படம் | REUTERS/ Ibtimes

என்னுடைய குடும்பத்தில் மூன்று ஆண்கள் மூன்று பெண்களாக நாங்கள் ஆறு பேர். நான் கடைசிப் பிள்ளை. நான் வளர்ந்து வரும் காலங்களில் என்னுடைய தாயார் எனது அண்ணன்மார்களை நடத்திய விதமும் என்னை நடத்திய விதமும் மாறுபட்டதனாலேயே முதன் முதலில் நான் பெண்களின் உரிமைகள் பற்றிய கேள்வியை எழுப்ப நேர்ந்தது. அண்ணன்மார்கள் சைக்கிளை எடுப்பார்கள். “அம்மா நான் டின்னருக்கு லேட்டா வருவன்” என்று வீட்டை நோக்கிக் கூவுவார்கள். யாரும் எந்தக் கேள்வியும் கேட்கமாட்டார்கள். அவர்கள் இரவு 10 மணிக்கும் வரலாம், அதற்குப் பிறகும் வரலாம். ஆனால், நானோ எங்கேயும் போவதாகச் சொன்னால் போதும். யாரிடம் போகின்றேன், எங்கே வீடு? அந்த வீட்டின் தொலைபேசி எண் என்ன? என்று ஆயிரம் கேள்விகள். எல்லாவற்றுக்கும் கடைசியில் மாலை 6 மணிக்கு முதல் வீட்டுக்கு வந்து விடவேண்டும் என்கின்ற கட்டளையும் வேறு. வீட்டுக்கு விருந்தினர் வந்தாலும் வராவிட்டாலும் நான் அடக்கமாக நாற்காலியில் உட்கார்ந்திருக்கின்றேனா, கட்டுப்பாடில்லாமல் சிரிக்கின்றேனா என்று கண்காணிப்பு வேறு. ஊரார் என்ன சொல்லுவார்கள் என்று அடிக்கடி வேதம் போதிக்கப்படும். கொஞ்சம் சுதந்திரமாக நடக்கும் நண்பிகள் இருந்தால் அது தீய செல்வாக்கு எனக்கூறி அவர்களின் தொடர்புகளை அறுக்கச் சொல்லி விடுவார்கள். அண்ணன்மார்கள் வீட்டுக்குள்ளே நுழையும்போதே நான் ஏதேனும் புத்தகம் வாசித்துக்கொண்டிருந்தாலும், வேறு ஏதாவது வேலை செய்தாலும் உடனேயே அவர்களுக்கு தேனீர் போடவும் வேறு ஏதாவது செய்து கொடுக்கவும் கேட்க கேள்வியின்றி விரட்டப்படுவேன்.

நாளும் பொழுதும் இத்தகைய முறையிலான நடத்தைகள் ஆண்கள் மத்தியிலும் பெண்கள் மத்தியிலும் வழக்கப்படுத்தப்பட்டால் எப்படி வளருவார்கள்? பெற்றோருக்குக் கீழ்ப்படிந்த பிள்ளைகளாகவும் ஊராரின் பழிச்சொல்லுக்குப் பயந்த பிள்ளைகளாகவும் பெண்கள் வளர, சுதந்திரமாக எங்கும் நடமாடி யாருடனும் திரிந்து விரும்பிய விடயங்களைச் செய்யக்கூடியவர்களாகவும் ஆண்கள் வளருகின்றனர். இதனைப் பற்றிக் கேட்டால், பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்பதனால் அவர்களைக் கட்டுப்பாட்டுடன்தான் வளர்க்க வேண்டும் என்கிற பதில் வரும். பெண்களுக்கு அச்சுறுத்தலாக வருபவர்களும் ஆண்கள்தானே? அத்தகையவர்களாக ஆண்களை வளர்த்து விட்டு பெண்களைப் பூட்டிவைப்பதற்கு முயல்கின்றது சமூகம். இதனைத்தான் இந்தத் தடவை தனது சுதந்திர தின உரையில் இந்தியப் பிரதமர் மோடி குறிப்பிட்டிருக்கின்றார். “ஒவ்வொரு பெற்றாரும் தமது பெண் பிள்ளைகள் மீது இடும் கட்டுப்பாடுகளைத் தமது ஆண் பிள்ளைகள் மீதும் விதிக்க வேண்டும்” என்கின்றார். “இன்று பெண்கள் மீதான வன்புணர்ச்சி சம்பவங்களைப் பற்றிக் கேள்விப்படும்போது, எமது தலைகளை வெட்கத்தில் தொங்கப்போட வேண்டும். ஒரு பத்து வயதுப் பெண் பிள்ளை, இருக்கும் வீட்டில் பெற்றோர் அவள் எங்கே போகிறாள், அவள் எப்பொழுது திரும்பி வருகின்றாள், அவள் போய்ச் சேர்ந்த பின்பு தான் வந்து சேர்ந்துவிட்டேன் என தொலைபேசி மூலம் தெரிவிக்க வேண்டும் என எத்தனை கேள்வி கேட்கின்றனர். ஆனால், நீங்கள் உங்கள் மகன்மார்களை எங்கே போகின்றனர், ஏன் போகின்றனர், யார் அவர்களுடைய நண்பர்கள் என்று எப்பொழுதாவது கேட்டிருக்கிறீர்களா? இந்தக் குற்றங்களைச் செய்பவர்களெல்லாம் யாரோ பெற்ற மகன்மார்கள்தானே” என்று அவர் கேட்டிருக்கின்றார். “தங்களது மகள்மார்களின் மீது கட்டுப்பாடுகளை விதிப்பது போலவே மகன்மார்களையும் கண்காணிக்க வேண்டும்” என்று கட்டளையிட்டிருக்கின்றார்.

மிக முக்கியமான சமூகப் பிரச்சினையொன்றினை பிரதமர் மோடி எடுத்திருக்கின்றார். பெண்கள் மீதான வன்முறைச் சம்பவங்களைப் பற்றி எவ்வளவு ஆட்சேபனைகளை வெளியிட்டாலும் அச்சம்பவங்கள் பெருகின்றதேயன்றி குறைவதை நாம் பார்ப்பதில்லை. இதில் ஈடுபடும் குற்றவாளிகள் அனைவரும் ஆண்களே. அதனால், ஆண்களை நாம் வளர்க்கும் முறைகள் பற்றி சிந்திக்க வேண்டியவர்களாகின்றோம். வளர்ப்பில் மட்டுமன்றி கலாசார ரீதியாகவும் ஆண்களுக்கு சமூகம் எதனையும் செய்யும் சுதந்திரத்தினை வழங்குகின்றது. சேறு கண்ட இடத்தில் மிதித்து, தண்ணீர் கண்ட இடத்தில் கழுவவும் அவர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கின்றது. முள்ளில் சேலை பட்டாலும் சேலை முள்ளின் மீது பட்டாலும் சேலைக்குத்தான் பாதிப்பு என ஆண்களை முள்ளாகவும் பெண்களை சேலையாகவும் உருவகிக்கப்படுகின்றது. இச்சமூக விழுமியங்களை அகப்படுத்துவதனால் எந்தப் பெண்ணும் தமது நுகர்வுக்குத் தகுந்தவர்கள்தான் என்கின்றது போல ஆண்கள் நடக்கத் தலைப்படுகின்றனர். பேருந்துகளிலும், பொதுவிடங்களிலும் பெண்கள் மீது இம்சைகளை இழைப்பதும் இதனால்தான். இதைச் செய்வதில் படித்தவர்கள் படிக்காதவர்கள் என்கின்ற வேறுபாடே கிடையாது. அதற்கு எனது சொந்த வாழ்விலும் ஓர் உதாரணம் உண்டு. நான் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில், அங்கு விடுதியில் தங்கிப் படித்த எனது சக ஆண் மாணவர்களில் சிலர் ஒவ்வொரு இரவும் 9.00 மணிக்கு பல்கலைக்கழகத்திலிருந்து பஸ் பிடித்து கல்கிஸ்ஸவுக்குச் சென்று, அடுத்த பஸ்ஸைப் பிடித்து திரும்பி வருவார்கள். இதனைக் கேள்விப்பட்டு மற்ற மாணவிகளுக்கு ஒரே குழப்பம். விசாரித்துப் பார்த்தால் இரவு 9.00 மணிக்கு பிலியந்தலையில் உள்ள ஆடைத் தொழிற்சாலையின் பெண் தொழிலாளிகள் தமது இரவு வேலை முடித்து வரும் வேளை அதுவென்பதனால் பேருந்துகளெல்லாம் நிரம்பி வழியும். அந்த நேரத்தில் ஏறினால் சன நெருக்கத்தில் பெண்களுடன் உரசி நிற்கலாம் என்பதே பிரதான காரணம் என்று தெரிந்து கொண்டோம். உண்மையில் எங்கள் நண்பர்கள் சார்பில் அன்று பிரதமர் மோடியைப் போலவே நாமும் தலை குனிந்து நின்றோம்.

கிராமங்களில் சிறு கடன் திட்டங்களைச் செயற்படுத்துவோரும் எந்த வேளையும் பெண்களைப் பயனாளிகளாகக் குறித்தே பணி செய்கின்றனர். அதன் காரணத்தைக் கேட்டால், பெண்கள் அவப்பெயருக்குப் பயந்தவர்களாதலினால் எடுத்த கடனை ஒழங்காகக் கட்டவே முயற்சிப்பர் என்று பதில் வரும். உண்மைதான். நல்லபெயர் வாங்குவது பெண்களுக்கே முக்கியத்துவப் படுத்தப்படுகின்றது. அந்த நல்ல பெயரில்தான் குடும்ப மானமே தொங்கும். குறிப்பாக அவர்களுடைய பாலியல் நடத்தை மிகவும் முக்கியப்படுத்தப்படுகின்றது. ஒரு பெண் அதில் சமூகத் தரங்களிலிருந்து சற்றேனும் தவறினாலும் ஒட்டு மொத்த சமூகத்திலிருந்தே ஒதுக்கப்படுகின்றனர். ஆனால், ஆண்களுக்கு சமூகத்தின் நல்ல பெயரை வாங்குவது முக்கியமில்லை. அவர்கள் குடித்து வெறித்து பாதையோரமாக விழுந்தும் கிடக்கலாம். அது செய்வதனால் அவர்களுக்குரிய மரியாதை எங்கும் குறையாது. அவர்கள் பாலியல் குற்றங்களைப் புரிந்து விட்டும் ஊரில் பாதுகாப்பாகத் திரிந்து வரலாம். இந்தத் தத்துவத்தில் நாம் எமது ஆண் பிள்ளைகளை வளர்த்தால் சமூகத்தில் வன்முறைதானே எஞ்சும்?

இதனால்தான்தாய்மார்களை நாம் எங்கும் சந்திக்கும் வேளைகளில் இரு விடயங்களை வலியுறுத்துகின்றோம். ஆண் பிள்ளைகளைப் பெண் பிள்ளைகளை வளர்ப்பது போல் வளர்க்க முயற்சி செய்யுங்கள் என்பது ஒன்று. அடுத்தது, திருமணப் பேச்சுக்கள் நடைபெறும்போது மணமகன் குடிப்பாரா என்று விசாரிப்பது போல் அவருடைய பாலியல் நடத்தை எப்படிப்பட்டது என்பதனையும் விசாரியுங்கள் என்பதே. இப்பொழுதெல்லாம் நாம் பாலியல் நடத்தை பற்றி பெண்களைப் பற்றி மட்டும்தானே கண்காணிக்கின்றோம்? எமக்கு வரப்போகும் மாப்பிள்ளை பொதுவிடங்களிலும், பேருந்துகளிலும் பெண்களைச் சுரண்டியவராவென நாம் விசாரிப்பதில்லையே. இத்தகைய விழுமியங்களுடன் சமூகம் இயங்கத் தொடங்கிய அன்றே ஆண்களின் நடத்தைப் பண்புகளும் மாற்றமடையத் தொடங்கும். இவ்வாறாக, ஓரிரண்டு சந்ததிகளினூடாக நாம் ஆண்களைக் கட்டுப்படுத்தி வளர்ப்பதன் மூலமேயே பெண்களுக்கு பாதுகாப்பான சமூகத்தினை நாம் உருவாக்கமுடியும். பெண்களுக்குப் பாதுகாப்பான சமூகம் உருவாகிய பின்னர்தான் நாம் எமது பிள்ளைகளை, அவர்கள் ஆண் பிள்ளைகளோ பெண் பிள்ளைகளோ, முழுச் சுதந்திரத்துடன் வளர்க்கலாம்.

பிரதமர் மோடி இந்த முக்கிய கருத்தினைத் தமது பேச்சுடன் மட்டும் விடாமல், அதனை ஒவ்வொரு பெற்றோருக்கான விழிப்புணர்வு நடவடிக்கையாகவும் செயற்படுத்த வேண்டும். வைத்தியசாலைகளில் மகப் பேற்றுக்காக வரும் பெற்றோர்களுக்கு பிள்ளை வளர்ப்பினைப் பற்றிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும். வெகுசன ஊடகங்கள் மூலம் விளம்பரங்களாகவும் அறிவூட்டல் நிகழ்வுகளாகவும் கட்டுரைகளாகவும் இப்பொருள் பேசப்பட வேண்டும். அதனை இந்தியாவில் செயற்படுத்தினால் அது சகல நாடுகளுக்கானதுமான முன்னுதாரணமாகத் திகழும்.

தினக்குரல் பத்திரிகைக்காக சாந்தி சச்சிதானந்தம் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.