அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு எதிராக அரசால் கொண்டுவரப்படவிருக்கும் புதிய சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று மாலை கொழும்பு ரயில் நிலையம் முன்பாக அரசசார்பற்ற நிறுவனங்களால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இதில் கொழும்பை மையமாகக் கொண்டியங்கும் அரசசார்பற்ற நிறுவனங்கள் உட்பட நாட்டின் ஏனைய பகுதிகளில் இயங்கும் நிறுவனங்களும் பங்குகொண்டிருந்தன.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது “அரசசார்பற்ற நிறுவனங்கள் மீது கை வைக்காதே”, “புதிய சட்டமூலத்தை அமுல்படுத்தாதே”, “கோட்டாவின் அடக்குமுறைக்கு எதிராக அணிதிரள்வோம்”, “எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகள் எங்கே?”, “ஊடக சுதந்திரத்தை பாதிக்கும் சட்டமூலம் வேண்டாம்” போன்ற கோஷங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய வண்ணம் அரசசார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசசார்பற்ற நிறுவனங்களுக்கென புதிய சட்டமூலமொன்றை தயாரித்து இவ்வருட இறுதிக்குள் நடைமுறைப்படுத்தவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செயலகத்தினால் அனுமதி அளிக்கப்பட்டால் மாத்திரமே வருடாந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும் என்றும் , அரசசார்பற்ற நிறுவனங்கள் தங்களுடைய நோக்கங்களுக்கு அப்பால் செல்வதாகவும், அந்த நிறுவனங்களினால் ஊடகவியலாளர் மாநாடுகளையோ அல்லது கருத்தரங்குகளையோ நடத்த முடியாது என்றும் இச்செயலகம் சுற்றறிக்கையின் ஊடாக சகல அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஆர்ப்பாட்டப் படங்களை கீழ் காணலாம்.