படம் | Dinouk Colombage/ Al Jazeera

பல மாதங்களாக சிறு சிறு சம்பவங்களாக நிகழ்ந்து கொண்டிருந்தவைதான். கடந்த வாரம் பெரியளவில் அளுத்கமவிலும் பேருவலவிலும் வெடித்தன. எவருமே ஆச்சரியப்படுவதற்கில்லை. எதிர்பார்த்த நிகழ்வுதான். தமிழ் மக்களுக்குத்தான் இது தொடர்பாக ஏராளமான அனுபவங்கள் இருக்கின்றனவே. இதேபோன்று எதிர்பார்த்த விதமாகவே கடந்த பல மாதங்களாக பலவிடங்களில் பொது அமைப்புக்களைச் சார்ந்தவர்கள் கூடிக்கூடி பொதுபலசேனாவின் நடவடிக்கைகளை இல்லாதொழிப்பது எப்படி என விவாதித்து வருகின்றனர். இச்சந்திப்புகளில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் பலவும் இப்பிரச்சினையின் வர்க்க அடிப்படைகளை நாம் ஆராயவேண்டிய தேவையை முன்வைக்கின்றது.

வட கிழக்கில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நாடெங்கிலும் சோதனைச் சாவடிகள் தாபித்திருந்த நேரம். அவற்றில் முன்பக்கம் வைத்திருக்கின்ற தடுப்புக் கம்பிகளில் சித்தாலேப போன்ற பல தனியார் கம்பனிகள் தமது விளம்பரப் பலகைகளை ஒட்டியிருந்தன. இந்த விளம்பரங்களின் வருமானம் பாதுகாப்பு அமைச்சுக்கே சென்றது என்பது ஒருபுறம். ஆனால், தமது வியாபார வருமானத்தை முடக்கும் யுத்த நிலைமையை ஆதரிப்பது போன்றே இந்த நடவடிக்கை இருந்ததுதான் இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டியதாகும். யுத்தம் எப்பொழுதும் வியாபார அபிவிருத்தியினை முடக்கும் தன்மை கொண்டது. வடக்கு கிழக்கில் சாதாரண நிலைமை எற்பட்டு சந்தைகள் யாவும் திறக்கப்பட்டால் எமது வர்த்தகர்களுக்குத்தானே இலாபம். ஆனால், தாம் அடையும் நட்டத்தைக்கூட பொருட்படுத்தாது இலங்கையின் முதலாளித்துவ வர்க்க அரசு மேற்கொண்ட யுத்தத்திற்கு பலவிதங்களிலும் உதவி புரிந்தது. தமது நீண்டகால நலன்களைக்கூட அவை கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.

ஆனால், அதுதான் தரகு முதலாளிகளாக இருக்கும் சிறு முதலாளித்துவ வர்க்கத்தின் (petit bourgeoisie) இயல்பாகும். இவ்வர்க்கம் ஒரு நாட்டின் செல்வத்தின் உற்பத்தியில் பங்கு கொள்ளும் வர்க்கம் அல்ல. இறக்குமதி செய்தோ விற்று வாங்கியோ பிழைக்கும் வர்க்கமாகும். இது அரசியல் சலுகைகளில்தான் தன்னை தக்க வைத்துக்கொள்ளும். இதனால், அரசியல்வாதிகளுக்கெதிராக ஒரு நிலைப்பாட்டினையும் எடுக்க வல்லமையில்லாதது. உள்ளூர் சந்தைகளின் சின்னச்சின்னப் போட்டிகளில் தலையை நுழைத்துக் கொள்ளும். அதனால், தனக்குப் போட்டியாளர்களாக வரக்கூடிய உள்ளூர்க் குழுக்களைக் குறிவைக்கும். அப்படியும் போராட்டக் குணாம்சம் கொண்டதல்ல. கோழைத்தனமாக, அரசின் ஆதரவு கொண்டால் அல்லது செல்வாக்குள்ளவர்களின் ஆதரவு கொண்டால் மட்டுமே இயங்கும். தனது நலன்களை இனம், மதம் போன்ற குறுகிய கோட்பாடுகளுக்குள் அடக்க முயற்சிக்கும். இதற்காகத் தனது தேசிய இனத்தின் பெயரால் போராட்டத்தினை முன்னெடுத்தாலும் அத்தேசிய இனத்தின் நலன்களுக்கு சார்பாக உண்மையாக விசுவாசமாக நடவடிக்கை எடுக்க முடியாதது. ஒரு தேசத்தைக் கட்டியெழுப்ப வல்லமை இல்லாதது. இதற்கு உதாரணமாக, 1956இல் கொண்டுவரப்பட்ட தனிச் சிங்களச் சட்டத்தினைக் காட்டலாம். சிங்களத் தேசியத்துக்காகக் கொண்டுவரப்பட்ட இச்சட்டம் சிங்களவர்களுக்கு உதவியதா என்றால் அதுவும் இல்லை. இன்று ஆங்கிலம் தெரியாமல் உருப்படியாக ஒரு வேலை எடுக்க முடியாத நிலை இந்நாட்டில் உருவாகியிருக்கின்றது. அத்துடன், சிங்களத் தலைவர்களெல்லாருமே தமது பிள்ளைகளை சர்வதேசப் பாடசாலைகளில் படிக்க விட்டிருக்கிறார்கள். அந்தப் பிள்ளைகள் ஒருவருக்கும் சிங்களம் பேசத் தெரியாது.

இதற்கு மாறாக, ஒரு தொழிலக முதலாளித்துவ வர்க்கமோ (Industrial capitalist class) ஒரு நாட்டின் உற்பத்தியினை நிர்ணயிக்கும் தன்மையினாலேசுயாதீனமாக இயங்கும் வல்லமை பொருந்தியது. தனது நீண்டகால நலன்களில் மிகக் குறியாக இருக்கக்கூடியது. இதன் காரணத்தினால், தனது தேசிய அடையாளங்களை விசுவாசமாகப் பேணக்கூடியது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அவ்வாறான வர்க்கம் எங்களது நாட்டில் இல்லை. எனவே, சிங்கள வர்த்தகக் குழுவாக இருந்தாலென்ன, முஸ்லிம் வர்த்தகக் குழுவாக இருந்தாலென்ன அவை யாவுமே இந்த சிறு முதலாளித்துவ வர்க்கத்தைச் சார்ந்தனதான். இன்று முஸ்லிம் மக்களுக்கெதிரான தாக்குதல்களும் அவற்றிற்கான அவர்களின் எதிர்வினைகளும் இந்த அடிப்படையிலேயே நிகழுகின்றன. முஸ்லிம் மக்களுக்கெதிரான தாக்குதல்கள் அடிப்படையில் அவர்களின் வெற்றிகரமான வர்த்தகத்திற்கெதிரான தாக்குதல்களே. அதேபோலவே, முஸ்லிம் சமூகத் தலைமைத்துவத்தின் எதிர்வினைகளும் அவற்றின் சிறு முதலாளித்துவ அடித்தளத்தினை நன்கு வெளிக்கொணருகின்றன.

சமீபத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் சில முஸ்லிம் தலைமைகள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாக அறிகின்றோம். அதன்போது, அவர் உணர்ச்சிவசப்பட்டு தான் அரசிலிருந்து விலகப் போகிறார் எனக் கூறிய கூற்றினை ஏனையோர் விமர்சித்திருக்கின்றனர். தென்பகுதி முஸ்லிம்கள்தான் இப்போது தாக்கப்படுகின்றனர். ஆனால், அவர்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லையே என்றிருக்கின்றனர். அதாவது, அவருக்கு வாக்களிக்காதவர்கள் சார்பில் ஏன் அமைச்சர் இராஜினாமா பண்ணவேண்டும் என்பதுதான் இதன் அர்த்தமாகும். ஒட்டுமொத்த முஸ்லிம் இனத்துக்கு சார்பாகக்கூட இக்கலந்துரையாடலை அவர்களால் கொண்டு செல்ல முடியவில்லை. அத்துடன், இந்த வேளையில் அவர் அரசில் இருந்தால்தான் ஏதாவது செய்விக்கலாம் (சலுகை அரசியல்). குறிப்பாக, குறைந்தபட்சம் இராணுவத்தைக் கொண்டாவது முஸ்லிம் மக்களுக்குப் பாதுகாப்பை வழங்கும் எற்பாட்டினைப் புரிவதற்கு அவர் அரசில் இருப்பது அவசியம் எனச் சுட்டிக்காட்டப்பட்டது. அவருக்கென்ன, உடனேயே ஏனையவர்களுடன் ஒத்துக்கொண்டு விட்டார்.

பொது அமைப்புக்கள் மட்டும் கலந்து கொண்ட இன்னுமொரு கலந்துரையாடலில், முஸ்லிம்களின் வாக்களிக்கும் நடைமுறை பற்றிய விவாதம் வந்தது. அவர்கள் மீதான தாக்குதலில் இந்த அரசு சம்பந்தப்பட்டிருப்பது வெள்ளிடை மலைபோலத் தெரிகின்றதனால் முஸ்லிம் மக்கள் யாவரும் ஒன்று சேர்ந்து தமது வாக்குகளை எதிர்க்கட்சிகளுக்கு வழங்கும் வண்ணம் விழிப்புணர்வு ஊட்ட வேண்டும் என்கின்ற கருத்து தெரிவிக்கப்பட்டபோது அங்குள்ள முஸ்லிம்களே அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அவ்வாறாக முஸ்லிம் மக்கள் பிரசாரம் செய்தால் சிங்கள மக்கள் இன்னமும் கோபமுற்று ஒன்று சேர்ந்து (இப்பொழுதிலும் விடவா?) அரசுக்கு ஆதரவு கொடுப்பதோடு முஸ்லிம்களையும் தாக்குவர் என்றனர். எனவே, முஸ்லிம் மக்கள் அவ்வாறான கட்சிப் பிரிவினைகளில் ஈடுபடக்கூடாது என்பதே பெரும்பான்மைக் கருத்தாகிற்று. ஆனால், இப்பொழுது பார்த்தால், அப்படி ஒன்றும் செய்யாமலேயே இந்தா இன்று அளுத்கமவில் தாக்குதல் நடந்துவிட்டது. முஸ்லிம் சமூகத் தலைமைத்துவங்களினால் தெரிவிக்கப்பட்ட இக்கருத்துக்களை ஒரு சிறு முதலாளித்துவ வர்க்கத்தின் குணாம்சங்களுடன் ஒப்பு நோக்கினால் அவை எவ்வளவு பொருந்துகின்றன என்பது புரியும்.

இன்னுமொரு சந்தர்ப்பத்தில் அளுத்கம நிகழ்வுகளை எதிர்த்து ஒரு சிங்களக்குழு சத்தியாக்கிரகப்போராட்டத்தை இம்மாதம் முன்னெடுக்கத் தயாராக எழுந்தது. அதற்கும்கூட, பொதுபல சேனா இப்பொழுது கொஞ்சம் பின்வாங்கியிருக்கின்றனர் (எங்கே ஐயா?), இந்த நேரம் போராட்டம் அது இது என ஆரம்பித்து வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு அவல் கொடுக்காதீர்கள் என்று அதனையும் முஸ்லிம் தலைவர்கள் தடுத்து விட்டனர். பொதுபல சேனா இப்போராட்டத்தினை பௌத்த சிங்களத்துக்கெதிரான போராட்டம் என்று பிரகடனம் செய்து விடுமாம்.

அப்போ என்னதான் செய்யலாம்? மகாநாயக தேரர்களை கெஞ்சி இறைஞ்சலாம். சிங்கள மக்களை நோக்கி சமாதான சமிக்ஞைகள் தரும் அறிக்கைகளை வீசலாம். இவையெவையும் ஒரு பெரும்பான்மை மதத்தினைச் சார்ந்தவர்கள், அரசின் மூலம் தாம் பெற்றுக்கொண்ட அளவுக்கடந்த அதிகாரத்தைப் பிரயோகிக்கும் இந்தப் போக்கில் ஒரு மாற்றத்தையும் கொண்டுவர முடியாது. இந்த உலகில் எவருமே தமது அதிகாரத்தினை தாமாகவே விட்டுத்தந்த வரலாறு கிடையாது. அந்த அதிகாரத்தினை நிலைமாற்றும் ஒரு பாரிய அரசியலமைப்புச் சீர்திருத்தத்தின் மூலம் மட்டுமே மாற்றத்தினைக் கொண்டுவர முடியும். அதற்கு முஸ்லிம் மக்கள் போராடத் தயாராக இருக்க வேண்டுமே.

அவுஸ்திரேலியாவிலிருந்து கலாநிதி அமீர் அலி என்பவர் ஒரு காரசாரமான கட்டுரையினை ஆங்கில இணையதளங்களில் எழுதியிருக்கின்றார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினை கலைப்பதே முஸ்லிம் மக்கள் முன்னாலுள்ள முதல் கடமையாகும் என்று அவர் கூறியிருக்கின்றார். இதனைக் கலைத்தாலாவது முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்வதற்கு ஒரு தமிழனோ சிங்களவனோ முன்வரும் வாய்ப்பு இருக்கின்றது. அவர்களில் எவரும் முஸ்லிம் மக்களின் சார்பாகப் பேச வல்லவர்கள். முஸ்லிம் தலைவர்களைத் தவிர என்பதே அவருடைய வாதமாகும். முஸ்லிம்கள் அல்லாதவர்கள் மூலமே முஸ்லிம்களின் நலன்கள் காப்பாற்றப்படலாம் என அவர் நம்புகின்றார். அதனை நிறுவுந் தன்மையில் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார திஸாநாயகாவின் உரை இருந்திருக்கின்றது. கொலைகாரர்களைக் காப்பாற்றும் அரசு என அவர் உணர்ச்சி பூர்வமாக உரையாற்றியிருக்கின்றார். இப்படியாகத் துணிச்சலாக ஒரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினரும் அரசினைச் சாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

என்றாலும்கூட, முஸ்லிம் காங்கிரஸினை மட்டும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவது இங்கு பயனற்ற செயலாகும். அது தனது சமூகத்தின் பிரதிபிம்பம் அன்றி வேறில்லை. அக்கட்சியைத் தோற்றுவித்ததும் அதே முஸ்லிம் சமூகமல்லவா? அதன் கொள்கைகளில் செல்வாக்குச் செலுத்துவதும் அச்சமூகமே. இதனைத்தான் இங்கு இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு சம்பவமும் விளக்கிற்று. நானோ, முஸ்லிம் அரசியலுக்கு தலைமை தாங்கும் வர்க்கம் மாற்றப்படவேண்டிய தேவை இருக்கின்றது என வாதாடுவேன். முஸ்லிம் சமூகம் தனது சிறுமுதலாளித்துவ தளங்களிலிருந்து மீண்டு, புத்திஜீவிகள் மற்றும் தொழிலாள (விவசாய) வர்க்கத்தினர் போன்றவர்களின் துணையோடு அணி திரண்டு புதியதோர் அரசியல் படைக்க வேண்டுமோ?

தினக்குரல் பத்திரிகைக்காக சாந்தி சச்சிதானந்தம் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.