படம் | ibtimes

பட விளக்கம் | ஜூ லை 10, 2011, சேர்பெனிக்கா அருகே, பொட்டோகரி நினைவு மையத்தில் ஒரு பெரும் சவ அடக்கத்துக்காக தயார் செய்யப்பட்ட பிரேதப் பெட்டிகள் முன்பாக பெண்கள் துக்கம் அனுஷ்டிக்கின்றனர். இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஐரோப்பாவின் மிக மோசமான படுகொலைச் சம்பவமான, ரட்கோ மெலாடிக்கினால் கட்ட ளையிடப்பட்ட பொஸ்னிய – சேர்பிய படைகள் 8,000 முஸ்லிம் ஆண்கள் மற்றும் சிறுவர்களைப் படுகொலை  செய்து பெரும் மனிதப் புதைகுழிகளில் புதைத்த சம்பவத்தின் ஆண்டு நிறைவான, ஜூலை 11ஆம் திகதி,  சேர்பெனிக்கா படுகொலையில் உயிரிழந்து அண்மையில் இனங்காணப்பட்ட 614  பேர்களின் உடல்கள்,  அடக்கம்  செய்வதற்காக வைக்கப்பட்டிருக்கின்றன.

ஸ்லோபோடன் மிலோசவிச். 1989 முதல் 1997 வரை சேர்பியாவின் ஜனாதிபதியாகவும், 1997 முதல் 2000 வரை யூகோஸ்லாவியாவின் ஜனாதிபதியாகவும் இருந்தவர். இவர் யூகோஸ்லாவியா நாட்டின் பொஸ்னியா–ஹேர்ட்ஸகொவினா மக்களுக்கெதிராக யுத்தத்தினை மேற்கொண்டைமை மட்டுமன்றி அப்பிரதேசத்தில் வாழ்ந்த பொஸ்னிய முஸ்லிம்கள் முகம்கொடுத்த இனச்சுத்திகரிப்பின் சூத்திரதாரி எனவும் கருதப்படுபவர். நான்கு வருடங்களுக்கு மேலாகத் தொடர்ந்த இந்த யுத்தம் கிட்டத்தட்ட 68,000 பொஸ்னிய முஸ்லிம்களைக் காவுகொண்டது. அவர்களின் சமூகத்தைச் சேர்ந்த 25,000க்கு மேற்பட்ட பெண்கள் திட்டமிட்ட பாலியல் வல்லுறவுக்குள்ளாவதற்கான காரணமாகிற்று. 44 மாதங்கள் பொஸ்னியாவின் தலைநகரமான சாராயெவோ முற்றுகையிடப்பட்டிருந்தது. இங்கு உணவும் மருந்துமின்றி இறந்தவர்கள் ஏராளமானோர். ஏனையோர் தொடாந்த ஷெல்லடிகளில் இறந்தனர்.  ஸ்ரெப்ரனிகா படுகொலை போன்று பல படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன. ஐரோப்பாவிற்கு நடுவே, இவ்வளவு நீண்டகாலம் நிகழ்ந்து வந்த அழிவினைத் தடுத்து நிறுத்துவதில் மேற்குலக நாடுகள் மிகுந்த தயக்கம் காட்டின. பொஸ்னியாவில் வாழ்ந்த ஐரோப்பிய முஸ்லிம்கள் அழிவதில் மேற்கு நாடுகளின் நலனும் உள்ளடங்கியிருந்தது என்பது அன்றைய பல அரசியல் அவதானிகளின் கருத்தாக இருந்தது. கடைசியில் நேட்டோ அமைப்பு ஒரு வகையாக தலையை நுழைத்து யுத்த நிறுத்தத்தினை ஏற்படுத்தியது மட்டுமல்ல, மிலோசவிச்சை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னிலையில் போர்க்குற்ற விசாரணைகளுக்காக நிறுத்தியது. இந்த வழக்கில் மிலோசவிச்சுக்கு எதிரான சாட்சியங்களில் அனேகமானவை அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏயினால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது எங்களுடைய கதை போல் இருக்கின்றதல்லவா? இன்னும் போர்க்குற்ற விசாரணைகள் நிலைக்குப் போகவில்லை என்பது மட்டுமே.

கிட்டத்தட்ட தென்னாசியப் பிராந்தியத்தைப் போலவே, ஐரோப்பாவும் ஏராளமான சிறுபான்மைத் தேசியங்கள் வாழும் பிரதேசமாகும். தேசிய அரசு தோன்றிய காலந்தொட்டு கடந்த ஐந்து நூற்றாண்டுகளுக்கு மேலாக அது பல யுத்தங்களைக் கண்டதும் இக்காரணத்தினால்தான். காலப்போக்கில் ஒவ்வொரு தேசியங்களும் மெல்ல மெல்ல ஒவ்வொரு விதமான சுயாட்சியைப் பெற்றுக்கொண்டு செல்ல, கம்யூனிஸ நாடுகளான கிழக்கு ஐரோப்பிய நாடுகளே இன்னமும் பழைய ஒற்றையாட்சியை தக்கவைத்திருந்தன. சோவியத் யூனியனின் உடைவுடன் அதன் கீழிருந்த தேசியங்கள் ஒவ்வொன்றும் பிரிந்து சுயாட்சி பெற்றுக்கொண்டு வந்தன. இந்தப் போக்கில் யூகோஸ்லாவியா சோவியத் யூனியன் சாம்ராச்சியத்தின் கடைசி அத்தியாயம் என்று கூறலாம். சோவியத் யூனியனும் அதன் செயற்கைக்கோள் அரசுகளும் உடைந்து பலவீனமாக வேண்டும், அங்கு கம்யூனிஸம் மீண்டும் தலையெடுக்க விடக்கூடாது என மேற்குலக நாடுகள் உறுதிபூண்டதால் எங்கெல்லாம் தோன்றினவோ அங்கெல்லாம்  தனிநாட்டுக் கோரிக்கைகளுக்கு அவை உடனடி ஆதரவு வழங்கின. 1989 முதலான அந்த நாட்களில் ஒவ்வொரு வருடமும் எமது பூகோளப் படம் மாற்றி வரையப்படவேண்டிய தேவை இருந்தது.

பிரதானமான ஐந்து தேசியங்களை உள்ளடக்கியிருந்தது முன்னைய யூகோஸ்லாவியா. இங்கும் சோவியத் யூனியனின் செல்வாக்கு மழுங்கவாரம்பிக்க, அதனால் மத்திய அரசு பலவீனமாக,  அங்குள்ள தேசியங்களெல்லாம் தமக்கென சுயாட்சியினைக் கோர ஆரம்பித்தன. மிலோசவிச் அதிகாரங்களை மத்தியப்படுத்தி ஒரு சர்வாதிகார அட்சியை தாபிக்க முயன்றதும் இங்கு பிரிவினை கோரிக்கைகள் எழுந்ததற்கான இன்னுமொரு காரணமாகும். இதனால் 1992 முதல் அங்கு வாழ்ந்த அல்பேனியர்களுடனும் பின்பு பொஸ்னியர்களுடனும் யுத்தம் மூண்டது. 1997ஆம் ஆண்டு சமாதான உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டு யூகோஸ்லாவியக் குடியரசு உருவாக்கப்பட்டு அதன் தலைவராக மிலோசவிச் தெரிவு செய்யப்பட்டார்தான், ஆயினும், சமாதான உடன்படிக்கை தனது நிபந்தனையின் அடிப்படையில்தான் செயற்படுத்தப்படவேண்டும் என்கின்ற கொள்கையை அவர் இறுகப் பற்றியிருந்தார். முழுமையான அதிகாரப்பகிர்வினை எதிர்த்தார். அவர் பெரும்பான்மையினத்தவரான சேர்பியர்களின் தேசிய வாதத்தின் சின்னமாகத் திகழ்ந்ததனால், பொஸ்னிய யுத்தத்துக்குப் பின் அவர்கள் மத்தியில் மிகுந்த பிரபல்யம் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்ததக்கது. மிலோசவிச் சோவியற் ரஷ்யாவினை ஆதரித்து அதன் அணியில் இருந்ததுதான் அவர் மேற்கு நாடுகளுக்கு இவ்வளவு உறுதியாக எதிர்ப்பு தெரிவிப்பதற்கான காரணமாகும். யூகோஸ்லாவியாவின் உடைவினையும், அதன் பின்பு தோன்றுகின்ற புதிய நாடுகள் தனது செல்வாக்கின் கீழ் இயங்க வேண்டும் எனவும் எதிர்பார்த்து நின்ற அமெரிக்காவிற்கும் அதன் கைப்பொம்மையான நேட்டோவிற்கும் இவருடைய கொள்கைகள் பெருந்தடையாயின. இப்பொழுது அவரை வைத்திருப்பது அமெரிக்க நலன்களுக்குப் பிரதிகூலமானதாக (​Liability) மாறியது.

2000ஆம் ஆண்டு மிலோசவிச்சுக்கு எதிரான கிளர்ச்சிகள் சேர்பியாவில் உருவாகின. இக்கிளர்ச்சிகளின் பின்னணியில் சி.ஐ.ஏ. உளவுப்படை இருந்ததாகப் பல அரசியல் கட்சிகளின் வாக்குமூலங்கள் தெரிவிக்கின்றன. இப்பொழுது மத்தியகிழக்கில் அது செயற்படுத்துவதுபோல இங்கும் அல்பேனிய இராணுவக் குழுக்களை ஆதரித்து மிலோசவிச்சின் ஆட்சிக்கு எதிராகத் தொழிற்படுவதற்கு சி.ஐ.ஏ. ஆதரவு வழங்கியது. அந்த ஆண்டு மிலோசவிச்சின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, அடுத்தடுத்த வருடங்களிலேயே அவர் போர்க்குற்ற விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டார்.  மிலோசவிச்சுக்கு எதிரான இப்போர்க்குற்ற விசாரணைகள் ஒரு வகையில் பார்த்தால் ஓர் வரலாற்று நிகழ்வு.  பாலியல் வன்செயலானது யுத்தத்தின் பக்கவிளைவல்ல என்றும் அது போரில் உபயோகிக்கப்படும் ஒரு ஆயுதம் என அதனை ஒரு போர்க்குற்றமாக சட்டரீதியாக ஒரு சர்வதேச நீதிமன்றம் விபரித்தது இங்குதான் முதல் தடவையாகும். பல வருடகாலங்களாக உலகெங்குமுள்ள பெண்கள் அமைப்புக்கள் இது தொடர்பாக மேற்கொண்ட போராட்டங்கள் இங்குதான் வெற்றி கண்டன. கடைசியில், வழக்கு முடிவடையும் முன்னரேயே மிலோசவிச் 2006ஆம் ஆண்டு சிறையில் மாரடைப்பினால் இறந்தது வேறு விடயம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கிட்டத்தட்ட மிலோசவிச்சின் நிலையில் அகப்பட்டிருக்கின்றார் என்றுதான் கூற வேண்டும். பொதுநலவாய மாநாட்டுக்கு வருகை தந்த பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன், போர்க்குற்ற விசாரணைகளுக்காக 2014ஆம் ஆண்டு மார்ச் வரை காலக்கெடு விதித்துப் போயிருக்கின்றார். இம்மாதிரியான கெடுபிடியான அறிவிப்பு அமெரிக்காவின் ஒப்புதலின்றி நிச்சயமாக வெளியிடப்பட்டிருக்க முடியாது.  2009 மே மாதம் இலங்கை இராணுவப் படைகள் விடுதலைப் புலிகளைத் துவம்சம் செய்து கொண்டிருந்தபோது, மிகுந்த உற்சாகமான பரபரப்புடன் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவைப் பார்க்க வந்த முதல் வெளிநாட்டு அதிதி அன்றைய இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பிளேக்தான். இனி எங்கள் இராணுவம் உங்கள் இராணுவத்திடமிருந்துதான் எதிர்க்கிளர்ச்சியினை (Counter Insurgency) எப்படிச் செய்வது என்று கற்றுக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் புகழ் மாலை சூட்டிவிட்டுப் போனார். வழி மாறாமல் உறுதியுடன் ஒரு சிறுபான்மைத் தேசியத்தின் உரிமைக்காக நின்று போராடிய விடுதலைப் புலிகளின் அழிவில் அமெரிக்காவின் நலனும் அன்று உள்ளடங்கியிருந்தது. அதனால்தான் அமெரிக்கா இலங்கை இராணுவத்துக்குப் பயிற்சிகள் வழங்க, பிரித்தானியா ஆயுதங்கள் வினியோகித்திருந்தது. ஆனால் அதே சமயம், யுத்தம் நடத்தப்பட்ட விதத்தைப் பற்றிய சகல சாட்சிகளையும் தனது செயற்கைக்கோள்கள் மூலம் படம் பிடிக்கவும் அமெரிக்கா தவறவில்லை. யுத்தம் முடிவடைந்த பின்னரும்கூட, குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்த எராளமான உடல்களை இராணுவம் பாரிய கிடங்குகள் வெட்டித் தாட்டதையும் இது படம் பிடித்து வைத்திருப்பதாக கசிந்து வரும் செய்திகள் கூறுகின்றன. தனது அமைச்சர்கள் ஈடுபட்ட ஊழல் நடவடிக்கைகள் பற்றி எமது ஜனாதிபதி கோப்புக்கள் வைத்திருப்பது போலத்தான் இதுவும். தமது சொந்த நலன்களுக்கெதிராக கொஞ்சம் இசகு பிசகாக நடந்தால்  தக்க தருணத்தில் உபயோகிக்கப்படுத்துவதற்கே இது போன்ற சாட்சியங்கள் சம்பந்தப்பட்டவர்களால் சேகரிக்கப்படுகின்றன.

அமெரிக்காவையும் மேற்குலக நாடுகளையும் பொறுத்தவரை சீனாவின் செல்வாக்குப் புலத்தில் முழுமையாக நிற்பதனால் ராஜபக்‌ஷ இசகு பிசகாக நடக்க ஆரம்பித்துள்ளார் எனக் கருதப்படுகின்றது. மிலோசவிச்சுக்கு ரஷ்யா எப்படியோ எங்கள் ஜனாதிபதிக்கு சீனா அப்படியே. சீனாவைக் கைவிடுவதே அவர் போர்க்குற்றங்களிலிருந்து தப்புவதற்கான விலையாகும். அவருடைய துரதிர்ஷ்டத்துக்கு, அதற்குள் ஆழக் காலை வைத்த அவரால் அந்த விலையைக் கொடுக்க முடியாமல் வரப் போகிறது.

அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்.

ஞாயிறு தினக்குரல் பத்திரிகைக்காக சாந்தி சச்சிதானந்தம் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.