படம் | Lakruwan Wanniarachchi/AFP/Getty Images, Aljazeera

சர்வதேச விசாரணை நடைபெற்றுக்கொண்டு இருக்கும் நிலையில் அந்த விசாரணை தொடர்பான விடயங்களை அறிந்துகொள்வதில் இலங்கை அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது. சாட்சியமளிப்பவர்கள் யார்? என்னென்ன விடயங்கள் பேசப்படுகின்றன போன்ற தகவல்களை தமது இராஜதந்திரிகள் மூலமாக பெறுவதாக ஆங்கில நாளேடு ஒன்றின் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விசாரணை முற்று முழுதாக அரசுக்கும் படையினருக்கும் எதிரானது அல்ல. அது விடுதலைப் புலிகள் மீதும் குற்றம்சாட்டக்கூடியது. ஆனால், அரசைப் பொறுத்தவரை இந்த விசாரணையின் முடிவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் படையினருக்கும் எதிராக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவுக்கான தகவல்

சர்வதேச விசாரணையின்போது இந்தியாவில் இருந்து யாரும் சாட்சியம் அளித்துவிடக்கூடாது என்பதிலும் அரசு கவனமாகவே உள்ளது. வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் புதுடில்லிக்கு சென்றபோது இந்தியாவில் இருந்து யாரும் சாட்சியாளர்களாக சென்றுவிடக்கூடாது என்ற கருத்தை முன்னிலைப்படுத்தியதாக லங்கா தீப என்ற சிங்கள நாளேட்டின் கட்டுரை ஒன்றில் கூறப்பட்டிருந்தது. அதேவேளை, சர்வதேச விசாரணையில் இந்தியாவும் பங்குகொள்ளுமாக இருந்தால் அல்லது அந்த விசாரணை இந்தியாவிலும் நடைபெற்றால் அது இந்திய பிராந்திய நலன்களுக்கு ஆபத்தானது என்ற தகவல் மன்மோகன் சிங் அரசு பதவியில் இருந்தபோது இலங்கை அரசின் மூலமாக வழங்கப்பட்டதுடன், ஒரு எச்சரிக்கையாகவும் முன்வைக்கப்பட்டது எனவும் உள்ளக தகவல்கள் கூறுகின்றன.

ஆயுதங்கள் வழங்கியமை மற்றும் புலிகளுக்கு எதிரான போரில் இந்தியா வழங்கிய அத்தனை ஒத்துழைப்புகளும் வெளிப்பட்டுவிடும் என்பதுடன், போர்க்குற்றச்சாட்டுக்கள், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் அனைத்துக்கும் இந்தியாவும் பொறுப்புச் சொல்ல நேரிடும் என்ற எச்சரிக்கைகள் மறைமுகமாக விடுக்கப்பட்டதாகவும் அறிய முடிக்கின்றது. இந்த எச்சரிக்கைகள் தகவல்கள் மன்மோகன் சிங் அரசு பதவியில் இருந்தபோது விடுக்கப்பட்டது. ஆனால், மோடி தலைமையிலான அரசு இலங்கை அரசின் இந்த எச்சரிக்கைகளை ஏற்றுக்கொள்ளுமா என்று கூற முடியாது.

தூதரகத்துடன் தொடர்பு  

அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் புதுடில்லி சென்றபோது இந்தியாவின் புதிய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சிவ்ராஜை சந்தித்து மேலே கூறிய எச்சரிக்கைகள் பற்றி கூறியிருக்க வாய்ப்பில்லை. ஆனாலும், புதுடில்லியில் உள்ள இலங்கைத் தூதுவர் ஊடாக இந்திய கொள்கை வகுப்பாளர்களுக்கு அந்த விடயங்கள் ஞாபகமூட்டப்பட்டது என்றும் – குறிப்பாக இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் சர்வதேச விசாரணை இடம்பெறாத வகையில் தடுப்பதற்கான உத்திகள் குறித்து பேசப்பட்டது என்றும் – தகவல்கள் வெளியாகியுள்ளன. மன்மோகன் சிங் அரசு போன்று மோடி அரசுக்கு இலங்கை அரசினால் மிரட்டல் விடக்கூடிய தகவல்களை வழங்க முடியாது.

ஆனாலும், இந்தியாவில் எந்த அரசு மாறினாலும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்படாது. அந்த அடிப்படையில் இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மோடி அரசும் பின்பற்றக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. இதனை சாதகமாக பயன்படுத்தியே இலங்கை அரசு சர்வதேச விசாரணை இந்தியாவில் நடைபெறுவதை தவிர்க்க முற்படுகின்றது. ஆனால், மன்மோகன் சிங் அரசுக்கு விடுத்த சண்டித்தனங்கள், எச்சரிக்கைகளை மோடி அரசுக்கு நேரடியாக விடுக்க முடியாது என்பதால், சற்று நிதானமாக விடயத்தை இலங்கை அரசு கையாளுகின்றது. தற்போது புதுடில்லியில் உள்ள இலங்கைத் தூதுவர் சர்வதேச விசாரணை இந்தியாவில், குறிப்பாக தமிழ் நாட்டில் நடைபெறாமல் தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

இந்திய கொள்கை வகுப்பாளர்கள்

இந்திய கொள்கை வகுப்பாளர்கள், இந்தியாவின் தீர்மானம் எடுப்பவர்கள் அரசியல்வாதிகள் அல்ல. அரசு மாறினாலும் அவர்கள் ஆலோசனைகளை முன்வைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுடைய தீர்மானங்களின்படிதான் இலங்கை தொடர்பான அணுகுமுறைகள் கையாளப்படுகின்றன. ஆகவே, அவர்களைச் சந்தித்து விளக்கமளிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இலங்கை வெளியுறவு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் புதுடில்லியில் உள்ள தூதரக அதிகாரிகள் தற்போது புதுடில்லியில் உயர்மட்ட சந்திப்புகளில் ஈடுபடுவதுடன், சர்வதேச விசாரணை இந்திய நலன்களுக்கு எவ்வாறான பாதிப்புகளை எதிர்காலத்தில் ஏற்படுத்தும் என்ற தகவல்களை வழங்கி வருவதாக இந்திய இணையத்தளங்கள் மூலமாக அறிய முடிகின்றது.

மன்மோகன் சிங் அரசு போன்று மோடி அரசு இலங்கை விவகாரத்தை கையாளாது என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்த்தரப்பு நம்பிக்கை வைத்திருககின்றது. ஆனால், இறுதிக்கட்ட போரில் நடைபெற்ற மனித உரிமைகள் மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பான விடயங்களில் இலங்கை மீது ஜெனீவா மனித உரிமை பேரவை குற்றம் சுமத்துவதை மோடி அரசும் விரும்பாது. ஏனெனில், இந்தியப் படையினருக்கும் அந்தப் போரில் பங்கு உள்ளது. இந்தியப் படையினர் மீது குற்றம் சுமத்தப்படுவதற்கு மோடி அரசு ஒருபோதும் இடமளியாது என தற்போது வெளியுறவு அமைச்சராக பதவியேற்றுள்ள சுஷ்மா சிவ்ராஜ் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்தபோது கூறியிருந்தார்.

சுப்பிரமணிய சுவாமி கூறியது,

இந்த இடத்தில் சுப்பிரமணிய சுவாமியின் சில நடவடிக்கைகள் மூலம் இலங்கையை போர்க்குற்ற விசாரணைகள் அல்லது அது தொடர்பான குற்றச்சாட்டுக்களில் இருந்து காப்பாற்றுகின்ற வேலைத்திட்டம் ஒன்றை மோடி அரசு செய்ய ஆரம்பித்துள்ளது. சுப்பிரமணிய சுவாமியின் பேச்சுகள் நடவடிக்கைகள் கோமாளித்தனமாக இருப்பதாக இந்திய விமர்சகர்கள் சிலரும், இலங்கையில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளும் கூறினாலும், சுப்பிரமணிய சுவாமி மூலமாக தமக்குத் தேவையான அரசியல் காய் நகர்த்தல்களை மோடி அரசு மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக, சர்வதேச விசாரணை மற்றும் இறுதிக்கட்டப் போரில் இந்தியாவின் பங்களிப்பு இருந்தது என்பதை பெருமையாகச் சொல்லுகின்ற விடயங்களுக்கு சுவாமி பயன்படுத்தப்படுகின்றார்.

ஆகவேதான், இலங்கை அரசு குறிப்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இந்தியா தொடர்பாக எதிர்ப்பார்க்கின்ற சில அரசியல் காய்நகர்த்தல்கள் ஆரோக்கியமாக அரங்கேறுகின்றன. மோடி அரசுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கையாளுகின்ற நிதானமான இராஜதந்திரம் மன்மோகன் சிங் அரசிற்கு நேரடியான எச்சரிக்கை விடுத்து சாதித்ததை விட இன்னும் பலமடங்கு சாதிக்கக் கூடியதாக உள்ளது. அத்துடன், சர்வதேச விசாரணையில் பேசப்பட்ட விடயங்கள், வழங்கப்பட்ட தகவல்களை பெறவும், அதற்கு எதிரான கருத்துக்களை உடனடியாக முன் வைப்பதற்கும் இலங்கை அரசுக்குத் தேவையான ஒத்துழைப்புகளை இந்திய அதிகாரிகள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் மேலோங்கியுள்ளன.

தினக்குரல் பத்திரிகைக்காக அ.நிக்‌ஷன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.

Nix P0001