படம் | Tamilguardian

ரணில்-பிரபா உடன்படிக்கை காலத்தில் கிளிநொச்சியில் கூட்டமைப்புக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையிலான ஒரு சந்திப்பின் போது அமரர் ரவிராஜ் புலிகள் இயக்கத் தலைமையிடம் ஒரு கோரிக்கையை விடுத்தார். சுரேஸ் பிரேமசந்திரன் போன்றவர்கள் கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிய வேண்டும் என கேட்கிறார்கள். அதற்கு நீங்கள் உங்களுடைய அபிப்பிராயத்தை கூறவேண்டும் என்று. அதற்குப் புலிகள் இயக்கத் தலைமை பின்வரும் தொனிப்பட பதில் கூறியதாம். “இப்பொழுது இருப்பது போலவே இருக்கட்டும், அதனால் ஏதும் பிரச்சினையா?” என்று.

புலிகள் இயக்கம் எதை மனதில் வைத்து அவ்வாறு கூறியது என்பதற்கு உத்தியோகபூர்வ சான்றுகள் ஏதும் இல்லை. ஆனால், சில தசாப்தங்களுக்கு முன்பு தமிழர் விடுதலை கூட்டணி என்ற ஒரு ஐக்கிய அமைப்பை பலப்படுத்த போய் அது பின்னாளில் ஆயுதப் போராட்டத்திற்கு குறுக்கே ஒரு நந்தி போன்று குந்திக் கொண்டிருந்ததைப் போல கூட்டமைப்பும் உருவாகக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையே அதற்குக் காரணம் என்று புலிகளுக்கு நெருக்கமான வட்டாரங்கள் அந்நாட்களில் தெரிவித்தன.

ஒரு கட்சியாக பதியப்படுமிடத்து கூட்டமைப்பானது மேலும் பலமடைந்து விடும். அதனால், அது எதிர்காலத்தில் அகற்றக் கடினமான ஒரு நந்தியாக மாறக்கூடும் என்று கருதியதாலேயே புலிகள் இயக்கம் கூட்டமைப்பை பதியும் முயற்சிகளை ஊக்குவிக்கவில்லை என்று நம்பப்படுகிறது. வன்னியில் கூட்டமைப்புக்கென்று ஒரு அலுவலகம் திறக்கப்படுவதையும் புலிகள் இயக்கம் ஊக்குவிக்கவில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

ஏறக்குறைய ஒரு தசாப்த காலத்திற்கு முன்பு புலிகள் இயக்கம் அதன்நோக்கு நிலையிலிருந்து கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவதில் அக்கறை காட்டவில்லை. இப்பொழுது அக்கூட்டமைப்பின் தலைமையே அதை ஒரு கட்சியாக பதிவதற்கு பின்னடிக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளாக அவர்கள் அதை இரண்டு தளங்களில், அதாவது நேரடியாகவும் மறைமுகமாகவும் நன்கு திட்டமிட்டு மேற்கொண்டு வருகிறார்கள்.

தமிழரசுக் கட்சியை பலப்படுத்துவது என்பது கூட்டமைப்பை பலவீனப்படுத்தும் ஒரு மறைமுக நடவடிக்கை. மற்றையது நேரடியானது. அதாவது, கூட்டமைப்பிலுள்ள ஏனைய கட்சிகளை அங்கீகரிக்க மறுப்பதும் கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிய மறுப்பதும். இவற்றை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

முதலாவது, தமிழரசுக் கட்சியை பலப்படுத்துவது. மாவை சேனாதிராஜா கட்சியின் தலைவராக தெரிந்தெடுக்கப்பட்ட பின் நாட்டுக்குள்ளும், நாட்டுக்கு வெளியிலும் நடப்பவற்றை தொகுத்துப் பார்த்தால் இது தெரியும். கடந்த ஐந்தாண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர்ச்சியான நடவடிக்கைகளில் ஒரு கட்ட உச்சம் இது. தமிழரசுக் கட்சி எனப்படுவது ஒரு வகையில் தாய்க் கட்சி போன்றது. அது ஆயுதப் போராட்டத்திற்கு முந்தியது. மரபு ரீதியிலான மிதவாத பாரம்பரியத்தைக் கொண்டது. ஆனால், கூட்டமைப்பானது மரபு ரீதியிலானது அல்ல. அது ஒப்பீட்டளவில் புரட்சிகரமானது. ஒரு ஆயுதப்போராட்டத்தின் விளைவாக தோன்றியது. இதை இன்னும் துலக்கமாக கூறின், தமிழரக் கட்சியின் உற்பத்தியே ஆயுதப் போராட்டம் என்றும் – ஆயுதப் போராட்டத்தின் உற்பத்தியே கூட்டமைப்பு என்றும் – கூறலாம்.

தமிழரசுக் கட்சியின் சின்னமாகிய வீடு பல தசாப்த கால தொடர்ச்சியை கொண்டது. அதுவே இப்பொழுது தமிழரசுக் கட்சிக்கு மிக அனுகூலமான ஓர் அம்சமாகவும் காணப்படுகிறது. வீடு பழையது. ஆனால், கூட்டமைப்பு என்ற பெயர் புதியது.

இந்த இடத்தில் போர் நிறுத்த காலத்தில் கிளிநொச்சியில் நடந்த ஒரு வாதப்பிரதிவாதத்தை சுட்டிக்காட்ட வேண்டும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போது அதற்குரிய சின்னம் எது என்பது தொடர்பாக நடந்த விவாதம் அது. தமிழரசுக் கட்சியின் சின்னமாகிய வீட்டுச் சின்னத்தையே கூட்டமைப்புக்கும் பயன்படுத்தலாம் என்று ஒரு தரப்பு ஆலோசனை கூறியது. மற்றொரு தரப்பு, ஒரு புதிய சின்னத்தை தெரிவுசெய்யுமாறு கருத்துக் கூறியது. வீட்டுச் சின்னத்தை ஆதரித்தவர்கள், அது ஏற்கனவே தமிழ் மக்களின் மனதில் ஆழப்பதிந்த ஒரு சின்னமாக இருப்பதாலும் அது தமிழ்த் தேசிய தொடர்ச்சியை குறிக்கும் சின்னமாக அமைய முடியும் என்று கூறினார்கள். மேலும், பதிவுப் பிரச்சினைகளை தவிர்ப்பதற்கும் அது ஒரு இலகுவான வழி என்றும் கருதப்பட்டிருக்கலாம்.

அதேசமயம், வீட்டுச் சின்னத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் ஒரு புதிய சின்னத்தை தெரிவு செய்ய வேண்டும் என்று கூறினார்கள். ஏனெனில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எனப்படுவது, ஈழத் தமிழ் அரசியல் வரலாற்றில் ஒரு புதிய கட்டத்தின் தொடக்கமாக இருப்பதினால் அதன் புதிய உள்ளடக்கத்தை கருதி அதற்கொரு புதிய சின்னத்தை தெரிவதே நல்லது என்றும் அவர்கள் கருதினார்கள். ஆனால், முடிவில் வீட்டுச் சின்னமே ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அந்த வீட்டுச் சின்னம்தான் இப்பொழுது தமிழரசுக் கட்சி தன்னை ஒரு தனிப்பெரும் கட்சியாக கட்டியெழுப்புவதற்குரிய அடிப்படைப் பலமாகவும் காணப்படுகிறது.

சுமந்திரன், விக்னேஸ்வரன் போன்றவர்களின் வருகையோடும் ஆயுதப் போராட்டத்தோடு நேர்த்தொடர்பற்ற மாகாண சபை உறுப்பினர்களின் வருகையோடும் தமிழரசுக் கட்சியானது கேள்விக்கிடமற்ற விதத்தில் தன்னை பலப்படுத்திக் கொண்டுள்ளது என்று கூறலாம்.

கூட்டமைப்பின் உயர்பீடத்தில் கட்சியின் இதயமான இடத்தில் முடிவெடுக்கும் அதிகாரங்களை பெற்றிருப்பவர்கள் அனைவரும் தமிழரசுக் கட்சிக்காரர்களே.

மாவட்ட மட்டங்களில் பலமாகக் காணப்படுவோரில் பெருந்தொகையினர் தமிழரசுக் கட்சிக்காரர்களே. கூட்டமைப்பின் பேச்சாளராக சுரேஸ் பிரேமசந்திரன் இருக்கத்தக்கதாக தமிழரசுக் கட்சியின் பேச்சாளராக சுமந்திரன் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். அதாவது, கூட்டமைப்பு என்ற பெயரை வைத்துக்கொண்டே அதற்குள் இருக்கும் ஏனைய கட்சிகளை பின் தள்ளுவதன் மூலம் அல்லது உள்ளுறுஞ்சுவதன் மூலம் தமிழரசுக் கட்சியானது ஏனைய கட்சிகளை விழுங்க முயற்சிக்கிறதா? இதன்மூலம் கூட்டமைப்பு என்றாலே அது தமிழரசுக் கட்சிதான் என்ற ஒரு நிலையை உருவாக்க அக்கட்சி முற்படுகிறதா? இது முதலாவது.

மற்றது, கூட்டமைப்புக்குள் இருக்கும் ஏனைய கட்சிகளை நேரடியாக அங்கீகரிக்க மறுப்பது அல்லது கூட்டமைப்பை பதிய மறுப்பது. அண்மையில் மாவை லண்டனில் வைத்து கூட்டமைப்பை பதிய முடியாது என்று அறிவித்த அதே காலப்பகுதியில் தான் விக்னேஸ்வரனும் ஆயுத போராட்ட இயக்கங்களை குறித்த சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்திருந்தார்.

அது அவருக்கு மட்டும் உரிய கருத்தன்று. மாவை தவிர கூட்டமைப்பின் உயர்மட்டத்தில் இருக்கும் மூவருக்கும் உரிய கருத்து அது. மாவையால் அப்படிக் கூற முடியாது. ஏனென்றால், அவருக்கும் ஆயுதப்போராட்ட பாரம்பரியத்திற்கும் ஆரம்ப கால தொடர்புகள் உண்டு.

இந்த இடத்தில் முன்னாள் நீதியரசரை நோக்கி இரண்டு கேள்விகளை கேட்க வேண்டியிருக்கிறது. முதலாவது, தமிழரசுக் கட்சியானது தூய மிதவாத பாரம்பரியத்திற்குரியதா? இரண்டாவது மாகாண கட்டமைப்பு எனப்படுவது எதனுடைய விளைவு?

முதலாவது கேள்வியை பார்க்கலாம். தமிழரசுக் கட்சியே ஆயுதப்போரை உற்பத்தி செய்தது. அதன் தலைவர்கள் தங்கள் பிள்ளைகளையும் சொத்துக்களையும் பாதுகாத்துக் கொண்டு மற்றவர்களின் பிள்ளைகளை உருவேற்றினார்கள். சித்தார்த்தனைப் போன்ற மிக அரிதான புறநடைகளே இதில் உண்டு. மற்றும்படி ஆயுதப் போராட்டத்தை நோக்கி இளைஞர்களை தூண்டி விட்டதும் உருவேற்றியதும் தமிழ் மிதவாதிகளே.

ஒரு அரங்க செயற்பாட்டாளர் கூறியது போல் அவை வார்த்தை வன்முறைகளே (verbal violence). எப்பொழுது பிரசார மேடைகளில் இரத்தத் திலகம் இடப்பட்டதோ அப்பொழுதே வன்முறை அரசியல் தொடங்கி விட்டது. இவ்வாறு நெற்றியில் இரத்தப் பொட்டு வைப்பதை தொடர்ச்சியாக செய்து வந்த ஒரு இளைஞர் பின்னாளில் ஆயுதப்போராட்ட இயக்கம் ஒன்றில் இணைந்த போது அவர் வைத்த இரத்தப் பொட்டுக்களை நினைவுகூர்ந்து அவருக்கு பொட்டு என்று இயக்க பெயர் வைக்கப்பட்டது. அவரே பின்னாளில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலனாய்வு துறை பொறுப்பாளராக பிரபல்யமடைந்தார்.

எனவே, ஆயுதப்போராட்டம் எனப்படுவது அதன் சரியான பொருளில் தமிழரசுக் கட்சி பெற்ற பிள்ளைதான். தான் பெற்ற பிள்ளையை தானே உரிமை கோர மறுப்பது எந்த வகை நீதி?

இனி இரண்டாவது கேள்வி, மாகாண சபை எனப்படுவது எதனுடைய விளைவு? அது ஆயுதப்போராட்டத்தின் விளைவுதான். எல்லா இயக்கங்களையும் சேர்ந்த போராளிகளும் ஆயுதம் ஏந்தாத பொது மக்களும் செய்த தியாகத்தின் கனி அது. ஆயுதப் போராட்டத்தை முடக்குவதற்காக அது உருவாக்கப்பட்டிருக்கலாம். ஆனால், ஆயுதப்போராட்டம் என்ற ஒன்று இல்லையென்றால் அதுவும் கிடைத்திருக்காது.

வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு வாக்குக் கேட்ட தமிழரசுக் கட்சி பின்னாளில் மாவட்ட அபிவிருத்தி சபைகளுக்கு கீழிறங்கியது. ஆனால், மாவட்ட அபிவிருத்தி சபைகளிலிருந்து மாகாண சபை வரை தமிழ் அரசியலை கொண்டு வந்து விட்டது ஆயுதப் போராட்டம்தான். எனவே, ஆயுதப் போராட்டத்தின் கனியாகிய ஒரு கதிரையில் அமர்ந்திருந்து கொண்டு அப்போராட்டத்தை ஒரு துடக்காக சித்திரிப்பது எந்த வகை நீதி?

இவ்விதமாக நேரடியாகவும் மறைமுகமாவும் கூட்டமைப்புக்குள் இருக்கும் ஏனைய கட்சிகளை பலவீனப்படுத்துவதன் மூலம் தமிழரசுக் கட்சியானது கூட்டமைப்பை சுவீகரிக்க முற்படுகிறதா? இப்போதுள்ள நிலைமைகளின் படி வீட்டுச் சின்னத்தையும் கூட்டமைப்பு என்ற பெயரையும் பிரிப்பது தற்கொலைக்கு ஒப்பானது. அடுத்த ஆண்டு ஒரு தேர்தல் ஆண்டாக இருக்கக்கூடும் என்பதால் தமிழரசுக் கட்சி அதைப் பற்றி சிந்திக்காது. இன்னொரு விதமாக சொன்னால் அப்படி சிந்திக்க வேண்டிய தேவையும் அவர்களுக்குக் குறைந்துவிட்டது. ஏனெனில், கூட்டமைப்பு என்ற பெயரின் கீழ் இப்பொழுது தமிழரசுக் கட்சியே ஆதிக்கம் செலுத்துகிறது.

கடந்த ஐந்தாண்டுகளாக தமிழரசுக் கட்சியின் மேலாண்மை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கூட்டமைப்பை தமிழரசுக் கட்சி சுவீகரிப்பதால் அதற்கு நன்மைகளே அதிகம். ஒருபுறம் மிதவாத பாரம்பரியத்தின் தொடர்ச்சி என்று சொல்லிக் கொள்ளலாம். இன்னொரு புறம் ஆயுதப் போராட்டத்தின் மிச்சங்களாக கட்சிக்குள் காணப்படுவோரை பயன்படுத்தி தேர்தல்களில் வெற்றி பெறலாம். அதாவது, பிழிவாகச் சொன்னால் தமிழரசுக் கட்சி தன்னை குறிப்பிடத்தக்க அளவிற்கு பலப்படுத்திக் கொண்டுவிட்டது எனலாம்.

ஆனால், இப்பொழுது தமிழ் மக்களின் உடனடித் தேவை அதுவா?

நிச்சயமாக இல்லை. ஒரு கட்சியை பலப்படுத்துவது தமிழ் மக்களின் உடனடித் தேவையன்று. மாறாக ஆகக்கூடிய பட்ச ஐக்கியத்தை பலப்படுத்துவதும், அரசை அனைத்துலக அரங்கில் தனிமைப்படுத்துவதுமே இப்போதுள்ள உடனடித் தேவைகளாகும். மாவை சேனாதிராஜா காந்திக் குல்லாயும் மாலையுமாக ஊடகங்களுக்கு காட்சி கொடுக்கிறார். நாட்டுக்குள்ளும் நாட்டுக்கு வெளியிலும் அவருக்கு விழா எடுத்து தலைப்பாகை வைத்து வரவேற்பு கொடுக்கப்படுகிறது. நாடகப் பாணியிலான இந்த அரசியல் அரங்கேறிக் கொண்டிருக்கும் அதே அரங்கில்தான் வெளிச் சாட்சிகள் அற்ற போர் ஒன்றின் உட்சாட்சிகளை தொகுக்கும் ஓர் அனைத்துலக பொறிமுறையும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. அவ்வாறு சாட்சியங்களை பதிவுசெய்வதற்கான கால எல்லை இம்மாத இறுதியுடன உத்தியோகபூர்வமாக முடிவடைகிறது.

ஈழத்தமிழ் அரசியலோடு தொடர்புடைய முக்கியமான ஓர் அனைத்துலக முன்னெடுப்பு அது. கடந்த ஐந்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மிக முக்கிய நகர்வு அது. மூன்று ஜெனிவா கூட்டத் தொடர்களினதும் முதற் கட்ட விளைவும் அது. அது ஒரு தொடக்கம்தான். ஆனாலும், அத்தகைய மிக வாய்ப்பான ஓர் அனைத்துலக செயற்பாட்டிற்குச் சமாந்தரமாக உள்நாட்டில் எதையாவது செய்திருந்திருக்க வேண்டும். மிகப் பெரிய மக்கள் ஆணையைப் பெற்ற கூட்டமைப்பே அதை முன்னெடுத்திருக்கவும் வேண்டும். கடந்த ஆண்டு ஜெனிவாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது சுமந்திரன் அதை தங்களுடைய சாதனை என்பது போல வர்ணித்தார். ஆனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அத்தீர்மானத்திலுள்ள குறைகளை சுட்டிக்காட்டி அது போதாது என்று கூறியது.

அத்தீர்மானத்தை தமது சாதனையாக காட்டிய கூட்டமைப்பே அத்தீர்மானத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட விசாரணைக் குழுவின் உள்நாட்டு முகவர் போல தொழிற்பட்டிருந்திருக்க வேண்டும். இதில் பாதுகாப்பு பிரச்சினைகள் உண்டுதான். சாட்சிகளை பாதுகாக்கும் சட்ட அமைப்புக்கள் பலமாக இல்லைதான். ஆனால், கூட்டமைப்பின் உயர் பீடத்திலிருப்பவர்கள் ஆயுதப் போராட்டத்தோடு தொடர்பற்றவர்களாக தங்களை காட்டிக்கொள்கிறார்கள். அவர்கள் சட்டத் துறையைச் சேர்ந்தவர்களாகவும் காணப்படுகிறார்கள். அதனால், மனித உரிமைகள் ஆணையகத்தின் விசாரணைகளுக்கு அனுசரணை செய்வதால் ஒப்பீட்டளவில் கூட்டமைப்புக்கே குறைந்தளவு பாதுகாப்புப் பிரச்சினைகள் வரும்.

மேற்படி விசாரணைகளுக்கு உதவுவது என்பதையே உள்நாட்டில் ஒரு போராட்ட வடிவமாக முன்னெடுத்திருக்கலாம். அல்லது உள்நாட்டில் அதற்குரிய ஓர் அரசியற்சூழல் இல்லை என்பதையாவது ஒரு பிரச்சாரப் பொருளாக ஒரு விவகாரமாக அனைத்துலக அரங்கில் முன்னெடுத்திருக்கலாம். அனைத்துலக சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்குரிய மிக அரிதான வாய்ப்புக்களில் இதுவுமொன்று.

தமிழரசுக் கட்சி அதன் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் நிரூபித்துக் காட்டியிருக்க வேண்டிய மிக முக்கியமான தருணங்களில் இதுவுமொன்று. அமைதியான கடல் சிறந்த படகோட்டிகளை உருவாக்குவதில்லை என்று ஒரு பழமொழி உண்டு. ஆபத்தான போராட்டங்களே சிறந்த தலைமைத்துவங்களை செதுக்கி எடுக்கின்றன. மிளிரச்செய்கின்றன. ஆனால், சாட்சியங்களுக்கு பாதுகாப்பில்லை என்று கூறுவதன் மூலம் சாட்சி கூற வருபவர்களையும் மறைமுகமாக பயமுறுத்தும் ஒரு போக்கே வெளியில் தெரிகிறது.

அதேசமயம், ஜெனிவாவில் தீர்மானத்தை விமர்சித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோ உள்நாட்டில் ஆகக்கூடிய பட்சம் ஆபத்தை எதிர்கொள்கிறது. கூட்டமைப்பின் சில பிரமுகர்கள் சிறு தொகுதி சாட்சியங்களை சேகரித்து அனுப்பியிருப்பதாக ஒரு தகவல் உண்டு. ஆனால், இது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி செய்திருப்பவற்றோடு ஒப்பிடுகையில் அற்பமானதே.

கூட்டமைப்பு உறுப்பினர்கள் இது தொடர்பாக கட்சித் தலைமைப் பீடத்திடம் கேள்வி கேட்டபோது நடைமுறைச் சாத்தியமான பதில்கள் எதுவும் தரப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. சாட்சியங்களைப் பதிவு செய்யும் கால எல்லை மேலும் நீடிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டதாம். ஆனால், இம்மாத முடிவுடன் அக்கால எல்லை உத்தியோகபூர்வமாக முடிவடைகிறது. உள்நாட்டிலிருந்து மேலும் புதிய சாட்சியங்களை தொகுத்து அனுப்ப முடியுமாக இருந்தால் ஆணைக்குழுவானது அதன் கால எல்லை முடிந்த பின்னரும் சாட்சியங்களை ஏற்றுக்கொள்ளும் என்று ஐ.நா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உள்நாட்டிலிருந்து குறைந்தளவு சாட்சியங்களே கிடைத்திருப்பதாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

வெளிச்சாட்சிகளற்ற போர் ஒன்றின் உட்சாட்சிகளை தொகுக்கும் ஓர் அனைத்துலக விசாரணை பொறிமுறையானது உத்தியோகபூர்வமாக இம்மாதத்துடன் முடிவடைகிறது. இப்படிப்பட்ட நிர்ணயகரமான ஒரு காலப்பகுதியில் தமிழ் மக்களின் தலைவர்கள் கட்சிகளை பலப்படுத்துவதிலும், காந்திக்குல்லாயும் மாலையுமாக வரவேற்பு உபசாரங்களில் கலந்து கொள்வதிலும் காலத்தை கடத்துகிறார்கள். அவர்கள் வீரத்தைக் காட்டியிருந்திருக்க வேண்டிய ஒரு காலகட்டம் விரைந்து கரைந்து விட்டது. சாட்சிகளை தொகுப்பதற்கு வராத வீரம் அடுத்த ஜனவரி மாதம் மட்டும் எங்கிருந்து வரும்?

தினக்குரல் பத்திரிகைக்காக நிலாந்தன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.