படம் | அஞ்சலோ சமரவிக்ரம, demotix

(இந்த கட்டுரை எல்லா தரப்பிற்கும் ஆனதல்ல, யுத்தத்தின் பின் உருவாகியிருக்கும் புதிய இளைய தலைமுறைக்கானது)

“நெஞ்சுப் பகுதி வற்றி அங்கே அப்படி ஒன்றில்லை, இடுப்பு ஒடிந்து விழுந்திருப்பதை அப்போது தான் முதன் முறையாகப் பார்த்தேன், கைகளில் செம்மண் இறுகிப் படிந்திருந்தது,  அப்படி ஒரு தாய், அவர்களிருப்பது ஒரு மண் குடிசை, வாசலில் குனிந்த படி பாடசாலை ரிப்பனுடன் ஒரு சிறுமி. வீடிற்குள் இடமில்லை, வாசலில் ஒரு மேசையில் நிறையப் புத்தகங்கள்.”

இப்படித் தானிருக்கின்றன நகரத்தை தாண்டிய யாழ்ப்பாணத்தின் பல குடிசைகள். நமது சமூகம் தன்னை பரந்துபட்ட அளவில் உணர்ந்து கொள்ளவில்லை அல்லது உணர்ந்துகொள்வதில்லை. நாம் நமது கிராமங்களை பற்றி எழுதுகிறோம், கிராமத்து மனிதர்களை நேசிக்கின்றோம், கவிதைகள் எழுதுகிறோம், அவர்களுக்கான போராட்டங்கள் என்று சொல்லிக் கொள்கிறோம். எந்த ரீதியில் இவை அவர்களைச் சீர்படுதியிருக்கின்றன. குருநகரின் மாடிக் குடியிருப்பில் ஏறி இறங்கினால் தெரியும் முகாம்கள் எவ்வளவு வசதியாய் இருந்தன என்று, அடுக்குமாடி பறவைகள் குடியிருப்பு தான் அவை. சமீபத்தில் இன்னொரு வீட்டில் ஒரு வங்கிக் கடன் தொடர்பாக சென்றிருந்தோம், “தம்பி இந்த வீட்டை பாருங்கோ. அவருமில்லை, நான் இவளையும் வச்சிருக்கிறன், இந்த வீட்ட கட்டுறதுக்கு ஒரு ஆளிட்ட ஒண்டரை லட்சம் கடன் வாங்கினான், இப்ப வரைக்கும் கட்டேல்ல. அஞ்சரை லட்சம் வட்டி மட்டும் கட்ட வேணும்.  அண்டைக்கு வந்து வீட்ட பார்த்துக் கொண்டு போனவையள். இதுவும் போகப் போகுது. போனமுறை வெங்காயமும் அழிஞ்சு போட்டுது, திங்க கிழமை வாறன் தம்பி”

எங்களால் என்ன செய்ய முடியும், நினைவு படுத்தி விட்டு வந்தோம். வரும் வழியில் தான் சொன்னார்கள் “அவாவிண்ட மகளும் பாவமட, மனுஷன் விட்டுட்டு போயிட்டன், ஒரு பிள்ளையும் குடுத்திட்டு.” இப்போது இது சாதாரண நடைமுறையாகிவிட்டது .

உழைக்கும் மனிதர்கள் சுரண்டப்படும் அல்லது ஏமாற்றப்படும் தேசம் தனது தாய்மையை இழந்துவிடும், இந்த சிறு இனமும் தனது ஜீவ சக்தியை இழந்துவிடும். தனி மனித அவலங்கள் முக்கியமில்லாத ஒன்றாகிவிட்ட இப்படியான காலகட்டத்தில், ஒவ்வொரு தனி மனிதனும் ஒரு உயிர்ப்பு மிக்க சமூகத்தின் ஒரு பங்காளியாக வாழமுடியாத நிலைதான் இங்குள்ள உண்மையான நிலை. இதுபோன்ற ஏராளமான வாழ்வை தினம் தினம் நான் பார்கின்றேன். மனித வாழ்வு மேலும் சிக்கலாய், மேலும் நெருக்குதலுக்குள் நுழையும் இந்த நேரத்தில், இலங்கையின் தலையில் இருக்கும் இந்த நிலம் தனது சொந்தப் புதல்வர்கள் அடிப்படை வாழும் தன்மையை இழந்து நிற்பதை வேடிக்கை பார்க்க மட்டுமே செய்கிறது.

யாழ்ப்பாணத்தின் சாதியமைப்பு முறைகள் பற்றி போதுமான அறிதல் எல்லோரிடமும் இருக்கிறதென்பதை வைத்து இந்தக் கட்டுரை மேற்கொண்டு செல்கிறது. மத்திய தர வர்க்க யாழ்ப்பாண சமூகம் ஒரு சொகுசு அரசியல் பேசும் தொகுதி, மேல் தட்டு வர்க்கமோ முழுவதும் வர்த்தகப் பின்னணி, அரசியல் பேசும் தொகுதி. ஏனைய தேசத்தை போலவும் இங்கேயும் அடித்தட்டு அரசியல் பேசப்படாமலேயே கிடக்கிறது. ஆனால், அவர்களை வைத்தே எங்கள் அரசியலும் நடக்கிறது. (இங்கே செய்திருக்கும் வர்க்கப் பிரிவுகள் பணத்தை அடிப்படையாகக் கொண்டவை) சுதந்திரத்தின் தேவை என்ன? அவை பற்றி இப்பொழுது நாம் கொண்டிருக்கும் புரிதல் என்ன? ஒரு சிறு அதிகாரம் கொண்ட குழுவிடம் ஒரு மக்கள் தொகுதியை எப்படி விட்டுவிட்டு நமது வாழ்வை வாழ்வது.

பல்வேறு ஆளுமைப் பிளவுள்ள ஒரு தொகுதி இனம்தான் நமதும். ஒரு முழுமை பெற்ற அல்லது முதிர்ச்சியடைந்த இனமோ அல்ல. கடந்த முப்பது ஆண்டு கால யுத்த சாகசங்கள் போதும் நாம் எந்தளவுக்கு இளமை துடிப்புள்ள இனமாகவே இன்னும் இருக்கின்றோம் என்பதற்கு. நமது புத்திசாலித்தனம் என்பது நிலைமைகளைச் சமாளிப்பதிலேயே கடந்துவிட்டது. நான் ஒரு வன்முறையாளன். செயலுக்குப் போகத் துணியாத எவனுமே வன்முறையாளன்தான். பொது வெளியில் எந்த கருத்தையும் யாரும் சொல்லிவிடலாம், அதற்கு நிபுணத்துவமோ அறமோ இப்போது அவசியமாய் இல்லை. ஒரு பொழுதுபோக்கு அரசியல் மேசையில் இருந்து அரட்டை அடிக்கிறோம். டயஸ்பரா தமிழினமோ தமது மேசைகளை சிறிய சிறிய அளவில் விரித்து வைத்து புலம்பெயர் அரசியல் செய்கிறார்கள். வன்முறையாளர்களாக உருவேற்றப் பட்டிருக்கும் நமது அரசியலோ ‘அரட்டை’ அளவிலேயே இருக்கிறது.

மூன்று தசாப்தகால போராட்டம் என்பது நமது எல்லா நடைமுறையிலும் வன்முறையை ஆழாமாக நம்பிக்கைக்குரிய தீர்வாக ஆக்கியிருக்கிறது. மெல்ல மெல்ல வன்முறையை அதிலிருந்து எடுத்துவிட்டால் தான் நாம் நமது அறத்தை பேச முடியும். அப்படிப்பட்ட அன்பின் மலர் இந்த நிலத்தில் முகிழ்ந்து வெகு நாட்களாகிறது.

இந்த காலத்தில் மற்ற எந்த இனமும் அனுபவித்திராத துயரத்தை நாங்கள் அனுபவித்திருக்கிறோம். அவர்களுடன் ஒப்பிடுகையில் நாமே அதிகமாக சுயத்தை இழந்திருக்கிறோம், நமது கடவுள் தன்மையையும்தான். போரின் வெளிமுகத்தை மட்டுமின்றி அக முகத்தையும் நேரில் அனுபவித்திருக்கும் இச்சிறு இனம் வெறும் தத்துவங்களால், வெறும் மேடைப் பேச்சுக்களால் விழிக்கப் போவதில்லை, மக்கள் புரட்சி என்பது தற்செயலே. ஆனால், அதற்கான கொதிநிலையை பாதுகாக்கும் எந்தவொரு அறிவொளி இயக்கமும் எங்களிடம் கைவசமில்லை. அதை தாங்கும் பேராளுமைகளும் கூட இல்லை.

சுதந்திரம் கைச்சாத்தப்பட்டு கொண்டுவந்து தரும் விடயமில்லை, நிலம் எங்கோ இருக்கும் சொர்க்கமில்லை. அப்படித்தான் நம்மில் பலர் பேசிக்கொண்டிருக்கிறோம். அகத்தில் உள்ள சுதந்திரம்தான் பறிக்கமுடியாததும் உண்மையானதும். கால்களின் கீழுள்ளது நிலம், கால்களின் கீழுள்ள நிலத்தை உணருங்கள், உங்கள் சுதந்திரம் வன்முறையால் கிடைப்பதல்ல, வன்முறையால் கிடைப்பவை எந்த காலத்திலும் அதன் பரிபூரணத்துவத்தை அடைந்ததுமில்லை. நாம் வீட்டைக் கட்டிய பின் அடித்தளத்தை மாற்ற போகிறோமா? இல்லை அடிப்படையிலிருந்தே அவற்றை மாற்றப் போகிறோமா? நமது கனவு என்பது கனவல்ல அது உண்மைக்கான வரைபடமே. உண்மை எங்களிடம் தான் உள்ளது.

ஜே.கிருஷ்ணமூர்த்தியின் கூற்று ஒன்று உண்டு, “சமுதாயத்தின் மாற்றம் என்பது இரண்டாம் பட்சமானது. எப்பொழுதும் நீங்கள் ஒரு மனிதனாக உங்களுக்குள்ளேயே மாற்றத்தை கொண்டு வருகிறீர்களோ அப்பொழுது சமுதாயத்தில் மாற்றம் இயற்கையாக, தவிர்க்க முடியாமல் வரும்.”  நாம் நமது சுதந்திரத்தை முழுமையாக உணராத வரை, நாம் செய்வது வன்முறை என்பதை உணராத வரை நம்மை வைத்து செய்யும் கேலிக் கூத்துகளுக்கு தலையாட்டியபடியும் கைதட்டியபடியும் இருக்க வேண்டியதுதான்.

இப்போது உருவாகியிருக்கும் இந்த தலைமுறை ஒரு பனியாற்றைப் போன்றது. அதன் உயிர்ப்புள்ள ஓட்டமானது பனி கட்டியாக உறைந்திருக்கும் செயலுக்கு கீழே தனது சக்தியை வைத்திருக்கிறது. அறிவின் செயலுக்கு அதன் பனி உருகவேண்டியிருக்கிறது. அதன் காலம் இப்போதில்லை. அதன் கொதிநிலையும் அவ்வளவு பக்குவமடையவில்லை. ஒரு நாள் பனியாறு உடைந்து இந்த நதி பெருகும்போது அதாவது செயல் பெருகும்போது, ஒட்டியிருக்கும் குப்பைகள் அடித்துச் செல்லப்படும். சுதந்திரமான செயல் என்பது அன்பினால் உருவாகும் வேகமே. அதுவே எனது தலைமுறையை ஜீவ நீரோட்டதுள் சேர்க்கும். அப்போது தான் கனவு பலிக்கும்.

கிரிஷாந்

Krishanth