படம் | கட்டுரையாளர்

எப்படி இருக்கிறாய் என் உயிரே? நீ எப்போதும் என்னைப் பிரியாதிருக்க வேண்டும் என்பதற்காகவே இற்றை வரையில் என்னோடு இறுக்கக் கட்டிப் பிடித்திருக்கிறேன் உயிரற்ற உன் எலும்புக்கூட்டை.

ரஷ்யாவின் ஒரு வெடிபொருள் தொழிற்சாலையில் நாம் சந்தித்துக்கொண்ட முதல் சந்திப்பு இன்னமும் நிழலாடுகின்றது. நாம் யாரையும் கொல்லக்கூடாதென்றும் – இறுதிவரைப் பிரியவே கூடாதென்றும் – அந்தத் தொழிலாளர்களுக்கும், இயந்திரங்களுக்கும் தெரியாமல் சத்தியம் செய்துகொண்டோம். அப்போது யார் நினைத்தது, இப்படியெல்லாம் நடக்குமென்று. அதனாலேயே பெட்டிகளுக்குள் அகப்படாமல், சங்கிலிக்குள் திட்டமிட்டே, திருட்டுத்தனமாக இடம்பெற்றோம் என்பது உனக்கு நன்றாகவே நினைவிருக்கும். நம் கந்தகக் காதல் இரும்பாலானது ஆயினும், வைரமானது. நம் மேனியெங்கும் கறலேறி உருக்குலைந்தாலும், அவ்வளவு இலகுவில் தூக்கிவீச முடியா நினைவுகளால் இறுகப்பெற்றதென்பது உனக்கும், எனக்கும் நன்றாகவே தெரியும்.

அந்தப் பசுமையான காலத்தைப் பறித்தான் அந்த நீக்ரோ தரகன். பக்கத்திலேயே நின்ற வெள்ளை மொட்டைத் தலையன் என்னைத் தடவிப் பார்த்து, நம் முதலாளியிடம் விலை பேசுகையில், நீ உன் கூரான முனையால் அவன் கைப் பெரு விரலைக் குத்திக்கிழித்து இரத்தம் கொட்ட வைத்தது நினைவிருக்கிறது. என்னைத் தொடுபவன் மீது அவ்வளவு வெறியாய் இருந்தாய் அப்போது. நம் காதலைப் பார்த்து பல வேளைகளில் நம் நண்பர்கள் பொறாமைப்பட்டதுண்டு. நம்மைத் தாங்கியிருந்த செயின் நமக்காக எவ்வளவு உதவிகளைச் செய்திருக்கும்.

துப்பாக்கிக் காரன் நம்மைத் தூக்கிவீசிவிட்டு, புதிய செயினைக் கொழுவி படகிலிருந்த முழுப்பேரையும் சுட்டுக்கொன்றமை உனக்கு நினைவிருக்கும். பாவம் அந்தப் படகில் சென்ற அப்பாவிகள். நானும், நீயும் அப்போதுதான் நம் தொழிலின் கேவலத்தைப் பார்த்து கண்ணீர்விட்டோம். இந்தப் பிறப்பு பற்றி அருவருப்படைந்தோம். நீ அதற்குப்பின்னர் உறங்கவேயில்லை. கட்டிப் பிடித்துக் கொண்டு அழுத கண்ணீர் கடலை நிரப்பியிருக்கும் அன்பே!

நினைவில் வைத்திருப்பாய் என்று நினைக்கிறேன். ஒரு முறை கப்பலில் நம்மை ஏற்றி விட்டார்கள். நடுக்கடலில் அலைகளின் தாலாட்டைக் கேட்டபடி நாமெல்லாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தோம். நீ என் இடுப்போடு சேர்த்து உன் கால்கலைத் தூக்கிப் போட்டு, என்னைக் கட்டியணைத்துக் கொண்டு ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாய். அதனை ரசித்தபடி நான் உன் தலை கோதிக்கொண்டிருந்தேன். அப்போது ஓடிவந்த ஒருவன் நானும், நீயும் நண்பர்களும் இருந்த செயினைத் தூக்கி, துப்பாக்கிகளுக்குப் பொருத்தினான். அந்த இடத்து யன்னலுக்குள்ளால், பக்கத்தில் நின்றபடி சிறிய படகில் இருந்து நம்மை நோக்கி உயிர் பிச்சைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களை கண்மூடித்தனமாகச் சுட்டான். செயின் வரிசையில் நமக்கு முன் இருந்த உன் மூத்தமாமியின் மகன் வரை பறந்து சென்று படகிலிருந்தவர்களைக் கொன்று போட்டோம். நமக்கு முதல் இருந்த நண்பன் சுடுகுழலுக்கு சரியாக வருகையில், செயின் ஒரு தந்திரம் செய்து, அதற்கு மேல் சுட மறுத்தது. அத்தோடு, துப்பாக்கிக் காரன் நம்மைத் தூக்கிவீசிவிட்டு, புதிய செயினைக் கொழுவி படகிலிருந்த முழுப்பேரையும் சுட்டுக்கொன்றமை உனக்கு நினைவிருக்கும். பாவம் அந்தப் படகில் சென்ற அப்பாவிகள். நானும், நீயும் அப்போதுதான் நம் தொழிலின் கேவலத்தைப் பார்த்து கண்ணீர்விட்டோம். இந்தப் பிறப்பு பற்றி அருவருப்படைந்தோம். நீ அதற்குப்பின்னர் உறங்கவேயில்லை. கட்டிப் பிடித்துக் கொண்டு அழுத கண்ணீர் கடலை நிரப்பியிருக்கும் அன்பே!

பல நாள் பயணித்து, ஒரு துறைமுகத்தை அடைந்தோம். நம்மை இறக்கி மறுபடியும் எங்கேயோ அனுப்பினார்கள். இடையிடையே பல வாகனங்கள் மாற்றப்பட்டோம். தூக்கி வீசப்பட்டோம். எனக்கு வலியெடுத்த போதெல்லாம் தடவிக் கொடுத்தபடி ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாய் நீ. கடைசியாக சில துப்பாக்கிதாரிகள் நம்மை சுமந்தபடி, பதுங்கியும், ஓடியும் வந்து ஒரு காவலரணை அடைந்தனர். அத்துடன் நம் நிம்மதி கெட்டது. உறக்கம் இல்லாமலே போனது. நீ என்னை அணைத்துக் கொள்வதும், முத்தம் தருவதும் முற்றாக நின்றுபோனது. எங்கும் வெடிச் சத்தம். நம் சகோதரர்கள் வெடித்துச் சிதறி தம் கடனை முடித்துக் கொண்டிருந்தார்கள். மாதக் கணக்கில் நம் பலியிடல்கள் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருந்தன. அந்தக் காலங்களில் எனக்கு முன்னால் நீ மரணிக்கக்கூடாதென்றும் – உனக்கு முன்னால் நான் மரணிக்கக் கூடாதென்றும் – தனித்தனியே பிரார்த்தனை செய்துகொண்டதைத் தெரிந்திருக்க யாருக்கும் வாய்ப்பில்லைத்தான். யுத்த சத்தம் அவ்வளவு கொடுமையானது. யாருடைய உணர்வும் யாருக்கும் தெரிவதில்லை, கொலைகளுக்கு முன்னால்.

நீ என்னை விட்டுக் கழன்று, உன் இலக்கை அடைந்தபோதுதான் பார்த்தேன், அவள் ஒரு கர்ப்பிணித் தாய். தான் மரணித்தாலும், வயிற்றில் வளரும் தன் சிசுவுக்கு எந்தக் காயமும் வந்துவிடக்கூடாது என்பதற்காக கொதிக்கும் மணல் மேட்டில் குப்புறக் கிடந்து உயிர்பிச்சைக் கேட்டுக் கொண்டிருந்தாள். நீ அவளின் நெஞ்சைத் துளைத்துக் அவளைக் கொன்றுவிட்டாய். வயிற்றில் இருக்கும் சிசுவை நோக்கித்தான் நான் இலக்குவைக்கப்பட்டேன்.

இருந்தாலும், நாம் ஒரு வகையில் கொடுத்து வைத்தவர்கள். நம்மைத் தாங்கியிருந்த துப்பாக்கிதாரி பயந்தாங்கொள்ளி. ஒரு வெடியை வைக்கவே நடுங்கிக் கொண்டிருந்தான். அதிக நேரம் துப்பாக்கியைத் தூக்கி காவலரணின் ஒரு ஓரமாக வைத்துவிட்டு, கூவும் நம் சகோதரர்களுக்குப் பயந்து, அணையுடன் பதுங்கியே கிடந்தான். அதனால், நமக்கு தொழில் தரவில்லை. ஆனாலும், அந்தச் சத்தங்களும், நாம் குத்திக் கிழிக்கையில் பீறிடும் மனித இரத்தமும், உயிர் பிரியும் நேரம் அவர்கள் எழுப்பும் கடைசி ஓலமும், இந்தப் பிறப்பின் மீது அசிங்கத்தை ஊற்றியது உயிரே.

இப்படியே நானும் நீயும் கண்களை இறுக்க மூடிக் கொண்டு கட்டிபிடித்தபடி, உயிரைக்கையில் பிடித்துக் கொண்டு இருக்கையில்தான் அது நடந்தது. அந்தப் பயந்தாங்கொள்ளி என்ன நினைத்தானே தெரியாது. எழுந்தான். நம் செயினைத் தூக்கித் துப்பாக்கியில் கொழுவினான். கண்மூடிக் கொண்டு யாரையோ சுட்டான். நீயும் என்றுமில்லாதவாறு அவனின் கட்டளைக்குப் பணிந்துவிட்டாய். நீ என்னை விட்டுக் கழன்று, உன் இலக்கை அடைந்தபோதுதான் பார்த்தேன், அவள் ஒரு கர்ப்பிணித் தாய். தான் மரணித்தாலும், வயிற்றில் வளரும் தன் சிசுவுக்கு எந்தக் காயமும் வந்துவிடக்கூடாது என்பதற்காக கொதிக்கும் மணல் மேட்டில் குப்புறக் கிடந்து உயிர்பிச்சைக் கேட்டுக் கொண்டிருந்தாள். நீ அவளின் நெஞ்சைத் துளைத்துக் அவளைக் கொன்றுவிட்டாய். வயிற்றில் இருக்கும் சிசுவை நோக்கித்தான் நான் இலக்குவைக்கப்பட்டேன். ஆனாலும், துப்பாக்கிதாரிக்கு நான் இணங்கவில்லை. அடியடியென அடித்துப் பார்த்துவிட்டு, நம் காதல் காலம் மீது பொறாமைப்பட்ட நண்பனொருவனைக் கொழுவி, அந்தச் சிசுவையும் கொன்ற பின்னர்தான், துப்பாக்கிதாரியின் இரத்தப் பசியடங்கியது.

அவன் என்னைத் தூக்கி வீசிவிட்டுப் போய்விட்டான். நீ மரணித்து பல ஆண்டுகள் கடந்த பின்பும் உன் எலும்புக்கூட்டைக் கட்டிபிடித்தபடி காத்திருக்கிறேன், கரிய இரவொன்றில் காணாமல்போன கணவன் என்றோ ஒருநாள் வருவான் என்று காத்திருக்கும் இலங்கைத் தமிழ் பெண்ணைப் போல…

ஜெரா

Jera