படம் | FCAS

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பொது எதிரணியின் வேட்பாளராக அல்லது ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த முடியாமல் போனது ஏன் என்ற கேள்வியை அரசியல் விஞ்ஞான மாணவன் ஒருவன் கேட்டான். அதற்குப் பதிலளித்த விரிவுரையாளர், ரணில் விக்கிரமசிங்க சிங்கள இனவாதி அல்ல என்று கூறினார். அத்துடன், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசு 2002ஆம் ஆண்டு நோர்வேயின் ஏற்பாட்டுடன் விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்தியது. உடன்படிக்கையும் செய்து கொண்டது. இந்த அரசியல் அணுகுமுறை சிங்கள பௌத்த தேசியவாதிகளுக்கு ஒத்துவரவில்லை. ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலரும் ரணில் விக்கிரமசிங்க புலிகளுடன் பேச்சு நடத்தியது பிடிக்கவில்லை என்றும் அந்த விரிவுரையாளர் சுட்டிக்காட்டினார்.

இரண்டு காரணங்கள்

மாணவன் மீண்டும் விரிவுரையாளரிடம் கேட்டான், அப்படியானால் 2005ஆம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக தமிழ் மக்களை வாக்களிக்க விடாமல் புலிகள் ஏன் தடுத்தனர் என்று. அதற்கு பதிலளித்த விரிவுரையாளர், இரண்டு காரணங்களைக் கூறினார். ஒன்று – ரணில் விக்கிரமசிங்க பேச்சு நடத்தினாலும் தமிழ் மக்களுக்கு பெரிதாக எதையும் வழங்கமாட்டார் எனவும், சிங்கள இனவாதிகளை மீறி அவரது அரசால் எதுவும் செய்ய முடியாது என்று புலிகளுக்கு அனுபவ ரீதியாக தெரியும். இரண்டாவது – ரணில் விக்கிரமசிங்க அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்தைய நாடுகளுடன் நெருக்மான உறவை கொண்டவர், அவர் சர்வதேச நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றது போல செயற்பட்டு தமது போராட்டத்தை அழிப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவார் என்ற உணர்வு புலிகளிடம் இருந்திருக்கலாம் எனவும் கூறினார்.

இந்த காரணங்களின் அடிப்படையில் தமிழ் மக்களை வாக்களிக்க விடமால் புலிகள் தடுத்திருக்கலாம் என்று கூறியதுடன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் தீவிரமான பௌத்த தேசியவாத உணர்வு கொண்ட அரசு ஒன்றுடன் பேச்சு நடத்தி தீர்வு காண்பது இலகுவானது எனவும் புலிகள் நினைத்திருக்கக் கூடும் என்றும் அந்த விரிவுரையாளர் கூறினார். விரிவுரையாளர் மாணவனுக்கு அளித்த விளக்கத்தில் சரி பிழை இருக்கலாம். விரிவுரையாளர் கூறியதுபோன்று பௌத்த தேசியவாத உணர்வு கொண்ட அரசு ஒன்றுடன் பேச்சு நடத்தி தீர்வு காணலாம் என புலிகள் நினைத்திருந்தால் யுத்தம் ஏன் மூண்டது என்ற கேள்வி எழுகின்றது.

ஐ.தே.க. ஒத்துழைக்கவில்லை

மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதும் புலிகளுடன் நோர்வேயின் அனுசரணையுடன் தொடர்ந்து பேச்சு நடத்தினார். ரணில் விக்கிரமசிங்க அரசு நடத்திய பேச்சின் தொடர்ச்சியாக அது இல்லாவிட்டாலும், வடக்கு – கிழக்கு மாகாணத்தில் இராணுவ நிர்வாக முறையை நீக்கி ஜனநாயக வழிக்கு இடமளிப்பது குறித்தும் இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்துவது தொடர்பாகவும் பேச்சுக்கள் நடந்தன. ஆனால், இந்தப் பேச்சுகள் நடைபெற்றபோது எதிரிக்கட்சியாக இருந்த ஐக்கிய தேசிய கட்சி அதற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார்.

ரணில் விக்கிரமசிங்க அரசு பேச்சு நடத்தியபோது மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் எதிர்க்கட்சியாக இருந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கடுமையாக விமர்சித்தது போன்று ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்க்கட்சி தலைவராக இருந்து கொண்டு விமர்சனம் செய்ததுடன் நோர்வேயின் அணுசரனை முயற்சியையும் விமர்சித்திருந்தார். ஆனால், நோர்வேயை அனுசரனையாளராக அழைத்தது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா. ஆகவே, இங்கு கேள்வி என்னவென்றால், பிரதான கட்சிகள் என கூறப்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும்தான் புலிகளுடனான பேச்சுக்கு நோர்வேயை அணுசரனையாளராக அழைத்தமைக்கு பொறுப்புடையவர்கள். ஆனால், இரண்டு கட்சிகளும் மாறி மாறி அரசுகளை அமைத்தபோது நடத்திய பேச்சுகள் மற்றும் வடக்கு – கிழக்கு மாகாணாத்திற்குரிய வேலைத்திட்டங்களில் ஈடுபட்டமை தொடர்பாக எதிர்க்கட்சியாக வந்ததும் பேசுவதில்லை.

தட்டிக்கழித்தனர்

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு இனவாதப் பேச்சுகளை முன்னெடுக்கின்றனர். இனவாதத்தை பேசுகின்றபோதுதான் வாக்குகளை பெறலாம், அரசை கவிழ்க்கலாம் என்று இவர்கள் நம்புகின்றனர். யதார்த்தமும் அவ்வாறு மாறிவிட்டது. பௌத்த தேசியவாதத்தை மூலதனமாகக் கொண்டு 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் பிரச்சராங்களில் இரண்டு தரப்பும் ஈடுபடுகின்றமை அந்த யதார்த்தத்தை மேலும் உறுதிப்படுத்துகின்றது.

ஆகவே, இங்கு அந்த விரிவுரையாளருடைய அவதானிப்பில் உள்ள தவறு என்னவென்றால், ரணில் விக்கிரமசிங்கவை இனவாதி அல்ல என்று கூறியமைதான். ஏனைய அரசியல் கட்சித் தலைவர்கள் நேரடியாக இனவாதத்தை பேசுவது போன்று ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஆகியோர் பேசுவதில்லை. ஆனால், வேறு அரசியல்வாதிகள் மூலம் அல்லது எதிரணியின் இனவாத பேச்சுகள் ஊடாக தங்கள் கருத்தை நியாயப்படுத்தி அல்லது அவ்வாறான எதிர்ப்புகள் இருக்கும் போது எனது அரசினால் எதுவும் செய்ய முடியாது எனக் கூறி தேசிய இனப்பிரச்சினைக்கான சந்தர்ப்பங்களை தட்டிக்கழித்தனர் என்பது வெளிப்படையானது.

பேச்சுகள் மூலம் ஏமாந்தனர்

ஆகவே, பேச்சுகள் மூலம் – தற்காலிக யுத்த நிறுத்தங்கள் மூலம் தமிழர்கள் ஏமாந்தனர் என்பதற்கான பட்டறிவுகளைக் கொண்டுதான் ரணில் விக்கிரமசிங்க மீது அப்போதிருந்த கவர்ச்சிகரமான அரசியல் தன்மைக்கு புலிகள் இடமளிக்கவில்லை என்ற கருத்துக்கு சில விமர்சகர்கள் உடன்பட்டனர். 1958ஆம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரம் முதல் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்கால் வரையான அழிவுகளுக்கும் இனரீதியான வேறுபாடுகளுக்கும் இன்று வரை தீர்வுகாண தென்பகுதியை மையமாகக் கொண்ட சிங்கள அரசியல் கட்சிகள் விரும்பவில்லை என்பதைத்தான் தற்போதைய ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்கள் கோடிட்டுக் காட்டுகின்றன.

சந்திரிக்கா ஜனாதிபதியாக இருந்தபோது சிங்கள வீரவிதானய என்ற இனவாத இயக்கம் ஒன்றை உருவாக்கினார். ரணில் விக்கிரசிங்க பிரதமராக பதவி வகித்தபோது இந்த இனவாத அமைப்புகளின் எதிர்ப்புக்களை காரணம் கூறியிருந்தார். சுனாமி நிவாரணம் வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட பொதுக் கட்டமைப்பை நடைமுறைப்படுத்த முடியாமைக்கு அப்போது ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா இனவாத அமைப்புகளின் எதிர்ப்பைக் காரணம் காட்டினார். இந்த நிலையில், பொது எதிரணி வேட்பாளருக்கு அந்த இனவாத அமைப்புகளின் ஆதரவை ரணிலும் சந்திரிக்காவும் தற்போது பெற்றுள்ளனர். ஆகவே, ரணில் விக்கிரமசிங்க தொடர்பாக அந்த மாணவன் எழுப்பிய கேள்விக்கு சரியான பதில் என்ன? இனவாதத்தின் இடமாற்றத்தில் தலைமை யார் என்பதுதான் இங்கு பிரச்சினை?

தினக்குரல் பத்திரிகைக்காக அ.நிக்ஸன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.