படம் | BBC

இந்தியாவையே அதிரவைத்திருக்கிறார் அரவிந்த் கேஜ்ரிவால். முக்கியமாக ஊழல் கறைபடிந்த காங்கிரஸ் மற்றும் மதவாத பாரதீய ஜனதா கட்சி சற்று அதிர்ந்துதான் போயிருக்கும்.

இந்தியாவில் அண்மையில் நடந்து முடிந்த நான்கு மாநிலங்களுக்கான சட்ட மன்றத் தேர்தல்களில் ஊழல் காங்கிரஸை மக்கள் பெருக்கி துடைத்தெறிந்துவிட்டார்கள். பாரதீய ஜனதா கட்சி மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டதுடன் காங்கிரஸ் வசமிருந்த ராஜஸ்தானையும், அசைக்க முடியாத கோட்டையாக இருந்த டெல்லியையும் கைப்பற்றியுள்ளது.

ஆனால், இப்போதுதான் ஒரு வயது நிரம்பியுள்ள அரவிந்த் கேஜ்ரிவாலின் ‘ஆம் ஆத்மி’ கட்சி காங்கிரஸை பின் தள்ளிவிட்டு இரண்டாம் இடத்தை பிடித்துகொண்டது.

கேஜ்ரிவால் முதலில் அண்ணா ஹசாரேவுடன் இணைந்து ஊழலுக்கு எதிராக சாமானிய மனிதனாக குரல்கொடுத்தார். சாமானிய மக்களின் அஸ்திரமான தகவல் அறியும் உரிமையை அமுல்படுத்தக்கோரி அறவழிப்போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றார். இது இவரோடு சேர்ந்து போராடிய லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உற்சாகத்தையும் புதுத் தெம்பையும் அளித்தது. தன்னோடு சேர்ந்திருப்பவர்களும் மக்களும் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதை கண்டுகொண்ட கேஜ்ரிவால் 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ‘ஆம் ஆத்மி’ என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்தார். கட்சியின் சின்னமாக துடைப்பத்தை தெரிவுசெய்தார்.

காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் மருமகன் ரொபர்ட் வதேரா முதல் பாரதீய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் நிதின் கட்காரி வரையிலான பிரபலங்களின் ஊழல்களை கேஜ்ரிவால் அம்பலப்படுத்தினார்.

ஹரியானா மாநில காங்கிரஸ் அரசும் டி.எல்.எப். நிறுவனமும் இணைந்து சோனியா காந்தியின் மருமகன் ரொபர்ட் வதேராவுக்கு சலுகை வழங்கியதில் பல நூறு கோடி ரூபா ஊழல் நடந்திருப்பதாக கேஜ்ரிவால் ஆதாரங்களை அம்பலப்படுத்தினார். ரொபர்ட் வதேராவின் மாமனாரும் மறைந்த முன்னாள் இந்திய பிரதமருமான ராஜீவ் காந்திக்கும் டி.எல்.எப். நிறுவனத்துக்கும் இடையில் ஏற்கனவே தொடர்புகள் இருந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தனது தொண்டு நிறுவனம் மூலம் ஒன்றரை கோடி ரூபாவை தனது பைக்குள் வரவுவைத்துள்ளார் என்ற தகவலையும் வெளிக்கொணர்ந்தார்.

பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் நிதின் கட்காரி மகாராஷ்டிரா மாநிலத்தில் நீர்ப்பாசனத் துறையிலும் ஊழலில் ஈடுபட்டதுடன் அப்பாவி விவசாயிகளின் நூற்றுக்கணக்கான ஏக்கர் கொண்ட விலை நிலங்களை எவ்வாறு சுருட்டினார் என்பதை அம்பலப்படுத்தினார்.

முக்கியமாக பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் மாநிலத்தின் பெற்றோலிய கூட்டுத்தாபனம் மாநிலத்தில் உள்ள எண்ணெய் வயல்களின் பங்குகளை பார்படோஸ் நாட்டிலுள்ள ‘ஜியோ குளோபல்’ என்ற நிறுவனமொன்றுக்கு விற்றுள்ளது. இதன் மூலம் அந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு 64 டொலரிலிருந்து (சுமார் 8,500 ரூபா) சுமார் 23 கோடி ரூபாவாக உயர்ந்துள்ளது. போலியாக ஒரு நிறுவனமொன்றை உருவாக்கி ஊழல் மோசடி இடம்பெற்றுள்ளதாக கேஜ்ரிவால் தெரியப்படுத்தினார்.

கேஜ்ரிவாலின் அம்பலப்படுத்தல்களை அறிந்த பின்னர்தான் தகவல் அறிந்துகொள்ளும் உரிமை எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் – மாற்றமொன்று நிகழவேண்டும் என்றும் – ‘ஆம் ஆத்மி’ கட்சியின் அவசியத்தையும் மக்கள் சிந்திக்கத்தொடங்கினர்.

இதன் பிரதிபலனாகவே ஊழல் கறைபடிந்த காங்கிரஸை மக்கள் துடைப்பத்தால் துடைத்தெறிந்தனர். பாரதீய ஜனதா கட்சியையும் சவாலுக்கு உட்படுத்தினர்.

ஏனைய கட்சிகளைப் போன்றே கேஜ்ரிவாலும் தேர்தல்களுக்காக தனது ஆதரவாளர்களிடம் நிதியுதவி அளிக்குமாறு கோரியிருந்தார். அவர் சேகரித்த நிதியில் மோசடி இடம்பெற்றிருப்பதாக பலர் குற்றம்சுமத்தினர். அப்போது கட்சிக்கு கிடைத்த நிதியுதவி குறித்து வெளிப்படையாக தகவல் வெளியிட்டார்.

“நாங்கள் நிர்ணயித்திருந்த 20 கோடி ரூபா (இந்திய ரூபாவில்) நிதி சேகரித்தாகிவிட்டது. இனி யாரும் அனுப்பவேண்டாம்” என கேஜ்ரிவால் கேட்டுக்கொண்டார். அதற்கமைய பின்னர் அனுப்பப்பட்ட நிதி அவர்களுக்கே திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தெரியவருகிறது.

அத்தோடு நில்லாமல் டெல்லியில் இணைந்து ஆட்சி அமைக்கலாமா? வேண்டாமா? என மக்களிடம் ‘ஆம் ஆத்மி’ கட்சி கருத்து கேட்க முடிவுசெய்துள்ளது.

25 லட்சம் கடிதங்கள் விநியோகித்து மக்களிடம் கருத்து பெறப்படும். ஆம் அல்லது இல்லை என குறுஞ்செய்தி அனுப்பலாம். கட்சியின் இணையத்தளம், சமூக வலைதளங்கள் ஊடாக கருத்துக்களை பகிரலாம். கருத்துக் கேட்பு, பொதுக்கூட்டம் இடம்பெறும் என ‘ஆம் ஆத்மி’ கட்சி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது புதியவொரு அணுகுமுறையாகும். இது செய்வோம் அது செய்வோம் என வாக்குறுதிகள் அளித்துவிட்டு மக்களின் ஆதரவு மூலம் வெற்றிபெற்று பின்னர் மக்கள் ஆதரவளிக்காத கட்சியொன்றுடன் சேர்ந்து மக்களுக்கு துரோகமிழைத்துவிட்டு கூட்டத்தோடு கொள்ளையடிப்பதே இபோதுள்ள கட்சிகளின் தொடர் கடமையாகி போயுள்ளது.

கேஜ்ரிவாலின் கை சுத்தம், எந்தவித ஒளிவுமறைவும் இன்றி வெளிப்படையாக தேர்தலுக்கு முகம்கொடுத்தமை மக்களை ஈர்க்கச்செய்துள்ளது. ‘மோசம்’, ‘மிகமோசம்’ என்ற இரண்டில் ஒன்றையே தெரிவுசெய்யும் நிலை மக்களுக்கு இதுவரை இருந்துவந்துள்ளது. ஊழல், சாதி, மதம், அதிகாரம் ஆகியனவைக் கொண்டு அரசியல் நடத்திய ஆசாமிகளுக்கு இடையில் ‘ஆம் ஆத்மி’ கட்சியின் பிரகாசமான உதயம் தங்களுக்கு மாற்றமொன்றை ஏற்படுத்தித்தரும் என மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

விஜி