2005ஆம் ஆண்டு இடம்பெற்ற ‘ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை’ ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவை சிறையில் தள்ளாமல் விடுதலை செய்தமைக்காக மக்களிடம் மன்னிப்பு கோருவதாக முன்னாள் பிரதம நீதியரசராக இருந்த சரத் என். சில்வா கூறுகின்றார்.

சண்டே லீடர் பத்திரிகையில் வெளிவந்த செய்தியொன்றை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் மேற்கொண்டிருந்த முறைப்பாட்டை அடுத்து, தம்மை கைதுசெய்வதற்கான முயற்சிகள் நடைபெறுவதாகக் கூறி அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றை பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை பரிசீலனைக்கு எடுத்திருந்த முன்னாள் பிரதம நீதியரசன் சரத் என் சில்வா உட்பட மூவரடங்கிய ஆயம் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவை விடுதலை செய்ததோடு, நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீமை கடுமையாக சாடியிருந்தது.

“வழக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை சிறையிலடைப்பதற்கான வாய்ப்புதான் இருந்தது. நான் அந்த நேரத்தில், எனக்குத் தெரிந்தவரையில் நீதியை நிறைவேற்றினேன்” என்றார் முன்னாள் தலைமை நீதியரசர்.

“அதாவது, இந்த சந்தர்ப்பத்தில் இவரை சிறையில் அடைப்பதற்கு சட்டத்தில் இடம் இல்லை என்று கூறினேன். அதனால், அவரால் போட்டியிட முடிந்தது. ஜனாதிபதியாக நியமனம் பெற்றார். இரண்டாவது தவணைக்கும் தெரிவானார்” என்கிறார் சரத் என். சில்வா.

“இப்போது மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சியில் சட்டத்துக்கு விரோதமான செயற்பாடுகள் நடைபெறுகின்றன. உச்சகட்ட ஊழல் நடக்கின்றது. ஒப்பந்தங்களில் பெருமளவு ‘கொமிஸ்’ அடிக்கப்படுகின்றது. பொதுச் சொத்துக்கள் சுரண்டப்படுகின்றன. இவற்றை எல்லாம் பார்க்கும்போது, அன்று அவரை விடுதலை செய்ததற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்கிறார் சரத் என் சில்வா.

“இவற்றை எல்லாம் பார்க்கும்போது, அந்த ‘ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை’ ஒருவேளை உண்மையாக இருக்கலாமோ என்றும் எனக்குத் தோன்றுகிறது” என அவர் கேள்வி எழுப்புகிறார்.

தான் வழங்கிய தீர்ப்பொன்று தொடர்பாக முன்னாள் நீதியரசர் ஒருவர் மன்னிப்புக் கேட்கும் சம்பவம் இலங்கை நீதிமன்ற வரலாற்றில் இதற்கு முதல் நடந்ததில்லை.

“அன்று வழங்கிய தீர்ப்பு சரியானதா பிழையானதா என்ற சந்தேகம் என்னுள் எழுகின்றது. இவர் எப்போதும் நிதி மோசடி நடவடிக்கையில் ஈடுபடமாட்டார் என்ற ஒரு தீர்க்கமான முடிவின் அடிப்படையில் நாங்கள் செயற்பட்டோம். இப்போது நாட்டில் இடம்பெறும் ஊழல் நிலவரத்தைப் பார்க்கும் போதுதான் இவரைப் பற்றியும் தெரிந்துகொள்ள முடிகிறது” எனக் கூறுகிறார் சரத் என் சில்வா

தனது ஏனைய தீர்ப்புகள் தொடர்பாக எதுவித விமர்சனமும் இல்லை என்கிறார் முன்னாள் நீதியரசர்.

விசேடமாக, 2005ஆம் ஆண்டோடு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக்காலம் முடிவடைவதாக அன்று தான் வழங்கிய தீர்ப்பு சரியானது என்று அவர் கூறுகிறார்.

நேற்று வெள்ளிக்கிழமை புதிய நகரமண்டபத்தில் நடந்த நிகழ்வொன்றில், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்ததற்காக மன்னிப்பு கேட்பதாக தெரிவித்திருந்த முன்னாள் நீதியரசர், அதன்போது ‘ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை’ வழக்கு தொடர்பாக எதுவும் குறிப்பிட்டிருக்கவில்லை.

“நேற்று, திடீரென்று வாய்க்கு வந்ததை தெரிவித்திருக்கவில்லை. அதுபோலதான் இப்போதும்” என்கிறார் சரத் என் சில்வா.

ஜனாதிபதியின் திருமணத்தின்போது சாட்சிக் கையெழுத்தாளராகவோ அல்லது மணமகன் தோழனாகவோ இருந்த நீங்கள் ‘ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை’ வழக்கு விசாரணையில் ஈடுபட்டமை எந்த வகையில் நியாயமானது எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சரத் என் சில்வா, அந்தச் செய்தி திரிபுபடுத்தப்பட்டது எனக் கூறுகிறார்.

மஹிந்த ராஜபக்‌ஷ மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசியலமைப்புப்படி தகுதியை இழந்துவிட்டார் என்று முன்னாள் தலைமை நீதியரசர் அண்மையில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி: பிபிசி சிங்களச் சேவை