சென்ற வாரம் 12ஆம் திகதி நடிகர் ரஜனிகாந்தின் பிறந்த நாள் அன்று அவருடைய படம் லிங்கா வெளியிடப்பட்டது. அதற்காக விஜய் தொலைக்காட்சியில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி. இத்திரைப்படத்தில் நடித்தவர்கள் தொடக்கம் ஆரம்பம் முதல் ரஜனியுடன் இணைந்தவர்கள், பணி செய்தவர்கள் என ஏராளமானவர்களை அழைத்து பேட்டி கண்டார்கள். ரஜனிகாந்தின் வாழ்க்கை வரலாறு முழுவதும் அங்கு அலசப்பட்டது எனலாம். அவருக்கு சக்தி வாய்ந்த கண்கள், அதைப் பார்த்துத்தான் பாலசந்தர் அவரைத் திரையுலகுக்குக் கொண்டு வந்தார், அவருடைய பணிவு, அவருடைய அது, அவருடைய இது எனப் புகழ்ந்து புகழ்ந்து கடைசியில் அவரைக் கடவுளாகவே சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்! ரஜனியுடன் அவருடைய வருடாந்த ஆன்மீகப் பயணத்தில் செல்பவரையும் பேட்டி கண்டார்கள். அவர் தங்களுடைய இமயமலைப் பயணங்கள் பற்றி விபரித்தார். அங்கு ரஜனிகாந்திற்கு தீட்சை கிடைத்ததைப் பற்றி விபரித்தது இன்னுமொரு புகழாரமாயிற்று. லாஹிரி மஹாசாய என்னும் பெரும் யோகி எடுத்த தீட்சைக்குப் பின்பு அடுத்த தீட்சை ரஜனிக்குத்தான் கொடுக்கப்பட்டதாம். இதைக் கேட்டு நான் மயங்கி விழாத குறையாய் நின்றேன்.

“ஒரு யோகியின் சுயசரிதை” என்கின்ற நூலினை வாசித்தவர்களுக்கு லாஹிரி மஹாசாய யார் என்பது புரியும். அவர், இந்நூலின் ஆசிரியரான யோகானந்தர் குருவின் குருவாவார். ஒரு யோகியின் சுயசரிதையானது, யோகானந்தர் எவ்வாறு தான் ஆன்மீகப் பாதையில் அடியெடுத்து வைத்தார் என்கின்ற அவருடைய வாழ்க்கைப் பயணத்தை விபரிக்கின்றது. மிக எளிமையாக, நேர்மையாக தனது அனுபவங்களை யோகானந்தர் விபரிக்கும் பாங்கே இந்நூலின் சிறப்பம்சமாகும். யோகானந்தரின் தாயார் குரு லாஹிரி மஹாசாயவின் பக்தையாக இருந்தவர். யோகானந்தரின் சிறு பராயத்தில் அவர் கடுமையாக நோயுற்றபோது தாயும் மகனுமாக லாஹிரி மஹாசாயவினைப் பிரார்த்தித்ததன் பயனாகத் தனதுயிர் காப்பாற்றப்பட்டது என்கின்ற சம்பவத்தினுடனேயே எமக்கு இக்குரு அந்நூலில் அவரால் அறிமுகப்படுத்தப்படுகின்றார். மேலும், அக்குருவானவர் ஒரே நேரத்தில் இரு இடங்களில் தோன்றுவதும், சுவரூடாக நடக்க இயலுவதும், எதிர்கால நடப்புக்களை எதிர்வு கூற முடிவதும் என அவரைப் பற்றிய சகல விபரங்களையும் நாம் தெரிந்து கொள்கின்றோம். வாசிக்கும்போது இதெல்லாமே சாதாரணம் என்பதுபோல இருக்கும். அந்த அளவுக்கு நிறைய அலட்டிக் கொள்ளாமல் இயல்பாக எழுதப்பட்டிருக்கும். யோகானந்தர் வாழ்ந்தது 19ஆம் நூற்றாண்டின் கடைசிப் பகுதி தொடங்கி 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையுமாகும். எனவே, அவருடைய குருவுக்கும் முன்னைய காலத்தினர்தான் குரு லாஹிரி மஹாசாய ஆவார். இவருடன் ரஜனியை ஒப்பிட்டே இந்த தீட்சைக் கதையைக் கூறினார் அவர் நண்பர்.

கடவுளே, புகழ்ச்சிக்கு ஒரு அளவே கிடையாதா? கடைசியில் பார்த்தால் தான் போட்ட முதலுக்கு பன்மடங்கு வருமானத்தினை ஈட்டித் தரும் இயந்திரமாக ரஜனி இருப்பதற்காக, அவரின் படிமத்தினை வானளாவிய அளவில் உருவகப்படுத்தி வைத்திருக்கின்றது முதலாளித்துவம் என்பது புரியும். முதலில் மிகைப்படுத்தல், அதற்குப் பின்பு அதுவே உண்மையாக எடுத்துக் கூறப்படுதல் என இந்த இமேஜ் கட்டுகின்ற போக்கு தொடருகின்றது. இந்த இமேஜ் எவ்வளவு பெரியதாக இருக்கின்றதோ அவ்வளவுக்கு அவர் படங்களில் முதலிட்டவர்களுக்கு வருமானம் கூடுகின்றது. அது மட்டுமா? ஒரு ரஜனி படத்தினால் எத்தனை பேர்களுடைய சினிமாத் தொழில் வாழுகின்றது என்பதைக் கணக்கில் காட்டமுடியாது. “நான் ரஜனிக்கு டச்சப் செய்தேன்” என்று கூறியே ஒருவர் பெரிய மேக்கப்மேனாக மாறலாம். அவருடன் நடித்த சக நடிக நடிகையர்கள் அடுத்த படத்திற்கான தமது சம்பளங்களை உடனடியாகவே பன்மடங்காக உயர்த்தலாம். ஆகவே, இந்த இமேஜ் கட்டுதலில் சகலருமே உள்வாங்கப்பட்டு ஒத்துழைக்கின்றார்கள். இவ்வாறு ஊடகங்கள் இமேஜைக் கட்டக் கட்ட விசிறிகளும் முட்டாள்தனமான படிநிலைகளுக்கு தமது நடத்தைகளைக் கொண்டு போகின்றனர். லிங்கா படத்தின் முதல் காட்சி விடியற்காலை 4 மணிக்கு ஆரம்பித்ததாம். இவ்வகையான சுப்பர் ஸ்டார் இரசிகர்களையும் அவர்களின் பின்னணிகளையும் ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் பெரும்பாலும் நகர்ப்புறத்துத் தொழிலாளர்களாகவும், கிராமத்து விவசாயக் கூலிகளாகவும் இருப்பதைக் காணலாம். அவர்களே ஒரு படத்தைப் பத்து பதினைந்து தடவைகள் பார்ப்பவர்களாக இருக்கின்றனர். இந்தப் பத்துத் தரம் படம் பார்ப்பவர்களினால்தான் ஒரு படத்தின் வசூல் கணிக்கப்படுகின்றது. இசையமைப்பாளர் தேவாவினுடைய கானாப் பாட்டுக்களைக் கேட்டால் எப்படி இவ்வர்க்கத்தினரின் வாழ்க்கை சினிமாவைச் சுற்றியே சுழலுகின்றது என்பதை உணரலாம்.

இதிலிருந்து இந்திய முதலாளித்துவத்தின் கபடத்தன்மையை இன்னும் புரிந்து கொள்ளலாம். இந்த வர்க்கத்தினர் ரஜனியை ஆராதிக்கும் அடி முட்டாள்களாக, தம்முடைய ஒடுக்குமுறையினை உணராதவர்களாக தொடர்ந்து வைத்திருப்பதே இத்திட்டத்தின் உள்ளேயான நிகழ்ச்சி நிரலாகும். அதற்கேற்றாற்போல் இத்திரைப்படங்களின் கதைகளைப் பார்த்தால் ஒருவித யதார்த்தமோ அல்லது தத்துவமோ அல்லது நுண்ணியத் திரிபுகளோ இருக்காது. சிவாஜி படத்தில் ரஜனி குங்குமப்பூ சாப்பிட்டு வெள்ளையாக வந்த மாதிரி. அத்துடன், அந்நாட்டின் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினரைப் பாதிக்கின்ற எந்தவொரு விடயமும் கையாளப்படாது. ஏனெனில், பார்வையாளர்களை சிந்திக்க வைக்கக்கூடாது என்பதே இப்படங்களின் பிரதான நோக்கமாகும். பாவம் ரஜனி, அவர் குடு குடு கிழவனாகி செத்து விழும் வரையில் அவரை வைத்து பணம் பண்ணும் இந்தத் தொழிலகம். அந்தப் பணம் முக்காலும் இந்தியத் தொழிலாள வர்க்கத்தினரின் உழைப்பினால் வந்த பணமாக இருக்கும்.

எதிர்பார்த்தது போலவே லிங்காவிற்கு விமர்சனங்கள் காரசாரமாக முன்வைக்கப்பட்டு விட்டன. கதைத் தொடரில் குறைகள், காட்சிப் பிழைகள், யதார்த்தத்திற்குப் புறம்பான சம்பவங்கள், இளம் கதாபாத்திரமாக ரஜனிக்கு நடிக்க இயலாத அளவுக்கு அவரது முதுமையின் முட்டுக்கட்டுக்கள், அவர் போய் சோனாஷி சிங்குடனும், அனுஷ்காவுடனும் காதல் காட்சிகளில் நடிக்கும் அபத்தங்கள் என இவற்றை ஒரு பட்டியலிடலாம். இவ்விமர்சனங்களுக்கெல்லாம் ஒரு ரஜனி இரசிகர் தனது வலைப்பூவில் “எங்களுக்கு என்டர்டெயின்மன்ட்தான் (நல்ல பொழுது போக்கு) வேண்டும். இந்த விமர்சனங்களையெல்லாம் குப்பையில் போடுங்கள். எங்கள் தலைவரைப் பார்ப்பதொன்றே போதும்…” எனப் பதிலடி கொடுத்திருக்கின்றார். நல்ல பொழுது போக்கு அம்சங்கள் உள்ள வர்த்தக ரீதியிலான படம்தான் வேண்டும் என்றால் அதற்கு நல்ல கதையம்சம் உள்ள ஆயிரம் படங்களைக் காட்டலாம். வர்த்தக ரீதியில் நல்ல படங்களைத் தர வேண்டும் என்றுதான் ‘அன்பே சிவம்’ போன்ற படங்கள் கமல்ஹாசனினால் எடுக்கப்பட்டது. அதில் வருகின்ற வீதி நாடகக் காட்சியானது சமூக மாற்றத்திற்காக வீதி நாடகங்களை அரங்கேற்றி அக்காரணத்தினாலேயே கொலை செய்யப்பட்ட புது டில்லியைச் சேர்ந்த ஒரு கலைஞரின் பாதிப்பினால் எடுக்கப்பட்ட காட்சியாகும். நல்ல படங்களில் என்டர்டெயின்மன்ட் கிடையாது என்பதில் உண்மையேயில்லை. மக்களுக்கு எப்பொழுதுமே ஒரு ஹீரோ தேவைப்படுகின்றது என்பதே அதன் உண்மையாகும்.

ஒரே நேரத்தில் பத்துப் பேர்களை அடித்து, ஒரு அழகிய பெண்ணைக் காதலித்து, துப்பாக்கியினால் சுடப்பட்டாலும் பின்பு எப்படியோ தப்பிப் பிழைத்து அநீதியை ஒழித்து நீதியை நிலைநாட்டுவதற்கு யாரோ ஒருவர் மக்களுக்குத் தேவை. அத்தேவையைப் பணமாக்கும் முதலாளித்துவம்.

இதற்கு இன்னுமொரு உதாரணமாக சேகுவாராவைக் காட்டலாம். தன்னுடைய இளவயதிலேயே ஒடுக்கப்படுகின்ற மக்களுக்காக உயிரைக் கொடுத்துப் போராடியவர் அவர். சாதாரண மனிதர்களின் கற்பனையைக் கவர்ந்த பாத்திரமாக அவர் இருக்கின்றார். ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தனது வாழ்க்கையை அர்ப்பணித்த தியாகம், அதற்காக பல நாடுகளின் இராணுவத்தினருடன் போரிடத் துணிந்த வீரம், முக்கியமாக அவருடைய இளமை இவையெல்லாமே அந்த கனவுருப்புனைவினை மேலும் மெருகூட்டுகின்றன. எங்கள் கொழும்பு நகரில் ஓடுகின்ற ஓட்டோக்களில் பெரும்பாலும் அவருடைய படம் ஒட்டியிருக்கும். இது யார் ஏன் அவருடைய படத்தை ஒட்டியிருக்கின்றீர்கள் என்று அந்த ஓட்டோ டிரைவர்களிடம் கேட்டால் ஒழுங்கான ஒரு பதிலும் வராது. அழகாக இருந்ததனால் விரும்பி ஒட்டினேன் என்பார்கள். இதை விட அவருடைய படம் பதித்த டீசேர்ட் தொப்பி என ஏராளம். ஆனால், அவருடைய போஸ்டர் அச்சடிக்கப்பட்ட அளவிற்கு அவர் வாழ்ந்த தத்துவம் மக்களுக்குக் கொடுக்கப்பட்டதா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும். இவ்வளவு படங்கள் இருந்தும், தொப்பி இருந்தும், டீசேர்ட் இருந்தும் என்ன நாம் சேகுவாரா நினைவு தினத்தினை இங்கு கொண்டாடுவதில்லையே. மகாத்மா காந்தி நினைவு தினத்தையல்லவா அனுஷ்டிக்கின்றோம். காந்தியின் தத்துவம் சேகுவேராவினதைப் போன்று ஆளும் வர்க்கத்திற்கு அச்சுறுத்தலான தத்துவமல்ல என்பது தவிர இதற்கு வேறு காரணம் கிடையாது.

இந்த நிலைமையை மாற்றுவது கடினமே. மக்கள் தங்கள் வாழ்க்கையை தாமே மாற்றுவதற்கான செயலாண்மையினைத் தங்கள் கைகளில் எடுக்கும் வரை தொடர்ந்து ரஜனிக்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டேயிருப்பார்கள்.

தினக்குரல் பத்திரிகைக்காக சாந்தி சச்சிதானந்தம் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.