படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ Twitter தளம்

வடக்கு மக்கள் மாகாண சபைகளை எதற்காகத் தெரிவுசெய்தார்களோ அதற்கான குறைந்தபட்ச விடயங்களையும் ஈடேறவிடாது அரசு முட்டுக்கட்டையைப் போடுவதுடன் நல்லிணக்கத்திற்குப் பதிலாக பலப்பரீட்சை ஒன்றை நடத்தி தன் பலத்தினை நிரூபிக்கின்றது. இது மாகாண சபை மீதான மக்களின் நம்பிக்கையினை அற்றுப்போச் செய்யும் மேலுமோர் முயற்சியாகும்.

வடக்கு மாகாணசபையின் நடவடிக்கைகள் மீது அரசின் பனிப்போர் நடவடிக்கைகள் படிப்படியாக அரம்பிக்கின்றன. காரணம், கடந்த சில வாரங்களாக மாகாண சபையின் மக்கள் பிரதிநிதிகளின் நிர்வாக நடவடிக்கைகளுக்குள் புறமொதுக்கல், இடையூறுபடுத்தல் என நிலைமைகள் தொடர்கின்றன.

இந்த வகையில் மாகாண சபை தெரிவுசெய்யப்பட்டதன் பின்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கான அழைப்பு, முன்னேற்பாடுகளில் முதலமைச்சர் இணைத்தலைவராகச் செயற்பட வேண்டிய நிலையில் அதற்கான முன்னேற்பாடுகளில் புறமொதுக்கல்கள் நடைபெற்றபெற்றன. அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மஹிந்த சிந்தனையினை நடைமுறைப்படுத்துமாறு முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்தார். வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அதனை மறுத்துவிட்டார்.

இதற்கு மேலாக கடந்த நவம்பர் 25ஆம் திகதி நடைபெற்ற மாகாண ஆளணி மீளாய்வுக் கூட்டத்திற்கும் முதலமைச்சரை அழைக்காது ஆளுநர் தானே அக்கூட்டத்தினை நடத்தி முடித்தார். இதன் மூலம் அக்கூட்டத்தில் முதலமைச்சருக்கு இருக்கவேண்டிய ஆளணியை மீளாய்வு செய்யவேண்டிய முக்கிய பொறுப்புக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

அடுத்து மாகாண கடல்தொழில் அமைச்சின் செயலாளர், அமைச்சர் டெனீஷ்வரனுடன் கலந்துரையாடப்படாது மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், வலிகாமம் வடக்குப் பகுதியில் இந்து ஆலயங்கள் உட்பட மக்களின் வீடுகள் தொடர்ந்து இடித்தளிக்கப்படுகின்றன என அறிந்து அப்பகுதிக்குச் சென்ற முதலமைச்சர் தலைமையிலான குழுவினர் படைத்தரப்பினரால் அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவ்வாறாக சர்சைகள் மாகாண சபையில் பனிப்போராக ஆரம்பித்துவிட்டதனை வெளிப்படையாகக் காணக்கூடியதாகவுள்ளது.

ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டமும் சர்ச்சையும்

அபிவிருத்திக்குழுக் கூட்டங்கள் வடக்கில் தொடர் சர்ச்சைக்குரியதொன்றாகவே அமைகின்றன. இந்த நிலையில், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நடைபெற்ற அபிவிருத்திக் குழுக்கூட்டங்களுக்கு முதலமைச்சர் உரியவாறு உள்வாங்கப்படாமையினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அக்கூட்டங்களைப் புறக்கணித்திருந்தது. இது மாகாணத்தில் ஆளும் கட்சி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தினைப் புறக்கணித்த நிலைமையாகும்.

அபிவிருத்திக் குழுக்கூட்டங்களில் முதலமைச்சர் இம்முறை இணைத்தலைவராகக் கலந்துகொள்ள இருந்தார். இந்த நிலையில், முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுடன் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத் திகதி நிர்ணயம் பற்றியோ அல்லது நிகழ்ச்சி நிரல்கள் பற்றியோ கலந்துரையாடாது முடிவுகள் எடுக்கப்பட்டமையினாலேயே இக்கூட்டத்தினை தமிழ்த் தேசியக்கூட்டமைப்புப் புறக்கணித்துள்ளது. இப்புறக்கணிப்புக்கு முன்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மவை சேனாதிராஜா யாழ் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திற்கு கடிதம் ஒன்றைக் கூட எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில் அவர்,

“யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்துக்கான அழைப்புக் கடிதத்தில், கூட்டத்துக்கு யார் தலைமை தாங்குவார் என்பது குறித்துத் தெரிவிக்கப்படவில்லை. வடக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவடைந்த பின் மாகாண சபை முதலமைச்சர், ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்குத் தலைமை தாங்குவது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடப்பட்டிருந்தது. முதலமைச்சருடன் மேற்படி கூட்டம் பற்றியோ, பொருத்தமான திகதி பற்றியோ எதுவும் பேசப்பட்டிருக்கவில்லை. யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் இது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டிருக்கவில்லை. இந்தக் கூட்டம் தொடர்பில், சென்ற கூட்டக் குறிப்புகள் எமக்கு அனுப்பப்பட்டிருக்கவில்லை. தாங்கள் எமக்கு அனுப்பிய கூட்ட அறிவித்தலில் கூட்ட நிகழ்ச்சி நிரல் இல்லை.

எனவே, நாடாளுமன்ற உறுப்பினராகிய எம்முடன் அல்லது வடக்கு மாகாண முதலமைச்சருடன் கலந்து பேசப்படாமல் மேற்படி கூட்டத்துக்கு அறிவித்தமையானது, அறிவித்தல் கொடுத்தவர்களின் தன்னிச்சையான நடவடிக்கையாகும். எனவே, நாம் மேற்படி கூட்டத்தில் பங்குபற்ற மாட்டோம் என்பதைத் தெரியப்படுத்துவதுடன், இந்தக் கூட்டத்தைப் பிற்போடுமாறும் கேட்டுக் கொள்கிறோம்” என அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது கூட்டமைப்பின் கோரிக்கைக்கு முகங்கொடுக்காது திட்டமிட்டவாறு நடைபெற்றது. இந்நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் யாரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயோ கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திலேயோ கலந்து கொள்ளவில்லை.

மக்களை பெருமளவில் பிரதிநிதித்துவப்படுத்துக்கின்ற கூட்டமைப்பினர் இவ்வாறாக உரியவாறு அணுகப்படாமைக்கு உண்மையிலேயே இடம்பெற்ற தவறுகளா இல்லை அரசியல் தலையீடுகளா காரணம் என ஊகிக்கவேண்டிய சூழ்நிலையுள்ளது. அபிவிருத்தி என்பது அரசாங்கத்தின் பிரதான அரசியல் தொனிப்பொருளாகவே உள்ளது. அதாவது, வடக்கு மாகாண சபை தெரிவுசெய்யப்படுவதற்கு முன்பான அபிவிருத்தியாக இருக்கலாம் அல்லது நிர்வாக விடயங்களாக இருக்கலாம். எல்லாமே அரச கட்சியின் தனிவிடயங்களாகவே மக்களிடத்தில் அடையாளப்படுத்தப்பட்டன. புதிய மாகாண சபை அமைக்கப்பட்டவுடன் அதுவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசம் சென்றவுடன் இவ்வாறாக அபிவிருத்தியை கட்சி சார்ந்த விடயமாகக் காட்டுவதில் அரசாங்கத்திற்குப் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த இடத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் மஹிந்த சிந்தனைத் திட்டங்களை அமுல்பத்திச் செயற்படுமாறு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனைக் கேட்டுள்ளார். அதனை முதலமைச்சர் நிராகரித்தும் உள்ளார்.

வடக்கில் அரசு அபிவிருத்தி என அரசியலை அடையாளப்படுத்தியே தேர்தலில் போட்டியிட்டது. அரசு மையப்படுத்திய மஹிந்த சிந்தனை உள்ளடங்கிய அபிவிருத்தியையும் அரசியல் தீர்வு முன்வைக்கப்படாத போக்கினையும் நடைபெற்ற தேர்தல்கள் பலவற்றிலும் தமிழ் மக்கள் பல தடைவ நிராகரித்துவிட்டனர். எனினும், ஜனாதிபதி தனது கோரிக்கையில் நாட்டு மக்கள் மஹிந்த சிந்தனையை ஏற்பதாகவும், ஆகவே அதனை நடைமுறைப்படுத்துமாறும் முதலமைச்சர் விக்னேஸ்வரனைக் கோரியுள்ளார். இது, அடிப்படையில் வடக்கு மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அளித்த ஆணையினை அவர் கண்டுகொள்ளாது, மதிக்காமல் செயற்பட்டுள்ளார்.

தற்போது நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலின் பின்பாக மாகாண மட்டத்திலான விடயங்களில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தொகுதியொன்று முதலமைச்சர் மற்றும் அமைச்சரவை, உறுப்பினர்கள் என இயங்க ஆரம்பித்துள்ளனர். இவர்கள் ஜனநாயக ரீதியில் மக்களின் விருப்பிற்கிணங்க அவர்களின் பிரதிநிதிகளாக இயங்குவதற்காகத்தான் மக்களால் தேர்தல்கள் வாயிலாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்திசெய்யத்தக்கதாக போதிய அதிகாரங்கள் இருக்கின்றனவோ இல்லையோ அவர்கள், மக்களின் நிர்வாக விடயங்களை செயற்படுத்த ஆரம்பித்து நடத்திவருகின்றனர். இந்த நிலையில், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களிலோ அல்லது மக்களின் நிர்வாக விடயங்களிலோ மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கோ மாகாண சபை உறுப்பினர்களுக்கோ உரிய வகிபாகம் அளிக்கப்படவில்லையாயின், இது மக்களாட்சித் தத்துவத்திற்கு முரணானதாகும்.

மாவட்டத்தில் நடைபெறுகின்ற நிர்வாக விடயங்கள், அபிவிருத்திகள், அவை எதிர்கொள்ளும் சவால்களில் மாகாண அமைச்சுக்களின் விடயங்களும் பிரதான இடத்தினை வகிக்கின்றன. இந்த நிலையில், மக்களை அதிகமாகப் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களோ அல்லது மாகாணசபை, ஏனைய மக்கள் பிரதிநிதிகளின் பிரசன்னம் இன்றி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. இக்கூட்டம் அரசை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற அமைச்சர் ஒருவரினதும் மாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடனும் அரச நிர்வாக அதிகாரிகளுடனும் நடைபெறுவது மக்களின் நாளாந்த செயற்பாட்டு விடயத்தில் எந்தளவுக்கு ஆரோக்கியமானது என்ற கேள்வி உள்ளது.

அரசு மாகாண நிர்வாக விடயங்களில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடத் தவறுவது அல்லது அலட்சியம் செய்வது என்பன அது பல கேள்விகளை எழுப்புகின்றன. அதாவது, தேர்தல்களின் பின்பாக இன்றும் வழமைபோன்று கட்சி அரசியலை முன்னெடுக்கும் போக்கினைத்தான் அரசு வெளிப்படையாக முன்கொண்டு செல்ல விரும்புகின்றதா? என பலவாறு யோசிக்க முடிகின்றது. இது வடக்கு மாகாண சபையின் பின் மக்கள் மத்தியில் எழுந்துள்ள நம்பிக்கையினை உதாசீனம் செய்யும் நிலையாகும்.

அரச அதிகாரிகளின் தவறுகளே மக்கள் பிரதிநிதிகள் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பங்கேற்பதற்குத் தடையாக இருந்திருந்தால் அது பற்றி வெளிப்படையான விசாரணைகளும் தகவல்களும் அவசியமாகும். இல்லை, அரச அதிகாரிகள் இடத்தில் அரசியல் தலையீடுகள் தேவையற்ற விதத்தில் பிரயோகிக்கப்படுகின்றமையின் விளைவுகளால்தான் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் புறந்தள்ளப்படுகின்றனர் என்ற விம்பத்தினையே சம்பங்கள் தருகின்றன.

தேர்தலுக்குப் பின்பான மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் மாகாண சபையின் மக்கள் பிரதிநிதிகளின் கெளரவத்தினையும், மக்கள் அச்சபைக்கு அளித்த அங்கீகாரத்தினையும் அரசு உதாசீனப்படுத்துகின்ற முயற்சிகளில் ஒன்றாகவே இவ் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கான முற்தேவைப்பாடுகளில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை அது புறந்தள்ளியிருக்கலாம் என்ற கருத்தும் பல மட்டங்களில் நிலவுகின்றன. மேலும், அரச அதிகாரிகளிடத்தில் ஜனாதிபதியின் கட்சி  நிகழ்ச்சி நிரலுக்கே நீங்கள் பணியாற்ற வேண்டும். மாறாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்க் கூட்டமைப்பின் பணிப்புரைகளுக்கு பணியாற்றக்கூடாது  என்ற சமிஞையினைக் கொடுக்கும் விதமாகவும் இவ் விடயங்கள் உள்ளன.

நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனைப் புறக்கணித்தது பற்றி விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளன. அந்த இடத்தில் கருத்துரைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தினை நடத்துவதற்கான திகதியை தாம் ஆளுநருடன் கலந்துரையாடி அரச அதிபருக்குக் கூறுவதாகவும், இம்முறையும் அதுபோன்று நானே முதலமைச்சருடன் பேசி திகதியைத் தீர்மானித்திருப்பேன் என அரச அதிபர் நினைத்து விட்டார் போல, இதுவே தமிழ்க் கூட்டமைப்பு உரியவாறு அழைக்கப்படாததற்குக் காரணம் எனவும் கூறியுள்ளார். இதுவே திகதி நிர்ணயத்தில் அரச அதிபர் முதலமைச்சருடன் கலந்துரையாடாததற்கான காரணமாக இருக்கலாம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அமைச்சரின் இக்கருத்து அவரது கருத்து. ஆனால், அரச அதிகாரிகளைப் பொருத்தளவில் அவர்கள் தமது கடமை நிரலை ஊகிப்புக்களுடன் நடைமுறைப்படுத்த முடியாது. அதிகாரிகள் தங்கள் கடமைகளை உரியவாறு செய்யவேண்டுமெனவே மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இது காலவரையில் ஆளுநரே ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களின் இணைத்தலைவராகப் பங்கேற்றார். தற்போது முதலமைச்சர் பங்கேற்கும் சூழ்நிலை காணப்படுகையில் அதற்கான ஆயத்தங்கள் உரியவாறு அமையவில்லையாயின் அது பல அரசியல் கோணங்களில் பார்க்கப்படவும் வேண்டியதொன்றாகவுள்ளன. கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டத்தினையும் தமிழ்த் தேசியக் சுட்டமைப்பினர் புறக்கணித்திருந்த நிலையில் அதற்கு தவறான புரிந்துணர்வா அல்லது உரிய முறையில் அவர்கள் அழைக்கப்படவில்லையா என்பது விவாதத்திற்கு உரிய விடயம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார்.

தாம் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டங்களைப் புறக்கணித்தமை பற்றி கருத்துரைத்த வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வட மாகாணத்தில் மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டிருக்கையில் முன்னரைப்போன்று அரசு தன்னிச்சையாகச் செயற்படுவது கவலை தருவதாகக் குறிப்பிட்டுள்ளார். அடிப்படையில் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் பங்கேற்பதற்கு, முன்னரும் அரசினைப் பிரதிநிதித்துவப்படுத்தாத மக்கள் பிரதிநிதிகளுக்கு கூட்டங்களில் பல்வேறுபட்ட நாகரீகத்திற்குப் புறம்பான இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டே வந்துள்ளன. பிரதேச மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களுக்கு அரசுக்கு வெளியில் உள்ள எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் அழைக்கப்படுவது மற்றும் அவர்கள் தமது கருத்துக்களை வெளியிடுவதிலும் பல தடைகள் இருந்துள்ளன. நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் சகலதுமே சர்ச்சையுடனேயே முடிவடைந்துள்ளன. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்மைப்பினால் ஏற்கனவே கண்டனங்களும் எதிர்ப்புகளும் விடுக்கப்பட்டே வந்துள்ளன.

அபிவிருத்தி என்று வருகையில் மக்கள் பங்கேற்பு அபிவிருத்தி மிக முக்கியமானதாகும். ஆகவே, அபிவிருத்திகளையும் மாவட்ட நிலைமைகளையும் கலந்துரையாடுவதற்கான கூட்டத்தில் மக்களின் பிரதிநிதிகள் புறக்கணிக்கப்பட்டு அல்லது அழைக்கப்படாது நடத்தப்படுவது என்பது சரியான திசை நோக்கிய அபிவிருத்திக்கோ அல்லது அரசியலுக்கோ வழி வகுக்கப்போவதில்லை.

ஆளணி மீளாய்வுக் கூட்டமும் செயலர்களின் மாற்றங்களும்

வட மாகாண ஆளணி மீளாய்வுக் கூட்டம் வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி தலைமையில் யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கும் முதலமைச்சர் மற்றும் மாகாணத்தில் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் அறியாமலேயே கூட்டம் நடத்தப்பட்டது.  இக்கூட்டத்தில் வட மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ், ஆளுநரின் செயலாளர் திரு இ.இளங்கோவன், பிரதி பிரதம செயலாளர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் ஆகியோரே கலந்துகொண்டார்கள். இந்த நிலைமையும் மக்கள் பிரதிநிதிகளை நிராகரித்த நிலைமையாகும். இன்றைய நிலையில் அரச அதிகாரிகளை பங்குபோடுவது, அரசியல் மயப்படுத்துவது என்ற பிரச்சினை வடக்கில் உச்சம் பெற்றுள்ளது. அதாவது, மாகாண மட்டத்தில் பணியாற்றுகின்ற அரச அதிகாரிகள் மாகாண சபை மக்கள் பிரதிநிதிகளை கருத்தில்கொள்வதைக் காட்டிலும் தம்மை மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது அரசின் நோக்கமாகவுள்ளது. அதற்கான செயல் வடிவங்களாக பல நடவடிக்கைகள் நடைபெறுகின்றன.

வவுனியா பல்நோக்குக் கூட்டுறவுச் சங்க கிராமிய வங்கித் திறப்பு விழாவில், வட மாகாண சபையில் நாம் செயற்பட முடியாத வகையில் பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன என்றும் வட மாகாண சபையின் அலுவலகத்தில் பணியாற்றுகின்ற அதிகாரிகளினாலேயே தங்களுக்கு முட்டுக்கட்டைகள் போடப்படுவதாகவும் முதலமைச்சர் கூறிய கருத்து கண்டுகொள்ளப்படவேண்டியதொன்றாகும்.

அடுத்து, வடக்கு மாகாண சபையின் கடல் தொழில் அமைச்சருக்குத் தெரியாமலேயே அமைச்சின் செயலாளர் வடக்கு மாகாண ஆளுநரால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடல்தொழில் அமைச்சர் டெனீஸ்வரனின் செயலாளராக முன்னர் ராஜேந்திரா நியமிக்கப்பட்டிருந்தார். இதன் பின்னர் வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி அமைச்சரின் செயலாளராக திருவாகரனை நியமித்தார். இந்த நிலையில், உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஆளுநரினால் ராஜேந்திரா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். முதலமைச்சரின் செயலாளராகக் கடந்த ஒக்டோபர் 11 திகதியிலிருந்து கடமையாற்றிய ஆர்.வரதீஸ்வரன் குறுகிய காலப்பகுதியில் தற்போது கடல்தொழில் அமைச்சின் செயலாளராக மாற்றம்செய்யப்பட்டுள்ளார். அதேவேளை, கடல்தொழில் அமைச்சின் செயலாளராகப் பணியாற்றிய திருவாகரன் முதலமைச்சரின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, அமைச்சின் செயலாளர் மாற்றம் தொடர்பில் தன்னுடன் ஆளுநர் கலந்துரையாடவில்லை என்றும், தன்னிச்சையாக முடிவெடுத்தே அவர் இந்த இடமாற்றத்தை மேற்கொண்டுள்ளார் என்றும் அமைச்சர் டெனீஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.

இவ்வாறாக வடக்கு மாகாண சபையில் அரசு அரசியல் ரீதியில் குறுக்கீடுகளை ஆரம்பித்துள்ளது. இது தமிழ் மக்களின் ஜனநாயக ஆணைக்கு வைக்கப்படுகின்ற வேட்டாகும். தமிழ் மக்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ள பிரதிநிதிகளால் குறைந்தபட்சம் நிர்வாக நடவடிக்கைகளை ஏனும் முன்னெடுக்க முடியாதவாறு சூழ்நிலைகள் நிலவுகின்றமை துர்ப்பாக்கிய நிலையாகும். வடக்கு மக்கள் மாகாண சபைகளை எதற்காகத் தெரிவுசெய்தார்களோ அதற்கான குறைந்தபட்ச விடயங்களையும் ஈடேறவிடாது அரசு முட்டுக்கட்டையைப் போடுவதுடன் நல்லிணக்கத்திற்குப் பதிலாக பலப்பரீட்சை ஒன்றை நடத்தி தன் பலத்தினை நிரூபிக்கின்றது. இன்று அரசு நல்லிணக்கத்திற்கான சமிக்ஞையாக மாகாண சபையின் செயற்பாடுகளை இடையூறு இன்றி இயங்க அனுமதிப்பதற்குப் பதிலாக முரண்பாடுகளை எண்ணைவிட்டு வளர்ப்பதென்பது அதிகார மோதுகைக்கான களமாகவே வடக்கு மாகாணத்தினை நிலைநிறுத்த உதவும்.

தியாகராஜா நிரோஷ்
Niro