எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினால் 5 கேள்விகள் முன்வைக்கப்பட்டு இணைய கருத்துக் கணிப்பொன்று நடத்தப்பட்டது. இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்படுவதன் நோக்கம் அரசியல் மற்றும் பிரதான பிரச்சினைகள் தொடர்பாக பொது மக்கள் அபிப்பிராயங்களை ஒன்றிணைத்து எதிர்வரும் தேர்தல் தொடர்பில் தற்போது இடம்பெற்றுவரும் கலந்துரையாடல்களுக்கு பங்களிப்பு செய்வதே தவிர, தேர்தல் முடிவுகளை எதிர்வுகூறுவதல்ல.

2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 1,394 பேர் இந்தக் கருத்துக் கணிப்புக்கு தமது அபிப்பிராயங்களை வெளியிட்டுள்ளனர்.

வயது அடிப்படை %
18-29 22.47
30-45 37.98
46-59 19.53
60க்கு மேல் 14.72
பதில் இல்லை 5.31

கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களிடம் நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிரச்சினைகள் தொடர்பான பட்டியலொன்றை வழங்கி, வேட்பாளர்களின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் பிரதானமாக கவனம் செலுத்தப்பட வேண்டும் என நினைக்கும் பிரச்சினையை தெரிவு செய்யுமாறு கோரப்பட்டது.

அதில், 51.71 சதவீதமானோர் இலங்கையில் ஊழல் தொடர்பான பிரச்சினையை பிரதானமானதாக தெரிவு செய்துள்ளதுடன், 20.83 சதவீதமானோர் பொருளாதார பிரச்சினையையும், 19.08 சதவீதமானோர் அரசியலமைப்பு மறுசீரமைப்பையும், 8.38 சதவீதமானோர் மனித உரிமைகள் பிரச்சினையையும் தெரிவு செய்துள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தல் நாளை நடைபெறுவதாக இருந்தால் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளவர்களில் பெரும்பான்மையானோர் (76.06 சதவீதமானோர்) மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறக்கூடும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளனர். இந்தக் கேள்விக்கு பதிலளித்தவர்களில் 23.94 சதவீதமானோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ வெற்றிப் பெறக்கூடும் என நம்புவதாகவும் கருத்துக் கணிப்பின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஆளுந்தரப்பு மற்றும் எதிரணி பொது வேட்பாளரின் கூட்டணி ஆகிய இரு தரப்பிற்கும் கடந்த சில வாரங்களாக குறிப்பிடத்தக்க கட்சித் தாவல்கள் இடம்பெற்றுள்ளன. கட்சித் தாவல்கள் மூலம் ஜனாதிபதித் தேர்தலில் அதிகப்படியான வாக்குகளைப் பெறுவதை கருத்திற்கொள்ளும் பட்சத்தில், அதிகமான வாய்ப்பு பொது வேட்பாளருக்கே இருப்பதாக கருத்து கணிப்பில் கலந்து கொண்டவர்களில் அதிகப் பெரும்பான்மையானோர் (93.03 சதவீதமானோர்) தெரிவித்துள்ளனர்.

கருத்து கணிப்பில் கேட்கப்பட்ட “பிரதான தேர்தல் அணிகள் இரண்டும் இளைஞர் வாக்காளர்களை அணுகுவதற்காக பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக ஊடக வலையமைப்பு மேடைகளை பயன்படுத்துகின்றன – எந்த வேட்பாளருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பில் தீர்மானிப்பதற்கு இளைஞர்களுக்கு உதவ சமூக ஊடக வலையமைப்பு மேடையை பயன்படுத்துவதால் எந்தளவிலான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?” என்ற கேள்விக்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய பதில்கள் கிடைத்துள்ளன. இதில், பதிலளித்தவர்களில் 48.06 சதவீதமானோர், இளைஞர்கள் வாக்களிக்க எதிர்பார்க்கும் வேட்பாளர் தொடர்பில் தீர்மானம் எடுக்க பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக ஊடக வலையமைப்புகள் ஓரளவு உதவும் என்று நம்புவதாகவும், 38.2 சதவீதமானோர் சமூக ஊடக வலையமைப்புகள் இந்தத் தேர்தல் நடவடிக்கைளில் மிகவும் சக்திவாய்ந்த பணிகளை நிறைவேற்றி வருவதாகவும், 7.82 சதவீதமானோர் அப்படியில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி வாக்களிப்பதற்கு ஏன் அக்கறை கொள்கிறீர்கள் என்பது பற்றி கேட்டபோது, ஊழல் மோசடிகளை முடிவுக்கு கொண்டு வருவது மற்றும் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவது என்பதே மிகவும் பொதுவான பதிலாக அமைந்திருந்தமை இங்கு விசேட அம்சமாகும்.

ராஜபக்‌ஷ அரசின் ஆட்சி முடிவுக்கு வருவதை காண்பது தங்களுக்கு தேவையாக இருப்பதாக பெரும்பாலானோர் தெரிவித்துள்ள அதேநேரம், சந்திரிக்கா அரசோ அல்லது ரணில் அரசோ தங்களுக்குத் தேவையில்லை என்று சிலர் பதிலளித்துள்ளனர்.

Wordle

முழுமையான தரவு பதிவுகளை தரவிறக்கம் செய்துகொள்வதற்கு இங்கு கிளிக் செய்யவும். கீழ்காணும் வரைபடங்களின் உயர் பிரித்திறண் கொண்ட படங்களை பெற்றுக் கொள்ள இங்கு கிளிக் செய்யவும்.


தற்போதைய சூழலில் நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பெரும்பாலான பிரச்சினைகளின் மத்தியில் ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் பிரதானமாக கவனம் செலுத்தப்பட வேண்டியதென நீங்கள் கருதும் பிரச்சினை என்ன?


ஜனாதிபதித் தேர்தல் நாளைய தினத்தில் நடைபெறும் பட்சத்தில், யார் வெற்றி பெறுவார் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?


கடந்த சில வாரங்களில் ஆளுந்தரப்பு மற்றும் எதிரணி பொது வேட்பாளர் கூட்டணி ஆகிய இருதரப்புகளுக்கும் முக்கியமான கட்சித் தாவல்கள் பல இடம்பெற்றன. இந்தக் கட்சித் தாவல்களின் பெறுபேறாக அதிகமான வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்புகளை கொண்டிருப்பது எந்த தரப்பு என்று நீங்கள் கருதுகிறீர்கள்?


பிரதான தேர்தல் அணிகள் இரண்டும் இளைஞர் வாக்காளர்களை அணுகுவதற்கு பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக ஊடக வலையமைப்பு மேடையை பயன்படுத்துகின்றன – எந்த வேட்பாளருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பில் தீர்மானிக்க இளைஞர்களுக்கு உதவ சமூக ஊடக வலையமைப்பு மேடையை பயன்படுத்துவதால் எந்தளவிலான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

நன்றி: Groundviews