படம் | South China Morning Post

பதவிக்காலம் முடிவடைவதற்குள் ஜனாதிபதித் தேர்தலை அவசர அவரமாக எதற்காக நடத்தவுள்ளனர் என்பது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளிவருகின்றன. ஆனாலும், மக்கள் செல்வாக்கு குறைவடைந்து விட்டது என்பதுதான் பொதுவான கருத்து. ஆனால், அதற்காக ஏன் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும்? நாடாளுமன்றத் தேர்தலை நடத்தலாமே என்ற கேள்விகளும் சிலரால் முன்வைக்கப்படுகின்றன. ஏனெனில், அடுத்த 2015ஆம் ஆண்டுடன் தற்போதைய நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் முடிவடைகின்றது. அதனால், அந்தத் தேர்தலை நடத்தாமல் ஏன் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் என கேள்விகள் எழுகின்றன. அரசியல்வாதிகள் கூட அது குறித்து முனுமுனுக்கின்றனர்.

நிச்சயமற்ற ஆட்சி

மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்களிலும் ஊவா மாகாண சபைத் தேர்தலிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றி பெற்றாலும் வாக்குகளின் விகிதாசாரம் குறைவடைந்துள்ளது என்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அறியாதவரல்ல. வட மாகாண சபைத் தேர்தலில் எற்பட்ட தோல்வி என்பது வேறு. ஆனால், சிங்கள – பௌத்த வாக்குகள் அதிகமாகவுள்ள மேற்படி மூன்று மாகாணங்களிலும் ஏற்பட்ட வாக்குச் சரிவு என்பது இந்த அரசின் ஆயுட்காலத்தை கேள்விக்கு உட்படுத்திவிட்டது என்பது கண்கூடு.

இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலை நடத்தினால் வெற்றிவாய்ப்பு இல்லாமல் போகலாம். அல்லது சிறிய கட்சிகளின் ஆதரவுடன் 113 சாதாரண பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்படலாம். அவ்வாறான நிலை ஏற்பட்டால் ஆதரவு கொடுக்கும் சிறிய கட்சிகள் எந்த நேரமும் அச்சுறுத்தல் விடுத்துக் கொண்டிருப்பதுடன் எதிர்க்கட்சிகள் விலைபேசி ஆட்சியை கவிழ்க்கக்கூடிய நிலையும் வரலாம். ஆகவே, அது ஒரு பலமான அரசாக இருக்காது. 2000ஆம் 2001ஆம் ஆண்டுகளில் சந்திரிக்கா தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசு ஜே.வி.பி. — ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற சிறிய கட்சிகளின் பேரம் பேசுதல், அச்சுறுத்தல்கள் மத்தியில் ஆட்சி நடத்திய நிலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷக்கும் உருவாகலாம்.

உண்மை நிலை என்ன

இதன் காரணத்தால் ஜனாதிபதித் தேர்தலை நடத்தி வெற்றிபெற வேண்டும் என்ற ஒரு கட்டாயச் சூழல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஏற்பட்டது எனலாம். அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலில் ஆகக் குறைந்தது 51 சத வீத வாக்குகள் பெற்றால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படலாம். ஆகவே, மக்களின் செல்வாக்கு முன்னர் இருந்ததை விட தற்போது சரிவடைந்தாலும் வாக்குறுதிகள், சலுகைகளை கொடுத்தும் மற்றும் வேறு வழிகளை கையாண்டும் குறைந்தது 51 சதவீத வாக்குகளை பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுகின்றது. 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் 61 சதவீத வாக்குகளைப் பெற்று மீண்டும் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவு செய்யப்பட்டிருந்தார். ஆனால், இம்முறை அவ்வாறு வெற்றி கிடைக்காது என்று தெரிந்தும் மயிரிழையில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையுடன் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதற்கு மூன்று காரணங்கள் உண்டு

ஒன்று, எதிர்க்கட்சிகளுடைய பலவீனம், அதாவது, ஐக்கிய தேசிய கட்சியும் ஜே.வி.பியும் பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் போன்றது. எந்தக் கொள்கை அடிப்படையிலும் இரு கட்சிகளும் ஒன்று சேர முடியாது. இரண்டாவது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிரான சர்வதேச நடவடிக்கைகள், ஜெனீவா மனித உரிமை பேரவையின் சர்வதேச விசாரணைகள். மூன்றாவது, இந்திய அரசினுடைய பக்கபலம். ஆக, மக்கள் செல்வாக்கு என்பதை விட மயிரிழையில் வெற்றி பெற்றால் ஏனைய அரசியல் கட்சிகள் உளவியல் ரீதியாக மீண்டும் அரசுடன் இணைந்துவிடும் என்ற நம்பிக்கையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு உண்டு? வெற்றிபெற்றால் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து கூட பலர் அரசுக்கு மாறிச் செல்லக்கூடிய வாய்ப்புகளும் இயல்பாகவே ஏற்படும். போட்டியிட்டு வெற்றிபெற்ற பின்னர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் அரசு பக்கம் மாறிச் சென்ற அனுபவங்களை உதரணமாக கூறலாம். ஆகவே, அந்த பட்டறிவு மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஏராளமாகவே உள்ளது.

உறுதியான கொள்கை இல்லை

மக்கள் வாக்களிப்பது கட்சிகளின் கொள்கைகளுக்காக அன்றி அந்த கட்சிகளில் போட்டியிடும் தனிப்பட்ட நபர்களுக்காகவே என்பதற்கான வரலாறுகள் தென் பகுதியில் உள்ளன. உதாரணமாக, தயாசிறி ஜயகேசர ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி அரசுடன் இணைந்து வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு மூன்று இலட்சம் வாக்குகளை பெற்று வடமேல் மாகாண சபையின் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டார். தற்போது அரசின் முக்கிய அமைச்சுப் பொறுப்புகளில் உள்ள 17 பேர் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள். ஆகவே, தனிப்பட்ட நபர்களுக்கு வாக்களிக்கும் நிலைதான் வடக்கு – கிழக்கு அல்லாத ஏனைய மாகாணங்களில் உள்ள மக்களின் அரசியல் பண்பாக காணப்படுகின்றது.

இந்தப் பண்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஒவ்வொரு தேர்தல்களிலும் சரியாகப் பயன்படுத்துகின்றார். ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்தப் பண்பை முறியடிக்க முடியாமல் தினறுகின்றனர். இந்த நிலையில், மக்கள் செல்வாக்கு சரிவடைந்துவிட்டது என்ற காரணத்திற்காக ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ தோல்வியடைவார் என்றும் – எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் வெற்றிபெறுவார் என்றும் – எதிர்ப்பார்க்க முடியாது.

அதேவேளை, பௌத்த இனவாதத்தின் அளவுகோளை உயர்த்தி வைப்பதன் மூலமாகவே வெற்றிபெறலாம் என்ற ஒரு நிலைமையும் காணப்படுகின்றது. அதற்காகத்தான் ரணில் விக்கிரமசிங்கவை விட கருஜெயசூரியவை பொது வேட்பாளராக இறக்க யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. ஜனாதிபதி மஹிந்த கையாளுகின்ற மேற்படி உத்திகளை அனுபவங்களை எதிர்க்கட்சிகளும் தற்போது கையாளுகின்றன.

சில நாடுகளின் ஆதரவு

ஆனாலும், மேற்படி மூன்று காரணங்களில் மூன்றாவது காரணமான இந்தியாவினுடைய பக்கபலம் என்பது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை நோக்கியதாக இருப்பதால் பௌத்த இனவாதத்தின் அளவுகோளை தேர்தல் பிரசாரத்தின்போது உயர்த்திக் காண்பிப்பது அரசுக்கு இலகுவான காரியமாக இருக்கும். எனவே, எதிர்க்கட்சிகள் அந்தப் பிரசாரத்துக்கு முன்னால் நின்று தாக்குப் பிடிக்கக்கூடிய நிலை ஏற்படுமா என்பது சந்தேகமே. தமிழ்த் தேசிய கூட்டமைப்பினுடைய ஆதரவை விட ஜாதிக ஹெல உறுமய மற்றும் பௌத்த இனவாத அமைப்புகளின் ஆதரவுகளை பெறுவது, புலிகளை மீண்டும் தடை செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு கடிதம் எழுதுவது போன்ற செயற்பாடுகள் சிங்கள மக்களிடையே அவ்வப்போது சலசலப்பை ஏற்படுத்தினாலும் ஒட்டுமொத்தமான பௌத்த இனவாத செல்வாக்கை தேர்தல் நேரத்தின்போது அரசு என்ன விலை கொடுத்தேனும் பெற்றுவிடக்கூடிய சாதகமான நிலைமை தான் காணப்படுகின்றது.

ஆகவே, மக்கள் சரியானதை சிந்திக்காத வரையும் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது. தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பின் பிரகாரம் ஆட்சியை எந்தக் கட்சி கைப்பற்றுகின்றதோ அது அந்தக் கட்சியின் நீண்டகால ஆட்சிக்கு சாதகமாக அமைந்து விடுகின்றது. ஐக்கிய தேசிய கட்சி 17 வருடங்கள் ஆட்சிபுரிந்ததும் இந்த அரசியலமைப்பில்தான். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசும் 20 வருடங்கள் ஆட்சி புரிந்து கொண்டு இருப்பதும் இந்த அரசியலமைப்பில்தான். ஆகவே, இரண்டாவது குடியரசு அரசியலமைப்பை மாற்றி மூன்றாவது குடியரசு அரசியலமைப்பை உருவாக்கினால் மாத்திரமே மாற்றங்களை காணலாம். ஆனால், இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்ற சிந்தனை இந்த இரு கட்சிகளுக்கும் இல்லை என்பதால் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கினாலும் இதே பிரச்சினை வேறுவடிவத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கும். ஆக, இந்தப் பிரச்சினைகளுக்கு எல்லாம் மக்களின் அறியாமைதான் தான் காரணம் என்ற முடிவுக்கு வரலாம்.

தினக்குரல் பத்திரிகைக்காக அ.நிக்ஸன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.