2014 ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி காலை 7.15 மணிக்கு இலங்கை, ஊவா மாகாணம் பதுளை மாவட்டம், ஹல்துமுல்ல பிரதேச செயலகப்பிரிவு, கொட்டபத்ம கிராம அலுவலர் பிரிவு கொஸ்லந்தை நகருக்கு உட்பட்ட மீரியபெத்த தோட்டத்தில் பாரிய மண்சரிவு ஏற்பட்டது. இலங்கையில் மண்சரிவு ஏற்பட்டது இது முதலாவது தடவையுமல்ல, இறுதியாக இருக்கப்போவதுமல்ல. நடைபெற்ற இந்த மண்சரிவு பாரியதாகவும், அவலமானதாகவும் இருந்ததுடன், ஒரு தோட்டத்தையே மண்ணுக்குள் புதைத்துள்ளது. ஏறக்குறைய 2 கிலோமீற்றர் பரப்பளவான நிலம் பெயர்க்கப்பட்டுள்ளது.

அனர்த்தம் நடைபெற்று ஒரு மாதகாலமாகிவிட்ட போதிலும், இதனாலேற்பட்ட உயிரிழப்பு, உடைமை அழிவுகள் பற்றி நம்பகமாக, பொறுப்பான கணக்கெடுப்புக்கள் எதுவும் நடத்தப்படவில்லை. மீட்புப்பணிகளும் திருப்தி தரும் வகையில் செய்யப்படவில்லை. இதில் 38 பேர் உயிரிழந்தனர் என்றும் – ஏழு லயன் குடியிருப்புக்களும், தனிவீடுகள் சிலவும், கோவிலும், சன சமூக நிலையமும், பால் சேகரிப்பு நிலையங்களும், சில கடைகளும், தொலைபேசி கடைகளும், 3 தோட்ட பங்களாக்களும் முற்றாக சேதமடைந்தன என்றும் – அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. பெற்றோர்களை இழந்த சிறுவர்களின் எண்ணிக்கை 75 என ஆரம்பத்தில் கூறப்பட்டாலும் பின்னர் 3 என கூறப்படுகிறது.

இந்த அனர்த்தத்தினால் மலையக தமிழ் தேசிய இன அடையாளத்திற்குட்படுகின்ற தோட்ட தொழிலாளர் குடும்பங்களே பாதிக்கப்பட்டுள்ளன.

மீரியாபெத்தயில் இவ்வாறான பாரிய மண்சரிவு ஏற்படும் என தேசிய கட்டட ஆய்வு அமைப்பு 2005ஆம் ஆண்டே எச்சரிக்கை விடுத்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வெச்சரிக்கை அத்தோட்டத்தை முகாமை செய்யும் மஸ்கெலிய பெருந்தோட்டக் கம்பனிக்கு விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. எனினும், மக்களை அங்கிருந்து வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் குடியேற்ற எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இந்தத் தவறுக்கு யார் பொறுப்பு என்பது பற்றி விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி ஜனாதிபதி பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்திருந்தார். அவ்விடயம் பற்றி எதுவும் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை.

கேகாலை, இரத்தினபுரி, மாத்தளை, கண்டி, பதுளை, நுவரெலியா, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் உள்ள இடங்களின் விபரங்களை தேசிய கட்டட ஆய்வு அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அபாயங்களின் அறிகுறிகள் தெரியும் இடங்களிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையில் மக்கள் தீர்க்கமான முடிவுகளை எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். அதனால், பல தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள், வெகுஜன அமைப்புக்களினதும் மற்றும் தனி நபர்களினதும் கூட்டாக செயற்படும் பெருந்தோட்ட நடவடிக்கை குழுவாகிய நாம் தோட்டத்தொழிலாளர்களை உள்ளடக்கிய மலையக மக்களின் பிரகடனத்தை செய்கிறோம்.

அதன் அடிப்படையில் 30.11.2014 அன்று கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் இடம்பெற்ற மீரியாபெத்த அனர்த்தத்தின் ஒரு மாத நினைவு நிகழ்வில் பின்வரும் பிரகடனத்தை செய்கின்றோம்.

  • மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களில் விடுபட்டு பாதுகாப்பாக வாழ்வதற்கான குடியிருப்புகளை அமைத்து கொள்வதன் அடிப்படை உரிமையை வெளியரங்கப்படுத்தி, இதுவரை காலம் தனி வீடில்லாது தொழிலாளர் (சிறை) முகாம்களாக இருக்கும் லயன் அறைகளிலிருந்து வெளியேறி தனி வீடுகளில் வாழ்வதற்கான எமது உரிமையை பிரகடனம் செய்கின்றோம்.
  • இயற்கை அனர்த்த ஆபத்தற்ற இடங்களில் தனி வீடுகளை அமைத்துக் கொள்வதற்கு குடும்பமொன்றுக்கு 20 பேர்ச்சஸ் காணியை சொந்தமாக பெற்றுக் கொள்ளவும், அதில் சொந்தமான வீடுகளை அமைத்துக் கொள்ள வசதிகள் பெற்றுக் கொள்ளவும் பொது உடன்பாட்டுடனான கூட்டு நடவடிக்கைகளை எடுப்போம் என பிரகடனம் செய்வதுடன், ஒக்டோபர் 29ஆம் திகதியை மலையக மக்களின் காணி வீட்டு உரிமைக்கான தினமாக பிரகடனம் செய்கின்றோம்.
  • புதிதாக அமைக்கப்படவுள்ள குடியிருப்புகள் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட கிராம அல்லது நகர குடியிருப்புகளாக அங்கீகரிக்கப்பட்டு மத்திய, மாகாண, உள்ளூராட்சி, பிரதேச செயலக, கிராம உத்தியோகத்தர் பிரிவு போன்றவற்றின் கீழான நிர்வாகத்திற்கு உள்ளாக்கப்பட்ட உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை, பொது வசதிகளை கொண்டதாக இருக்க வேண்டுமென பிரகடனம் செய்கின்றோம்.
  • மண்சரிவு அபாய பிரதேசங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்படவும் அவ்வாறு வெளியேற்றுகின்ற போது தோட்டத் தொழிலை இழப்பவர்களுக்கு வேறு தோட்டங்களில் அல்லது மாற்று தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளவும் நடவடிக்கைகளை எடுப்போமென பிரகடனம் செய்கின்றோம்.
  • தோட்டத் தொழிலாளர்களின் தொழில் தருநர்கள், தோட்டக் கம்பனிகள் தோட்டத் தொழிலாளர்களின் தொழில் உரிமைகளுக்கும் பாதுகாப்பிற்கும் முழுமையாக பொறுப்பாக்கப்பட வேண்டும் என்றும் – பெருந்தோட்ட சமூகத்தின் உயிர்வாழ் உரிமைகளை உறுதி செய்யும் அனைத்து விடயங்களுக்கும் அரசு பொறுப்பாக வேண்டும் என்றும் – பிரகடனம் செய்கின்றோம்.
  • மீரியாபெத்த அனர்த்தத்தில் உயிர் உடைமை இழந்த குடும்பங்களுக்கு போதுமான இழப்பீடுகள் வழங்கப்படவும்,
  • மீரியாபெத்த மற்றும் மண்சரிவு அபாயமுள்ள இடங்களிலிருந்து இடம்பெயர்ந்துள்ள குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் நிரந்தரமாக குடியேற்றப்படுவதை, அவர்களுக்கான வாழ்வாதார நிவாரணங்கள் கொடுப்பனவுகள் வழங்கப்படவும்,
  • மீரியாபெத்த அனர்த்தத்தினால் பெற்றோர்களை இழந்த சிறுவர்களின் வாழ்வையும், மேம்பாட்டையும், பாதுகாப்பையும் உறுதி செய்யவும்,
  • மீரியாபெத்த அனர்த்தத்தில் ஏற்பட்ட உயிர், சொத்து அழிவுகள் பற்றிய சரியான, நம்பகமான தகவல்களை பதிவு செய்யவும்,
  • மீரியாபெத்த அனர்த்தம் பற்றிய முன்னெச்சரிக்கையை கவனத்தில் எடுத்து மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தத் தவறிய நிறுவனங்கள், அதிகாரிகளையும் கண்டறிந்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக நம்பகமான விசாரணையை நடத்தவும் வலியுறுத்தி கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வோம் எனவும் பிரகடனம் செய்கின்றோம்.

பெருந்தோட்ட சமூக நடவடிக்கை குழு