்டிருக்கவில்லை. தவிர, கொழும்பு அழைத்தபோதும் கூட்டமைப்பு அதனை ஏற்க மறுத்துவிட்டது. இந்த நிலையில்தான் கிழக்கு மாகாண சபையில் ஒரு ஆட்சியமைப்பதற்கான ஆதரவை கூட்டமைப்பு முஸ்லிம்களிடம் கோரியது. ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு தமிழ் மக்களின் மிக நியாயமான கோரிக்கையை புறம்தள்ளியதுடன், கூட்டமைப்பு எக்காரணம் கொண்டும் ஆட்சியமைத்துவிடக் கூடாதென்னும் நோக்கில் திரைமறைவு வேலைகளிலும் ஈடுபட்டுவருகிறது. ஏற்கனவே, இருந்த ஆட்சியை அப்படியே தொடர்ந்தும் நீடிக்கும் நோக்கில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ராஜபக்‌ஷவின் தோல்வியைத் தொடர்ந்து எதிர்க்கட்சி நிலையில் இயங்கும் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவருகிறது. முஸ்லிம் காங்கிரஸின் இப்படியான தமிழர் விரோதப் போக்கு தொடர்பில் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் இயங்கும் சிவில் சமூக தரப்பினரோ அல்லது உலமாக்களோ இதுவரை வாய்திறக்கவில்லை. அவர்களது மௌனம் கிழக்கு தமிழர் விரோதத்திற்கான சம்மதமாகும்.

இந்த நிலையில், கூட்டமைப்பின் உயர்பீடம் மாற்று நடவடிக்கைகளில் அவசரமாக ஈடுபட வேண்டுமென்னும் கோரிக்கைள் கிழக்கில் வலுவடைந்தது. இதனைத் தொடர்ந்து சம்பந்தன் தலைமையிலான குழுவினர் மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் பேச்சு வார்த்தைகளை நடத்தியிருந்தனர். எனினும், இந்தக் கட்டுரை எழுதப்படும் நாள் வரையில் கிழக்கு தமிழ் மக்களுக்கு சாதகமாக எந்தவொரு முடிவும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. இது கிழக்கு மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும், வெறுப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக கிழக்கின் சிவில் சமூக பிரதிநிதிகள் மாற்று நடவடிக்கை ஒன்றை ஆலோசிக்குமாறு கூட்டமைப்பை வலியுறுத்தி வருகின்றனர். இதிலுள்ள துரதிஸ்டவசமான நிலைமை கிழக்கு மாகாண விவகாரம் தமிழ் தேசியவாதிகள் என்போராலும் தமிழ் – முஸ்லிம் உறவு குறித்து வாய்கிழிய விவாதித்து வந்தோராலும் பெரிதாக கவனிக்கப்படவில்லை என்பதுதான். தங்களை முற்போக்குவாதிகளாக காண்பிக்கும் நோக்கில் வடக்கு கிழக்கில் இயங்கிவரும் புத்திஜீவிகள் எவரும் இது தொடர்பில் வாய்திறக்கவில்லை. புலிகள் வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியமை தொடர்பில் இப்போதும் விவாதித்துக் கொண்டிருக்கும் (தங்களை முற்போக்காளர்களாக காட்ட வேண்டுமென்னும் பிரபலப்பசியால்) புத்திஜீவிகள் என்போர் கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஒரு போதும். வாய்திறந்ததில்லை.

உண்மையில், வடக்கு மாகாண சபையில் கூட்டமைப்பு ஆட்சியமைத்ததைத் தொடர்ந்து, தமிழர் விவகாரம் என்பது வெறும் வடக்கு விவகாரமாக மட்டுமே சுருங்கிப் போய்விட்டது. வடக்கு மாகாண விவகாரத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தில் ஒரு விகிதம் கூட கிழக்கு மாகாண சபை விவகாரங்களுக்கோ, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கோ கொடுக்கப்படுவதில்லை. அடிப்படையில் கிழக்கு மாகாண தமிழ் மக்களின் பிரச்சினை ஒரு பொருட்டாக கூட மதிக்கப்படுவதில்லை. இந்த நிலைமையை தற்போது மிகவும் தெளிவாக வெளித்தெரிகிறது. வடக்கிலுள்ள பெரிய தலைவர்களெல்லாம் ஏன் இந்த விவகாரத்தில் மௌனம் காக்கின்றனர் என்பதும் விளங்கவில்லை.

இதில் இன்னொரு வேடிக்கையான விளக்கம் ஒன்றும் சொல்லப்படுகிறது. இந்த வேடிக்கையான விளக்கத்தை உற்பத்தி செய்பவர்கள் சிங்கள பெருந்தேசியவாதிகளாவர். இதிலுள்ள ஆச்சரியம் இதனை சில தமிழ் அறிவாளிகளும் உச்சரிப்பதுதான். கூட்டமைபிலுள்ள ஒரு சிலரிடமும் கூட இப்படியொரு வாதம் இருப்பது போல் தெரிகிறது. கிழக்கில் ஒரு தமிழர் முதல்வராகிவிட்டால், அது தெற்கிலுள்ள சிங்கள மக்களுக்கு வேறு செய்தியை கொடுக்கும். அடுத்து வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இது பாதிப்பை ஏற்படுத்தும். மஹிந்த மீண்டும் அரசியலில் உயிர்பெற்றுவிடுவார். ஜனாதிபதித் தேர்தல் காலத்திலும் இப்படியொரு வாதமே முன்வைக்கப்பட்டது. இதன் காரணமாகவே தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்கள் தொடர்பில் ஒரு வார்த்தைதானும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. ஆட்சி மாற்றமொன்று வேண்டுமானால் இதில் அமைதி காப்பது அவசியமென்று வாதிடப்பட்டது. ஆனால், இதனை இப்பத்தியாளர் அப்போதும் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. ஆனால், கூட்டமைப்பின் தலைவர்கள் அப்போது ஆட்சி மாற்றத்தை கருத்தில்கொண்டு வீசிய பூமறாங் இப்போது, கிழக்கு மாகாண சபை விவகாரத்தில் கிழக்கு தமிழ் மக்களின் கழுத்தை குறிவைக்கிறது. ஆனால், அப்போது தர்க்கவிளக்கமளித்த வடக்கு அறிவாளிகள் அனைவரும் இப்போது மௌனம் காக்கின்றனர். ஆனால், பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பது கிழக்கு தமிழ் மக்கள் ஆவர். எனவே, ஒட்டுமொத்தமாக நோக்குமிடத்து, கிழக்கு தமிழ் மக்களின் தனித்துவமான எதிர்காலம் கேள்விக்குள்ளாகி வருகிறது. இந்த நிலையில், கிழக்கில் சிங்கள மக்களுடன் இணைந்து அரசியல் உபாயங்களை வகுக்க வேண்டுமென்னும் விழிப்பும் அதிகரித்து வருகிறது. அவ்வாறு கிழக்கு தமிழ் மக்கள் முடிவெடுப்பார்களாயின் அதற்கு தேசிவாத விளக்கமளிக்கும் பொறுப்பை எவரும் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

எனவே, இந்த விடயத்தில் கூட்டமைப்பின் தலைப்பீடம் விரைந்து செயலாற்ற வேண்டிய தேவையுண்டு. ஆனால், கூட்டமைப்பின் பக்கத்திலும் சில பிரச்சினைகள் உண்டு. அண்மையில் கூட்டமொன்றில் பேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், கூட்டமைப்பு முஸ்லிம்களுடன் இணைந்துதான் ஆட்சியமைக்கும் என்று தெரிவித்திருக்கின்றார். ஆனால், முஸ்லிம் காங்கிரஸோ தன்னால் கூட்டமைப்பின் கோரிக்கையுடன் இணங்கிச்செல்ல முடியாதென்று பகிரங்கமாக அறிவித்துவிட்டது. முதலமைச்சர் ஆசனத்தை விடுக்கொடுப்பதை முஸ்லிம் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் தெரிவித்திருக்கிறது. இதன் பின்னர் நாங்கள் முஸ்லிம்களுடன்தான் ஆட்சியமைப்போம் என்று சுமந்திரன் கூறுவதன் பொருள் என்ன? தலைமை என்பது வெறுமனே விளக்கம் சொல்லுவது மட்டுமல்ல, பிரச்சினைக்கான தீர்வையும் முன்வைக்க வேண்டும். தீர்வை நோக்கிய வழிகளை காண்பிக்க வேண்டும். எனவே, கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், கூட்டமைப்பின் தலைவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு விடயத்தை கிழக்கு தமிழ் மக்களுக்கு சாதகமாக கையாளும் வகையில் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். இது தொடர்பில் கொழும்பிற்கு வெறும் விளக்கங்களை அளிப்பதை விடுத்து, உறுதியாக சில விடயங்களை முன்வைக்க வேண்டும். ஆட்சி மாற்றத்தின் பின்னரான நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு கொழும்பின் ஆட்சியாளர்களுக்கே உண்டு, முக்கியமாக ஜனாதிபதி மைத்திரிபாலவிற்குண்டு. அதனை அவர் தட்டிக்கழிக்க முற்பட்டால், கூட்டமைப்பு இதுவரை அவருக்கு கொடுத்துவரும் ஆதரவிலிருந்து வெளியேற வேண்டும். ஒருவேளை கூட்டமைப்பு இதில் தோல்வியடைந்து தொடர்ந்தும் ஒரு முஸ்லிம் முதலமைச்சர் கிழக்கு மாகாண சபையில் நீடிக்கும் நிலைமை உருவாகின், முஸ்லிம்களிடம் தாம் தோற்றுவிட்டதான மனோநிலை கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் நிச்சயம் தீவிரமடையும். அது கூட்டமைப்பின் அரசியலை முற்றிலும் பாதிக்கும். ஒரு வழியும் இல்லாவிட்டால் மைத்திரிபால தனக்குள்ள அதிகாரத்தை கொண்டு கிழக்கு மாகாண சபையை கலைப்பதே இறுதியான தெரிவாக அமையும். அதற்கான அழுத்தத்தை கூட்டமைப்பு வழங்க வேண்டும்.

தினக்குரல் பத்திரிகைக்காக யதீந்திரா எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.