தமிழ் மக்கள் கட்சிமாறிச் சென்றவர்களுக்கு ஒருபோதும் வாக்களித்தது கிடையாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி அரசுக்கு ஆதரவு வழங்கிய உறுப்பினர்கள் சிலர் நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபை, உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளனர். ஆகவே, வடக்கு – கிழக்கு தமிழ் மக்களை பொறுத்தவரை சுதந்திரத்திற்கான போராட்டம் என்ற மன வேட்கையுடன் வாழ்கின்றனர் என்ற முடிவுக்கு வரலாம்.

கூட்டமைப்பின் பொறுப்பு

ஆனால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் அந்த மாறாத மன உறுதியை பலவீனமாக பயன்படுத்தி அரசியல் செய்கின்றனர் என்ற குற்றச்சாட்டுக்களும் உண்டு. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சி மீதுதான் இந்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்பதை விட நடைமுறையில் உள்ள அரசியலமைப்பு, தமிழ் மக்களை எந்தெந்த விடயங்களில் புறக்கணிக்கின்றது என்ற விடயங்கள் தமிழ் அரசியல் தலைவர்களினால் சரியான முறையில் சொல்லப்படவில்லை.

அரசியல் யாப்பில் இருக்கக் கூடிய சட்டங்கள் வடக்கு – கிழக்கு மற்றும் மலையகத் தமிழ் மக்கள், முஸ்லிம் மக்களை எந்தளவுக்கு புறந்தள்ளி வைத்துள்ளது என்பதை நீதிமன்ற வழக்குகளில் சட்டத்தரணிகள் பலர் எடுத்துக் காட்டியுள்ளனர். தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் மற்றும் காணி அபகரிப்பு வழக்கு விசாரணைகளில் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்கள் அந்த புறக்கணிப்பை எடுத்துக்காட்டியுள்ளன. வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்குரிய பொலிஸ் அதிகாரங்கள் கூட 18ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் பறிக்கப்பட்டதாக கூட்டமைப்பு உறுப்பினர் சுமந்திரன் நாடாளுமன்ற விவாதம் ஒன்றில் கூறியிருந்தார். ஆகவே, இந்த விடயங்களை தெளிவுபடுத்தும் அரசியல் வேலைத் திட்டங்கள் தமிழ் அரசியல் தலைவர்களினால் இதுவரை முன் வைக்கப்படவில்லை.

ஜனாதிபதித் தேர்தல்

அவ்வாறு சரியான விளக்கங்கள் முன்வைக்கப்பட்டிருந்தால் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமது நிலைப்பாட்டை உடனடியாகவே கூறியிருக்கலாம். பிரித்தானியரை எதிர்ப்பதற்காக 1920ஆம் ஆண்டு சிங்கள, தமிழ் மக்கள் இணைந்து உருவாக்கிய இலங்கைத் தேசியம் பிளவுபட்டது முதல் தற்போதைய இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பு வரை தமிழ் மக்கள் எவ்வாறு அரசியல் ரீதியாக ஒதுக்கப்பட்டனர், தமிழ் அரசியல் தலைவர்களின் யோசனைகள் இன்றி தீர்வுகள் திணிக்கப்பட்டமை தொடர்பான விபரங்கள் சாதாரண தமிழ் மக்களில் எத்தனை பேருக்கு தெரியும் என்பது கேள்விதான்.

ஆனாலும், தமிழ் மக்களில் பெரும்பான்மையானோர் ஒவ்வொரு தேர்தல்களிலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்தனர். கூட்டமைப்பு உருவாக்கப்படுவதற்கு முன்னர் இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஆரம்பகாலங்களில் வாக்களித்தனர். எந்த ஒரு தேர்தலிலும் தமிழ் மக்கள் கொழும்பை மையமாகக் கொண்ட ஐக்கிய தேசிய கட்சிக்கோ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கோ வாக்களித்ததில்லை. ஏன் இடதுசாரிக் கட்சிகளுக்குக் கூட வாக்களிப்பதில்லை. இதன் அர்த்தம் என்ன? தமது அரசியல் அபிலாசைகளுக்குரிய சரியான அதிகாரங்களை தமிழ்த் தலைவர்கள் பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிக்கையில்தான் தமிழ் மக்கள் அவ்வாறு வாக்களித்தனர் என்ற முடிவுக்கு வரலாம்.

ஏனைய கட்சிகள் போல் அல்ல

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தலைவர்கள், உறுப்பினர்கள் கொழும்பை மையமாகக் கொண்ட அரசியல் கட்சிகள் போன்று செயற்படமாட்டார்கள் என்றும் – சுதந்திர வேட்கைத்தான் ஒரே இலக்கு என்றும் – மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். ஆனால், அந்த நம்பிக்கை மேலும் நீண்டகாலத்திற்கு நீடிக்கக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை. அதற்கு நான்கு காரணங்களைக் கூறலாம். ஒன்று – கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வைத்திருந்த அந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாக 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான காலகட்டத்தில் தமிழ்த் தலைவர்கள் செயற்படவில்லை. இரண்டாவது – போரில் எற்பட்ட இழப்புகளுக்கு நிவாரணங்களை எதிர்பார்க்காது தேர்தல்களில் இவர்களுக்கு வாக்களித்தும், உரிமைகளை உறுதிப்படுத்தும் அரசியல் வேலைத் திட்டங்கள் ஒழுங்கான முறையில் முன்னெடுக்கப்படவில்லை என்ற மன குமுறல்கள். மூன்றாவது – தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 2009ஆம் ஆண்டின் பின்னரான காலகட்டத்தில் புலம்பெயர் நாடுகளில் இருந்து கிடைத்த உதவிகளுக்கான கணக்கு விபரங்கள் சரியான முறையில் காண்பிக்கப்படாமையும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு குறைந்த பட்ச உதவிகள் செய்யப்படாமையும். நான்காவது – எதிர்கால அரசியல் வேலைத் திட்டங்கள் இல்லாமை.

இந்த நான்கு காரணங்களும் தமிழ் மக்கள் மத்தியில் வெறுப்பை எற்படுத்தியுள்ளன எனக் கூறலாம். ஆனாலும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சீர்த்திருத்தங்களை செய்து தொடர்ச்சியாக செயற்பட வேண்டும் என்ற உணர்வுகளும், இளைஞர்களுக்கு கூட்டமைப்பில் இடமளிக்கப்பட வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புகளும் உள்ளன. ஆனால், தமிழ் மக்களின் இவ்வாறான உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக் கூடிய தன்மை இலங்கைத் தமிழரசுக் கட்சியிடம் இருக்கின்றதா என்பது கேள்விதான். எனினும், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளான ஈபிஆர்எல்எப், புளொட், ரெலோ போன்ற முன்னாள் இயக்கங்கள் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்களும் உண்டு.

அரசியல் கட்சியாக பதிவு

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்னமும் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படாமைக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சித்தான் காரணம் என்று ஏனைய கட்சிகள் கூறுகின்றன. கட்சியாக பதிவு செய்யப்படுவதன் மூலம் அரசியல் பலத்தை தென்பகுதிக்கு காண்பிக்க முடியும் என்ற ஒரு தகவல் உண்டு. ஆனால், கட்சியாக பதிவு செய்ய மூத்த கட்சி ஒன்று மறுப்புத் தெரிவிக்கின்றது என்ற காரணத்திற்கான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கூட்டப் பொறுப்பில் இருந்து விலகிவிட முடியாது. கட்சியாக பதிவு செய்யப்படாது விட்டாலும் கூட அரசியல் வேலைத் திட்டங்களை வடக்கு கிழக்கில் முன்னெடுக்கலாம்.

மேற்படி கூறப்பட்டது போன்று அரசியல் விழிப்புணர்ச்சிகளை உருவாக்கக் கூடிய வேலைத் திட்டங்களுக்கு கட்சியாக பதிவு செய்யப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை. மக்களை அரசியல் ரீதியாக விழிப்படையச் செய்யும் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டும் என்ற அழுத்தம் இயல்பாகவே இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு ஏற்படும்.

ஆகவே, மக்களுடைய அழுத்தங்களில் இருந்து தமிழரசுக் கட்சி தப்பிவிட முடியாது. தொடர்ச்சியாக தமது கொள்கை மாறாமல் வாக்களித்து வந்த மக்களுக்கு சரியான முறையில் மேலும் அரசியல் விழிப்புணர்ச்சிகளை ஏற்படுத்தும் போது தலைமைகள் எடுக்க வேண்டிய முடிவு இயல்பாகவே வந்துவிடும். மக்கள் அரசியல் மலடுகள் அல்ல என்பதும் உறுதியாகிவிடும்.

தினக்குரல் பத்திரிகைக்காக அ.நிக்ஸன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.