படம் | Lakruwan Wannuarachchi/AFP/GettyImages, Foxnews

உண்மைகள் ஆபத்தானவை. பலரைக் கொன்று குவித்ததும், காணாமல்போகச் செய்ததும், அங்க இழப்புக்களை வழங்கியதும், புலம்பெயர்ந்து முகவரியற்றவர்களாக்கியதும் இந்த உண்மைதான். ஆக, உண்மை என்பது உயிர்பறிபோகும் பீதி தருகின்ற அபாயமாக மாறியிருக்கின்றது. உண்மை – பொய் – அபத்தம் என்பன குறித்த மேதைகளின் தத்துவ விளக்கங்களையும், சொற்களால் மட்டும் கட்டமைவு பெற்றிருக்கின்ற இவற்றின் மீதான விமர்சனங்களையும் ஆராய்ச்சி அறைகளுக்குள் இறுக்கப் பூட்டி வைத்துவிடலாம். பாடசாலைக் கல்வி கற்றுக்கொடுத்த “வாய்மையே வெல்லும்”, “உண்மையே பேசு” போன்ற பாடமாக்கல் வசனங்களையும் இதைப் படித்து முடிக்கும் வரைக்கும் மறந்திருக்கலாம். வாழ்க்கை, யதார்த்தம், உண்மை குறித்து என்ன அனுபவத்தை தருகிறது. மேற்குறித்த இரு வரிகளும் சொல்வதுபோல உண்மை அபாயகரமானதா? உயிரெடுக்கக்கூடியதா? அதற்கான அண்மைச் சான்றுகள் ஏதும் அரசியல் மற்றும் வாழ்தல் அனுபவங்களில் இடம்பெறுகின்றனவா?

அண்மைய உண்மை

கடந்த வாரத்தில் இருந்தும், சற்றுத் தள்ளியுமான காலங்களில் இருந்து இதற்கான ஆதாரங்களை எடுத்துக் கொள்வோம். சற்றுமுன் என்று ஞாபகப்படுத்திக் கொள்ளக்கூடிய தூரத்தில் பளபளக்கும் உண்மையொன்று தெரிகின்றது. இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போர் தொடர்பிலான அரசியல் கொதிப்பு ஏற்படும் வேளைகளில் வெளியாகின்ற, போர்க்குற்ற ஆதாரங்கள் உண்மை மதிப்பீட்டுக்கானவை. மே 18 அன்றும் இனப்படுகொலை ஆதாரங்கள் சில புகைப்படங்களாக வெளியிடப்பட்டிருந்தன. இதுவரை வெளியான புகைப்படங்களிலும் பார்க்க இவை தெளிவான நிலையில் இருந்தன. பெரும்பாலும் அதில் இடம்பெறும் அனைவரையுமே இவர்தான் இவரென அடையாளம் காணமுடியும். ஆனால், இருவர் மட்டுமே இதுவரை அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.

எவ்வகையான அடையாளப்படுத்தல்?

ரகசியமாகப் பரவிய அடையாளப்படுத்தல்தான் அது. இதுவரை காணாமல்போனோரை கண்டுபிடிப்பதற்கான பதிவுகளிலும், அதற்கான போராட்டங்களில் புகைப்படங்களுடனும், அவர்களை தேடுவதற்கு லட்சக்கணக்கான பணம் கொடுத்து ஏமாற்றப்பட்ட வெகுளித்தனங்களிலும் வழிந்த கண்ணீர் அந்த ரகசியத்தை பரகசியப்படுத்தியிருந்தது. படங்களைப் பார்த்தவுடன் பொங்கிய கண்ணீரும், அதற்கான அயலவர்களின் கிசுகிசுப்பும் இசைப்பிரியாவுக்கு அருகில் இருக்கும் பெண் பெற்றோரால் அடையாளம் காணப்பட்டார் என்கிற செய்தியை கொடுத்தது. ஆனால், அத்துடன் அது அடங்கியும்போனது. மேலதிகம் பேச அவர்களுக்கு வாய்ப்பிருக்கவில்லை. அதற்கான அனுமதியுமில்லை. இனந்தெரிந்த பயமும், இனந்தெரியாத பயமும் இணைந்து கதறியழுவதைக் கூட தடைசெய்துவிட்டது.

சில நாட்களில் அதே புகைப்படத்தில் இருக்கின்ற இரண்டாமவரும் அவர்களின் உறவுகளால் அடையாளங் காணப்பட்டார். அவர்களும் அது குறித்து விரிவாக ஊடகங்களில் பேசுவதையோ, அந்தச் செய்தி பரவலாக்கப்படுவதையோ பயம் தரும் ஒன்றாகவே பார்க்கின்றனர். இந்த இரண்டு அண்மைய உதாரணங்களும் உண்மையையும் அதற்கான போராட்டங்களையும், சர்வதேச குரல் கொடுப்புக்களையும் நம்பிக்கையற்றதாக்கியிருக்கிறது.

இலங்கையின் ஜனநாயகம் உண்மையானதா?

இந்த இடத்தில்தான் இலங்கையில் உண்மை பேசுதலுக்கு இருக்கின்ற அபாயம் உணரப்பட்டிருக்கிறது. எந்த உறவைத் தேடியலைந்தார்களோ, எதற்காகப் போராடினார்களோ, அதை நேரில் கண்டு, சாட்சியான பின்பும் வெளியுணர்த்த முடியாத வகை ஜனநாயகச் சூழல் விளங்கும் நாடு இலங்கை என்பதை இந்தச் சம்பவம் சொல்லியிருக்கிறது. ஆக, உண்மைகள் இங்கு பேச முடியாது. எனவேதான், இலங்கையில் நிலவும் ஜனநாயகச் சூழலில் உண்மை பேச முடியாது என்கிற முடிவிற்கு வரவேண்டியிருக்கிறது. அப்படியாயின் உண்மையின் பெறுமதியென்ன? இதை எவ்வகை ஜனநாயகத்துள் வைத்துப் பார்ப்பது?

உண்மைக்கு அடுத்த நிலையில் இலங்கையின் ஜனநாயகம் கேள்விக்குரிக்குள்ளாகிறது. எல்லா மன்னராட்சி, நாசிசம், பாசிசம் என எல்லா கொடுங்கோன்மைகளுடையதும் கலப்பில் உருவான, முரணான ஜனாநாயக வடிவம் என்ற ஒரு வகை ஆட்சித் தத்துவத்தை இலங்கை உலகிற்கு அறிமுகப்படுத்துகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது. இப்படியான ஒரு ஆட்சி முறையில் ஐரோப்பிய நாடுகளின் திறந்த ஜனநாயகத்தையும், கியூபாவின் மூடிய பிடலிஸத்தையும், சீனாவின் அதிகாரப்படுத்தப்பட்ட கம்யூனிசத்தையும், இன்னபிற தேசங்களில் ஆட்சி வகையறாக்களையும் தனித்தனியாக இங்கு எதிர்பார்க்க முடியாது. எல்லாம் கலவைதான். கடவுளிடமிருந்தே அதிகாரங்கள் எனக்களிக்கப்பட்டன என்கிற ரோம மன்னனின் ஆட்சித்தத்துவத்தில் விடாப்பிடியாக இருந்து கொண்டு, ஆட்சியின் அனைத்து அங்கங்களிலும் நிரப்பி வைத்துக் கொண்டு ஜனாநாயக நாடு என்று மார்தட்டிப் பேசிக்கொள்பவர்களிடம் உண்மைக்கான இடம் என்ன? எதுவுமிருப்பதில்லை. உண்மை பேசுதலும், அதற்காக போராடுதலும் பயங்கரவாதக் குற்றங்களாக, தீவிரவாதத்தை வளர்க்கும் நடவடிக்கைகளாக அடையாளப்படுத்தப்படும்.

இந்த வகை யாருக்கெல்லாம் ஆபத்து?

இது உலகிற்கே ஆபத்தானது. மனித உரிமைகளின் மீட்சியை போதிக்கின்ற, நேசிக்கின்ற சக்திகள் அனைத்தின் மீதும் விழுந்த அவமான அடி. எந்தப் பெரிய வல்லரசையும் அடிமையாக்கும், பின்னால் வர வைக்கும் இராஜதந்திரத்தின் உச்சமான பாடம் இது. அதற்கான முழு அத்தியாங்களையும், அதற்கான விளக்கங்களையும் உண்மைக்கு எதிரான இந்த ஆட்சித் தத்துவம் கற்பித்துவிடுகின்றது. சிறுபான்மையினங்களை ஒடுக்குவதிலும், மத – இன வாதங்களை வைத்து ஆட்சி நடத்துவதில் புதிய கற்பிதங்களையும் இது வழங்கியிருக்கிறது. இதன் முதல் மானசீக மாணவனாக மோடி வலம் வருவார் என்பதே இந்திய அறிவுஜீவிகள் மட்டத்தில் எழுந்திருக்கின்ற உரையாடல்களின் முடிவு. எனவே, ஜனநாயகத்தின் சாயலில் தெரிகின்ற புதிய ஆட்சித் தொடக்கமொன்று சிறுதீவிலிருந்து பரவலடைகின்றது. இதனை நவீன எதேச்சதிகார ஆட்சித் தத்துவமாகவும் கொள்ள முடியும். வாக்களித்து மன்னரைத் தெரிவு செய்வது மட்டுமே இங்குள்ள ஜனநாயக ஏடுகளில் இடம்பெறும் ஆயிரத்தெட்டு வார்த்தை வரிகளில், நடைமுறையில் இருக்கும் ஒரே விடயமாக அமையும்.

ஜெரா

###

IMG_1852

‘மாற்றம்’ தளத்தின் விசேட பக்கத்துக்காக 5 வருட யுத்த நிறைவு குறித்து கட்டுரையாளர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அத்தோடு, “5 வருடங்கள் பூர்த்தி | இன்னும் முடிவுறாத யுத்தம்” என்ற தலைப்பில் ‘மாற்றம்’ தளத்தின் ஆசிரியர் எழுதியுள்ள கட்டுரையையும் இங்கு காணலாம்.