படங்கள் | கட்டுரையாளர்

அது ஒரு சிறு தனித்தீவு. சுற்றியும் உப்புக்கடல் அந்தத் தீவைக் கரைத்துக் கொண்டிருக்கிறது. அதற்குள் ஒரு மூலையில் மக்கள் வாழும் கிராமம் இருக்கின்றது. ஆங்காங்கே வீடுகள். வசதி படைத்த மக்கள் குடியிருப்புகள், சில இடங்களில் நெருக்கமாகவும், இன்னும் சில இடங்களில் ஐதாகவும் இருந்தமைக் கான எச்சங்கள் உண்டு. கடந்த 100 வருடங்களுக்குள் வரும் ஏதாவது ஒரு ஆண்டில் அங்கு மனிதர்கள் வாழ்ந்திருக்கக்கூடும். செல்வச் செழிப்புடனும், சீருடனும்தான் அவர்கள் வாழ்ந்திருக்கின்றனர் என்பதற்கு இங்கு சிதைந்து கிடக்கும் வீடுகளும், மாடி மனைகளும் தக்க சாட்சி.

தீவுக்குள்ளால் வரும் முட்புதர்களையும், எஞ்சிய மிருகங்கள் நீருக்காகவும், உணவுக்காகவும் அலையும் கால்தடயப் பாதைகளையும், பழைய தார் வீதிகளையும் இணங்கண்டு நடந்து கிராமத்துக்குள் ஏதாவது ஒரு மூலையால் உள்நுழையலாம். பயங்கரமான பாழடைந்த வீடுகளே வரவேற்கின்றன. ஆங்காங்கே வெட்டைகளில் மாடுகள் செத்துக் கிடக்கின்றன. மாட்டுப் பிண நாற்றம் மூக்கைப் பொத்திக் கொள்ள வைக்கிறது. இன்னும் சில இடங்களில் இறந்த ஆடுகள், மாடுகள் தீயிட்டுக் கொழுத்தப்பட்டற்கான தடயங்களும் அந்தத் தீவு முழுதும் பார்க்கக்கூடியதாகவுள்ளது. சில இடங்களில் மாடுகள் மரணத்தின் கடைசி வாசலில் நின்று துடித்துக் கொண்டிருக்கின்றன. கிடைக்கின்ற கொட்டன்களால் இரண்டு கொம்புகளுக்கும் நடுவில் ஓங்கி ஒரே அடியாய் அடித்துக் கொன்றுவிட்டு கடந்து போகுமாறு எம்மிடம் கெஞ்சிவதைப் போன்று “ம்மா” என கறகறக் குரலில் ஓலமிடுகின்றன. ஏதோ ஒரு நம்பிக்கையில் காய்ந்து சருகாகி தரையோடு ஒட்டிய புற்களை மண்ணோடு சேர்த்து வறண்டி வறண்டி சாப்பிடுகின்றன மண் தின்னிமாடுகள். இந்த நேரம் அவற்றின் வயிறுகள் வெடித்திருக்கக்கூடும். மண்ணால் நிரம்பிய வயிறுகள் ஒவ்வொரு மாட்டின் வயிற்றின் உள்ளும் பெரும் பூமிப் பந்தை வைத்திருந்தன.

Drought 3

கோரமான இந்தக் காட்சிகள் அந்தக் காய்ந்த நிலம் முழுதும் காணக்கிடைப்பதால் மாட்டுப் பிணங்கள் மீதான ஈர்ப்பு வெகு சீக்கிரமே சலிப்புத் தட்டிவிடுகிறது. எங்காவது மனிதத் தடயங்கள் இருக்கவேண்டும். தேடிக்கண்டுபிடி எனக் கால்களுக்குத் தீவிரமாகத் தகவல் அனுப்புகின்றது மூளை.

ஆள்நடமாட்டத் தடயமுள்ளத் தெருமுனையில் பல வர்ண கான்கள் (நீர்க் கொள்கலன்கள்) நேர்த்தியாக, நெருக்கமாக அடுக்கப்பட்டிருக்கின்றன. அதுவொரு நீர்த்தாங்கி. ஆனால், அதற்குள்ளும், அதனை சூழவுள்ள இடங்களிலும் எம் உடலில் பிசுபிசுக்கும் வியர்வையைத் தவிர மருந்துக்குக்கூட நீர் எடுக்க முடியாது. கொதிக்கின்ற வெயிலில் கருகிய சறுகுகள் பற்றியெரியத் தயாராகின்றன. அவ்வளவு வெயில். அந்த இடத்துக்கு அருகில் சென்றால், மனிதப் பேச்சரவங்கள் கேட்கின்றன. சற்றுத் தொலைவில் ஒரு தொகை மனிதர்கள். ஆண்கள், பெண்கள், அதிகளவு சிறார்களுமாக ஒவ்வொருவர் நிழலையும் இறுக்கமாக ஆக்கிரமித்து அமர்ந்திருக்கின்றார்கள். அனைவரிலும் வெயிலின் கருமை தெரிகிறது. கண்களிலும், முகத்திலும் வெயிலேற்றிய வாட்டம் நிரந்தரமாகவே இடம் பிடித்திருக்கிறது. சில குழந்தைகளுக்கு வெயிலிலிருந்து தற்காலிக பாதுகாப்பை அம்மாக்களின் சேலைத்துண்டுகள் தருகின்றன. அந்தத் தீவில் நிழல்தர ஒரு மரம்கூடவா இல்லை என நீங்கள் நினைக்கலாம். நீங்கள் நினைப்பது போல பனையும், தென்னையும், பயன்தந்து இப்போது பயன்தராத ஏனைய மரங்களும் உண்டு. ஆனால், அவை எதிலுமே இலைகள் இல்லை. எல்லாம் கருகி நீண்ட நாட்களாகிவிட்டன. இலைகளற்ற மொட்டை மரங்களும் பறட்டைக்காட்டில் முளைக்கும் முட்செடிகளும், சுடுகாட்டில் செழிக்கும் எருக்கலையும் தாராளமாய் நிற்கின்றன. பனையே கருகத் தொடங்கியிருக்கின்றதெனில் அந்தத் தீவைக் கொழுத்தும் வெயிலுக்கு என்ன பெயர் வைக்கலாம்?

அவர்கள் ஆபிரிக்க நாடொன்றில் வாழ்பவர்களைப் போல நீருக்காக, நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். வாரத்தில் இரண்டு நாள்களுக்கு, அரச நிர்வாகத் தரப்பொன்று நீர் வழங்குமாம். எவ்வளவு நீரெனில் குடும்பமொன்றுக்கு ஒரு தடவையில் 20 லீற்றர்கள். ஆக குடும்பமொன்றில் 10 பேர் இருந்தாலும், 2 பேர் இருந்தாலும், வாரமொன்றுக்கு 40 லீற்றர் நீர் மட்டுமே அவர்களால் செலவிட முடியும். வாரத்துக்கு 40 லீற்றர் நீர். நமக்குப் போதுமா? நம்பமுடிகிறதா இந்த யதார்த்தத்தை?

நீர் வழங்குநர்கள் எப்போது வருவார்கள் எப்படி வருவார்கள் என்றெல்லாம் சொல்ல முடியாது. குறித்த இரு தினங்களில் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அது அவர்களையும், அவர்கள் நீரள்ளும் கிணற்றின் நீர் கொள்லளவினவைப் பொருத்தும் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால், வரவேண்டிய நேரத்தில் மட்டும் வருவதில்லை. வரும்வேளையில் வரிசையில் காத்திருப்பவர்கள் அந்த வாரத்துக்கான பாக்கியசாலிகள்.

அதையும் கடந்து, அங்கு வரிசையில் காத்திருக்கும் ஒருவரின் துணையோடு தீவுக்குள் ஆழ ஊடுறுவலாம். அந்த ஊரைக் கடந்து “கட கட மொட மொட” சத்தத்தோடு அயல் கிராமங்களுக்கு பைப் நீர் செல்கிறது. இடையிலிருக்கும் அவர்களுக்கும் அதிலொரு பகுதி நீரைத் தந்தால் மேலும் சீவிக்க முடியும் என்ற கதையைச் சொல்லியபடி வானைப் பார்க்கிறார் அந்த வழிகாட்டி. அவர் நிற்குமிடம் குடமுண்டகுளம். அந்த ஊருக்கே தொன்மையான குளம் அது. 1972ஆம் ஆண்டுக்குப் பின்னர் வற்றி வெடித்திருக்கிறது அந்தக் குளம். அதனை அண்டிய அனைத்து நிலங்களும் தோட்டங்களால் செழித்தவை என்பதற்கான பயிர்களின் அடிக்கட்டை சான்றுகளைத் தொட்டுக் காட்டுகிறார் அவர். குளத்துக்குள்ளே கிணறுதோண்டியும் நீருக்காகப் போரடியிருக்கின்றனர். அங்கு எந்தக் கிணற்றையும் ஒரு கட்டத்துக்கு மேல் ஆழமாகத் தோண்ட முடியாத அபாயம் நீடிக்கிறது. மேலும் ஆழமாகத் தோண்டினால் அருகிலிருக்கும் கடலின் உப்புத் தண்ணீர், நன்னீரோடு கலந்து ஆக்கிரமித்துக் கொள்ளும். பிறகு எந்தக் காலத்திலும், எந்தப் பெரிய மழையானாலும் நன்னீருக்கு சாத்தியமிருக்காது. அண்மையில் நட்ட பயிர்களை, தோட்டங்களைக் காட்டுகிறார். கருகி நிற்கின்றன அனைத்தும். அங்கு இனி எருக்கமிலையைத் தவிர வேறெதையும் பயிரிட முடியாதளவுக்கு நிலமும் வறண்டுவிட்டது. குளிக்க, காலையில் கழுவ, துணி துவைக்க எதற்கும் நீரில்லை என்கிறார். எல்லா குளங்களும் வானைப் பார்த்துப் பிளந்து கிடக்கின்றன.

இதற்கென்ன தீர்வு? இந்தக் கடல் நீரை நன்னீராக்கித்தாருங்கள். இங்கேயே வாழ்கிறோம். அல்லது இந்தப் பாழடைந்த வீடுகள் மட்டுமே இனி இங்கிருக்கும் என்கிறார் கடலைப் பார்த்து. நீரைத் தேடி இடம்பெயரத் தொடங்கிவிட்டோமா என்ற அச்சம் மேலிட “குடிக்க தண்ணி தாங்கோ” என்று கேட்க வாயெடுத்து, குற்ற உணர்வால் மனங்கோனிக் கொள்கிறோம். நானும் ஏதாவதொரு மரத்தை எப்போதாவது கொன்றிருப்பேன்…

“…மழை மட்டுமா அழகு? சுடும் வெயில்கூட ஒரு அழகு…” உன்னிகிருஸ்ணனின் மகள் பாடிய இனிய இசை ஹெட்செற் மூலமாக காதுக்குள் இனிக்க, கருகும் தீவுகளை இணைக்க, சீனாக்காரன் வேகமாக அமைக்கும் வீதியைக் கடந்து அந்தப் பயணம் யாழ். நகரின் எல்லை முடியுமிடத்தில் முடிகிறது. குளிரூட்டியில் வைக்கப்பட்ட கூலான ஒன்றரை லீற்றர் தண்ணீர் போத்தலை அறுபது ரூபாய்கள் கொடுத்து வாங்கி, அப்படியே அண்ணார்ந்து வானத்தைப் பார்த்து, முகத்தில் ஊற்றி, அந்தத் தீவில் பட்ட வெயில் தீயை அணைத்துக் கொள்கிறேன். வெயில் குரூரமானது.

அனல் கொதிக்கும் அந்தத் தனித்தீவுக்குப் பெயர் சரவணை. யாழ்ப்பாணத்திலிருந்து 10 கிலோமீற்றர்களில்தான் அந்த அபாயம் இருக்கிறது.

நன்றி: உதயசூரியன்

ஜெரா

Jera