படம் | Worldvision

வைகாசி 18
முல்லைக்கொலைகள் – எம்
எல்லை விலைகள்
தொல்லை வலைகள் – இனி
இல்லை மலைகள்

நான் உனக்குப் பயங்கரவாதி
நீ எனக்குப் பயங்கரவாதி என்றில்லா
நாள் உனக்கு வரும் போது
நீ எனக்கு நண்பனாவாய்.

அப்பனைக்கொன்றவன் பயங்கரவாதி
அப்பனைக் கொன்றது பயங்கரவாதம்
அப்பன் கொன்றது பயங்கரவாதம்
உன்னை நீ உணர்ந்தால்
உலகை நீ உணர்வாய்
உலகை நீ உணர்ந்தால்
உவகையினை உவப்பாய்
வன்முறை வேண்டாம் இவ்வையகத்தில்
வன்முறை செய்தோர் வழிவிடுங்கள்.

சமாதானமே எமக்கு சிறந்ததானம் – அதற்காக
ஏங்குகின்றோம் நாம் நயவஞ்சகர்களிடம்
சோரம் போய் அரசியலை நடத்துவதை விடுத்து
ஓரம் போய் இருந்திடுங்கள் எமக்காக என்றும்
நம்பிக்கை நமக்குண்டு நாளை நமதே என்றிட
சோர்ந்திடோம் சுறுசுறுப்பாய் மிடுக்கிடுவோம்.

மனிதநேயம் சயனிக்கும்போது
மௌனம் மௌனிக்கவேண்டும் – இதற்கு எம்
கணிதம் கவனிக்க வேண்டும்
புனிதம் அவனியில் அணிவகுக்க,
துள்ளித்திரியும் பள்ளிச் சிறார்கள் பச்சிளம் பாலகர்கள்
முள்ளிவாய்க்கால்தனில்
தாயை இழந்து தந்தையை இழந்து
உடன் உறவுகளையே இழந்து
தம்மையே இழந்து
ஆண்டுகள் நான்கு ஐந்து எனப் பலவாயினும்
தாயில் தூவாக் குழவிபோல்
ஓயாது கூவும் நம் தமிழ்நாடு
அடுநையாயினும் விடுநையாயினும்
அறனோ மற்று இது சிங்களத்திற்கு
அறமும் மறமும் அகன்றதுவே
உரமான எம்மினத்தின் சீர்வேரினை
கோரமான போர் அழித்ததுவே
நண்ணார் நாணுவர் நம் அழிப்பை உணரின்
நகுமின் நம்மை வஞ்சிக்கா நாளை.

வைத்தியர் சி.யமுனானந்தா

###

IMG_1852

‘மாற்றம்’ தளத்தின் விசேட வௌியீட்டுக்காக 5 வருட யுத்த நிறைவு குறித்து கட்டுரையாளர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அத்தோடு, “5 வருடங்கள் பூர்த்தி | இன்னும் முடிவுறாத யுத்தம்” என்ற தலைப்பில் ‘மாற்றம்’ தளத்தின் ஆசிரியர் எழுதியுள்ள கட்டுரையையும் இங்கு காணலாம்.