படம் | Wikipedia

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி புதன்கிழமை தென்னாபிரிக்கா சென்றிருந்தனர். ஏற்கனவே, ஜெனிவா தீர்மானத்திற்கு முன்னர் அரச தரப்பினர் சென்று வந்த நிலையில் பின்னர் கூட்டமைப்பினர் சென்றனர். கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரே சென்றார்கள் என செய்திகள் வந்துள்ளன. கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் எவரும் சேர்க்கப்படவில்லை. கிழக்கு பற்றி கதைப்பதையே இந்தியாவும், மேற்குலகும் விரும்பாததினால் சம்பந்தன் தலைமையும் அதனைத் தவிர்த்திருக்கக்கூடும். சம்பந்தனை கிழக்கின் பிரதிநிதியாக எவரும் பார்ப்பதில்லை.

விரைவில்மனித உரிமைகள் பேரவையின் சுயாதீனமான விசாரணை ஆரம்பிக்கப்படலாம் என்ற நிலையில் தென்னாபிரிக்கா செல்வது விசாரணையை பலவீனப்படுத்தாதா? என்கின்ற சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் இந்தச் சந்தேகத்தை ஏற்கனவே கிழப்பியிருக்கின்றார்.

இதனை மெய்ப்பிக்கும் வகையில் தற்போது தென்னாபிரிக்கா அனுசரணையாளராக செயற்பட இணக்கம் தெரிவித்ததாக செய்திகள் வந்துள்ளன. தென்னாபிரிக்காவின் நல்லிணக்கத் தூதுவர் சிறில்ராம் போஷா தலைமையில் ஒரு குழுவினர் இலங்கை வந்து பல தரப்பினருடனும் பேசப்போவதாகவும் தகவல்கள் வருகின்றன. முதலில் தடைப்பட்ட பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பது பற்றி பேசப்படும் என்றும் கூறப்படுகின்றது. இலங்கை அரசின் வேண்டுகோளின் பெயரிலேயே அனுசரணையாளர் பொறுப்பினை தென்னாபிரிக்கா ஏற்றுள்ளது.

இந்தியா மனித உரிமைகள் பேரவையின் விசாரணையை எப்படியாவது நிறுத்தவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. அதன் அழுத்தத்தினாலேயே இந்த தென்னாபிரிக்க பயணம் இடம்பெறுவதாகவும் செய்திகள் வருகின்றன.

நல்லிணக்கத்திற்கான செயற்பாடுகள் நடைபெறுகின்றன. எனவே, விசாரணையை தற்போது நடாத்தி நிலைமையை குழப்பவேண்டாம் என்ற செய்தி இதனூடாக மேற்குலகத்திற்கு சொல்லப்படுகின்றது.

நல்லிணக்க செயற்பாட்டிற்கு அழைக்கும் போது செல்லத்தானே வேண்டும் என்ற வாதம் இங்கு முன்வைக்கப்படலாம். அதில் நியாயம் இல்லாமல் இல்லை. ஆனால், அதற்கான முன் தயாரிப்புக்களுடன் கூட்டமைப்பினர் செல்கின்றனரா? என்பதுதான் இங்குள்ள கேள்வி. அரசின் பொறிக்குள் விழுந்து விடாமல் நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பதில் மிகுந்த அவதானம் தேவை.

தென்னாபிரிக்கா அரசு நல்லிணக்க தூதுவராக ஒருவரை நியமித்துள்ளது. அவருடனாவது சந்திப்பு தொடர்பான நிகழ்ச்சிநிரல் பற்றிப்பேசியிருக்க வேண்டும். அதற்கு முன்னர் கூட்டமைப்பினர் தங்களுக்குள் இது பற்றிப் பேசியிருக்கவேண்டும். இது விடயத்தில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களின் ஆலோசனைகளைப் பெற்றிருக்கவேண்டும். ஆனால், அவை எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை.

அரசு மீண்டும் வட கிழக்கில் கெடுபிடிகளை தொடங்கிவிட்டுள்ளது. சுற்றிவளைப்புக்கள், கைதுகள் என்பன தொடர்கின்றன. புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் மீண்டும் மிக மோசமான வகையில் இம்சிக்கப்படுகின்றனர். மீன்பிடித்தலில் பாஸ்முறை மீண்டும் அமுல்படுத்தப்படுகின்றது. பேச்சுக்கு நிபந்தனையாக இவற்றை நிறுத்துங்கள் என்பதை முன்வைத்திருக்கலாம். புலம்பெயர் நாடுகளில் உள்ள 16 தமிழ் அமைப்புக்களையும் பல தனிநபர்களையும் இலங்கை அரசு தடைசெய்துள்ளது. புலம்பெயர் தமிழ் மக்கள் தாயக மக்களின் ஒரு பிரிவினர். இந்தத் தடை இருக்கும் வரை பேச்சுகளில் கலந்துகொள்ள முடியாது என கூறியிருக்கலாம். இவை பற்றி ஏனையவர்கள் வாய் திறந்தாலும் சம்பந்தன் வாயே திறக்கவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள கட்சிகளின் தலைவர்கள் தான் பேச்சுக்கு செல்லவேண்டுமென்றில்லை. இங்கு நிபுணத்துவம் வாய்ந்த லொபிதான் முக்கியம். ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சிவில் சமூகத்தில் உள்ள நிபுணர்களையும் புலம்பெயர் சமூகத்திலுள்ள நிபுணர்களையும் இணைத்து ஒரு லொபியை உருவாக்கியிருக்கலாம். அந்த லொபியினூடாக சர்வதேச சந்திப்புக்களை மேற்கொள்ளும்போது சந்திப்புக்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.

சர்வதேச அரசியலை நிபுணத்துவம் இல்லாதவர்களினால் முன்னெடுப்பது கடினம். அரசுகள் இதற்காகவே ஆட்களைப் பயிற்றுவிப்பது உண்டு. தமிழ்த் தேசிய அரசியலும் சர்வதேச மட்டத்திற்கு வந்துள்ளதால் ஆட்களைத் தெரிவு செய்து பயிற்றுவிப்பது அவசியம்.

இங்கு எழும் கேள்வி தென்னாபிரிக்கா அனுபவம் தமிழ் மக்களுக்கு பயன்படக்கூடியதா? தென்னாபிரிக்க அனுபவம் எந்த வகையிலும் தமிழ் மக்களுக்கு பயன்படக்கூடியதாக இருக்காது. இதற்கு பல காரணங்கள் உண்டு. அங்கு உருவாக்கப்பட்ட உண்மை அறியும்குழு போன்ற ஒன்றை உருவாக்கி சமரசமாகப் போதல் பற்றி பேசப்படுகின்றது.

பயன்படமுடியாது என்பதற்கான காரணங்களுள் முதலாவது, அங்கு அடக்கப்பட்ட தரப்பு வெற்றி பெற்றது. அது வெற்றி நிலையில் இருந்து கொண்டு தோல்வியடைந்தவர்களை அணைத்துச் செல்ல முற்பட்டது. ஆனால், இங்கு அடக்கப்பட்ட தமிழ்த் தரப்பு தோல்வியடைந்துள்ளது. தோல்வியடைந்த தரப்பு சமரசத்திற்கு செல்வது சரணாகதியே தவிர வேறல்ல.

இரண்டாவது, தென்னாபிரிக்காவில் அடக்கப்பட்ட தரப்பு ஆட்சி அதிகாரத்தை தன் கையிலெடுத்த பின்தான் சமரசத்திற்கு சென்றது. இங்கு அதற்கான வாய்ப்புகள் எதுவும் அண்மைக்காலத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழ் மக்களுக்கு சாதகமான ஒரு அரசியல் தீர்வு கிடைத்த பின் சமரசத்திற்கு சென்றால் அது பாதுகாப்பாக இருந்திருக்கும்.

மூன்றாவது, தென்னாபிரிக்காவில் அடக்கப்பட்ட கறுப்பினத்தவர்கள் பெரும்பான்மையாக இருந்தனர். ஆட்சி அதிகாரம் கைக்கு வந்தநிலையில் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருப்பது அதிகார நிலையில் அவர்களை எப்போதும் மேல் நிலையில் வைத்திருக்கும். இலங்கையில் தமிழ் மக்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருப்பது ஆட்சி அதிகாரமும் இல்லாத நிலையில் அவர்களை கீழ் நிலையிலேயே வைத்திருக்கும்.

நான்காம் கட்டப் போரில் இராணுவம் மனித உரிமை மீறல் எதிலும் ஈடுபடவில்லை என்று வாதிட்டு வரும் இலங்கை அரசு தம்முடைய படையினரை குற்றம் செய்தவர்கள் என ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. பொறுப்புக்கூறல் கடமையை நிறைவேற்றாமல் சமரசத்திற்கு செல்வதையே அது வற்புறுத்தும். தமிழ் மக்களுக்கு இது ஏற்றதல்ல.

ஐந்தாம் கட்டப் போர் இன்னமும் முடிவடையவில்லை. அது வேறோர் வகையில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கட்டமைப்பு சார் இனப்படுகொலை ஒன்றை அரசு முன்னெடுக்கின்றது. நிலப்பறிப்பு, பொருளாதாரப் பறிப்பு, கலாச்சார பறிப்பு என்பன தொடர்கின்றன.

தற்போது சுற்றிவளைப்பு, கைதுகள்என்பன முடுக்கிவிடப்படுகின்றன. இந்த கட்டமைப்பு சார் இனப்படுகொலையை நிறுத்துவதற்காக உத்தரவாதம் இல்லாமல் சமரசத்திற்கு செல்வது இனப்படுகொலையை தொடர்ந்தும் ஊக்குவிப்பதாகவே அமையும்.

சிங்கள மக்களுக்கு போரில்லா நிலை மட்டும் சமாதானமாக இருக்கலாம். ஆனால், தமிழ் மக்களுக்கு போரில்லா நிலை, இயல்பு நிலைக்கு திரும்புதல், அரசியல்தீர்வு என்கின்ற மூன்றும் உறுதிப்படுத்தும் போதே சமாதானம் ஏற்படும்.

போரே இன்னோர் வகையில் தொடரும்போது இயல்பு நிலைக்கு திரும்புதல், அரசியல் தீர்வு என்பவற்றை நினைத்தே பார்க்க முடியாத நிலைதான் தற்போது காணப்படுகின்றது.

இந்த நிலையில், தென்னாபிரிக்க அனுபவம் எந்த வகையிலும் தமிழ் மக்களுக்கு உதவப்போவதில்லை.

இலங்கை அரசிற்கு தற்போது இக்கட்டான நிலை. எப்படியாவது மனித உரிமைகள் பேரவையின் விசாரணையை தடுத்துநிறுத்த வேண்டும். இந்த விடயத்தில் இந்தியாதான் அரசிற்கு உதவக்கூடிய நிலையில் உள்ளது. இந்தியா உதவவேண்டுமானால் சிறியளவிலாவது இந்தியாவைத் திருப்திப்படுத்த வேண்டும்.

இதற்கு இரண்டு வழிகள்தான் உண்டு. ஒன்று, வட மாகாண சபையை சுயாதீனமாக செயற்பட விடவேண்டும். இரண்டாவது அரசியல் தீர்விற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன என வெளிப்படையாகக் காட்டவேண்டும். வடமாகாண சபையை செயற்பட விடுவதில் அரசு பெரிய அக்கறையினைக் காட்டவில்லை. இதனால், இரண்டாவது விடயமான அரசியல் தீர்வு முயற்சிகள் நடைபெறுவதாக ஒரு தோற்றத்தைக் காட்ட முனைகின்றது. இந்தியாவும் அதற்கு உதவுகின்றது. தென்னாபிரிக்க அனுசரணைப் பாத்திரம் ஏற்க முன்வந்தமைக்கு இந்தியாவே பிரதான காரணம்.

இலங்கை விவகாரத்தில் உள்ள செயற்பாட்டுப் பொறிமுறையை மேற்குலகத்திலிருந்து தன் கைக்கு மாற்றவே இந்தியா முயல்கின்றது. தென்னாபிரிக்கா அனுசரணைப் பாத்திரத்தை எடுத்திருப்பது இந்த இலக்கில் ஒருபடி முன்னேற்றம் என்றே கூறவேண்டும்.

இந்நிலையில், தமிழ்த் தரப்பு நிபந்தனைகளுடனேயே பேச்சுவார்த்தைக்கு செல்ல வேண்டும். இயல்பு நிலையினைக் கொண்டு வருவதையே நிபந்தனையாக முன்வைக்கவேண்டும். தமிழ் மக்கள் இயல்பு நிலைக்கு வராமல் பேச்சுகளை முன்னெடுப்பதில் எந்தப் பயனும் இல்லை. சிவில் வெளியைப் பெருப்பிப்பது இங்கு மிக மிக அவசியம்.

இயல்பு நிலை என்பதற்குள் இராணுவ அடக்குமுறையை இல்லாமல் செய்தல், சிறைக் கைதிகள் விடுதலை, காணிப் பறிப்பினை நிறுத்துதல், தமிழர் தாயகம் மீதான பச்சை ஆக்கிரமிப்புக்களை நிறுத்துதல் போன்றன உள்ளடங்கும்.

தமிழ் மக்கள் இயல்பு நிலையினைக் கொண்டுவராமல் பேச்சுவார்த்தைக்கு செல்வதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

ஜோதிலிங்கம் சிவசுப்ரமணியம்

###

IMG_1852

‘மாற்றம்’ தளத்தின் விசேட வௌியீட்டுக்காக 5 வருட யுத்த நிறைவு குறித்து கட்டுரையாளர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அத்தோடு, “5 வருடங்கள் பூர்த்தி | இன்னும் முடிவுறாத யுத்தம்” என்ற தலைப்பில் ‘மாற்றம்’ தளத்தின் ஆசிரியர் எழுதியுள்ள கட்டுரையையும் இங்கு காணலாம்.