படம் | கட்டுரையாளர்

“காசு பறிக்க செய்திருக்கலாம்தானே?

மௌனம்…

“இல்லை சேர்… அப்படி இருக்காது.

“காசு பறிக்க இதை செய்திருக்கலாம்?

மௌனம்…

“அதற்கு வாய்ப்பில்ல சேர். அவர் எங்கயோ இருக்கிறார்.

“காசு பறிக்க இப்படி செய்ய வாய்ப்பிருக்கு…”

“இல்ல சேர். அவர் எங்கயோ இருக்கார். அவருக்கு எப்படி சேர் தங்கச்சிட விவரம் தெரியும்?”

காணாமல்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவினர் கேட்ட கேள்விகளும், காணாமல்போன ஒருவரின் அண்ணன் அளித்த பதில்களுமே இவை.

ஒருவர் கூறுவதை விட இருவர் கூறினால் கூடுதலாக கரிசனை எடுத்து மகளை, தங்கையை தேடித் தருவார்கள் என நினைத்து அந்தத் தாயும், அண்ணனும் ஆணைக்குழு முன் வந்து அமர்ந்திருந்தனர்.

கேள்விகள் தொடர்ந்து வர அந்தத் தாய் தடுமாறத் தொடங்கினாள். அதனால் என்னவோ, மகனையும் அழைத்துவந்திருந்தார். மகன், அவனின் தங்கை குறித்த தகவல்களை ஆணைக்குழுவிடம் முன்வைத்தான்.

ஆணைக்குழு கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் பதில் வழங்கியதன் பின்னர், நம்பிக்கையிழந்த நிலையில் அந்த அறையை விட்டு வெளியே வந்துகொண்டிருந்தனர். அவர்கள் வெளியில் வரும் வரை காத்திருந்த நானும் எனது நண்பனும் தயக்கத்துடன் கதைக்கலானோம்.

“அண்ணன் உங்க கிட்ட கொஞ்சம் பேசமுடியுமா?”

“சொல்லுங்க” என்றார்.

எங்களை அறிமுகம் செய்துகொண்டு, “தங்கை காணாமல்போனது தொடர்பா உங்களிட்ட கொஞ்சம் கதைக்க வேணும். வீடு பக்கத்திலயா? வீட்டுக்குப் போய் கதைப்பமா?” எனக் கேட்டோம்.

அமைதியாக இருந்தார்.

அறிமுகம் இல்லாதவர்கள், திடீரென வந்து வீட்டுக்குப் போய் பேசுவோமா என்கிறார்கள். இவர்களை எப்படி நம்புவது? என எண்ணிக்கொண்டிருந்தார் போலும். “சரி போன் பண்ணிட்டு வாங்க” என அவரது தொலைப்பேசி இலக்கத்தை கூறினார். நண்பன் அதைக் குறித்துக்கொண்டான். பின்னேரம் 4 மணிக்கு போல போன் பண்ணுங்கோ, என அலட்சியத்துடன் சொல்லிவிட்டு, ஏமாற்றத்தில் வாடிப்போன முகத்துடன் இருந்த தாயை அழைத்துக் கொண்டு போனார்.

உறவுகளை இழந்த நிலையில் சாட்சியளிக்க வந்த பலபேரிடம், கடன் கொடுத்து பல நாள் கழித்து வசூழிப்பது போலவே ஆணைக்குழுவினர் நடந்துகொண்டிருந்தனர். உறவுகளை இழந்த வேதனையில் ஆணையாளர் கேட்ட கேள்விக்கு மேலதிகமாக ஏதாவது சாட்சியாளர் சொல்லிவிட்டால் உடனடியாக மொழிப்பெயர்ப்பாளருக்கு கோபம் வந்துவிடுகிறது. “அம்மா, ஐயா என்ன கேள்வி கேட்டாரோ, அந்தக் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க. வீணா பேசாதீங்க” என அதட்டிப் பேசுகிறார். அப்பாவி சனம் பயந்தே போகிறது. ஏற்கனவே, சொல்ல வந்ததையும் சொல்ல முடியாமல் பயத்திலும் வேதனையிலும் நடுங்கிக் கொண்டிருந்த சனத்துக்கு, இவரது அதட்டல் வாயிலிருந்த வார்த்தைகள் வரவிடாமலே செய்துவிட்டது.

மேல் நாங்கள் சந்தித்த தாயும், மகனும் இந்த அதட்டல்களுக்கும் ஆளாகினர். அதனால், சொல்ல வந்ததையும் ஆணைக்குழுவினர் கேட்காததால், என்னதான் நடந்தது என்பதை அறிந்துகொள்ள நானும் எனது நண்பனும் அறிந்து வெளிப்படுத்த முயன்றோம்.

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் அன்றைய ஆணைக்குழு அமர்வு முடிவடைந்ததன் பின்னர் சைக்கிளொன்றை எடுத்துக்கொண்டு, குறித்த தொலைப்பேசி இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தியவாறு அவரது வீட்டைத் தேட ஆரம்பித்தோம். வீடியோ கடையோடு வீடு உள்ளது என ஏற்கனவே அவர் கூறியிருந்தமையால், ஒருவாறு அவரது வீட்டை கண்டுபிடிக்க முடிந்தது.

பலகையால் செய்யப்பட்டிருந்த கேட் அருகில் சென்று, உள்ளே போய் விசாரிப்போமா? அல்லது இங்கிருந்தவாறே கூப்பிடுவோமா என எண்ணிக்கொண்டிருந்த வேளை, வீட்டின் முன்னால் அமர்ந்திருந்த ஒருவர் எழும்பி எங்களை நோக்கி வந்தார். பிரதேச செயலகத்தில் சந்தித்த அண்ணன்தான். உள்ளே வருமாறு வரவேற்றார். வீட்டு முற்றத்தில் அமைக்கப்பட்டிருந்த தொழுவத்தில் கன்றுக்குட்டி ஒன்று நின்று கொண்டிருந்தது. சத்தமே போடவில்லை; அசைவு கூட இல்லாமல் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தது. அடிக்கடி விசாரணை என வந்துபோகிறவர்கள் என நினைத்து விட்டதோ என்னவோ.

அம்மாவையும், அண்ணனையும் நலம் விசாரித்து விட்டு முற்றத்திலேயே அமர்ந்தவாறு பேச ஆரம்பித்தோம்.

“என்ன அண்ணன், தங்கச்சி வெளிநாட்டில எண்டு சொல்றீங்க. அவங்களும் காசு பறிக்கத்தான் இது நடக்குது எண்டு சொல்றாங்க. என்ன சம்பவம் அண்ணன், சொல்ல முடியுமா?” எனக் கேட்டோம். சொல்ல ஆரம்பித்தார்.

“என்ட தங்கச்சி சிவபாதம் டோஜினி வீட்ல இருந்தபோது 2007 பெப்ரவரி 24ஆம் திகதி இயக்கம் பலாத்காரமா பிடிச்சு கொண்டு போனது. அப்போ அவக்கு 17 வயசுதான். நான் அப்போ இங்க இருக்கல்ல. வெளிநாட்ல இருந்தேன். யுத்தம் முடிஞ்ச பிறகுதான் இங்க வந்தன்.

இயக்கம் பிடிச்சுக்கொண்டு போன பிறகு 2008இல ஒருநாள் டோஜினி வீட்டுக்கு வந்திருக்கிறா. வந்து 3 நாட்கள் இருந்திட்டு திரும்பவும் போயிருக்கா.

2009 ஏப்ரல் 8ஆம் திகதி இடம்பெயர்ந்து கொண்டிருந்தபோது பொக்கணை பகுதியில் வைத்து அம்மா தங்கச்சிய கண்டிருக்கிறா. அவவோட பேச முயற்சி செய்தும் முடியல்ல. அதுக்குப் பிறகு பல இடங்கள்ல தேடியும், முறைப்பாடு தெரிவித்தும் ஒரு தகவலும் இல்ல.

வவுனியா பூங்காவில் வீடியோ செய்துகொண்டிருந்தபோது பெண் ஒருவர் வந்து டோஜினி எப்படி இருக்கா என்று கேட்டார். எனக்கு என்ன சொல்வதென்று புரியல. ஈழநாதம் பத்திரிகையில் வேலை செய்தவராம்.

புல்மோட்டையில் தான் பஸ்ஸில் இருந்தபோது இன்னொரு பஸ்ஸில் என்ர தங்கச்சியைக் கண்டிருக்கிறார். டோஜினியிடம் எப்படி இருக்கிற எண்டு அவ கேட்டிருக்கிறா. அதுக்கு தங்கச்சி, நெஞ்சுப் பகுதியிலும் காலிலும் காயம்பட்டுள்ளதாக சொலியிருக்கிறா. டோஜினி இருக்கிறா, தேடுங்க எண்டு அந்த அக்கா சொல்லிட்டுப் போனா…

2013 ஜூலை மாதமளவில பாஸ்கரன் ஜெசிந்தா என்ற பெண்ணொருவர் இந்த ஹொஸ்பிட்டலடியில வந்து இங்க யாராவது பிள்ளைகள் காணாமல் போயிருக்காங்களா என கேட்டிருக்கிறா. அப்ப அங்க இருந்த பெடியனொருவன் அந்தப் பெண்ணை எனது கடைக்கு கூட்டி வந்திருக்கிறான். அப்ப நான் கடையில இருக்கேல்ல. அம்மாதான் இருந்தவா. அவா, அம்மாட்ட பெயரயும், அட்ரஸையும் கொடுத்திட்டு போயிருக்கா. உடையார்கட்டு தெற்கு பகுதியில அவாவ சந்தித்து கதைச்சன். தன்னுடைய அண்ணன், புதுக்குடியிருப்பு பகுதியில் யாராவது காணாமல்போயுள்ளார்களா என்று கேட்கிறார் என சொல்ல, உடனே அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பில் உள்ள அண்ணன் ஜெயசீலன் சின்னமணியை தொடர்புகொண்டு கதைத்தேன்.

அவர் மீன் வியாபாரம் செய்வதோடு, சவூதி, டுபாய்க்கு ஆட்கள் அனுப்பும் சப் ஏஜென்சியும் நடத்துகிறார். அவர்ட மகள் சவூதியில் இருக்கிறா. அவதான், புதுக்குடியிருப்பு ஹொஸ்பிட்டல் முன்னால யாராவது காணாமல்போயிருந்தா எனக்கு மெசேஜ் தாங்க எண்டு சொல்லியிருக்கிறா. அந்தப் பிள்ள இங்க இருக்கிறா. அவங்கட அம்மா, அப்பா அங்க இருக்கினமாம் எண்டு தெரிஞ்சு சொல்லுங்க எண்டு அவ சொல்லியிருக்கிறா.

எனக்கு வீசா போட்டுத் தாங்க. உடனே நான் அங்க போறன்; பாக்குறன் எண்டு சொன்னேன். சரியெண்டு சொன்னவர், மூன்டு நாள் கழித்து எடுத்து முன்னுக்கு பின் முரணா பேசுனார். அது டோஜினி இல்ல, லோஜினி என பேசத் தொடங்கினாங்க. ஆனா, அதுக்கு முதல்ல பேசுறபோது சிவபாதம் டோஜினி, அண்ணன் ஒருவர் வெளிநாட்ல இருக்குறார், புதுக்குடியிருப்பு 7ஆம் வட்டாரத்த சேர்ந்தவர் என எல்லாம் சொன்னார். நாங்க எதுவும் சொல்லாம இவ்வளவையும் அவங்கதான் சொன்னாங்க.

இந்த ஏரியாவுல வேற யாரும் காணாமல்போகல. ஹொஸ்பிட்டலுக்கு பின்னால, காவல்துறைக்கு பின்னால என சொல்லிக் கொண்டிருந்தவங்க அப்படி கதைய மாத்தி சொன்னாங்க.

தகவல் தெரிஞ்சா அறியத்தாரோம் என தொடர்ந்து சொல்லிக்கொண்டே வந்தாங்க.

நேற்று பின்னேரம் என்ன விஷயம் என பார்த்துவிட்டு வருவதற்காக பாஸ்கரன் ஜெசிந்தாவின் வீட்டுக்கு போனன். அங்கு அவாட அண்ணன் இருந்தார். அவர்கிட்ட பேசினன். என்ன தகவல் என கேட்டன். அதுக்கு அவர், இப்போ அங்க (சவூதி) நோன்பு காலம் என்பதால யாரோடயும் பேச முடியாது. ஒரு மாதத்துக்கு பிறகுதான் பேசலாம். அவாட படத்த அனுப்பச் சொன்னன், அப்ப பார்க்கலாம் எண்டு அவர் சொன்னார். நெடுக இப்படித்தான் சொல்லினம்.

அவரிடம், சவூதி நம்பர கேட்டன். இல்லையென்று சொல்லிட்டு, போனை தந்தார். இருந்தால் எடுத்துக்கொள்ளுங்க என்று. அதில் சவூதி நம்பர் எதுவும் இருக்கல. படம் கிடைத்தவுடன் சொல்லுங்க எண்டு சொல்லிட்டு வந்திட்டன்.”

காசு பறிக்க இவ்வாறு செய்யலாம் என ஆணைக்குழுவினர் சொன்னார்களே? என நாங்கள் அவரிடம் கேட்டோம்.

“தங்கச்சியை கண்டுபிடித்து தருவதாகக் கூறி ஏற்கனவே ஒருவர் எங்களிடம் 30,000 ரூபா பெற்றுக்கொண்டு தலைமறைவாகிவிட்டார்.

இவர்கள் அப்படியில்லை. இதுவரை அவங்க காசு கேட்கவேயில்ல. அதோட எங்கட விவரம் எப்படி அவங்களுக்கு தெரியும்? முன்ன பின்ன தெரியாத ஆக்கள்.

தங்கச்சி எப்படி சவூதி போயிருப்பானு நீங்க நினைக்கிறீங்க எண்டு கேட்டோம்.

சில நேரம் வவுனியா ஹொஸ்பிட்டல்ல இருந்து வெளியில வந்து யாருட உதவியோட சரி சவூதிக்குப் போயிருக்கலாம். என்ன நடந்தது என்று எங்களுக்கு ஊகிக்க முடியாம இருக்கு. இத நம்புறதா? இல்லயானு கூட எங்களுக்கு தெரியல?”

தங்கச்சியின் படம் இருக்கா என இடைமறித்து கேட்டோம். படத்தை எடுக்க டோஜினியின் தாய் வீட்டினுள் நுழைந்தாள். முன்னால் இருந்த கன்று குட்டியின் தொழுவம் இந்த வீட்டை விட வசதியாக இருக்குது நண்பா என நண்பன் என்னிடம் வந்து கூறினான். மகளின் படத்தைப் படம் பிடித்துக்கொண்டு விடைபெற்றோம் எதுவித நம்பிக்கை வார்த்தைகளும் கூறாமல்.

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவிடம் இந்த விடயத்தை தெரிவித்தும், விசாரித்துப் பார்ப்போம் என்று ஆறுதலுக்காவது சொல்லாமல் எடுத்த எடுப்பில், “காசு பறிக்க இதை செய்திருக்கலாம்” என சொல்கிறார்கள்.

காசு வசூலிக்கிறவன், உறவுகளை தேடித்தருகிறேன் என்றாவது நம்பிக்கை அளிக்கிறான். ஆணைக்குழு நம்பிக்கையளிப்பதும் இல்லை, ஆறுதலுக்காவது அமைதியாக பேசுவதுமில்லை. அப்பாவிகளிடம் அதட்டல் மட்டும்தான்.

ஆக, வந்துபோகும் ஆணைக்குழுவை நம்பி இருப்பதா? இல்லை தேடித்தருகிறோம் என்று கூறி வருபவர்களை நம்பி இருப்பதா? அல்லது தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் சர்வதேசத்தின் உதவியுடன் உறவுகளை தேடித்தருவார்கள் என எதிர்பார்த்து காத்திருப்பதா? என உறவுகளை இழந்த மக்கள் ஒன்றும் புரியாமல் ஒவ்வொரு நாளும் கண்ணீருடன் வாழ்ந்து வருகிறார்கள்.

யுத்தம் நிறைவடைந்து 5 வருடமாகிவிட்டது. காத்திருப்பு தொடர்கிறது…

செல்வராஜா ராஜசேகர்