30 வருட காலமாக தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராடியிருக்கிறார்கள். அவர்கள் ஆயுதம் ஏந்தியதற்குப் பின்னால் ஒரு காரணம் இருப்பதை ஏற்க மறுப்போமாக இருந்தால் நாட்டில் தேசிய நல்லிணக்கம், சமாதானம் ஏற்படுமென்று ஒருநாளும் எதிர்பார்க்க முடியாது.

இவ்வாறு தெரிவித்தார் சட்டத்தரணியும், இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரத்தின் இணை அழைப்பாளருமாகிய இ. தம்பையா. யுத்தம் நிறைவடைந்து 5 வருட பூர்த்தி தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மே மாதம் 19ஆம் திகதியுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டு 5 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. இந்த 5 வருடங்களில் தேசிய நல்லிணக்கத்திற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எவை? இறுதி யுத்த காலப்பகுதியில் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எவை? என்பதை மக்கள் சார்பாக செயற்படுகிறவர்கள் மீள் பரிசீலனை செய்துகொள்ள வேண்டிய அதேவேளை, இதை மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டியதும் அவசியமான கடமையாக இருக்கிறது.

முதலாவது, யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் யுத்தம் வேண்டாம் எனக் கூறி சாமானிய மக்களால் கூட போராட்டங்களை நடத்தக்கூடிய உரிமை இருந்தது. ஆனால், இந்த நாட்டில் யுத்தம் முடிவடைந்த பிறகு அரசியல் தீர்வை வலியுறுத்தி போராட்டமொன்றை நடத்துவதற்கான சூழல் அறவே இல்லாத ஒரு ஜனநாயக மறுப்பை நாம் எதிர்கொண்டு வருகிறோம்.

இந்த 5 வருடங்களில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வா என்று அரசு அழைப்பதும், வரமுடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவிப்பதுமாக காலங்கள் உருண்டோடி விட்டன. இதற்கிடையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக மூன்று பிரேரணைகள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன. அத்தோடு, பொது நலவாய மாநாடும் பெரும் களியாட்டமாக இடம்பெற்று முடிந்துள்ளது. சர்வதேச இளைஞர்கள் மாநாடும் தற்போதுதான் நிறைவு பெற்றுள்ளது.

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்கள், அழிக்கப்பட்ட அந்தப் பிரதேசம் பற்றி கவலை கொள்ளாமல், இன்று நவ காலனியாதிக்க, நவ தாராளவாத பொருளாதாரத்துக்குள் மூழ்கியுள்ள உலக ஒழுங்கினால் கொண்டாட்டங்களையும் விழாக்களையும் இங்கு நாம் நடத்திக்கெண்டிருக்கிறோம். தறபோது சட்டத்தை மீறி, நாடாளுமன்ற சம்பிரதாயங்களை மீறி கசினோ சூதாட்டத்துக்கு அனுமதி கொடுத்திருக்கிறோம்.

ஆனால், யுத்தத்தில் உயிரிழந்த உடன் பிறப்புக்களை நினைவுகூர்ந்து ஒரு நிகழ்வை நடத்த முடியாமல் உறவுகள் கடந்த 5 வருடங்களாக தவித்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கு எதுவித சட்டத் தடையும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. நினைவு நிகழ்வுகளை நடத்தக்கூடாது என இராணுவமும், அரச தலைவர்களும் கூறிவருகின்றனர்.

அழிக்கப்பட்ட எல்லோருமே விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்லர். ஆனால், பெருமளவு பொதுமக்களும் உயிரிழந்திருக்கின்றனர். அவர்களை நினைவு கூருவதற்கு உறவினர்களுக்கு உரிமை இருக்கிறது. ஏன் தேசிய இனம் என்ற வகையில் தமிழ் மக்களுக்கும், ஜனநாயக உரிமைகளைக் கொண்டிருக்கும் இலங்கை மக்களுக்கும் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதற்கு உரிமை இருக்கிறது.

பௌத்த மதத்தைப் பொறுத்த வரையில் அங்குலிமாலா என்பவர் எவ்வளவு கொடூரமானவர் என்று எல்லோருக்கும் தெரியும். அவர் மன்னிக்கப்பட்டுள்ளார். அசோக சக்கரவர்த்தி எத்தனை உயிர்களை கொன்றொழித்தார் என்பதும் தெரியும். அவரையும் மன்னித்திருக்கின்றபோது தமிழ் மக்களுடைய உரிமைக்காக ஆயுதம் ஏந்தி, அவர்கள் பிழையாக வழிநடத்தப்பட்டிருக்கலாம், அவர்களது செயற்பாடு பயங்கரவாதமாக, பாசிசமாக இருக்கலாம், அதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால், அவர்களது கைகளிலேயே தமிழ் மக்களுடைய உரிமை என்ற கோரிக்கை இருந்தது. அதனையே நாங்கள் பார்க்கிறோம்.

குறிப்பாக, இந்த இடத்தில் வரலாற்று ரீதியாக ஒரு உதாரணத்தைக் கூற விரும்புகிறேன். சோவியத் யூனியனின் ஸ்தாபகத் தலைவரான லெனின் புரட்சி நடத்துவதற்கு முன் அவருடைய சகோதரன் தலைமையில் அங்கு கிளர்ச்சி நடந்தது. தனிநபர் பயங்கரவாதமாகக் கொண்டு செயற்பட்ட அந்த அமைப்பு இங்கு விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டது போல் முற்றுமுழுதாக அழித்தொழிக்கப்பட்டது. இதன்போது லெனின், “கொல்லப்பட்டவர்களுக்கும் எங்களுக்கும் அவர்களது நடவடிக்கை, கொள்கை தொடர்பில் உடன்பாடு இல்லை. ஆனால், மக்களுக்காக தங்களது உயிர்களை தியாகம் செய்திருப்பதால் அவர்களை நினைவுகூர்ந்து ஒரு தடவை அல்ல இரண்டு தடவை சலாம் செய்வேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.

ஆகவே, இங்கு இலங்கையில் 1978, 1988ஆம் ஆண்டுகளில் சிங்கள இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி அழிந்திருக்கிறார்கள். மக்களும் உயிரிழந்திருக்கிறார்கள். அதன் பிறகு 30 வருடங்களாக தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராடியிருக்கிறார்கள். அதற்குப் பின்னால் ஒரு காரணம் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள மறுப்போமாக இருந்தால் தேசிய நல்லிணக்கம், சமாதானம் என்ற ஒன்றை எதிர்பார்க்க முடியாது.

இன்று தென் ஆபிரிக்காவின் தலையீட்டுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தப் போவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இது விடயத்தில் யார் தலையிட்டாலும் – மத்தியஸ்தம் வகித்தாலும் – நாட்டை ஆளுகின்ற, பேரினவாத – பாசிச கட்டமைப்புக்குள் உள்ள இந்த அரசு தமிழ் மக்களுக்கு ஒருபோதும் தீர்வை வழங்கப்போவதில்லை.

சட்டத்தரணி இ.தம்பையா ‘மாற்றம்’ தளத்துக்கு அளித்த நேர்க்காணல் கீழே தரப்பட்டுள்ளது.

 

###

IMG_1852

‘மாற்றம்’ தளத்தின் விசேட பக்கத்துக்காக 5 வருட யுத்த நிறைவு குறித்து கட்டுரையாளர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அத்தோடு, “5 வருடங்கள் பூர்த்தி | இன்னும் முடிவுறாத யுத்தம்” என்ற தலைப்பில் ‘மாற்றம்’ தளத்தின் ஆசிரியர் எழுதியுள்ள கட்டுரையையும் இங்கு காணலாம்.